15 நவம்பர் 2022

புதுக்கி

 


     ஆளுநர் கைது.

     ஆளுநரை கைது செய்திருக்கிறார்கள்.

     அதுவும் இந்தியாவில்.

     நம்புவீர்களா?

     நம்பித்தான் ஆக வேண்டும்.

     இவரை, இவரது 26 ஆவது வயதிலேயே, இவர் பிறந்த நாடானது, ஒரு இந்திய மாநிலத்தின் பேராளராக நியமித்தது.

     இளம் வயது.

     சிறந்த நிர்வாகி.

     இம்மாநில அரசின் நிர்வாகத்தில் இருந்தவர்களுக்கு, இவரைப் பிடிக்கவில்லை.

     மசூதிப்பட்டிணத்திற்கு மாற்றினார்கள்.

     பின்னர் சீனாவிற்குக் கப்பல் வழி சென்ற வணிகக் குழுவிற்குத் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.

     ஆனாலும், தன் நிர்வாகத் திறமையால், நல்ல பெயரோடு திரும்பினார்.

     ஆளுநர் என்ற பதவியும் இவரைத் தேடி வந்தது.

     மாநிலமெங்கும் நல்ல பெயர் எடுத்தார்.

     நல்ல பெயர் எடுத்ததாலேயே, பலருக்கும் இவரை பிடிக்காமல் போனது,

     இவர் நாட்டு குருமார்களுக்கும் இவரைப் பிடிக்கவில்லை.

     இவர்களுக்கு மட்டுமல்ல, அரச குடும்பத்தினருக்கும் இவரது வளர்ச்சி பிடிக்காமல் போனது.

     விட்டால், நம்மையும் மீறி பெயர் எடுத்துவிடுவாரோ என்னும் காழ்ப்புணர்ச்சி, அரச குடும்பத்தினர் உள்ளத்தில் நஞ்சாய் புகுந்தது.

     விளைவு.

     சதிச் செயல் செய்ததாக, குற்றம் சுமத்தப் பட்டார்.

     ஆளுநர் என்னும் உயரிய பதவியில் இருக்கும்பொழுதே, கைது செய்யப் பட்டார்.

     கப்பலில் ஏற்றப் பட்டார்.

     சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

     சிறந்த நிர்வாகி என்னும் பெயர் எடுத்தமைக்காக, தன் சொந்த நாடு வழங்கிய பரிசு கண்டு, மனமொடிந்து மாண்டு போனார்.

     இவர்தான்.


      யோசஃப் பிரான்சுவா தூப்ளே.

     புதுச்சேரி ஆளுநர்.

     இவர் மரணமடைந்த 25 ஆண்டுகளில் பிரஞ்சுப் புரட்சி வெடித்தது.

     ஆட்சி மாறுகிறது.

     புதிய அரசு பதவி ஏற்கிறது.

     புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

     புதுச்சேரிக்கு வந்த ஆய்வாளர் ஒருவர், பல்லாண்டுகள் ஆய்ந்து, தன் ஆய்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

     தூப்ளே சிறந்த மனிதர்.

     அப்பழுக்கற்ற நிர்வாகி.

     குற்றமற்றவர்.

     அரசும், தூப்ளேவை குற்றமற்றவர் என முறைப்படி அறிவிக்கிறது.

     புதுச்சேரியிலும், பிரான்சிலும் நினைவுச் சின்னங்கள் எழுப்பப் படுகின்றன.

      ஆனால், இதை அறியாமலேயே, தூப்ளே இன்றும் தன் கல்லறையில் நிம்மதி இன்றி, உறங்கிக் கொண்டிருக்கிறார்.

---

      ஒரு நாடு, ஒரு தனி மனிதரிடம், அதுவும் ஒரு தமிழரிடம், கையேந்தி, கடன் பெற்றிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

      நம்பித்தான் ஆகவேண்டும்.

     இவர் மிகப் பெரும் செல்வந்தர்.

     செல்வந்தர் என்றால் எப்படிப்பட்ட செல்வந்தர் தெரியுமா?

     இவர் வாழ்ந்த மாளிகைக்கும், இவரது லாயத்திற்கும் இடையில் ஒரு வாய்க்கால்.

     எனவே, குதிரையேற்றத்திற்காக, இவரது மகன், வீட்டின் மாடியில் இருந்து படியிறங்கி கீழே வந்து, சற்று சுற்றி நடந்து, வாய்க்காலைக் கடந்துதான் லாயத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.

     தன் மகன் இவ்வளவு தூரம் நடப்பதா?

     தன் வீட்டு மாடியில் இருந்து, வாய்க்காலைக் கடந்து, லாயம் வரை, ஒரு மேம்பாலத்தையே கட்டினார்.

     அத்தகைய செல்வந்தர்.

     1925 ஆம் ஆண்டு, இவரது வீட்டிற்கு வெலிங்டன் வைஸ்ராய் வருகிறார்.

     வைஸ்ராய்க்கு விருந்து கொடுப்பதற்காக, தனியே ஒரு விருந்து மண்டபமே கட்டி அசத்தினார்.

     இன்றும் இவ்விடம் விருந்துத் தோப்பு என்றே அழைக்கப் படுகிறது.

     ஷபானா மில்.

     இரு ஆங்கிலேயர்களுடன் இணைந்து ஒரு பெரும் நூற்பாலையை நடத்தி வந்தார்.

     ஐரோப்பிய நாடுகளுக்கும், மத்தியதரைக் கடல் நாடுகளுக்கும் நீலத் துணியை கப்பல் கப்பலாய் ஏற்றுமதி செய்து வந்தார்.

     இவரிடம் பிரஞ்சு அரசாங்கம் கடன் கேட்டது.

     தனது ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்க, இவரிடம் கடன் கேட்டது.

     பிரெஞ்சு அரசாங்கத்திடம் இல்லாத பணமா?

     பணம் இருந்தது.

     உள்நாட்டுப் போர், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலானப் போரினால், பணத்தை அனுப்ப இயலா நிலை.

     எனவே கடன் கேட்டது.

     இவரும் வாரி வாரிக் கொடுத்தார்.

     இதன் பயனால், பிரஞ்சு அரச முத்திரையுடன் கூடிய செப்புக் கொடியை, இவர் தன் வீட்டில் ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்தது.

     இதனால் இவர் வீடு, செப்புக் கொடி வீடு என்னும் பெயரைப் பெற்றது.

     இதுமட்டுமல்ல, பிரெஞ்சு மன்னர்களுக்கு உரிய அடைமொழியான, லூயி என்னும் பெருமைமிகு பெயரும், இவர் பெயரோடு இணைந்து கொண்டது.

     இவர்தான் புதுச்சேரி

     லூயி சின்னையா முதலியார்.

---

     1540 களில் ஒரு நாள், கிருஷ்ணதேவராயர், தன் அமைச்சருடன், இரவு நேரப் பயணம் செல்கிறார்.

     ஓரிடத்தில், தொலைவில் நல்ல வெளிச்சம் தெரிகிறது.

     அவ்வெளிச்சத்தில் ஒரு கட்டடம் மின்னுகிறது.

     மன்னரின் பார்வையில் கோயில் போல் தெரிகிறது.

     வணங்குகிறார்.

     மறுநாள் காலை, வழியில் தான் வணங்கிய கோயில் பற்றி விசாரிக்கிறார்.

     அது கோயிலே அல்ல.

     வீடு.

     மாளிகை.

     அதுவும் ஒரு ஆடல் மகளிர் மாளிகை.

     செய்தி அறிந்ததும், கிருஷ்ணதேவராயர் இரத்தம் கொதித்தது.

     கேவலம், ஒரு தேவதாசியின் வீட்டை, கோயில் என்று நினைத்து வணங்கி விட்டேனே என உள்ளம் மருகினார்.

     வணங்கியது தனது தவறு என்பதை உணரவேயில்லை.

     மன்னரல்லவா?

     தன்னைத் தவறாக எண்ண வைத்த, அந்த ஆடல் மகளிருக்குத் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் என முழங்கினார்.

     செய்தி அறிந்து, அந்த ஆடல் மகளிர் ஓடி வந்தார்.

     மன்னர் பாதம் பணிந்தார்.

     மன்னா, என்னை மன்னித்துவிடுங்கள்.

     என் வீட்டை நானே, இடித்து விடுகிறேன்.

     இடித்துவிட்டு, அவ்விடத்தில் அறப்பணி செய்கிறேன்.

     மன்றாடினார்.

     மன்னர் மனமிறங்கி மன்னிக்கிறார்.

     அந்த ஆடல் மகளிர், பார்த்துப் பார்த்துக் கட்டிய தன் மாளிகையை இடித்துத் தரைமட்டம் ஆக்குகிறார்.

     அவ்விடத்தில் ஒரு பெரும் குளம் வெட்டுகிறார்.

     இன்று இந்தக் குளம்தான், புதுச்சேரிக்குக் குடிக்கத் தண்ணீர் தருகிறது.

     இச்செய்தியினை அறிந்த மூன்றாம் நெப்போலியன், இம்மங்கையின் அறச் செயலைப் பாராட்ட விரும்பி, பிரான்சு தேசத்தில் இருந்து, ஆட்களை அனுப்பி, அம்மங்கையின் பெயரில் ஒரு நினைவிடம் கட்டினார்.


              ஆயி மண்டபம்.

     தமிழ் நாட்டு அரசின் இலச்சினையில், திருவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் தலைநிமிர்ந்து நிற்கிறதல்லவா, அதுபோல, இன்று புதுச்சேரி அரசின் இலச்சினையில் நெஞ்சம் நிமிர்த்தி நிற்பது, இந்த ஆயி மண்டபம்தான்.

---

     ஏசுநாதரைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டுகின்றனர்.

     ஆனால், ஏசுவை அடையாளம் காண இயலவில்லை.

     காரணம், இயேசுவும் அவரது பன்னிரெண்டு சீடர்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியே இருந்தனர்.

     யூதாஸ் முத்தமிட்டு, இவர்தான் இயேசு என அடையாளம் காட்டுகிறார்.

     காட்டிக் கொடுக்கிறார்.

     இந்நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு, பிரான்சு தேசத்தில் ஒரு ஆடல் முறை தோன்றியது.

     மஸ்த்ரா ஆடல்.

     விதவிதமான முகமூடிகளை அணிந்து கொண்டு ஆடுதல்.

     சிங்கம், புலி, கரடி, நாய், கோமாளி, பெண், பேய் என விதவிதமான முகமூடிகள்.

     ஆடலின் நடுவே, முகமூடி மாறிக்கொண்டே இருக்கும்.

     இதுபோல் முகமூடி அணிந்திருந்தால், இயேசு பிழைத்திருப்பார் அல்லவா, என்னும் ஏக்கத்தில் தோன்றிய நடனம்.

     மஸ்த்ரா ஆடல்.

      பிரான்சில் இருந்து வந்தவர்கள், இந்த நடன முறையினை, புதுச்சேரிக்குக் கொண்டு வந்தார்கள்.

      தமிழர்களும் இந்த நடனத்தை ஆடத் தொடங்கினார்கள்.

      இதனைக் கண்ட பிரஞ்சு அரசாங்கம், நம் ஆடல் கலையை ஆடுகிறார்கள்.

      இன்றும் காத்துவருகிறார்கள்.

      என்றென்றும் இவர்கள், இந்த மஸ்த்ரா ஆடலை ஆடவேண்டும் என்று விரும்பி, இக்குழுக்களுக்கு உதவித் தொகை வழங்கத் தொடங்கியது.

     இன்றும் வழங்கி வருகிறது.

     மஸ்த்ரா இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

     நாம் நம் கலைகளுக்குச் செய்ய மறந்ததை, மறுத்ததை பிரஞ்சு செய்து வருகிறது.

     குடமுழா.

     தமிழர்களின் ஒரு இசைக் கருவி.

     மிகப் பெரிய பானை வடிவில், ஐந்து முகங்கள் கொண்ட இசைக் கருவி.

     இன்று குடமுழா இருக்கிறது.

     இசைப்பவர் ஒருவர்கூட இல்லை.

        இறுதியாய், சங்கரமூர்த்தி முட்டுக்கார் என்பவர், தான் வாழும் வரை வாசித்தார்.

     அவருக்குப் பிறகு தொடர ஆளில்லை.

     காரணம் உதவி இல்லை.

     இதுதான் நம் பண்பாடு.

---

     இந்தியா சுதந்திரம் பெற்றபின், பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன.

     பல சமஸ்தானங்கள் இணைய மறுத்தன.

     படையெடுத்து இணைய வைத்தார்கள்.

     ஆனாலும், போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல பகுதிகள் அப்படியே நீடித்தன.

      அவற்றுள் புதுச்சேரியும் ஒன்று.

     1954 ஆம் ஆண்டுவரை, புதுச்சேரி பிரான்ஸ் வசமே இருந்தது.

     தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள பிரான்ஸ் இராணுவத்தை அனுப்பியது.

     இந்தியாவும் இராணுவத்தை அனுப்பியது.

     நிலைமை மோசமாகவே, இந்தியாவுடன் இணைக்க பிரான்ஸ் ஒத்துக்கொண்டது.

     ஆனாலும் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என நிபந்தனை விதித்தது.

     1954 ஆம் ஆண்டு அக்டோபர் 18.

     வாக்கெடுப்பு நடத்தப்பெற்றது.

     1950 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

     192 மக்கள் பிரதிநிதிகள்.

     14 பேர், நான்கு வருடத்திற்குள் இறந்திருந்தனர்.

     மீதமிருந்த 178 பேர் வாக்களித்தனர்.

     170 பேர் இணைப்பிற்கு ஆதரவாய் வாக்களித்தனர்.

     8 பேர் மட்டும் எதிராய் வாக்களித்தனர்.

     புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தது.

     இந்நிகழ்வின் நினைவாக, வாக்கெடுப்பு நடைபெற்ற கீழுரில், புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க வாக்களித்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டும், வாக்கெடுப்பு நினைவுத் தூணும் எழுப்பப் பட்டது.

     இதுதான்,

    


        கீழூர் நினைவுச் சின்னம்.

---

     கலைகள் மட்டுமல்ல, ஒரு விளையாட்டும், பிரான்சில் இருந்து, கப்பல் வழி வந்து, புதுச்சேரியில் இறங்கியிருக்கிறது.

     பின் மெல்ல மெல்ல தமிழகத்திலும் பரவியிருக்கிறது.

     காக்காய் கோல் விளையாட்டு.

     ஒரு மொத்தமான குச்சி.

     காக்காய் கோல் என்று பெயர்.

     பல சிறிய அளவிலான, விளக்கமாற்றுக் குச்சுகளை ஒடித்து, சற்று தள்ளி நின்று, காக்காய் கோல் மீது போட வேண்டும்.

     பின், காக்காய் கோலினை அசைக்காமல், ஒவ்வொரு விளக்கமாற்றுக் குச்சியாய் எடுக்க வேண்டும்.

     எல்லா சிறு குச்சுகளையும், காக்காய் கோலினை அசைக்காமல் எடுத்து, கடைசியாய் காக்காய் கோலினை எடுத்தால் வெற்றி.

     அக்காலத்தில், இவ்விளையாட்டை பணம் கட்டி விளையாடி இருக்கிறார்கள்.

---

     இன்றும் புதுச்சேரியில், பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் எனும் பெயரில் ஓர் ஆய்வு நிறுவனம் இயங்கி வருகிறது.

     நம் நாட்டு கலைகள், பண்பாடு, சுவடிகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் எனப் பாதுகாப்பதற்கு, கோடி கோடியாய் செலவிட்டும் வருகிறது.

---

     கி.பி.ஒன்றாம் நூற்றாண்டின், செங்கடல் செலவு என்னும் நூல், புதுச்சேரியை, எப்படி அழைக்கிறது தெரியுமா?

     எந்த பெயரில் அழைக்கிறது தெரியுமா?

     புதுக்கி.

---

கடந்த 13.11.2022 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

பொழிவில்,

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்கள்


புதுச்சேரி அறிந்ததும் அறியாததும்

எனும் தலைப்பில் உரையாற்றியபோது,

அவர் முன்வைத்த செய்திகள் அனைத்துமே

அறியாத செய்திகளாகவே, எனக்கு விளங்கின.

புதுச்சேரி என்றாலே, நம்மில் பெரும்பாலானவர்கள் உள்ளங்களில்

ஒரு பிம்பம் தோன்றும்.

அப்பிம்பத்தை முற்றாய் உடைத்தெறிந்தார்.

புதுச்சேரி பற்றிய

புது கருத்தாக்கத்தை மனதுள் புகுத்தினார்.

     அனந்தரங்கம் பிள்ளை, பாரதி, பாரதிதாசன், வழக்காற்றுக் கதைகள் என இவர் சொற்பெருக்காற்றி ஓய்ந்தபோது, என்ன? அதற்குள் முடித்துவிட்டாரே? என்ற எண்ணம்தான் அனைவர் உள்ளத்தும் எழுந்தது.

புதுவையிலே

கடல் உண்டு

சாட்சி உண்டு.

புதுவையிலே

புகழ்பெற்றார்

சிலைகள் உண்டு.

புதுவையிலே

சங்கரதாஸ் சமாதி உண்டு.

புதுவையிலே

பெரும்புலவர் கூட்டம் உண்டு.

புதுவையிலே

அரவிந்தர் இருந்ததுண்டு.

புதுவையிலே

பாரதியார் வாழ்ந்ததுண்டு.

புதுவையிலே

புதுமை உண்டா?

உண்டு

பாட்டுப் புரட்சிக்கு

வித்திட்டார் உண்டா?

உண்டு.

என்ற உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதையை எடுத்துக்கூறி, ஒவ்வொரு ஊரைப் பற்றியும் அறியாததை, அறிந்து கொள்வது அவசியமாகும் எனப் பொருத்தமானதொரு தலைமையுரையினை ஆற்றினார்

ஏடகப் புரவலர்

சிங்கப்பூர், முன்னாள் உதவிப் பேராசிரியர்


கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள்.

இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

ஏடகப் புரவலர்

தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் உதவிப் பதிவாளர்

பௌத்த ஆய்வாளர்


முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்

வரவேற்றார்.

ஏடகப் பொருளாளர்


திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்

நன்றி கூறினார்.

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி எம்.மகாலெட்சுமி அவர்கள்

அழகுத் தமிழில்

விழா நிகழ்வுகளை எழிலுறத் தொகுத்து வழங்கினார்.

     முன்னதாக, ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் ஐந்து ஆண்டுகள், அறுபது பொழிவுகள், ஒலைச்சுவடிகளில் உறங்கும் தமிழைத் தட்டித் துயிலெழுப்பி, அச்சு வாகனம் ஏற்ற, சுவடி வகுப்புகள் என, தன் அயரா உழைப்பால், தன்னலமற்ற தளரா முயற்சியால், ஏடகத்தை ஆறாம் ஆண்டிற்கு அழைத்து வந்திருக்கும்,

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களுக்கு,

காந்தியச் சிந்தனையாளர்


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்கள்

தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும்,

தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் உதவிப் பதிவாளர்

பௌத்த ஆய்வாளர்

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களைக் கொண்டு,

முனைவர் மணி.மாறன் அவர்களுக்கு,

சந்தன மாலையினை அணிவிக்கச் செய்தும்,

சிங்கப்பூர் முன்னாள் உதவிப் பேராசிரியர்


கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களைக் கொண்டு

நினைவுப் பரிசு ஒன்றினை

வழங்கியும் மகிழ்ந்தார்.

 

தன்பெண்டு தன் பிள்ளை

சோறு வீடு சம்பாத்யம்

இவையுண்டு தானுண்டு – என்னும்

வரையறைக்குள்

சிக்கிச் சுழலாமல்

ஏடகம் காக்க,

சுவடித் தமிழ் மீட்க

சோர்வின்றித்

தமிழுணர்வோடு

எந்நாளும்

எப்பொழுதும்

அயராது உழைக்கும்

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

21 கருத்துகள்:

 1. எல்லாமே சுவாரஸ்யமான அறிந்திராத செய்திகள்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான வரலாற்றின் நிகழ்வை அற்புதமாக விளக்கி சொல்லி உள்ளீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. புதுவையின் பெருமை 💐

  பதிலளிநீக்கு
 4. புதுச்சேரி பற்றிய அரிய தகவல்களை நாங்களும் அறிந்துகொள்ள செய்த தங்களுக்கு நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 5. புதுச்சேரி பற்றிய அறிந்திராத சுவாரஸ்யமான செய்திகளை உரைத்த முனைவர் அய்யா அவர்களுக்கும் இணையம் மூலம் தெரிந்து கொள்ளச் செய்த தங்களுக்கும் நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வரவுகண்டு மகிழ்ந்தேன் ஐயா. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

   நீக்கு
 6. அரிய தகவல்கள் அறிந்தேன் நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. இப்போது தான் முதல் முறையாக அறிந்து கொண்ட ஆச்சரியமான தகவல்கள் பலவற்றை அழகாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். நன்றி !

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு- இலங்கை.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்!

  அருமையான பதிவு இவைகளும் நூலாக்கப்பட வேண்டியவைகளே

  அயலான் அறிந்தாற்றும் நற்செயல் ஈங்கு
  முயலான் பிறப்பில் முசு!

  வாழ்த்துகள் கரந்தை மைந்தரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே. ஏடகம் ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி தொகுப்பினை நூலாக வெளியிட்டு வருகின்றது.

   நீக்கு
 9. புதுச்சேரி பற்றிய அரிய செய்திகள். நன்றி .

  பதிலளிநீக்கு
 10. அருமையான பகிர்வு. நிறைய செய்திகள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 11. இந்த பகிர்வின் மூலம் பல விபரங்களையும் அறிந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு