03 ஜூலை 2023

கணிதம் பிறந்த இல்லம்

 


நான் உண்ண உணவின்றி அரைப் பட்டினியாகக் இருக்கும் ஒரு மனிதன். எனது மூளையைப் பாதுகாக்க, எனது  வயிற்றிற்குச் சிறிது உணவு தேவைப் படுகிறது. இதுவே எனது முதல் தேவையாகும்.

     இவர்தான் இராமானுஜன்.

     கணிதமேதை சீனிவாச இராமானுஜன்.

தன் கணித மூளையைப் பாதுகாக்க, வயிற்றிற்குப் போதிய உணவின்றித் தவித்தவர்தான், கணிதமேதை சீனிவாச இராமானுஜன்.

     ஒரு பக்கம் உடலை வாட்டிய தீராத நோய்.

     மறுபக்கம் மனதை வெகுவாய் அரித்த குடும்பச்சூழல்.

     இருப்பினும் ஐந்தே ஐந்து ஆண்டுகளில், 1914 முதல் 1919 வரையிலான, தனது கேம்பிரிட்ஜ் வாழ்க்கையில், கணிதக் கடலில் மூழ்கி, இவர் கண்டுபிடித்துக் கொடுத்த கணிதம் கண்டு, உலகே வியந்து போனது.

     தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

     இத்தகு பெருமை வாய்ந்த கணிதமேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு.

     இதோ ஈரோட்டில், இராமானுஜன் பிறந்த மண்ணில், உடலும் உள்ளமும் சிலிர்க்க நின்று கொண்டிருக்கிறேன்.


கடந்த 20.6.2023 செவ்வாய்க் கிழமை நண்பகல் வேளையில், நண்பர்கள் திரு கா.பால்ராஜ், நண்பர் திரு சு.சோவிந்தராஜ் மற்றும் மகிழ்வுந்து ஓட்டுநர், நண்பர் திரு ராஜா ஆகியோருடன் இணைந்து, இதோ ஈரோடு தெப்பக்குளத்தில், கணித மேதையின் சிலையருகில் நின்று கொண்டிருக்கிறேன்.

     இத்தெருவிற்குப் பெயர் கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தெரு.

     ஆனால் இராமானுஜன் பிறந்த இல்லம் இருப்பது, இத்தெருவில் அல்ல.


இத்தெருவில் இருந்து பிரிவும் ஒரு சின்னஞ்சிறு சந்தில் இருக்கிறது.

     வாருங்கள்.

     இதோ இதுதான் கணிதமேதை பிறந்த இல்லம்.

     இராமானுஜனின் தாத்தா, இராமானுஜனின் தாய் திருமதி கோமளத்தம்மாளின் தந்தை, திரு நாராயண அய்யங்கார் அவர்கள், அப்பொழுது, ஈரோடு முன்சீப் நீதிமன்றத்தில் அமீனாவாகப் பணிபுரிந்து வந்தார்.
கோமளத்தம்மாளுக்கு இது முதல் பிரசவம் என்பதால், தன் தாய்வீடு நாடி வந்திருந்தார்.

     இந்த வீட்டில்தான், 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் வியாழக் கிழமை இராமானுஜன் பிறந்தார்.

     சில மாதங்கள் கடந்தபின், தன் மகனோடு கும்பகோணம் திரும்பினார் தாய் கோமளத்தம்மாள்.

     இராமானுஜன் பிறந்த வீடு, இன்று தனியார் வசம் இருக்கிறது.


இவ்விட்டின் பெயர் ஜோதி இல்லம் என்றும், இவ்வீடு கட்டப்பெற்ற ஆண்டு 1951 என்றும் உரைக்கிறன, வீட்டின் முன்பக்க சிமெண்ட் எழுத்துகள்.

     இராமானுஜன் பிறந்த ஆண்டு 1887.

     அவர் மறைந்ததோ 1920.

     இராமானுஜனின் மறைவிற்குப் பின், 31 ஆண்டுகள் கடந்த பின் கட்டப்பெற்ற வீடு இது.

     இருப்பினும் இராமானுஜன், இந்த இடத்தில் இருந்த வீட்டில்தான், 1887 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.

     இன்று, உலகம் போற்றும் கணிதமேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த இல்லம் இதுதான் என்று கூறுவதற்கு, ஒரு பெயர் பலகைக் கூட இல்லை.

          இத்தெருவில் இருப்பவர்களின் பலருக்கும், மாபெரும் கணிதமேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த வீடு இதுதான், என்பது கூட தெரியவில்லை.

     கணிதமேதை உயிருடன் இருந்தவரை, தன் அறிவாற்றலை நிரூபிக்க அரை வயிற்று உணவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, நாம் அவரை கவனிக்கவும் இல்லை, போற்றவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை.

     ஆங்கிலேயர்களின் ஆதரவுடன், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் சென்று, தன் கணிதத் திறமையினை, உலகே வியக்கும் வகையில் வெளிச்சம் போட்டுக் காட்டிய, மாபெரும் கணிதமேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த வீட்டையாவது, நாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாமா?

     வேதனை மனதை வாட்டுகிறது.

     விரைவில் நல்லது நடக்கும், இராமானுஜன் இல்லம் புதுப் பொலிவு பெற்று, நினைவு இல்லமாய் தலைநிமிர்ந்து நிற்கும் என நம்புவோம்.