16 மே 2023

எழுதுகோலில் மிளகாய் பொடி

 


     வீரபாண்டிய கட்டபொம்மன்.

     வீரபாண்டிய கட்டபொம்மன், திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர்.

     ஒவ்வொரு நாளும், திருச்செந்தூர் கோயிலில், முருகனுக்குப் பூசை செய்யும் அதே நேரத்தில், பாஞ்சாலங்குறிச்சியில், தன் அரண்மனையில் பூசை செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

பாஞ்சாலக்குறிச்சிக்கும் திருச்செந்தூருக்கும் சற்றேறக்குறைய 60 கி.மீ. தொலைவு.

     யோசித்தார்.

     திருச்செந்தூர் தொடங்கி, பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை வரை, குறிப்பிட்ட இடைவெளிகளில் பல மணி மண்டபங்களைக் கட்டினார்.

     திருச்செந்தூர் கோயிலில் பூசை தொடங்கியவுடன், கோயிலின் அருகில் இருக்கும் மணி மண்டபத்தில் மணி அடிப்பார்கள்.

     இம்மணியின் ஓசை எட்டும் தொலைவில் அடுத்த மண்டபம்.

     மணியோசை கேட்ட அடுத்த நொடி, அம்மண்டபத்தில் மணி அடிப்பார்கள்.

     இம்மண்டபத்தின் மணியோசை எட்டும் தொலைவில் அதற்கு அடுத்த மண்டபம்.

     இப்படியே, சங்கிலித் தொடர் போன்ற மணி மண்டபங்களில், மணி அடித்து, மணி அடித்து, திருச்செந்தூரில் பூசை தொடங்கிய சில நொடிகளிலேயே, செய்தியானது, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையினைச் சென்றடைந்து விடும்.

     உடனே பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் பூசையினைத் தொடங்குவார்கள்.

     மணி மண்டபங்கள் முலம் தகவல் தொடர்பு.

---

     மனிதன், தன் தொடக்க காலம் முதலே, செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும், மற்றவர்களிடமிருந்து செய்திகளை அறிந்து கொள்வதிலும் இயற்கையாகவே ஆர்வம் மிகுந்தவனாக இருந்தான்.

     பறவைகளைப் பயன்படுத்தினான்.

     தூதர்களைப் பயன்படுத்தினான்.

     காலம் மாற, மாற கருவிகள் மாறியதே தவிர, தகவல் தொடர்பானது வெகுவேகமாய் வளர்ந்துதான் வந்துள்ளது.

     ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலத்தில், இங்கிலாந்திலே ஒரு மன்னர் இறந்து விட்டார் என்றால், அச்செய்தி இந்தியாவின் கடைகோடியை அடைய மூன்று மாதங்கள் ஆகும்.

     மன்னரின் மறைவுச் செய்தியினைச் சுமந்து வரும் இதழானது அல்லது மடலானது, கடல் வழி கப்பலில் பயணித்து, இந்தியாவிற்கு வந்து, பின் தரை வழிப் பயணித்தாக வேண்டும்.

     ஆனால் இன்று, உலகின் எம்மூலையாக இருந்தாலும், அடுத்த நொடி தகவலை அறியலாம்.

     முதன் முதலில் தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவை அச்சு இயந்திரங்களாகும்.

      அச்சுத் தொழில் நுட்பத்தை உருவாக்கிய பெருமை சீனாவையே சாரும்.

      அச்சுத் தொழில் நுட்பமானது சீனாவில் இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்து இந்தியாவை வந்தடைந்தது.

     இந்தியாவினைப் பொறுத்தவரை, கோவாவில்தான், முதல் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டது.

     சீகன் பால்க் அவர்களின் முயற்சியால், இரண்டாவது அச்சு இயந்திரம், தமிழ் நாட்டின் தரங்கம்பாடியில் நிறுவப்பெற்றது.

     விவிலியத்தை மொழிபெயர்த்து தமிழில் அச்சிட்டு வழங்குவதே, சீகன் பால்க் அவர்களின் நோக்கமாக இருந்தபோதிலும், விவிலியம் அல்லாத பிற அச்சு நூல்களின் வருகைக்கும், இவ்வச்சுக் கூடம் காரணமாய் விளங்கியது.

     அச்சு நூல்களின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாய், பத்திரிக்கைகள் தோற்றம் பெற்றன.

     முதன் முதலில் மாத இதழ்கள் தொடங்கப் பெற்றன.

     பின் வார இதழ்கள் வந்தன.

     நாளடைவில் நாளிதழ்கள் சுடச்சுட செய்திகளைச் சுமந்து, தமிழகத்தை வலம் வரத் தொடங்கின.

    


தமிழில் தொடங்கப் பெற்ற முதல் பத்திரிக்கை சுதேசமித்திரன்.

     வார இதழாகத் தொடங்கப்பெற்று, பின்னர் நாளிதழாக வளர்ச்சி பெற்றது.

     சுதேசமித்திரன் இதழினைத் தொடங்கியவர், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றைச் சார்ந்தவர்.

     கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர்.

     ஜி.சுப்பிரமணிய ஐயர்.

     இவர் இதற்கும் முன்பே ஒரு ஆங்கில இதழையும் தொடங்கியிருந்தார்.

     எதற்காகத் தெரியுமா?

     ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு விவாதத்தை கற்றறிந்தவர்களிடம் உருவாக்க வேண்டும் என்பதற்காக.

     எதற்காக விவாதம்?

     1878 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக முத்துசாமி ஐயர் என்பவர் நியமிக்கப்படுவதை, அன்றிருந்த ஆங்கிலோ இந்தியப் பத்திரிக்கைகள் கடுமையாக எதிர்த்தன.

     ஆங்கிலோ இந்திய பத்திரிக்கைகள் எடுத்துவைக்கும் கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதற்காகவே, ஒரு ஆங்கில இதழினைத் தொடங்கினார்.

    இந்த ஆங்கில இதழில் இவர் எழுதிய கட்டுரைகளைக் கண்ட மகாகவி பாரதியார், என்ன சொன்னார் தெரியுமா?

     He used to write by loading Chilli Powder in the Pen.

     பேனாவில் மிளகாய் பொடிவை நிரப்பி எழுதுகிறார்.

    இவர் ஆரம்பித்த, இந்த ஆங்கில இதழின் பெயர் என்ன தெரியுமா?

     The Hindu.

     ஆம், உண்மை.

     The Hindu  இதழைத் தொடங்கியவர் இந்த, திருவையாற்று சுப்பிரமணிய ஐயர்தான்.

    


இவரிடம் இருந்துதான், பின்னாளில், கஸ்தூரி ரங்கன் அவர்கள் தி இந்து இதழினை வாங்கினார். அதுமுதல்தான் இந்து குழுமத்தாரால் இந்து இதழானது நடத்தப்பெற்று வருகிறது.

     1926 ஆம் ஆண்டு பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சி.பா.ஆதித்தனார் அவர்களால் தினத் தந்தி தொடங்கப் பெற்றது.

     பின்னர் தினமலர், தினமணி, தினகரன் என நாளேடுகளும், கல்கி, ஆனந்த விகடன், குமுதம், கணையாளி, அமுத சுரபி என எண்ணற்ற வார இதழ்களும் தோன்றின.

     ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்கள் நாவல் இலக்கியத்தை வளர்த்தன.

     கணையாழி, அமுத சுரபி போன்ற இதழ்கள் இலக்கியத் தமிழை வளர்த்தன.

     காட்சி ஊடகங்கள், சமூக வலைத் தளங்களின் வருகையால், வளர்ச்சியால், அச்சு ஊடகங்களின் வளர்ச்சி குன்றியதைப் போல தெரிந்தாலும், இன்றும் அச்சு ஊடகங்கள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

     பத்திரிக்கைகள் ஒரு பக்கம் செய்திகளைப் பரப்பினாலும், மறு பக்கம், சமூக பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல், தகுந்த கருத்துக்களை மக்களுக்குச் சொல்லுகின்ற ஆயுதமாகவும் இருந்து வருகின்றன.

     ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்றால், பத்திரிக்கைத் துறை, ஊடகத் துறை வளமாக இருக்க வேண்டும். இவ்ஊடகங்களின் சுதந்திரம் போற்றப்பட வேண்டும்.

     பத்திரிக்கைத் துறையில், ஊடகத் துறையில் அச்சுறுத்தல்கள் ஏற்படுகின்ற பொழுதெல்லாம், அரசியல் மாற்றங்கள், சமுதாய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

---

கடந்த

14.5.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்

தஞ்சாவூர், டெக்கான் கிரானிக்கல், மூத்தப் பத்திரிக்கையாளர்திரு கோ.சீனிவாசன் அவர்கள்

பத்திரிக்கையும் பைந்தமிழும்

எனும் தலைப்பில்

கற்காலம் முதல், இக்காலம் வரையிலான தகவல் தொடர்பு பற்றிய, ஒரு பருந்துப் பார்வையால் விளக்கி, அரங்கில் இருந்தோரை வியப்பில் ஆழ்த்தினார்.

ஓய்வு பெற்ற வேளாண்துறை நிர்வாக அலுவலர்


திரு இரா.சிவகுமார் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற இப்பொழிவிற்கு வந்திருந்தோரை,

எடகப் பொறுப்பாளர், புரவலர்


திரு பி.கணேசன் அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

சுவடியியல் மாணவி


திருமதி ஆ.சோலைமுத்து அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர் நகர மனவளக் கலை மன்றத் துணைப் பேராசிரியர்


திருமதி அ.அரங்கநாயகி அவர்கள்

நிகழ்வினை சிறப்புறத் தொகுத்து வழங்கினார்.


ஏடக அரங்கில்

ஊடகத் தமிழை

வலம் வரச் செய்த

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

11 கருத்துகள்:

 1. ஆனால் தற்போது ஊடகமும் வெங்கோலன் கையில்...

  பதிலளிநீக்கு
 2. பத்திரிகை வளர்ச்சியைப் பாங்குடன் விளக்கிய ஐயா அவர்களுக்கும் அதைத் தொகுத்து வழங்கிய தங்களுக்கும் நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 3. சுவாரஸ்யமான தகவல்கள்.  ஆனால் கெட்டபொம்மு பற்றிய தகவல் மட்டும் கதையாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெள்ளையர்களால் இடிக்கப்பட்ட மணி மண்டபங்களின் எச்சங்கள் இன்ரும் காணப்படுவதாக சொல்கின்றார்கள்..

   நீக்கு
 4. சிறப்பான பதிவு.
  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா17 மே, 2023

  வணக்கம்ங்க சார். சிறப்பான கட்டுரையைத் தந்துள்ளீர்கள். இதில் எனக்கு ஓர் ஐயம். கட்டபொம்மன் கோட்டை பாஞ்சாலங்குறிச்சி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் பாளையங்கோட்டை என்று இருக்கிறது. எது சரியான தகவல் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா. பாஞசாலக்குறிச்சி என்பதுதான் சரியானது. என்னை அறியாமல் தட்டச்சு செய்யும் பொழுது தவறுதலாய் தட்டச்சு செய்துவிட்டேன். தற்பொழுது தங்களின் கருத்துரையினைக் கண்டவுடன் திருத்தம் செய்து விட்டேன். நன்றி ஐயா

   நீக்கு
 6. ஊடகம் வளர்ந்து இப்போது கணக்கிலடங்கா வகையில் ஊடகங்கள் வளர்ந்திருக்கின்றன. ஒரு வேளை எதுவுமே அரிதாக, சொற்பமாக இருக்கும் போது அதன் தரம் மிக உயர்வாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்போது பெருகியிருப்பது தரம் கெட்டு இருக்கிறது என்றே சொல்லலாம்.

  நல்ல தகவல்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 7. நல்ல தகவல்கள். மிக மிக நன்றி கரந்தையாரே.

  பதிலளிநீக்கு
 8. பயனுள்ள தகவல்கள் பலவற்றை அறிந்து கொண்டேன்- நன்றி பலப்பல.

  உடுவை.எஸ்.தில்லைநடராசா,
  கொழும்பு- இலங்கை.

  பதிலளிநீக்கு
 9. அருமை. வாழ்த்துகள். கணையாழி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு