01 நவம்பர் 2022

திண்ணை

 


     திண்ணை.

     யார் வேண்டுமானாலும் உறங்கி, ஓய்வெடுத்து, தண்ணீர் வாங்கிக் குடித்து தாகம் தனித்துச் செல்ல உதவியது திண்ணை.

     திண்ணை.

     இன்று நாம் இழந்துவிட்ட பண்பாட்டுத் தொட்டில்.

     திண்ணை.

     ஒரு குறும் புதினம்.

     திண்ணையின் குறியீடாக வருபவர் ஆதிமூலம்.

    தஞ்சாவூர், கீழவாசல், நிசும்பசூதனியின் சன்னதிக்கு வடக்குப் புறமாக இருக்கும், கும்பகோணத்தான் தெருவில், மூன்றாவது வளைவில் அமைந்திருக்கும் வீடுதான் கணக்குப் பிள்ளை ஆதிமூலத்தின் வீடு.

     எளிமையான தோற்றத்துடன் அம்சமான வீடு.

     இடது பக்கத்தில் ஒரு ஆள் கால் நீட்டிப் படுக்கும் அளவு சிறிய திண்ணை.

     வலது பக்கத்தில் வரிசையாய் முப்பது பேர் படுத்து உறங்கும் அளவிற்கு திண்டுகளுடன் அமைந்த, சிமெண்ட் பாலால் பூசப்பட்டு, சிவப்பு சாயத்தோடு வழவழப்பான திண்ணை.

     திண்டில் தலையை வைத்து, கால் நீட்டிப் படுத்தால் தூக்கம் சொக்கிக் கொண்டு வரும்.

     படிக்கப் படிக்க, நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறது, இவரது எளிமையான, அதே சமயம் வலிமையான எழுத்து.

     கூடத்தில் இருந்து எழுந்து வந்தவர், முற்றத்தில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் கையை விட்டு, சற்று முகத்தில் அடித்துக் கொண்டார்.

     இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முதுகை முறித்தார்.

     தலைக்கு மேலே இருந்த கம்பி வலையில் கையை வைத்துப் பார்த்தார். நன்றாக துரு பிடிக்க ஆரம்பித்திருந்தது.

     ம் .. உனக்கும் வயசாகிகிட்டே வருதுல்ல?

     முற்றம்.

     நமது வீடுகளில், திண்ணையைப் போலவே நாம் இழந்த, மற்றொரு பகுதி.

     முற்றம்.

     வீட்டின் உட்புறம், மேற்கூறையின்றி, வானத்தைப் பார்த்தவாறு நிற்பது முற்றம்.

     வெயிலும், மழையும், வீட்டிற்குள்ளும் வந்து நம்மோடு, உறவாட, நம் முன்னோர் ஏற்படுத்தியிருந்த அமைப்பு.

     குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு தம்பி.

     நம்ம வியாபாரம் எப்பவும் அப்படிப்பட்டதில்ல.

     ஆயிரம் மூட்டைகளையுமே எடுத்துவரச் சொல்லுங்க.

     போன வாரம் இருந்த, அதே விலையிலதான், நம்ம ஜனங்களுக்கு பருப்ப கொடுக்கப் போறோம்.

     இதை கேட்ட சீனிவாசன், தன் அப்பா முருகேசனை ஒரு பார்வை பார்க்க, அவரும் பதில் எதுவும் பேசவில்லை.

     அவர் பேசாமல் இருந்தது சீனிவாசனுக்கு இன்னும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

     ஆதிமூலம் பேசிய வாக்கியம்தான் அன்று, அங்கு கடைசி வாக்கியமாக இருந்தது.

     அத்துணை ஆளுமை.

     திருமண வயதை எட்டிப் பிடித்திருக்கும் பெயர்த்தியோடும், பெயரனோடும், கணவனை இழந்த மருமகளோடும் வாழும், வயது முதிர்ந்த மனிதர்தான், இக்கதையின் நாயகர்.

     ஆதிமூலம்

     ஆதிமூலம் சரிந்து கிடந்த அந்தக் காட்சி, காட்டில் சிங்கம் அடிபட்டுக் கிடந்ததுபோல் இருந்தது.

     குணவதி மயக்கம் போட்டு அப்படியே விழுந்தாள்.

     தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள் பார்கவி.

     கேசவன் அவரை, தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்து, கூடத்தில் கட்டிலில் கிடத்தினான்.

     கிணற்றடியில் இருந்து, முற்றத்தைத் தாண்டி கூடம் வரை, வழியெல்லாம் ரத்தம் சொட்டி இருந்தது.

     மூச்சு இல்லை.

     உடல் கனக்க ஆரம்பித்தது.

     அவருடைய வலது கை, பென்சிலை இறுகப் பற்றியிருந்தது.

     படிக்கப் படிக்க, பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

     ஆதிமூலம் பிழைத்தெழ வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு, ஏக்கம், உள்ளத்தில் எழுகிறது.

     திண்ணை.

     நூலின் முதல் பக்கத்தின் முதல் வரி தொடங்கி, கடைசி பக்கத்தின் கடைசி வரி வரை, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.

     படித்து முடித்தவுடன், நூலினை அருகில் வைத்துவிட்டு, நூல் பற்றிய சிந்தனையோடு அமர்ந்திருந்தபோது, நூலினை ஒரு திரைப்படம் போல், மனதில் ஓட்டிப் பார்த்தபோது, மின்னலாய் வெட்டியது, ஓர் எண்ணம்.

     ஓர் ஒப்பீடு உள்ளத்தில் எழுந்தது.

     கதையின் நாயகர் ஆதிமூலம்.

     கதையினை எழுதிய ஆசிரியரின் தந்தை.

     இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

     இருவரும் ஒருவருக்குள், ஒருவர் முற்றாய் பொருந்திப் போனார்கள்.

     உள்ளத்தால் மட்டுமல்ல, உருவத்தாலும் இருவரும் ஒருவராய் தெரிந்தார்கள்.

     வியந்துபோனேன்.

     தெரிந்தோ, தெரியாமலோ, தன் தந்தையினையே, பக்கத்துக்குப் பக்கம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

      வீட்டின் மூத்த கட்டை ஆதிமூலம்.

     உருவத்தில் சீவி வைத்த பென்சில் போல தெரிந்தாலும், மிகவும் வலிமையான மனிதர்.

     மிடுக்கு நடை.

     எறும்பின் சுறுசுறுப்பு.

     நேர் கொண்ட பார்வை.

     நிமிர்ந்தே இருக்கும் முதுகுத் தண்டு.

     யாருக்காகவும், எதற்காகவும் குனியாத தலை.

     தைரியம்.

    கோபக்காரர் ஆனால் குணத்துக்காரர்.

     மொத்ததில் அவர் ஒரு தீர்க்கதரிசி.

     ஆசிரியரின் தந்தையை, சுமார் முப்பது வருடங்களாக அறிவேன்.

     அவர் இப்படித்தான்.

     அவர் இந்து பேப்பர் படிக்கும் அழகுக்கு ஈடேயில்லை.

     ஒரு கையில் பென்சில் இருக்கும்.

     இடது பக்கம், முக்காலியில் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி இருக்கும்.

    படித்த, புது மற்றும் வித்தியாசமான சொற்களை அடிக்கோடிட்டுக் கொண்டே படிப்பது அவர் வழக்கம்.

     புதிய வார்த்தைகள், புதிய சொல் பிரயோகத்துடன் செய்தி ஏதும் வந்திருந்தால், இருந்த இடத்தில் இருந்தே, கேசவனையும், பார்கவியையும் அழைத்து அவர்களுக்கு உடனே சொல்லிக் கொடுப்பார்.

     அவரேதான்.

     ஆசிரியருடைய தந்தையும் இப்படித்தான், மகன்கள் இருவரும், ஆங்கிலச் செய்தியைப் படித்துக் காட்டினாலும், புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்துக் கூறினாலும், உடனே ஒரு பரிசு கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தவர்.

     நாம செய்யிற எந்த விஷயத்துக்குமே பதிவு இருக்கனும், தெரியுதா?

     நாளைக்கு செய்யிற இந்த வேலையையுமே எதாவது ஒரு டைரில எழுதி வை.

     தேதி போட்டு, கையெழுத்தும் போட்டு வை.

     கோப்புகள் எப்படி பைண்டு பண்ணி வைக்கணும்னு சொல்லியிருக்கேன்ல, அதே மாதிரிதான இதுவும்.

     அச்சு அவலாய், இது, அவரேதான்.

     இவரது இல்லத்திற்குச் சென்று, பத்து வருடங்களுக்கு முன், இவருக்கு வந்த, இவர் எழுதிய கடிதங்களைப் பற்றிக் கேட்டால், உடனே அந்த வருடத்திற்கான, பைண்டு செய்யப்பெற்ற ஒரு கோப்பினை எடுத்துவந்து காட்டுவார்.

     அதில் அவ்வருடத்தில், இவர் எழுதிய கடிதங்களின் நகல்,  இவருக்கு வந்த கடிதங்களின் அசல், அனைத்தும் தேதி வாரியாக அணிவகுத்து நிற்கும்.

     இப்பொழுதே இந்த ஆசிரியர் யார், ஆசிரியரின் தந்தை யார்? என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.

     மேலும், ஒரே ஒரு செய்தி கூறினால், இந்நூலில் வரும் ஒரு முகத்தைக் காட்டினால், இவரது முகம், சட்டென உங்கள் உள்ளத்தில் பளிச்சிடும்.

     கோதண்ட ராமர் கோயிலுக்குத் தென்புறத்தில், வயலுக்கு சற்று ஓரமாக அமைந்திருக்கும் இரண்டுமாடி வீடுதான் சீனிவாசனின் வீடு.

     பர்மா தேக்கை இழைத்து, நிலை, மாடம், ஜன்னல்கள் அனைத்துமே தேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் கட்டிய வீடு.

     வீட்டின் முகப்பில் இடம் விட்டு செயற்கை நீரூற்று.

     அதன் மேல் நிலையில், அமர்ந்த கோலத்தில் ஒரு புத்தர் சிலை.

     புத்தர் சிலை.

இப்பொழுது புரிந்துவிட்டதா?

ஆம், அவரேதான்.

தாங்கள் நன்கு அறிந்த,

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்

மேனாள் உதவிப் பதிவாளர்

பௌத்த ஆய்வாளர்


முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்தான்.

இவரது மூத்த மகன்,

தொலைபேசிகளின் சேவைத் தரம்,

வங்கியின் தொழில் நுட்பம்,

பிட்காயின்கள்

பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்,

சமூக அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்

ஒரு தனியார் வங்கியின் மேலாளர்,

மண் வாசனை

கடவுள்களுடன் தேநீர்

எனும் இரு நூல்களின் ஆசிரியர்.

முனைவர் ஜ.பாரத் அவர்களின்

மூன்றாவது படைப்புதான்

இந்த


திண்ணை.

வெண்ணாற்றங்கரை, கீழவாசல் வணிகம், மணிக்கூண்டு,

மாரியம்மன் கோயில்

என பழைய தஞ்சையின் அழகை, எழிலை

அற்புதமாய் படம் பிடித்துக் காட்டுகிறது

திண்ணை


அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய அருமையான நூல்.

வாழ்த்துகள் பாரத்.

 

திண்ணை.

திண்ணையில் அமர

அழைக்கவும்

99620 65436

94889 69722

விலை ரூ.140

 

33 கருத்துகள்:

  1. அருமையான மதிப்புரை..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  2. தங்களின் அருமையான நடையில் மதிப்புறையை திண்ணைக்கு சிறப்பாக தந்துள்ளீர்கள் முழு புத்தகத்தையும் வாசித்த ஒரு மன நிறைவு என்றும் உங்கள் எழுத்தின் காதலன் பாலசுப்ரமணியன் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா01 நவம்பர், 2022

    சிறப்பு ஐயா வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. அருமை எங்கள் வீட்டுத்திண்ணை முற்றம் கண் முன்னே வந்தது.... சிறப்பு வாழ்த்துகள் அய்யாவிற்கும் உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும்ரதான். இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் வசித்த வீட்டில், ஒன்றல்ல இரண்டு அடுக்காய் மூன்று திண்ணைகள், இரண்டு திண்டுகள் மற்றும் முற்றம் இருந்த நினைவுகள் மனதில் வலம் வந்து, மனதை கனக்கத்தான் செய்துவிட்டன.
      நன்றி சகோதரி

      நீக்கு
  5. அருமையான விளக்கம் படித்துக் கொண்டு வரும்போதே எனக்கு யாரென்று தெரிந்து விட்டது.

    திண்ணை, முற்றம் எங்களின் ஐயா வீடும் இப்படித்தான் பத்து வயது வரையில் இப்படி வீட்டில்தான் வளர்ந்தேன்.

    ஜ. பாரத் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
    என்னோற்றான் கொல்எனும் சொல்

    பாரத் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா01 நவம்பர், 2022

    Happy👑👑👑👑👑👑👍👍👍👍👍👏👏👏👏👏

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான மதிப்புரை. உங்கள் நடையில். ஆழ்ந்து நோக்கி நீங்கள் ரசித்த விதம் கண்டு மகிழ்ந்தேன். என் சார்பாகவும் எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பு மகன் ஒரு சிறந்த எழுத்தாளராய் எதிர்காலத்தில் அறியப்படுவார் போற்றப்படுவார் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் ஐயா.
      நன்றி

      நீக்கு
  9. சிறப்பான முறையில் அறிமுகம் செய்துள்ளீர்கள். படிக்கும் ஆவல் வருகிறது.

    பதிலளிநீக்கு
  10. நூலுக்குச் சிறப்பான அறிமுகம். நன்றி

    பதிலளிநீக்கு
  11. தங்களின் சிறப்பான நடை வழக்கம் போல், நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. படிக்கத் தூண்டும் மதிப்புரை. அப்படியே எனது பள்ளி பருவ நாட்களுக்கு அழைத்துச் சென்று விட்டது. ஆம். 1984 வரை திண்ணையோ முற்றமோ உள்ள வீட்டில்தான் வாழ்ந்தோம். முற்றத்தில் நடந்த திருமணங்கள். திண்ணையில் உறங்கிய நாட்கள். ஞபாகங்கள் இனிமையானவை. வாங்கி படிக்கிறேன் தோழர். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. இளமைக்கால நினைவலைகளைத் தூண்டும் நூல். நன்றி ஐயா

      நீக்கு
  13. அருமையான மதிப்புரை!
    நாங்கள் சிறு வயதில் ஊருக்கு ஊர் வாழ்ந்து மகிழ்ந்த திண்ணை வீடுகள் அனைத்தும் ஞாபகத்தில் எழுந்தன!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் கரந்தை மைந்தரே !

    அட நம்ம ஜம்புலிங்கம் அய்யாவின் மகனா நூலாசிரியர் அப்போ கேட்கவே வேண்டாம் அழகான கதைதான் எழுதி இருப்பார் தங்களின் நூல் அறிமுகம் சொல்கிறது அந்தப் படைப்பின் வலிமையை வாழ்த்துகள் நூலாசிரியருக்கும் தங்களுக்கும் !

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான அறிமுகம் இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு