29 மார்ச் 2024

அ.ச.ஞா

      1925 ஆம் ஆண்டில், திருச்சியை அடுத்துள்ள துறையூரில் நடைபெற்ற, சைவர்கள் மகாநாட்டில் மேடையேறி, மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றைப் பேசி, அனைவரையும் வியக்க வைத்தபோது, அச்சிறுவனின் வயது ஒன்பது.

சிறுவயதிலேயே சொற்பொழிவாற்றும் ஆற்றல் மிகுந்த சிறுவன்.

     காரணம், அவரது தந்தை.

     பெருஞ்சொல் விளக்கனார் எனும் பெயர் பெற்றவர், இவரது தந்தை.

     நாடறிந்த சொற்பொழிவாளர்.

     இந்தியாவில் மட்டுமல்ல, அக்காலத்திலேயே, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல வெளிநாடுகளுக்கும் சென்று சொற்பெருக்காற்றியவர்.

     அவரது மகன் இவர்.

     மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

     1931 ஆம் ஆண்டு, இச்சிறுவன், தன் 15 ஆவது வயதில், தன் தந்தையுடன், தூத்துக்குடி செல்கிறார்.

     சைவசித்தாந்த சபையில் பேசுவதற்காக.

     ஒரு வீட்டில் தங்குகின்றனர்.

     மற்ற ஊர்களைப் போல், காலையிலோ அல்லது மாலையிலோ கூட்டம் நடத்தும் பழக்கம் இங்கு இல்லை.

     இரவு 9.30 மணிக்குக் கூட்டம் தொடங்கும்.

     விடிய, விடிய நடக்கும்.

     எனவே இந்தச் சிறுவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

     இரவுதானே கூட்டம், அதுவரை ஊர் சுற்றிப் பார்த்தால் என்ன?

     தந்தையிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

     வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தப் பெரியவர், அந்த வீட்டின் உரிமையாளர், இச்சிறுவனைப் பார்த்துக் கேட்டார்.

     டேய் பையா, நீ எங்கே போகிறாய்?

     ஊர் சுற்றிப் பார்க்க.

     சரி பையா, திரும்பி வர, இந்த வீட்டு அடையாளம், தெரு எல்லாம் தெரியுமா?

     ஆகா, தான் தங்கியிருக்கும் வீட்டின் முகவரியைத் தெரிந்து கொள்ள மறந்து விட்டோமே என்று எண்ணினான் சிறுவன்.

     பெரியவர், ஒரு துண்டு சீட்டை எடுத்து, அதில் எதையோ எழுதி, சிறுவனின் சட்டைப் பையில் வைத்தார்.

     திரும்பி வர, வழி தெரியவில்லையானால், இந்த காகிதத்தைக் காட்டு

     தலையாட்டிய சிறுவன் புறப்பட்டான்.

     எங்கெங்கோ சுற்றிவிட்டு,  கடைசியாய் கடற்கரைக்கு வந்தான்.

     மணலில் மனம் மகிழ நடந்தான்.

     கடற்கரையில் வரிசையாய் படகுகள்.

     ஒரு விசைப் படகைத் தொட்டுப் பார்த்து, அதில் ஏறியும் பார்த்தான்.

     யாரோ ஒரு சிறுவன், அனுமதியின்றி தன் படகிற்குள் ஏறுவதைப் பார்த்த, அந்தப் படகின் உரிமையாளர், அந்தச் சிறுவனைப் பிடித்தார்.

     யார் நீ? எங்கு வந்தாய்? யாரைக் கேட்டு வந்தாய்? என வரிசையாய் கேள்விகளாய் கேட்டு மிரட்டினார்.

     ஒரு நொடி யோசித்த அந்தச் சிறுவன், மறுநொடி, தன் சட்டைப் பையில் இருந்த சீட்டை எடுத்துக் காட்டினான்.

     அடுத்த நொடி, காட்சி மாறியது.

     மிரட்டியவர், அன்பாய் பேசத் தொடங்கினார்.

     சிறுவனை அழைத்துச் சென்றுத் தன் படகை முழுதாய் காட்டினார்.

     படகில் ஒரு சவாரி செய்ய விருப்பமா? என்றார்.

     சிறுவன் தலையாட்டினான்.

     சிறுவனுக்காகவே படகு கிளம்பியது.

     கடலில் வெகுதூரம் பயணித்து, கரை திரும்பியது.

     சிறுவனின் மனமோ, மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.

     கரை திரும்பியவுடன், படகின் உரிமையாளர், தன் பணியாளர் ஒருவரை அழைத்து, இந்தத் தம்பியை ஐயா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வா என்றார்.

     மேலும் பணியாளரிடம் ஒரு ரூபாய் கொடுத்து, போகும் வழியில், கடையில் தம்பிக்குப் பலகாரம் வாங்கிக் கொடு என்றும் கூறினார்.

     ஒரு துண்டுச் சீட்டுக்கு இவ்வளவு மரியாதையா?

     சிறுவன் வியந்து போனான்.

     வீடு வந்து சேர்ந்தான்.

     இரவு வந்தது.

     வீட்டின் திண்ணையில் ஒரு சிறு கூட்டம்.

     இரவு நடைபெற இருக்கும், சைவ சித்தாந்த சபையில் பேசுவோருக்கான, நிகழ்ச்சி நிரல் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

     சொல்லின் செல்வர் ரா.பி.சேதுபிள்ளையின் பெயரைக் கடைசியாய் போடுங்கள் என்றார் வீட்டின்  உரிமையாளர்.

     சிறுவனின் வாய் சும்மா இருக்கவில்லை.

     அது ஏன்? அவர் ஏன் கடைசியில்?

     வீட்டு உரிமையாளர், அமைதியாய் பதில் கூறினார்.

     பையா, ரா.பி., அவர்கள் பேசிய பிறகு, யாருடைய பேச்சும் எடுபடாது. அதனால்தான் நிகழ்ச்சியை இவ்வாறு அமைக்கிறோம் என்றார்.

     அவர் என்ன கொம்பா? அவருக்குப் பின் நான் பேசுகிறேன் என்றார் சிறுவன்.

     சிறுவனின் துடுக்குப் பேச்சுக் கேட்டு, அனைவரும் கொதித்துப் போனார்கள்.

     வீட்டு உரிமையாளரோ, முக மலர்ச்சியுடன், அன்பொழுக, அப்படியானால், இன்றிரவு, ரா.பி., அவர்களுக்குப் பிறகு நீ பேசலாம் என்றார்.

     விழா தொடங்கியது.

     ரா.பி., பேசத் தொடங்கும்போது இரவு மணி ஒன்று.

     சிறுவனோ இரவு 10.00 மணிக்கே, மேடையின் பின்புறம் படுத்துத் தூங்கிவிட்டான்.

     ரா.பி., அவர்களின் பேச்சு முடியும் நேரத்தில், வீட்டின் உரிமையாளர், எல்லையற்ற அன்புடன், சிறுவனை எழுப்பி, ஒரு ஈரத் துணியால் அவன் முகத்தினைத் துடைத்து, மேடையில் நிற்க வைத்துச் சொன்னார்.

     பேசு ஐயா, பேசு.

     சிறுவனும் சிறப்பாய் பேசி, அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றான்.

     படிக்கப் படிக்க, வியப்பு மேலிடுகிறது அல்லவா?

     யார் இந்தச் சிறுவன்?

     அதைவிட யார்  அந்த வீட்டு உரிமையாளர்?

     தூத்துக்குடி மக்களின் மனம் கவர்ந்த அந்தப் பெரியவர் யார்?

      வீட்டு உரிமையாளர், தூத்துக்குடி மக்களின் உள்ளமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த நாயகர் யார் தெரியுமா?

கப்பலோட்டியத் தமிழன்


வ.உ.சிதம்பரனார்.

     அந்தச் சிறுவன்?

     பின்னாளில், மிகப் பெரும் அறிஞராய் வளர்ந்து, உயர்ந்தவர்.

     பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவண முதலியார் அவர்களின் தமிழ்மகனார்.

     தமிழறிஞர்.

     சொற்பொழிவாளர்.

     எழுத்தாளர்.

     இலக்கிய விமர்சகர்.

     சாகித்ய அகாதமி விருதாளர்.

     ஒன்றல்ல, இரண்டல்ல நாற்பது நூல்களின் ஆசிரியர்.

     இராமனையும், இராவணனையும் சம அளவில் வைத்தே, கம்பர் இராமாயணத்தை எழுதியிருக்கிறார் என்பதைத் தகுந்த தரவுகளுடன் வெளிக் கொணர்ந்தவர்.


தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்.

---

     கடந்த 24.3.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை, தஞ்சாவூர், நாணயக்கார செட்டித் தெரு, சுப்பையா நாயுடு நடுநிலைப் பள்ளியில், ஒரு சொற்பொழிவு.


பாரதி சங்கத்தின்

சார்பில்

தமிழ் மூதறிஞர் வாழ்வும், வாக்கும்

எனும் பொதுத் தலைப்பின் கீழ்

அ.ச.ஞானசம்பந்தன்

அவர்களைப் பற்றி

வங்கி மேலாளர்


திரு க.திருமாறன் அவர்களின்

பொழிவு கேட்டு வியந்தேன்.

      திரு க.திருமாறன் அவர்கள் அருவியாய் கொட்டிய செய்திகளில் இருந்து, ஒரே ஒரு நிகழ்வினை மட்டுமே, தங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

     திரு க.திருமாறன் அவர்கள், தனது பேச்சாற்றலால், சொல்லாற்றலால் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களைக் கண்முன் கொண்டு வந்து காட்டினார்.

பாரதி சங்கம்

தொடர் சொற்பொழிவு

    


ஒவ்வொரு மாதமும், நான்காம் ஞாயிறன்று, புயலடித்தாலும், பெரு மழையே கொட்டினாலும், விடாது தொடர்ந்து நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

448 ஆவது பொழிவு

மாதம் ஒரு பொழிவு.

வருடத்திற்குப் 12 பொழிவுகள்.

கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்கிறது பொழிவு.

38 ஆண்டுகளாகவா?

உண்மை.

38 ஆண்டுகள்.

 


தஞ்சாவூர், வழக்கறிஞர், காந்தியவாதி, பாரதி பற்றாளர் 

திருமிகு வீ.சு.இராமலிங்கம் அவர்கள், 

1970 களில் முன்னெடுத்த முயற்சி.

இன்று ஆலமரமாய் தழைத்து, வளர்ந்து, உயர்ந்து நிற்கிறது.

     பணம், பணம், சொத்து, சொத்து என தந்தை விட்டுச் செல்லும் பணத்திற்காகவும், சொத்திற்காகவும், அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி வரை நீளும், இவ்வுலகில், தந்தையின் இலக்கியப் பணியினை, தன் தந்தை தனக்காக விட்டுச் சென்ற மாபெரும் சொத்தாகக் கருதி, உற்சாகத்துடன், தொடர்ந்து, தொய்வின்றி நடத்தி வருகிறார், திரு வீ.சு.இராமலிங்கம் அவர்களின் திருமகனார்.


திரு வீ.சு.இரா.செம்பியன் அவர்கள்.

---

திரு வீ.சு.இரா.செம்பியன் அவர்களைப்

பாராட்டுவோம், வாழ்த்துவோம்.