09 பிப்ரவரி 2023

குந்தவையின் சபதம்



புரியும்படி சொல்கிறேன், அருமை மன்னா, கேள்.

     உலகு போற்றும் இரண்டாம் பராந்தகச் சோழனின் கொள்ளுப் பேரனும், என் அருமைத் தம்பி சிவபாத சேகரன் விருதுபெற்ற, அருண்மொழி வர்மனின் பேரனும், முடி கொண்ட சோழனாகிய, உன் தலை புதல்வனைக் கடத்தியவனும், அன்பு குமாரத்திகளைக் கடத்தத் திட்டமிட்டவனும், என்னை திருவாணைக்கா ஆலயத்தில் நுழைந்து, கொலை செய்ய முயற்சித்தவனுமாகிய, அந்த எம்பெருமானின் பக்தனாக வஞ்சக வேடமிட்டவனை, அந்த கபடதாரியை, நான் பார்க்க வேண்டும்.

அவனுக்கு என் கையாலேயே தண்டனை வழங்க வேண்டும்.

     அப்புறம்தான்  என் சபதம் நிறைவேறும்.

     அது நடந்தே ஆக வேண்டும்.

     அவனை சிறைசெய்துவிட்டதாகக் கேள்விப் பட்டேன்.

     இப்போது இங்கே பாதாள சிறையில், என்னவரின் கட்டுப்பாட்டில் இருப்பவனை, அழைத்து வந்து சபையில் நிறுத்து.

    சோழ வம்சத்தில் வீராதி வீரர்களைக் கண்ட இம்மண்ணில், அவர்கள் வழி வாரிசுகளைக் கடத்தும் துணிவு அவனுக்கு எப்படி வந்தது?

     இப்படி ஒரு மாவீரனை, அவன் பகைவன் என்றாலும், பாராட்டவும் வேண்டும். அதே நேரத்தில், இவனைப்போல் இன்னொருவன் முயற்சி செய்தால், என்ன தண்டனை கிடைக்கும் என்று நாடு அறிய வேண்டும்.

     அவனை இழுத்து வா, சபைக்கு.

     அனைவரும் பார்க்கட்டும்.

     மேலும், அவனுக்கு நான் தண்டனை தரவேண்டும் என கர்ஜித்தார் குந்தவை பிராட்டி.

     குந்தவை.

     கல்கியின் பொன்னியின் செல்வனில், நம் மனம் கவர்ந்த குந்தவை.

     சோழ அரசின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ச் செல்வி.

     ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து, வீராதி வீரனாகவும், மன்னாதி மன்னனாகவும் ஆக்கிய  தீரப் பெண்மணி.

     குந்தவை நாச்சியார்.

     அரசவையில் குந்தவை நாச்சியார், வீறு கொண்டு எழுந்து, கோபாவேசமாய் முழங்கும் வார்த்தைகளைப் படிக்கப் படிக்க, காட்சிகள் கண்முன்னே அரங்கேறுகின்றன.

     வரலாறு, நம் மனக் கண்ணில் திரைப்படமாய் ஓடுகிறது.

    குந்தவையின் சபதம்.

     நூல் மட்டுமல்ல, நூலின் பெயரும், நம்மைச் சுண்டி இழுக்கிறது.

     அரசவை கூடியிருக்கிறது.

     முதல் நிகழ்வாய் இறை வணக்கம்.

      முப்பால் புலவரின் திருக்குறளைப் பாடி, வான் புகழ் வள்ளுவனுக்கு வணக்கம் செலுத்துகிறார் அவைப் புலவர்.

     நல்ல தொடக்கம்தான். ஆனால் ஆட்சி மட்டும், அவன் சொன்னபடி இல்லையே, ராஜேந்திரா?

     குந்தவையின் குரல், வயது முதிர்ந்த நிலையிலும், கம்பீரமாய் ஒலித்தது.

     அவையே மிரண்டு போனது.

     நூலின் தொடக்கமே, நம்மை நூலுக்குள் முழுதாய் இழுத்து விடுகிறது.

     படிக்கப் படிக்க, ஆசிரியரின் வார்த்தைச் சுழலில் சிக்கி மகிழ்ச்சியில் திளைத்துப் போகிறோம்.

     மெல்ல உணர்வு வரத் தொடங்கியது.

     முழுமையாய் உணர்வு வரும்வரை, அப்படியே படுத்துக் கிடந்தான் இராஜாதிராஜன்.

     என்ன நடந்தது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவிற்குக் கொண்டு வந்தான்.

     அரண்மனையில் இருந்து புறப்பட்டோம்.

     மனக்கிலேசமும், சிந்தனையும் மாறி மாறி வாட்ட, அப்படியே காலார நடந்தோம்.

     பின் புரவியில் அமர்ந்து சிந்தித்தபடியே பயணம் செய்தோம்.

     திருவையாறு காவிரிக் கரையில் நீராடினோம். புரவியையும் நீராட வைத்தோம்.

     மீண்டும் கருந்திட்டைக்குடி வழியாக, தஞ்சை அரண்மனை திரும்ப எண்ணிப் புறப்பட்டோம்.

     வழியில் மழைத் தூறல் அதிகமானது.

     ஒதுங்கி நின்றோம்.

     பின் புரவியை நடத்தியபடி மெல்ல நடந்தோம்.

     அதுவரை நினைவு இருக்கிறது.

     அந்த நேரம்தான், பின்புறம் இருந்து, யாரோ, என்னை வலுவாக அழுத்திப் பிடித்து, என் முகத்தில், எதையோ வைத்து, சுவாசிக்கும்படி செய்தார்கள்.

     பின் நடந்தது எதுவும் புரியவில்லை.

     படிக்கும்போதே, பதட்டம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

     தஞ்சையிலேயே சோழ இளவரசர் கடத்தப்பட்டாரா?

     சோழ இளவரசருக்கே பாதுகாப்பில்லை எனில், பொது மக்கள்  கதி.

     கதையில் விறுவிறுப்பு கூடுகிறது.

     செங்கானான்.

     செங்கானான் மூலையில் உதவித்த  கருவி கல் கால் கவன்.

     இயந்திரப் பொறி.

     எளிமையானது.

     ஒரு நீண்ட சதுரப் பலகை வண்டியில் நிறுத்தப்பட்டு, மூன்று பெரிய அகப்பை போன்ற கரங்கள், வில் முறையில் அமைக்கப்பட்டிருக்கும்.

     பெரிய பூதாகரமான அகப்பையில், பெரிய பெரிய கல் உருண்டைகளை அல்லது கல் குண்டுகளைப் போட்டு நிரப்பி வைத்திருப்பார்கள்.

     அகப்பை போன்ற அமைப்பு, எம்பி எழும்போது, அதில் இருந்த கற்களும், கல் குண்டுகளும், சுமார் ஐநூறு அடிகள் வரை பாய்ந்து, பறந்து போய்  எதிரிகளைத் தாக்கும்.

     கோட்டை கொத்தளங்களை தகர்த்து வீழ்த்தும்.

     பொடி, பொடியான கற்களை வைத்து இயக்கினால், பாய்ந்து சென்று காலாட்படைகள், குதிரைப் படைகளைத் தாக்கும்.

      யானைப் படைகளை நீர்மூலம் செய்துவிடும்.

     எங்கிருந்து வருகிறது என்பதை உணரும் முன்னரே, இந்த கற்குவியல் பெரு அழிவை எற்படுத்திவிடும்.

     படிக்கப் படிக்க வியப்பு கூடுகிறது.

     போர்க்களங்களில் நம் முன்னோர் கடைபிடித்த போர் முறைகளை அறியும்போது, அக்காலத்திய இயந்திரப் பொறியியல் அறிவை அறிய முடிகிறது.

     ஒரு நாடு எப்போது பெண்களை மதிக்க மறந்ததோ, எப்போது பெண் இனத்திற்கு இழிவு ஏற்படுகிறதோ, எப்போது பெண்கள் போகப் பொருளாக மட்டுமே பார்க்கப் படுகிறார்களோ, எப்போது பெண்களின் கற்பிற்கு மதிப்பில்லாமல் போகிறதோ, அப்போதே அந்நாடு, அழிவை நோக்கிப் பயணப்படத் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.

     எம்பெருமானின் இடப் பக்கம் இருந்து, இந்த அகிலத்தையே காத்துக் கொண்டிருக்கும் அன்னை உமையவள், ஒரு முறை ஈசனிடம், போகமும் யோகமும் இணைந்து இருக்க முடியுமா? என்று கேட்க, அதற்கு ஈசன், தவயோகத்தில் இருந்து ஞானம் பெற்றுக் கொள்வாய் எனக் கூற, அதை ஏற்ற உமையவள், பூலோகம் வருகிறாள்.

     அப்பொழுது உமையவள் தவம் செய்யத் தேர்ந்தெடுத்த இடம்தான் திருவாணைக்காவல்.

     அப்படி தவவாழ்வு ஏற்ற அன்னை அகிலாண்ட பரமேசுவரியின் கோபம் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது சோழ நாட்டை.

     அதைத் தடுக்க முடியுமா, நம்மால்?

     நான் முயற்சிக்கப் போகிறேன்.

     தடுக்க அல்ல, அவளின் சினத்தைத் தணிக்க, தனியாளாய் தவம் இருக்கப் போகிறேன்.

     அவளைப் போலவே.

     குந்தவைப் பேசப் பேச, படிக்கும் நமக்குள், ஒரு இனம் புரியாத உணர்வு மெல்ல, மெல்ல கூடுகிறது.

     குந்தவை வெல்ல வேண்டுமே என்னும் கட்டுக்கடங்கா ஆவல் உள்ளத்தில் எழுகிறது..

     கவலைப் படும்படி ஒன்றுமில்லை என்றாலும் ...

     வைத்தியரே அது என்ன "என்றாலும்" என இழுக்குறீர்கள், மூடி மறைத்துச் சொல்லாமல், தெளிவாய் உண்மையைச் சொல்லும்.

     அமைச்சர் பெருமானே, நாடி சொல்வதைத்தான் நான் சொல்ல முடியும்.

     சரி, நாடி என்ன சொல்கிறது? சொல்.

     அய்யனே,  பிராட்டியாருக்கு ..

     தயக்கத்துடன் மன்னரின் முகத்தைப் பார்க்க.

     சொல்லுமய்யா என்னவென்று, நீர் வேறு எங்களை மேலும் வேதனைப் படுத்தாதீர்.

     குந்தவை பிராட்டியாருக்கு, மது மேகம் தலைகாட்டுகிறது.

     என்னது மது மேகமா?

     மன்னரைப் போலவும், அமைச்சரைப் போலவும், ஆசிரியர் நம்மையும் திடுக்கிட வைக்கிறார்.

     மதுமேகம்.

     மதுமேகம் என்றால் என்ன? ஏன் வருகிறது? இதற்கான மருத்துவம்தான் என்ன? என்பதை கூறும்பொழுது, இக்குறைபாடு அக்காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதை அறியும் பொழுது மலைப்புதான் தோன்றுகிறது.

     நம் முன்னோர்களில் ஒருவரான மன்னன் இராவணன் மருத்துவத்தில் செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம்.

     அவரது மருத்துவத்தில் மிகவும் எளிமையான முறைகளோ ஏராளம்.

     இதனைத்தான் மக்கள் இன்றும் கை வைத்தியம், பாட்டி வைத்தியம் எனப் போற்றிப் பின்பற்றி வருகிறார்கள்.

      மருத்துவத்தில் அக மருத்துவம், புற மருத்துவம் என இரு முறைகளை வகுத்தான்  இராவணன்.

     அக வைத்தியம் என்பதில் 50 ம், புற வைத்தியம் என்பதில் 60 ம் வகுத்தான்.

     அதில்தான் ஆழ்நிலை மயக்கம் அல்லது ஆழ்நிலை உறக்கம் பற்றி விரிவாகக் கூறுகிறார்.

     இராவணனை ஒரு கொடூரமான மனிதராக மட்டுமே படித்து, கேட்டுப் பழக்கப்பட்ட நமக்கு, இந்நாவலில் ஆசிரியர் கூறும் தகவல்கள், இராவணனின் உண்மை உருவை நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகின்றன.

     பத்து தலை இராவணன் என்றே படித்தும், கேட்டும் மனதில் பதிய வைத்திருக்கும் நமக்கு, பத்து தலை அல்ல, பத்து கலை இராவணன் என்றொரு விளக்கத்தைக் கொடுத்து, நம்மைத் திக்குமுக்காட வைக்கிறார்.

     இசை. வான சாஸ்திரம், அரசியல், மனோ தத்துவம், மந்திரம்,  மருத்துவம், சோதிடம், விஞ்ஞானம், ஓவியம், இலக்கியம் என்ற பத்து கலைகளில் நிகரற்று விளங்கியதால் பத்து கலைகள் கொண்டவர், பத்து கலை இராவணன் எனப் பாராட்டப் பெற்றார்.

     நாமோ இன்று பத்து தலை இராவணன், பத்து தலை இராவணன் என்றே படித்துக் கொண்டிருக்கிறோம்.

     வேதனையாக இருக்கிறதல்லவா?

     நம் முன்னோர்களின் சிறப்பினை மறந்து, நமக்குப் புகட்டப்பெற்றத் தவறானத் தகவல்களையே உண்மை என்று நம்பி, வரலாறு எனப் போற்றிப் புகழ்ந்து வருகிறோம்.

குந்தவையின் சபதம்.

     முதல் பக்கத்திலேயே, நம்மை கற்பனைக் குதிரையில் ஏற்றி, ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி, அழைத்துச் சென்று, சோழர்கள் காலத்து அரண்மனைகள், ராஜ வீதிகள் என நம்மை உலாவ விடுகிறார்.

     ஒவ்வொரு பக்கமும் புத்தம் புதுச் செய்திகளைக் கொட்டி , நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறார்.

     இதுமட்டுமல்ல பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பை கூட்டிக் கொண்டே சென்று, நம்மை பதைபதைக்க வைக்கிறார்.

     அடுத்து என்ன? அடுத்து என்ன? என நம் ஆர்வத்தை தூண்டுகிறார்.


குந்தவையின் சபதம்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தைச் சார்ந்த

எழுத்துச் சித்தன்

புனிதாலயம் தி.இராமபாரதி அவர்களின்

ஒப்பற்ற வரலாற்றுப் புதினம்

குந்தவையின் சபதம். 

     அறுபது வயதை எட்டிப் பிடித்த பிறகும், வாசிப்பிலும், எழுத்திலும், வரலாற்றுக் குறிப்புகளைத் தேடிக் கண்டெடுத்து,  வரலாற்றுப் புதினத்துள் புகுத்தி மகிழ்வதிலும், ஒரு சுறுசுறுப்பு மிகுந்த இளைஞராகவே காணப்படுகிறார்.

     வளமான வாழ்க்கை, கை கூடாத சூழலிலும், வறுமையைப் புறந்தள்ளி, எழுத்துலகில் மன்னராகவே வலம் வருகிறார்.







குந்தவையின் சபதம்

     அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய அற்புதமான நூலாகும்.

     ஆசிரியர் அவர்கள் இன்னும் பல வரலாற்று நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கி, என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்பது உறுதி.

குந்தவையின் சபதம்,

நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்,

மதுரை.

தொலைபேசி : 0452 4396667

விலை 500

29 கருத்துகள்:

  1. நூல் அறிமுகம் அருமை.
    வாசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. மிகச்சிறப்பு, பதிவின் மூலம் படைப்பை அறிந்தோம். நூலாசிருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விழா குழுவினருக்கு எனதன்பு ❤️.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான விமரிசன ஆரம்பம்.வாழ்த்துகள் கரந்தையாரே.

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான நடையில் நூல் அறிமுகம் தந்தீர்கள்! சிறப்பு!!

    பதிலளிநீக்கு
  5. விமர்சனம் வழக்கம்போல தங்களது நடையில் சிறப்பு

    பதிலளிநீக்கு
  6. அருமையான விமர்சனம் ஸார்

    பதிலளிநீக்கு
  7. // நம் முன்னோர்களின் சிறப்பினை மறந்து, நமக்குப் புகட்டப்பெற்றத் தவறானத் தகவல்களையே உண்மை என்று நம்பி, வரலாறு எனப் போற்றிப் புகழ்ந்து வருகிறோம்...//


    முப்பாலையும் சிதைத்து உள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
  8. மதிப்புரையைப் படிக்கும்போதே அக்காலகட்டத்திற்குச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது. நூலாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. புத்தகத்தைப் படிக்கத் தூண்டும் மதிப்புரை அருமை

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான முறையில்
    'குந்தவையின் சபதம்' பெயரே இழுக்கிறது . அறிமுகம் எம்மையும் படிக்கத் தூண்டுகிறது.

    கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. பதிவான அனைத்தும் அழகாக அருமையாக உள்ளது.வாழ்த்துகள் !

    உடுவை.எஸ.தில்லைநடராசா
    கொழும்பு-இலங்கை.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு