17 டிசம்பர் 2022

சிங்கத் தமிழ்

மூவேந்தர் முத்தமிழ் முனைகூடக் குறையாது

பாவேந்தி இதழ்சிரிக்கும் நாடு – இது

நான்வாழ வகைசெய்து என்போலப் பலபேரை

மேலோங்கச் செய்தநன் னாடு.

                                                        கவிஞர் ப.திருநாவுக்கரசு

 

     ஆண்டு 1819.

     சுல்தான் ஹுசைன் ஷா.

     மலேசியாவின் தென்கோடியில் உள்ள, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான்.

     சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்.

     ஓர் ஆங்கிலேயர்.

இந்த ஆங்கிலேயர், 1819 ஆம் ஆண்டு, பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனிக்காக, சிங்கப்பூரை, இந்த சுல்தானிடமிருந்து குத்தகைக்குப் பெறுகிறார்.

     குத்தகைக்குப் பெற்றபின், ஜோகூர் மாநிலத்தில் இருந்த இந்தியர்களை அழைத்துக்கொண்டு சிங்கப்பூருக்கு வருகிறார்.

     இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

     சிங்கப்பூரை நிர்மாணித்து, ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படுத்த வேண்டும் என்பதே, இவர் நோக்கமாகும்.

     நாராயண பிள்ளை என்ற ஒரு தமிழரையும், ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு அழைத்து வருகிறார்.

     இந்த நாராயண பிள்ளை தமிழகத்தைச் சார்ந்தவர் என்றும், கேரளத்தைச் சார்ந்தவர் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

     ஆனால் பெரும்பான்மையினர், இவர் தமிழர் என்றே உறுதியாய் உரைக்கின்றனர்.

     இவர்தான் பினாங்கில் இருந்து, கொத்தனார், தச்சர், நெசவாளிகளை சிங்கப்பூருக்குக் கூட்டி வந்தவர்.

       சிங்கப்பூர் நாட்டின் முதல் கட்டிட ஒப்பந்தக்காரராக உருவெடுத்தவர்.

       சிங்கப்பூரில் முதல் செங்கல் உலையை அமைத்தவர்.

       ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், இந்திய மக்களின் தலைவராய் செயலாற்றியவர்.

     இந்த நாராயண பிள்ளை கட்டிய மாரியம்மன் கோயில் இன்றும் சிங்கப்பூரில் தேசிய நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

     1824 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதன் முதலாக எடுக்கப் பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 10,683 மட்டுமே.

     மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்ததால், பல நாட்டினரையும் வருக வருக என சிங்கப்பூருக்கு அழைத்தனர்.

     தமிழகத்தில் இருந்து தமிழர்கள் கப்பல், கப்பலாய் வந்து குவிந்தனர்.

     கடுமையாய் உழைத்தனர்.

     தமிழ் மொழியையும், பண்பாட்டையும் காத்து வளர்த்தனர்.

     உயர்த்தினர்.

     இதனால்தான், பிற மொழி ஆதிக்கம் இருந்தபோதும், அவற்றையெல்லாம் வென்று, இன்றும் சிங்கப்பூரில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

     சிங்கப்பூர் தமிழின் வயது 200 ஆண்டுகள்.

     1880 ஆம் ஆண்டிலேயே, சி.கு.மகதூம் சாயபு என்பவர், பத்திரிக்கைத் துறையில் கொடி கட்டி பறந்திருக்கிறார்.

      ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு பத்திரிக்கைகளை நடத்தியிருக்கிறார்.

     பத்திரிக்கைகளை அச்சிடுவதற்காகவே, தீனோதய வேந்திரசாலை என்ற அச்சகத்தையும் நடத்தியிருக்கிறார்.

     1875 ஆம் ஆண்டிலேயே, தங்கை நேசன் என்னும் இதழை வெளியிட்டிருக்கிறார்.

     1887 ஆம் ஆண்டு முதல் 1880 ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள், சிங்கை நேசன் என்னும் வாழ இதழை நடத்தியிருக்கிறார்.

     மூன்றாண்டுகளில் 161 இதழ்கள்  வெளிவந்திருக்கின்றன.

     சிங்கப்பூரில் அன்று முதல் இன்றுவரை 525 பத்திரிக்கைகள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என இதழ்கள் வந்திருக்கின்றன.

     இன்றும் பல இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

     தமிழ் முரசு எனும் இதழ் 1935 ஆம் ஆண்டு தொடங்கி, இடைவிடாமல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

     இவ்விதழைத் தொடங்கியவர் கே.சாரங்கபாணி அவர்களாவார்.

     இவர் திருவாரூரைச் சார்ந்தவர்.

     சிங்கப்பூரில் அறுபது ஆண்டுகள் அயராது தமிழ் வளர்த்தவர் இவர்.

     நாடக மன்றத்தில் தமிழ் வளர்த்த மாமனிதர் ஒருவர் இருக்கிறார்.

     பி.கோவிந்தசாமி.

     தமிழகத்தில் இருந்து யார் வந்தாலும், இருக்க இடம் கொடுத்து, உண்ண உணவு கொடுத்து, நிதி ஆதாரமும் கொடுத்து, வேலை கிடைக்கும்வரை தமிழர்களைப் பாதுகாத்தவர் இவர்.

     இதனால் கொட்டா கோவிந்தசாமி என்றே இவர் அழைக்கப்பெற்றார்.

     தமிழ்ச் சிறுகதை, நாவல் வளர்ச்சியிலும் இருநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது சிங்கப்பூர்.

பொது ஜன மித்திரன் என்னும் நாளிதழில்

1924 ஆம் ஆண்டு வெளிவந்த,

பாவத்தின் சம்பளம் மரணம்

எனும் சிறுகதையே,

சிங்கப்பூரின் மூத்த சிறுகதையாக

சிங்கப்பூர் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது.

1930 ஆம் ஆண்டு வெளிவந்த,

யாழ்ப்பாணம் வல்லவை வே.சின்னையா பிள்ளை அவர்களின்,

நவரசக் கதா மஞ்சரி

என்னும் சிறுகதைத் தொகுப்பே

சிங்கப்பூரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஆகும்.

1916 ஆம் ஆண்டு வெளிவந்த,

கா.கந்தையா பிள்ளை அவர்களின்,

மீனாஷி அல்லது மலாய்நாட்டு மங்கை

எனும் நாவலே, சிங்கப்பூரின் மிக மூத்த தமிழ் நாவலாகும்.

     கவிதை உலகிலும், 150 ஆண்டுகால வரலாற்றைத் தன் வசம் வைத்துப் போற்றிப் பாதுகாக்கிறது சிங்கப்பூர்.


தண்ணிமலை வடிவேலர் பேரில்

ஆசிரிய விருத்தம்

என்பதே, சிங்கப்பூரில் வெளிவந்த முதல் கவிதை நூலாகும்.

தண்ணிமலை வடிவேலர் பெயரில் 10 பாடல்கள்

உலகநாத சுவாமிகள் பெயரில் 10 பாடல்கள்

உலக நாயகியம்மன் பெயரில் 10 பாடல்கள்

சுப்பிரமணியர் பெயரில் 10 பாடல்கள்

தெண்டாயுதபாணி பெயரில் 10 பாடல்கள்

என ஐம்பது ஆசிரிய விருத்தம் பாடல்களைக் கொண்டது இந்நூல்.

இந்நூல் வெளிவந்த ஆண்டு

1863.

இதுநாள் வரை, இந்நூல் 17 பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

     கதை, சிறுகதை, நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் என இலக்கிய வானில் மட்டுமல்ல, கல்வியிலும், தமிழ் கொண்டாடப்படுகிறது.

     1860 – 1870 ஆம் ஆண்டு முதலே, தமிழ் மொழியை ஒரு பாடமாக வைத்துப் போற்றி வருகிறது சிங்கப்பூர்.

     1,2,3,4,5 மேலும் 6 ஆம் வகுப்புவரை, தமிழ் வம்சாவளியினர், தமிழை ஒரு கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும்.

     சி1, சி2, சி3, சி4 சில இடங்களில் சி5 என ஐந்து ஆண்டுகள், உயர்நிலைக் கல்வியில் தமிழ் மொழியை முதல் மொழியாகவோ, இரண்டாம் மொழியாகவோ படித்தாக வேண்டும்.

     மேனிலைப் பள்ளியில், அதாவது தொடக்கக் கல்லூரியில், தாய் மொழியை கட்டாயம் படித்தே ஆக வேண்டும்.

     மேல்நிலைக் கல்வி வரை அனைவருக்கும் பொதுவானது.

     பல்கலைக் கழகத்திலும், விரும்பினால் தமிழ் பயிலலாம்.

     இதற்கான வாய்ப்புகள், நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகின்றன.

     தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி படிப்பும் இருக்கிறது.

     சமீப காலமாக, ஒருங்கிணைந்த நான்காண்டு கால, தமிழ் பட்டப் படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு, B.A.,B.Ed.,  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

     மாஸ்டர்ஸ் எனப்படும் முதுநிலை படிப்பில் இரு முறைகள் உள்ளன.

     ஒன்று, ஆய்வேட்டினை வழங்கி, முதுகலை பட்டம் பெறலாம்.

     இரண்டாவது, தேர்வு எழுதியும் முதுகலை பட்டம் பெறலாம்.

     இறுதியாக, முனவர் பட்டமும் தமிழில் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கினறன.

     தொடக்கக் கல்வி முதல் முனைவர் பட்டம் வரை, தமிழ் வழிக் கல்வியை சிங்கப்பூர் பெருமையுடன் வழங்கி வருகிறது.

      இலக்கியத்தில், கல்வியில் மட்டுமல்ல, அன்று முதல் இன்று வரை, அரசியல் அரங்கிலும் தமிழர்கள், பெரும் பதவிகளில் அமர்ந்து, தமிழ் மொழிக்கும், சிங்கப்பூருக்கும் பெருமைத் தேடித் தருகிறார்கள்.

     இதற்கான வாய்ப்பினை, சிங்கப்பூர் சிறிதும் தயங்காமல் வழங்கி வருகிறது.

     திரு தேவன் நாயர், செல்லப்பன் இராமநாதன் இருவரும், சிங்கப்பூரின் அதிபர்களாகவே பதவி வகித்துள்ளனர்.

     திருவாளர்கள் ஜெயரத்தினம், தனபால், ஜெயக்குமார், திர் வாசு, க.சண்முகம், தர்மன் சண்முகரத்தினம், இந்திராணி ராஜன், ஈஸ்வரன், விக்ரம் நாயர் போன்றோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

     இன்றும் பலர் இருக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல,

1959 ஆம் ஆண்டுமுதல்,

தமிழ் மொழி,

சிங்கப்பூரில் ஆட்சி மொழியாகவும்

இருந்து வருகிறது.

     சீனம், மலாய், தமிழ், ஆங்கிலம் நான்கும் சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளாகும்.

     சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசலாம்.

     அடுத்த ஐந்தே வினாடிகளில், மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்படும்.

     தமிழ் ஆட்சி மொழி என்பதால், தமிழ் இலக்கியங்கள், தேசிய இலக்கியம் என்ற பெருமையினைப் பெற்றுள்ளன.

எனவே தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு

தென் கிழக்கு ஆசிய விருது

கலாசார விருது

சிங்கப்பூர் விருது

என்னும் உயரிய விருதுகள் வழங்கப்பெற்று வருகின்றன.

     ஆண்டுதோறும், தகுதிவாய்ந்த தமிழறிஞர்கள் பலர், இவ்விருதுகளைப் பெற்று வருகிறார்கள்.

     விருதிற்கானப் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

      நம் நாட்டு மதிப்பில் 45 இலட்சம் வரை வழங்கப் படுகிறது.

     சிங்கப்பூர்

     தமிழர்களின் கடின உழைப்பால் உயர்ந்த நாடு.

     தமிழர்களை உயர்த்தும் நாடு.

     தமிழர்களைப் போற்றும் நாடு.

     தமிழ் மொழியைப் போற்றி வளர்க்கும் நாடு.

---

கடந்த 11.12.2022

ஞாயிறு மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

பொழிவில்


சிங்கத் தமிழ்

சிங்கப்பூர் தமிழ்

எனும் தலைப்பில்

இவர் சொற்பெருக்காற்றி அமர்ந்தபோது,

அரங்கே நெஞ்சம் நிமிர்த்தி

பெருமித உணர்வில்

மகிழ்ந்து, நெகிழ்ந்து போனது.

இவர்,

கடந்த 28 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசிப்பவர்.

சிங்கப்பூர் தமிழ்க் கவிதை வரலாறு

சிங்கப்பூர் இதழியல் வரலாறு

பன்முக நோக்கில் சிங்கப்பூர் கவிதைகள்

மகுதூம் சாயபுவும் சிங்கை நேசனும்

எனும் நான்கு ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டு

சிங்கத் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.

75 ஆண்டுகால

தமிழ் முரசு

நாளிதழினை

அயராது, தளராது ஆய்ந்து,

நுண்ணாய்வு நோக்கில் தமிழ் முரசு நாளிதழ் கவிதைகள்

எனும் தலைப்பில்

மாபெரும் ஆய்வு நூலை

விரைவில் வெளியிட இருப்பவர்.


சிங்கப்பூர் அரசின் புத்தக மேம்பாட்டு நிறுவனம்

வழங்கிய

சிங்கப்பூர் இலக்கிய விருதினை

இரு முறை பெற்றவர்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின்

ஆனந்தபவன் மு.கு.இராமச்சந்திரா நினைவுப் பரிசினையும்

பெற்றவர்.

     சிங்கப்பூரில் தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பி 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் விண்ணப்பித்தபோது, ஒரு பெரும் குழு இவரை நேரில் அழைத்து, நேர்முகத் தேர்வு நடத்தியது.

     ஒன்பது பேர் கொண்ட குழு.

     சீனர்கள் எட்டு பேர், தமிழர் ஒருவர்.

     முப்பது நிமிடங்கள், அலை அலையாய் எழுந்த கேள்விகளக்கு எல்லாம், தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், நேர்மையாய் பதில் உரைத்தார்.

     இறுதியாய் ஒரு கேள்வி இவரை நோக்கி வந்தது.

     ஏன் சிங்கப்பூருக்குப் பணியாற்ற வருகிறீர்கள்?

     மூன்று காரணங்களை முன்வைத்தார் இவர்.

     ஒன்று.

     பல இன மக்கள் வாழுகின்ற நாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம்.

     இரண்டு.

     தான் படித்த தமிழை, தான் உணர்ந்த தமிழை, தான் போற்றும் தமிழை, அயலகத் தமிழருக்கு வழங்கி மகிழ வேண்டும் என்ற தணியாத தாகம்.

     மூன்றாவது காரணம்?

     சற்று நிறுத்தினார்.

     சொல்லுங்கள், மூன்றவது காரணம் என்ன?

     சற்று பணம் சம்பாதிக்க வேண்டும்.

     தமிழாசிரியர் பணி வழங்கப்பெற்றது.

     இவர் பணம் சம்பாதித்தாரோ, இல்லையோ, வகுப்பறை நேரம் போக., தன் ஓய்வு நேரத்தின் ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு நிமிடத்தையும், சிங்கத் தமிழுக்காகவே செலவிட்டிருக்கிறார்.

     செலவிட்டு வருகிறார்.

     தன் அயரா உழைப்பின் மூலம், தளரா தேடலின் மூலம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் தொன்மையை 1868 ஆம் ஆண்டிற்கு உரியதாக, அசைக்க முடியாத ஆவணங்களின் மூலம், மறுக்கமுடியாத தகுந்த தரவுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

     சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில், தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

     இனி நூறாண்டுகள் கடந்தாலும, சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றை, ஆய்வு செய்பவர்கள் யாராக இருந்தாலும், இவரைக் கடந்துதான் சென்றாக வேண்டும்.

     இவரது ஆய்வினைக் கருவாக, மையப் புள்ளியாக, அடித்தளமாக் கொண்டுதான் ஆய்வினைத் தொடர வேண்டும் என்னும் ஒரு தகர்க்க முடியாத நிலையினை உருவாக்கியிருக்கிறார்.

இவர்தான்,

சிங்கப்பூர் கத்தோலிக் தொடக்கக் கல்லூரி விரிவுரையாளர்


முனைவர் கோட்டி திருமுருகானந்தம்.

மேலும் இப்பொழிவின்போது,

சிங்கப்பூர் தமிழ் விரிவுரையாளர்கள்

திரு மாரிமுத்து

திரு அர்ஜுன்

மற்றும்

சிங்கப்பூரின்

மேனாள் தமிழ் விரிவுரையாளர்

கவிஞர் ப.திருநாவுக்கரசு 

ஆகியோர்

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாய் திகழும்

உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின்

பணி நிறைவு பெற்ற பட்டதாரி ஆசிரியர்.


கரந்தை ஜெயக்குமார் அவர்கள்,

(ஆம், நான்தான், நானேதான்)

தலைமையில் நடைபெற்ற

இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

ஏடகம் சுவடியியல் மாணவி,

திரு வெ.சண்முகவள்ளி அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம் சுவடியியல் மாணவர்


திரு க.வெங்கட சுப்பிரமணியன் அவர்கள்

நன்றி கூற

பொழிவு இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

வரலாற்றுத் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் ரா.சீ.பிரகதாம்பாள் அவர்கள்,

நிகழ்வுகளை சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

 

சிங்கத் தமிழை

சிங்கப்பூர் தமிழை

கடல் கடந்தும்

ஆட்சி மொழியாய்

அமர்ந்திருக்கும்

தொன்மைத் தமிழை,

தஞ்சைக்குத்

தரவிறக்கம் செய்து,

ஏடக அரங்கில்

தவழவிட்டு

தமிழ் நெஞ்சங்களை

மகிழ வைத்த

நெகிழ வைத்த

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.


இவ்விழாவின்போது,

தேடலையே தன் வாழ்வாய் அமைத்துக் கொண்டு

சீரிய பணியாற்றிவரும்

பௌத்த ஆய்வாளர்

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக

மேனாள் உதவிப் பதிவாளர்

முனைவர் பா.ஜம்புலிங்கனார் அவர்களின்

வாழ்நாள் உழைப்பினைச் சுமந்து வந்திருக்கும்


சோழநாட்டில் பௌத்தம்

நூலினைப் பாராட்டும் வகையில்,


முனைவர் பா.ஜம்புலிங்கனார் அவர்கள்

பாராட்டப்பெற்றார்.