16 நவம்பர் 2023

சாமி சார்

 


     நாம், நம் வாழ்வின் தொடக்கப் புள்ளியில் இருந்து, இன்று வரை, எத்துணையோ நட்புகளை, உறவுகளைச் சந்தித்து வருகிறோம்.

     சிலரோடு பல்லாண்டுகள் பழகியபோதும், அவர்கள் ஒருபோதும், நம் நெஞ்சுக்கு நெருக்கமாக வரமாட்டார்கள். பணியாற்றும் இடமாயிற்றே என்று பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டிருப்போம்.

     சில உறவுகளும் இப்படித்தான், புறந்தள்ள விரும்பாமல் பழகுவோம்.

     ஆனால் சிலரைப் பார்த்த, பழகிய ஒரு சில நிமிடங்களிலேயே நமக்குப் பிடித்துவிடும்.

எல்லாம் மனம் செய்கின்ற மாயம்.

     இவர் இந்த இரண்டாவது வகையைச் சார்ந்தவர்.

     என்னிலும் மூத்தவர்.

     இருப்பினும் நண்பர்.

     உயரத்தில் குறைந்தவர்.

     உள்ளத்தால் உயர்ந்தவர்.

     மெலிந்த உடற்கட்டு.

     கையில் எப்பொழுதும் ஒரு பொடி டப்பா.

     பொடி போட்டு, பொடி போட்டு அகன்று விரிந்த மூக்கு.

     முகத்திலும், உடையிலும் எப்பொழுதும் பொடியின் கரை படிந்திருக்கும்.

     அருகில் சென்றாலே, பொடியின் மனம் வீசும்.

      முதன் முதலில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், தற்காலிகப் பணியாளராக நுழைந்தபோது, இவரது உதவியாளராகத்தான் என்னை நியமித்தார்கள்.

     இவர், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் எழுத்தர்.

     வாங்க, சங்கத்துல வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என்று சொல்லவே இல்லையே என்று கூறி மகிழ்வோடு வரவேற்றார்.

     எழுத்தர்.

     ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா?

     இவர் கல்லூரியில் பணியாற்ற வேண்டியவரே அல்ல.

     இவர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் தச்சுப் பணி பயின்றவர்.

     இதனால், அரசு தொழிற் பயிற்சி மையப் பயிற்றுநர் பணி இவரைத் தேடி வந்தது.

     டால்மியா புரம், அரசு தொழிற் பயிற்சி மையத்தில் பயிற்றுநர் பணி.

    இவருக்கு பணி நியமன ஆணை வந்த அக்காலத்தில், திருமானூர் கொள்ளிடம் ஆற்றிற்குப் பாலம் கிடையாது.

     இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கும் அதிகமான அகலம் கொண்ட ஆறு கொள்ளிடம்.

     அவ்வளவு தொலைவையும், பொசுக்கும் மணலில் நடந்துதான் ஆற்றைக் கடக்க வேண்டும்.

     வெள்ளம் வந்துவிட்டாலோ, ஓடத்தில்தான் சென்றாக வேண்டும்.

     எனவே இவரது பெற்றோர், பயந்தனர்.

     இந்த வேலை வேண்டாம் எனத் தடுத்தனர்.

     இவர் மட்டும், இப்பணியில் சேர்ந்திருந்தால், தொழிற் பயிற்சி மைய முதல்வராக, கை நிறைந்த ஓய்வூதியத்துடன் பணியினை நிறைவு செய்திருப்பார்.

     ஆனால் எழுத்தரானார்.

     ஊதியம் குறைவு.

     ஓய்வூதியமும் குறைவு.

     எழுத்தர் ஆகிவிட்டாரே தவிர, எழுத்தர் பணியினைப் பார்க்க இவருக்கு நேரமே இல்லை.

     ஓடும் பிள்ளையாகவே ஓடி ஓடி உழைத்தார்.

     தன் ஓய்விற்குப் பிறகும் ஓடி ஓடி உழைத்தார்.

     தினமும் காலை, சங்கத் தலைவர் வருவதற்கு முன், சங்கத்திற்கு வந்துவிடுவார்.

     சங்கத் தலைவரோ, ஒவ்வொரு நாளும் , குறைந்தது நூறு தடவையாவது, இவர் பெயரைக் கூறி அழைப்பார்.

     தலைவர் சொல்லும், ஒவ்வொரு சொல்லும் இவருக்கு வேதம்.

     தலைவர் சொல்லும் ஒவ்வொரு பணியினையும் தட்டாமல் செய்வார்.

     தலைவர் இவரைப் புகழ்ந்தால், சிறு புன்னகை செய்வார், முகத்தில் ஒரு பெருமிதம் தோன்றும்.

     திட்டினாலோ, சற்றுத் திரும்பி, பொடியைச் சற்று அதிகமாய் நாசிக்குள் அனுப்புவார்.

     பொடியின் காரம், இவர் வாட்டத்தைப் போக்கும்.

     அடுத்தநொடி, திட்டு வாங்கியதையே மறந்து விடுவார்.

     சங்கத்தில் பணிக்காக வந்த நான், இவரிடம்தான் சற்றேரக்குறைய இரண்டு வருடங்கள் இருந்தேன்.

     ஆனால் இவரோடு அமரமாட்டேன்.

     சங்க நுழைவு வாயிலின் இடது புறம், அன்றிருந்த திக்கற்ற மாணவர் இல்லத்தினை ஒட்டிய ஒரு சிறு அறையில் தங்கியிருந்த, திரு த.ம.ஆறுமுகம் பிள்ளை என்னும் பெரியவரோடு அமர்ந்திருந்தேன்.

    


திரு த.ம.ஆறுமுகம் பிள்ளை.

     கலைக் கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     வாழ்க்கைத் துணையை இழந்தவர்.

     எனவே, சங்கமே இவரது வீடாகிப் போனது.

     கணக்கு எழுதுவதில் வித்தகர்.

     இவர்தான், கல்லூரி கணக்குகளை எழுத, எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

     கணக்குகளை எழுதியபின், ஐந்தொகை போடவும் கற்றுக் கொடுத்தார்.

     ஐந்தொகை என்பது, ஒரு வியாபாரம் அல்லது நிறுவனத்தின், ஓர் ஆண்டு வருமானம் மற்றும் செலவினங்களின் இறுதி விளைவுகளைத் தெரிவிக்கும் ஒரு பட்டியலாகும்.

     கணக்குகள் எழுதி, ஐந்தொகை முடித்து, அதன் மூலம், தணிக்கைக்கு உரிய பல தணிக்கைப் படிவங்களை நிரப்பி, நானே அப்படிவங்களைத் தட்டச்சும் செய்து கொடுத்தேன்.

     திருவாளர் த.ம.ஆறுமுகம் பிள்ளை அவர்களின் வழிகாட்டலில், நான்கு வருடக் கணக்குகளை எழுதி, தணிக்கை வரை உடனிருந்தும் பணியாற்றினேன்.

    பின்னர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் தொடங்கப் பெற்ற தி.ச.பழனிச்சாமி பிள்ளை தொழிற் பயிற்சி மையத்தில் எழுத்தராக நியமிக்கப் பெற்றேன்.

     மாத ஊதியம் ரூ.300

     இதற்குமுன், இரண்டாண்டுகள், கல்லூரி எழுத்தரின் கீழ் கணக்கு எழுதினேன் அல்லவா? அந்த இரண்டாண்டு காலமும் ஊதியம் இல்லாமல்தான் பணியாற்றினேன்.

     மாத ஊதியம் ரூ.300 ஐ நம்பித்தான், திருமணமும் செய்து கொண்டேன்.

     திருமணமான மூன்றாவது மாதத்தில், 1993 ஆம் ஆண்டு உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், அலுவலக உதவியாளர் பணி கிடைத்தது.

     அரசுப் பணி.

     அரசு ஊதியம்.

     அதற்கு அடுத்த வருடமே, பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணி உயர்வு.

     முப்பதாண்டுகள், பட்டதாரிநிலை கணித ஆசிரியராகவே பணியாற்றி, பட்டதாரி நிலை கணித ஆசிரியராகவே, பணி ஓய்வும் பெற்றேன்.

     பள்ளிக்கு வந்தபிறகும், எழுத்தருடனான நட்பு தொடர்ந்தது.

     சங்கம் சார்ந்த அறக்கட்டளைக்கு உரிய பல கடைகள் திருச்சியில் இருந்தன.

     மாதம்தோறும், இக்கடைகளில் வாடகை வசூலிக்க, இவருக்குத் துணையாக நானும், திருச்சி சென்று வருவேன்.

     அடிக்கடி தேநீர் அருந்தும் பழக்கம் எனக்கு.

     தேநீருக்கு முன் ஒரு வடை.

     வடை வாங்கியவுடன், இவர் சாப்பிடவே மாட்டார்.

     அக்கடையிலேயே ஒரு தாள் வாங்கி, அதில் வடையை வைத்து மடித்துத் தன் கைப் பையில் வைத்துக் கொள்வார்.

     சாப்பிடுங்கள் என்றால் சாப்பிட மாட்டார்.

     வீட்டுக்குப் போய் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறேன் என்பார்.

     பல்லாண்டுகள் இவரோடு பயணித்திருக்கிறேன்.

     ஒருமுறை கூட, எந்தத் திண்பண்டத்தையும் இவர் சாப்பிட்டதே இல்லை.

     பொட்டலம் போட்டு வீட்டிற்குத்தான் எடுத்துச் செல்வார்.

     பிள்ளைகள் என்றால் சிறியவர்கள் அல்ல.

     பெரியவர்கள்.

     இருவர்.

     இருவரும் பெண்கள்.

     மூத்தவர் எங்கள் பள்ளியின் தமிழாசிரியை.

     இளையவர், கரந்தைக் கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகத் தற்காலிகப் பணியிடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

     என்னதான் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும், இவரைப் பொறுத்தவரை இருவரும் குழந்தைகள்.

     தன் பிள்ளைகளை விட்டுவிட்டுத் தனியே எதையும் சாப்பிட மாட்டார்.

     தன் இறுதிகாலம் வரை இப்படித்தான் இருந்தார்.

     ஒவ்வொரு முறையும், இவரது இச்செயல் கண்டு நெகிழ்ந்து போவேன்.

     என்னால் இவர் அளவிற்கு இருக்க இயலவில்லையே என வருந்துவேன்.

     நான் பணியில் சேர்ந்து, எனக்குத் திருமணமாகி, மகன் பிறந்த பிறகும், மிதிவண்டியில்தான் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன்.

     பின், என் தந்தைக்கு ஒரு புதிய டி.வி.எஸ்.50 இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்தேன்.

     என் தம்பிக்குப் புதிதாய் ஒரு மிதி வண்டி வாங்கிக் கொடுத்தேன்.

     பல மாதங்கள் கடந்த நிலையில், எனக்கென்று ஒரு டி.வி.எஸ்.50 இரு சக்கர வாகனம் வாங்கினேன்.

     இவர் என்னுடன் இரு சக்கர வாகனத்தில் வருவார்.

     இவருக்கு டி.வி.எஸ்.50 ஓட்டத் தெரியாது.

     ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்.

     கற்றுக் கொடுத்தேன்.

     கற்றுக் கொண்டாரே தவிர, தனித்துப் பயணிக்கத் தயக்கம்.

    


மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

     தன் மருமகனை மகனாகவே பார்த்தார்.

     மாப்பிள்ளையும், தன் மாமனாரைத் தன் தந்தையாகவே பார்த்துக் கொண்டார்.

     இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின், தனக்குக் கிடைத்த முழு ஓய்வூதியப் பலனையும், சற்றும் தயங்காமல், தன் மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டார்.

     மாப்பிள்ளையும், தன் மாமனார் கொடுத்த ஓய்வூதியப் பணத்தினை,  பத்திரமாய் பாதுகாத்து, தன் மைத்துனிக்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கிய பொழுது, அப் பணத்தைக் கொண்டு, தானே முன்னின்று ஏற்பாடுகளைச் செய்து, செலவினங்களைச் செய்து, திருமணத்தைச் சிறப்பாக நடத்தினார்.

     மூத்த மகள் கரந்தையிலேயே மனை வாங்கி புது வீடு கட்டியபோது, மகள் வீட்டின் மாடியில் இவரும் குடிபுகுந்தார்.

     மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்.

     உடல் நலம் இழந்து, இவரது மனைவி, இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது, இவரும், மனதளவில், தன் வாழ்வை இழந்தார்.

     உடலும் தளர்ந்தது.

     சதைப் பிடிப்பே இல்லாத உடலுக்குள், இரத்த அழுத்தம் ஓடி வந்து குடி புகுந்தது.

     அவ்வப்போது மயக்கம் வந்து, தள்ளாட வைத்து இவரைக் கீழே தள்ளியது.

     படுக்கையில் வீழ்ந்தார்.

     சில நாட்களிலேயே, தன் அன்பு மனைவியைத் தேடிப் புறப்பட்டார்.

இவர்தான்


திரு அ.பக்கிரிசாமி

     சங்க வளாகமே, இவரைப் பக்கிரி, பக்கிரி என்றுதான் அழைக்கும்.

     அழைக்கும் ஒவ்வொரு குரலிலும், அன்பே நிறைந்திருக்கும்.

பக்கிரி.

     பக்கிரி, பக்கிரி என அனைவரும் இவரை அழைக்கும் பொழுதெல்லாம், என் ஆசான், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் புலவர் சிவ.திருஞானசம்பந்தம் அவர்கள், என்னிடம் கூறுவார்.

    பிராமணர்களிடம் இருந்து, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய, பல விசயங்கள் இருக்கின்றன.

  என்னதான் அன்போடு அழைத்தாலும், அனைவரும் இவரைப் பக்கிரி, பக்கிரி என்றுதான் அழைக்கிறார்கள்.

     இதே பெயரினை, பிராமணர்கள் எப்படி அழைப்பார்கள் தெரியுமா?

     பக்கிரி என்றோ, பக்கிரிசாமி என்றோ அழைக்க மாட்டார்கள்.

     சாமி சார்.

     சாமி சார் என்றுதான் அழைப்பார்கள் என்று கூறுவார்.

உண்மை.

நவம்பர் 18.

திரு அ.பக்கிரிசாமி அவர்களின் நினைவு நாள்.

வணக்கம், சாமி சார்.