19 ஜூலை 2023

மருந்தே ஆயினும்

ஈதல் அறம்  தீவினைவிட்டு  ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு.

கணவனும் மனைவியும் கருத்து ஒன்றுபட்டு, ஒருவருக்கு ஒருவர் துணையாக, ஆதரவோடு வாழ்வதே வாழ்க்கை.

     அதுவே இல்லறத்திற்குத் தகுதியான வாழ்க்கை என்கிறார் ஔவையார்.

     ஈகையுடன் வாழ வேண்டும்.

     அறத்தைச் செய்ய வேண்டும்.

     தீவினையை விட்டுவிட வேண்டும்.

     இதன் வழி வாழ்கின்ற வாழ்க்கைதான் இல்லறம்.

     அதுவே நல்லறம்.

ஆற்றுதல் என்பது

ஒன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்.

போற்றுதல் என்பது

புணர்ந்தாரைப் பிரியாமை.

பண்பெனப்படுவது

பாடறிந்து ஒழுகுதல்.

அன்பெனப்படுவது

தன் கிளை செறாமை.

அறிவெனப்படுவது

பேதையார் சொல் நோற்றல்.

செறிவெனப்படுவது

கூறியது மறவாமை.

நிறைவெனப்படுவது

மறை பிறர் அறியாமை.

முறையெனப்படுவது

கண்ணோடாது உயிர் வௌவல்.

பொறையெனப்படுவது

போற்றாரைப் பொறுத்தல்.

     ஆற்றுதல் என்பது வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுதல். போற்றுதல் என்பது உறவுகளை ஒருபோதும் கைவிடாமை. பண்பு என்பது பிறரோடு ஒத்து வாழ்தல். அன்பு என்பது சினம் கொள்ளாது உறவுகளை அரவணைத்து, அன்பு குறைடாமல் வாழ்தல்.

     அறிவு என்பது அறிவிலார் கூறும் பொருளற்ற சொற்களைப் பொறுத்துக் கொள்ளுதல். செறிவு என்பது சொன்ன சொல்லைக் காப்பாற்றுதல். நிறை என்பது மறைக்க வேண்டிய செயல்களை பிறர் அறியா வண்ணம் மறைத்தல்.

     முறை என்பது, குற்றம் செய்தவர் உறவென்றாலும, நடுவு நிலை நின்று நீதி வழங்கித் தண்டனைப் பெற்றுத் தருதல். பொறை என்பது தன்னோடு மாறுபட்ட கருத்து உடையோரையும், அவர்தம் பிழைகளைப் பெரிதுபடுத்தாது போற்றுதல்.

     ஆற்றுதல், போற்றுதல், அன்பு, பண்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை இந்த ஒன்பதும்தான் அறம், வாழ்வியல் அறம் என்று உரைக்கிறது கலித்தொகை.

மண் திணி ஞாலத்து

உண்டி கொடுத்தோர்

உயிர் கொடுத்தோரே என்கிறது மணிமேகலை.

மருந்தே ஆயினும்

விருந்தோடு உண் என்கிறார் ஔவையார்.

     மருந்து என்ற சொல்லுக்கு அமிழ்தம் என்ற ஒரு பொருளும் உண்டு. அமிழ்தமே உண்டாலும், பிறரோடு பகிர்ந்து உண்ண வேண்டும்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

     அமிழ்தமே என்றாலும் விருந்தினராக வந்தவர், வெளியே சென்றிருந்தால், அவர் திரும்பி வருவதற்குள் உண்ணுதல் கூடாது என வலியுறுத்தும் திருக்குறள், மேலும் உரைப்பதைப் பாருங்கள்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்த பார்த்திருப்பான்

நல்வருந்து வானத் தவர்க்கு.

     தன் இல்லத்திற்கு விருந்தினராய் வந்தவர்க்கு, நல் விருந்து அளித்து உபசரிப்பதோடு, அவர்கள் வீட்டைவிட்டு செல்லும் பொழுது, வழியில் உண்ண உணவு கொடுத்து அனுப்புவதும் விருந்தோம்பலில் அடங்கும் என்கிறார் வள்ளுவர்.

     விருந்தோம்பல் தமிழரின் தலையாயப் பண்பு.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

நன்நடை நல்கல் வேந்தர்க்குக் கடனே

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

     மகனைப் பெற்றுக் கொடுத்தல் தாயின் கடமை. அவனை நற்பண்புகள் நிறைந்த வீரனாக்குவது தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான படைக் கருவிகளை உருவாக்கிக் கொடுத்தல் கொல்லனின் கடமை. அவனுக்குப் போரின் அறங்களைக் கற்பித்து வழியனுப்பி வைத்தல் மன்னனின் கடமை.

     ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் செய்து, பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீண்டு வருதல் ஆண்மகனின் கடமை.

     ஒரு தனி மனிதனின் வெற்றியில் தாய், தந்தை, ஆசிரியர், மன்னன் அனைவரின்பெரும் பங்கும் உண்டு என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழி தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.

     குளத்தில் நீர் நிறைந்திருக்கையில், அதில் தங்கி மீன்களை உண்டு, உயிர் வாழ்ந்த பறவைகள் அனைத்தும், அக்குளத்தில் நீர் வற்றுமானால், அங்கிருந்து பறந்து சென்றுவிடும்.

     அதைப்போல், நாம் செழிப்பாக இருந்த காலத்தில் ஒட்டி உறவாடிப் பயன் அடைந்தவர்கள், நமக்கு வறுமை, துன்பம் வருகையில் அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்யாமல், அகன்று விடுவார்களானால், அவர்கள் உறவினர்களே அல்ல.

     எனவே காரியங்களை எதிர்பார்த்து அன்பு செலுத்தக்கூடாது.

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி – தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாரும் நட்பாரும் இல்.

     மரத்தில் பூக்கும் மலர்கள் மலர்ந்துபின், அவை உதிரும் வரையில் கூம்புவதில்லை.  தோட்டத்துக் குளத்தில் பூக்கும் தாமரை, அல்லி போன்ற மலர்கள் மலர்ந்தும், குவிந்தும், பின் மலர்ந்தும் பல நாள் இருக்கும்.

     இதுபோல, கண்முன் முகமலர்ச்சியோடு பேசி, பின் நமக்குப் பின்னே முகம் சுளிப்பர் நண்பரே அல்ல.

நின்நயந்து உறைஞர்க்கும், நீநயந்து உறைநர்க்கும்

பல்மான் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்

கடும்பின் கடும் பசிதீர யாழ நின்

நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்.

 

இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது

வல்லாங்க வாழ்தும் என்னாது, நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழாவோயே

பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்

திருந்து வேல் குமணன் நல்கிய வளனே.

     வள்ளல் குமணனிடம் பரிசில் பெற்று வந்த பெருஞ்சித்திரனார் தன் மனைவியிடம் கூறுகிறார்.

     என் மனைவியே, பழங்கள் தொங்கும் மரங்கள் நிறைந்த முதிமலைத் தலைவனும் செவ்விய வேலையுடையவனுமாகிய குமணன் கொடுத்த இந்தச் செல்வத்தை, உன்னை விரும்பி வாழ்பவர்க்கும், நீ விரும்பி வாழ்பவர்க்கும், பல வகைகளிலும் சிறந்த கற்புடைய உனது சுற்றத்தாருள் மூத்தோருக்கும், நமது சுற்றத்தாரின் கொடிய பசி நீங்குவதற்காக உனக்குக் கடன் கொடுத்தோர்க்கும், மற்றும் இன்னவர்களுக்கு என்று என்னாமல், என்னையும் கலந்து ஆலோசிக்காமல், இப்பொருளை வைத்து நாம் நன்றாக வாழலாம் என்று எண்ணாது, அதை எல்லோர்க்கும் கொடு.

     இதுதான் தமிழர் பண்பாடு.

     சங்க இலக்கியம் மட்டுமல்ல, நாட்டுப் புறப் பாடல்களும், இன்றைய் கவிஞர்களின் பாடல்களும், வாழ்வியலின் யதார்த்தத்தைப் படம் பிடித்துத்தான் காட்டுகின்றன.

     இரு தோழிகள், மிக நீண்ட வருடங்களுக்குப் பின் சந்திக்கின்றனர்.

ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்

புங்க மரத்தடியில் பூவிழுந்த மணல் வெளியில்

பேன் பார்த்த சிறு வயசு பெண்ணே நெனவிருக்கா?

 

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு

இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட

பட்டுச்சிறுகயிறு பட்ட இடம் புண்ணாக

இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

 

கருவாட்டுப் பானையில சிலுவாட்டுக் காசெடுத்து

கோணார்கடை தேடிக் குச்சி ஐசு ஒன்று வாங்கி

நாந்திங்க நீகொடுக்க, நீதிங்க நாங்கொடுக்க

கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட

பல்லால் கடிச்சுப் பங்குபோட்ட வேளையில

வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

 

கண்ணாமூச்சி ஆடையில கால்கொலுச நீதொலைக்க

சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக

எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு

என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

 

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க

பல்லாங்குழி ஆடையில பருவம் திறந்துவிட

என்னமோ ஏதோன்னு பதறிப்போய் நானழுக

விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

 

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறு தின்னோம்

பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்

ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில் குடியிருந்து

சக்களத்தியா வாழச் சம்மதிப்போம் நெனப்பிருக்கா?

 

ஆடு கனவுகண்டா அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

 

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம் போக

தண்ணியில்லாக் காட்டுக்குத் தாலிகட்டு நீபோக

எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட

உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

 

நாளும் கடந்திருச்சு நரைகூடி விழுந்திருச்சு

வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோலம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்

போனவருசத்துப் புயல் காத்தில் சாஞ்சிருச்சு.

     கவிஞர் வைரமுத்து அவர்களின் இந்த உரையாடல் பாடல், வாழ்வியலின் யதார்த்தத்தைப்  பதிவு செய்கிறது. வாழ்வியலின் உண்மையைப் பதிவு செய்கிறது.

     இப்படியாக, நம் இலக்கியமானது, வாழ்வியலை மனிதனுக்கு வாழ்வாங்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது.

     வாழ்வாங்கு வாழ, நெறிப்படுத்த கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

---

கடந்த

9.7.2023

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

இலக்கியமும் வாழ்வியலும்

எனும் தலைப்பிலானப் பொழிவு.

பாட்டும் தொகையும் படித்திடுங்க

பாரில் நல்லவராக வாழ்ந்திடுங்க

எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்

கற்றுத் தருமே மனிதநேயம்

நம் வாழ்வில் மனிதம் வளர்க்குமே

என இராகத்தோடுப் பாடி, தன் பொழிவைத் தொடங்கி, பொழிவின் போதும் ஆங்காங்கே, சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொருத்தமானத் திரைப்படப் பாடல்களையும் பாடி, ஒரு இசைப் பொழிவை வழங்கினார்.

தஞ்சாவூர், பான்செக்கர் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை

உதவிப் பேராசிரியர்


முனைவர் சு.சத்தியா அவர்கள்.

ஏடகப் புரவலர்


திருமதி பொன்னரசி தில்லான் அவர்களின்

தலைமையில்

நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை.

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி உ.பிரியங்கா அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

ஏடகம் சுவடியியல் மாணவி


திருமதி மீ.மகாலெட்சுமி அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,

இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி


செல்வி ர.யாழினி அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

 

அயராமல், தளராமல்

திங்கள்தோறும்

ஏடகப் பொழிவுகளை

அரங்கேற்றிவரும்,

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்கள்

11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்

கலந்து கொள்ள

சிறப்பு அழைப்பாளராய்

மலேசிய மண்ணிற்குப்

பறந்து போயிருக்கிறார்.

வாழ்த்துவோம், பாராட்டுவோம்.