25 நவம்பர் 2023

மாமரத்தார்


 அது சீவுக்குச்சி மேய்ந்து, தாழ்வாரம் வைத்த சுத்துவிட்டு வீடு.

     வீட்டின் வலது பக்க, முன்புறத்தில், ஒரு மரம்.

     படர்ந்து வளர்ந்த மரம்.

     மாமரம்.

ஒவ்வொரு ஆண்டும், அதன் பருவ காலத்தில், அம்மரத்தின் அத்தனை கிளைகளில் இருந்தும், மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கும்.

     மரத்தின் கிளைகளையே, பூமி நோக்கி இழுக்கும்.

     பழம் மட்டுமல்ல, காய்கூட ருசிக்கும்.

     ஊரே பழம் பறித்து உண்ணும்.

     அவ்வீட்டு உரிமையாளர் யாரையும் தடுக்கவே மாட்டார்.

     மகிழ்வார்.

     இதனால், இவ்வீட்டு உரிமையாளர் பெயரையே, அவ்வூரார் மறந்து போயினர்.

     மாமரத்தார்.

     மாமரத்தார் என்றே அழைத்தனர்.

     மாமரத்தார்.

     ஊரில் யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.

     அமைதியே உருவானவர்.

     அவ்வூர் மணியார் குடும்பத்திடம் மட்டும அதிகம் நெருங்கிப் பழகுவார்.

     அவ்வீட்டு முதியவரின் உற்ற நண்பர்.

     இம்முதியவரின் பெயரன் மாமரத்தாரோடு ஒட்டிக் கொண்டான்.

     வீட்டிற்குப் பின்புறம் ஓடும் புது ஆற்றிற்குப் பெயரனை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுத்தார்.

     கல்லணைக் கால்வாயைப் புது ஆறு என்று சொன்னால், மாமரத்தாருககுப் பிடிக்காது.

     காவிரி என்றே சொல்லு என்பார்.

     இந்த ஆறு, காவிரியின் பிள்ளை என்பார்.

     இச்சிறுவனின் தாத்தா, மாமரத்தாரின் நெருங்கிய நண்பர் இறந்தபோது, இவரது கண்கள் வழி, காவிரியே இறங்கி வந்தது.

     இடுகாட்டில், மாமரத்தாரின் கைகளை இறுகப் பற்றியபடியே நின்றான் இச்சிறுவன்.

     யார் கொள்ளி வைப்பது என்பதில் தொடங்கிய பிரச்சினை, அடிதடி வரை நீண்டது.

     மாமரத்தார், சிறுவனையும்,சிறுவனின் தம்பியையும், ஓரமாய் அழைத்துப் போய் சொன்னார்.

அய்யாவின் வாழ்வை கொஞ்சமாவது நீங்கள் வாழுங்கடா.

உங்கள் மாமன்களுக்கு, அத்தகுதி இல்லை.

     மாமரத்தார்.

     மாமரத்தாருக்கு நான்கு மக்கள்.

     ஆண்கள் இருவர்.

     பெண்கள் இருவர்.

     நால்வரையும், நன்கு படிக்க வைத்தார்.

     தனது ஐந்து ஏக்கர் நிலத்தையும் விற்றுப் படிக்க வைத்து, உயர்த்தி, நல்ல நிலைக்குக் கொண்டு வந்து, திருமணமும் செய்து வைத்தார்.

     சென்னை.

     அமெரிக்கா.

     பெங்களூர்.

     இலண்டன் என நால்வரும் பறந்தனர்.

     நாட்கள் வருடங்களாக மாற, மாமரத்தாரின் மனைவி மறைந்தார்.

     மாமரத்தார், தன் வீட்டு மாமரம் போல், தனிமரம் ஆனார்.

     மூத்த மகன், மாமரத்தாரை வற்புறுத்தித் தன் சென்னை இல்லத்திற்கு அழைத்துச் செல்ல, மாமரத்தார் வாழ்ந்த வீடு, கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தது.

     மாமரத்தாரின் பிரிவைத் தாங்காமல், மாமரமும் பட்டுப் போனது.

     பட்டுப்போன மாமரம், விறகாகி, அவ்வூரின் பல இல்லங்களின் அடுப்பில் நுழைந்து, எரிந்து, சாம்பலாகி, புகையாகி மாமரத்தாரைத் தேடிப் புறப்பட்டது.

     பிள்ளைகள் வீட்டை விற்றனர்.

     மாமரத்தாருக்கு மாமரம் மட்டுமல்ல, வீடும் இல்லாமல் போனது.

     அதன்பின், வீடில்லா, தன் ஊர்பக்கம் திரும்பி வரவேயில்லை.

     ஒருநாள் செய்திதான் வந்தது.

     மாமரத்தார் மறைந்து விட்டார்.

     மாமரத்தாரின் விரல் பற்றி வளர்ந்த சிறுவன், வாலிபராய் வளர்ந்து விட்டார்.

     செய்தியறிந்து சென்னைக்கு ஓடினார்.

     மாமரத்தார் தன் பெரிய மகனுடன் வாழ்ந்த, அந்த அடுக்கக வீடு, அமைதியில் உறைந்திருந்தது.

     மாலை வாங்கிச் சென்றவருக்கு அதிர்ச்சி.

     மாமரத்தாரின் உடல் இல்லை.

     இறுதிச் சடங்கு முடிந்து விட்டதா?

     இல்லை, இல்லை. இந்த அடுக்கக விதிகளின்படி, இறந்தவரின் உடலை, ஒரு மணி நேரத்திற்கு மேல், வீட்டில் வைத்திருக்க அனுமதி கிடையாது. எனவே தனியார் மருத்துவமனையில் வைத்திருக்கிறோம்.

     காலை 11.00 மணிக்கு உடல் வரும்.

     12.00 மணிக்கு இறுதி ஊர்வலம்.

     பெண்கள் இருவரும் வந்திருந்தனர்.

     கொள்ளி வைக்க வேண்டிய, இளைய மகனுக்கு விசா கிடைக்க வில்லையாம், எனவே இறுதி ஊர்வலத்தைப் பார்க்க, ஐபேடில், இணைய வழி இணைந்திருந்தார்.

     மூத்த மகன் கொள்ளி வைத்தார்.

     வீடும் துக்க வீடாகவே தெரியவில்லை.

     திகைத்துப் போனார்.

---

     படித்த நானும் திகைத்துத்தான் போனேன்.

     சில மாதங்களுக்கு முன், என் தாய் மறைந்தபோது, நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள், இன்றும் என் உள்ளத்தின் உள் அடுக்குகளில் வேதனையாய் படிந்து கிடக்கின்றன.

     இன்று மட்டுமல்ல, என்றும், என் வாழ்வின் இறுதி நொடி வரை, என் இதயத் துடிப்போடு கலந்து, துடித்துக் கொண்டேதான் இருக்கும்.

     இவ்வேளையில், என்றோ, நான் படித்த, கவிஞர் பாலா என் நினைவிற்கு வருகிறார்.


பாரதியின்பால் அறவற்ற ஈடுபாடு கொண்ட கவிஞர் பாலா, பாரதியின் நினைவு நாளான 11.9.2009 இல் மறைந்தார்.

     சென்னையிலும், பின்னர் அவர் வாழ்ந்த புதுக்கோட்டையிலும், அவர் உடல் ஒரு வார காலம், கண்ணாடிப் பேழையில், நண்பர்களின் வருகைக்காகவும், பார்வைக்காகவும் காத்திருந்தது.

     எந்தவொரு நண்பரும் வருத்தப்பட்டு விடக்கூடாது. திடீர்னு பாலா காணாமல் போய்விட்டரே என்று நினைத்துவிடக் கூடாது என்றுதான் இத்தணை நாள், இத்தணை மணி நேரம் வைத்திருந்தோம், இது கூடாது என்றவர்களையும் மீறி என்று உரைத்த அவரது புதல்வரின் சொல் கேட்டு, அன்றைய இலக்கிய உலகமே நெகிழ்ந்து போனது.

     புதல்வர்கள் இப்படியும் இருக்கிறார்கள்.

     அப்படியும் இருக்கிறார்கள்.

     இன்னொன்று, மாமரத்தார் வாழ்ந்த வீடு.

     அவ்வீடு, அவர் காலத்திலேயே, சிதைந்து, குட்டிச் சுவராய் மாறி, விற்பனைப் பொருளாய் மாறியதுதான் பெரு வேதனை.

     வாழ்ந்த வீடுதனை இழப்பதன், உண்மை வேதனையினை, முழுவதுமாய் அறிந்தவன், அனுபவித்தவன் நான்.

     மாமரத்தாருக்கு ஒரு வீடு.

     எனக்கோ, மூன்று வீடுகள், என் கண்முன்னே, காற்றில் கரைந்து போயிருக்கிறன.

     முதலாவது, எங்கள் மூதாதையர் வீடு.

     திருவையாற்று அந்தணர்குறிச்சியில் இருந்த வீடு.

     என் தாத்தா வாழ்ந்த வீடு.

     என் தந்தை, என் சித்தப்பா, என் இரு அத்தைகள் பிறந்து வளர்ந்த வீடு.

     சின்னஞ்சிறு வயதில், நான் தவழ்ந்து வளர்ந்த வீடு.

     கீற்று வீடுதான்.

     ஆனால் தாழ்வாரத்துடன் கூடிய அளவில் பெரிய வீடு.

     வீட்டின் கொல்லைப் புறமோ மிகவும் பெரியது.

     மிகவும் சொற்பத் தொகைக்கு, ஆயிரம், இரண்டாயிரம் என அவ்வப்போது வாங்கிய கடனுக்கு ஈடாய் பறிபோன வீடு.

     என் சின்னஞ்சிறு வயது நினைவுகளில், இன்றும் வாழும் வீடு.

     இரண்டாவது, என் தந்தையார், தன் பணிக் காலத்தில் ஒரு மனை வாங்கினார்.

     வீடு கட்ட, அரசாங்கத்திடம், கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தார்.

     அரசுக் கடன்தொகை வந்தபோது, விலைவாசி மேலே மேலே போக, கடனுக்கும் மேல் கடன் வாங்கி, வீட்டைக் கட்டி முடித்தார்.

     அவ்விட்டில் புதுமனைப் புகுவிழாவின்போது, ஒரு பகலும், அன்றிரவும் தங்கினோம்.

     அடுத்த நாளே வீடு, ஒத்திக்குப் போனது.

     பல வருடங்கள் கடந்த நிலையில், ஒத்தித் தொகையினையும் மீளக் கொடுக்க இயலாமல், கடனையும் அடைக்க வழி இல்லாமல், வீடு விற்பனைப் பொருளாகி, எங்கள் கைவிட்டுப் போனது.

     மூன்றாவது, என் தாய் பிறந்து வளர்ந்த வீடு.

     என் தாய்க்கு, ஒரு அண்ணன், இரண்டு அக்காக்கள்.

     இருப்பினும், என் தாயின் அண்ணன், என் மாமா, தனக்கு மட்டுமே உரிமையாக்கிக் கொண்ட வீடு.

     என் ஐந்தாம் வயது முதல், பணியில் சேர்ந்து, திருமணமாகி, என் மகனும், மகளும் பிறக்கும் வரை நான் வாழ்ந்த, தவழ்ந்த, வளர்ந்த வீடு.

     என் தந்தையார், ஓய்வு பெறுவதற்கு, இரண்டு வருடத்திற்கு முன், இவ்வீட்டிற்கான விலையினைப் பேசி முடிவு செய்து, முன்பணமும் கொடுத்து, ஓய்வு பெற்றதும், மீதித் தொகையினைக் கொடுத்துப் பத்திரப் பதிவு செய்து கொள்வதாக வாக்குறுதியும் கொடுத்து காத்திருந்தார்.

     என் தந்தையார் ஓய்வு பெற்று மீதித் தொகையினைக் கொடுக்கச் சென்ற போது, உறவினர் ஒருவரின், அன்பார்ந்த வழிகாட்டலுக்கு இணங்க, பேசி முடிவு செய்து வைத்திருந்த தொகை, மும்மடங்காகிப் போனது.

     உங்களுக்கு நிச்சயம், ஓய்வூதியப் பலன் இவ்வளவு வந்திருக்கும், அதில் இவ்வளவு கொடுத்தால் என்ன? என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டது.

     வெறுத்துப்போன என் தந்தையார், வீடே வேண்டாம் என்று மறுத்துவிட, மூன்றே மாதத்தில், அவ்வீட்டைவிட்டு வெளியேறினோம்.

     மொத்தத்தில் எங்கள் குடும்பத்தினரின் கனவு இல்லம், காணல் நீராகிப் போனது.

     மூன்று முறை வீடுகளை இழந்திருக்கிறோம்.

     அதன் வலி இன்னமும், மிச்சம் இருக்கிறது.

     இன்று நான் வாழும் வீடு, நான் பணிக்குச் சென்ற பிறகு, மனை வாங்கி, வீடு எழுப்பி, என் தாய் தந்தையரைப் புதுமனைப் புகுவிழா நிகழ்ச்சிகளைச் செய்ய வைத்து, குடி புகுந்த வீடு.

     இருப்பினும், இந்தக் கரந்தை வீடு, இன்றும் தொடர்ந்து என் கனவுகளில் வந்து கொண்ட இருக்கிறது.

     கரந்தை வீட்டினைக் கனவில் கண்ட பிறகு கண் விழித்து, விழித்துப் பல இரவுகள் தூங்கா இரவுகளாகவே கழிகின்றன.

     பூர்வீக வீடு.

     புதிதாய் கட்டிய வீடு.

     வளர்ந்த வீடு என மூன்று வீடுகளை இழந்திருக்கிறேன் என்றாலும், இதற்கான அடிப்படைக் காரணம், பொருளாதார வசதிக் குறைவுதான்.

     ஆனால் மாமரத்தார் நிலை அப்படியில்லை.

     மகன்களும், மகள்களும் செல்வச் செழிப்பில் மிதந்தும், எதற்கு இந்த கிராமத்து வீடு?, இனி யார் இங்கு வரப்போகிறோம்?, இந்த கிராமத்து மண்ணை மிதிக்கப் போகிறோம்? என்ற மனப்பான்மையால், அடிமாடுபோல், இந்த வீடு விற்கப்பட்டிருக்கிறது.

     இவர்களுக்கு வீடு ஒரு பொருள்.

     ஆனால் மாமரத்தாருக்கு.

     அது வீடு அல்ல.

     வாழ் நாள் நினைவுகளை, தன் ஒவ்வொரு செங்கல்லிலும் ஒளித்து வைத்திருக்கும், பார்க்கும் பொழுதெல்லாம் மகிழ்வலைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நினைவுப் பெட்டகம், காலக் கண்ணாடி.

     காலக் கண்ணாடி, தன் கண் முன்னே, கொஞ்சம் கொஞ்சமாய் பழுதடைந்து, தேய்ந்து, உருக்குலைவதை எப்படித் தாங்க முடியும்.

     மாமரத்தார் இன்றி, மாமரம் கூடப் பட்டுப் போய்விட்டதல்லவா?

     வீடும் பட்டுப் போய்விட்டது.

     இதனைப் பார்த்துப் பார்த்து, மாமரத்தாரும் பட்டுப் போய்விட்டார்.

     மாமரத்தையும், வீட்டையும் தேடிப் புறப்பட்டுவிட்டார்.

     மாமரத்தார்.

     தஞ்சையில் இருக்கும், மானோஜிப்பட்டி எனும் சிற்றூரில் வாழ்ந்த பெரிய மனிதர், மாமனிதர் மாமரத்தாரின் உடல், சென்னை கண்ணம்மா பேட்டையில் எரிந்து சாம்பலான போது, அவர்தம் மூத்த மகன், மாமரத்தாரின் எலும்புக் கரைசலைச் கொஞ்சம் எடுத்த பொழுது, இந்த இளைஞரும் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டார்.

     மூத்த பிள்ளை, உப்புக் கரைசலால் கனத்துப் போயிருக்கும், சென்னைக் கடலில், தன் தந்தையின் எலும்புக் கரைசலைக் கரைத்து, தனது அடுத்த வாழ்வியல் பணியினைப் பார்க்கப் போய்விட்டார்.

     இவ்விளைஞனோ, ஒரு மஞ்சள் பையில், மாமரத்தாரின் எலும்புக் கரைசலை பத்திரப் படுத்தி, தஞ்சைக்கு எடுத்து வந்து, புது ஆற்றினைக் கூட காவிரி, காவிரி என்றழைத்து மகிழ்ந்த அந்த உன்னத மனிதரின், மாமரத்தாரின் எலும்புக் கரைசலைக் காவிரியில் கரைத்து வணங்கி இருக்கிறார்.

     தன் வீட்டில், மாமரத்தார் நினைவாக, மாமரக் கன்று ஒன்றினை நட்டிருக்கிறார்.

     காவிரியில் கலந்த மாமரத்தார், இனி இவர் வீட்டு, மாமரத்தின் வழி வளர்ந்து, உயர்ந்து வாழ்வார்.

---

அய்யாவின் வாழ்வை கொஞ்சமாவது நீங்களும் வாழுங்கடா

என்றுரைத்த, மாமரத்தாரின் சொல்படி, இன்று வாழ்ந்துவரும், வளர்ந்து உயர்ந்து வரும், இளைஞரின், முகநூல் பதிவில், மகத்தான மனிதர் மாமரத்தாரைக் கண்டு மகிழ்ந்து போனேன், உள்ளம் நெகிழ்ந்து போனேன்.

     காசேதான் கடவுளடா என காசு தேடி ஓடும் இன்றைய உலகில், உள்ளம் தேடி, உள்ளத்து உணர்வு தேடி வாழும், இம்மனிதர் யார் தெரியுமா?

எழுத்தாளர்

திரைப்பட உதவி இயக்குநர்சசி எம்.குமார்.

வாழ்த்துகள் ஐயா.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid023rvvup3KwDScSUgvW9ygErw3PuYsjPtDT6GBEjPkcSPNtwzvaSUdUuh4Wxf4CzM6l&id=100042918682028&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f