13 மே 2024

அம்மா

 


     அம்மா.

     அம்மா இவ்வுலக வாழ்வு துறந்து, நெருப்பில் கலந்து, சாம்பலாய் மேலெழுந்து காற்றில் கரைந்து, முழுமையாய் ஓர் ஆண்டு கடந்து விட்டது.

     என் அப்பா, படுக்கையில் வீழாமல், ஓரிரு நிமிடங்களில் அமைதியாய், கொஞ்சமும் சிரமப்படாமல் மூச்சைத் துறந்தவர்.

     தந்தையின் பிரிவிற்குப் பின், தாயின் முதுகு அதிகமாய் வளைந்து போனது.

     தந்தையின் பிரிவு தந்த அதிர்ச்சியில் நினைவு அகன்று போனது.

தந்தையின் பிரிவிற்குப் பின் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.

     நினைவு அகன்று போன நிலையிலும், என் தம்பி வந்து, அவ்வப்பொழுது, அம்மாவை, தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் பொழுதெல்லாம், சுவற்றில் படமாய் தொங்கும், என் அப்பாவிடம் சுரேஷ் வீட்டிற்குப் போயிட்டு வர்றேங்க என சொல்லிவிட்டுத்தான் செல்வார்.

     வீடு திரும்பியவுடன், நேராக என் அப்பாவின் படம் இருக்கும் இடத்திற்கு வந்து, படத்தைப் பார்த்து, வீட்டுக்கு வந்திட்டேங்க என தன் வருகையைத் தெரிவித்துவிட்டுத்தான், தன் அறைக்குச் செல்வார்.

     அம்மா.

     சுய நினைவை இழந்தபோதும், தன் கணவரை மட்டும், ஒரு நொடியும் மறக்காதவர், என் அம்மா.

    கணவன் மனைவி உறவிற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு என் அம்மா.

     அம்மா.

     முதலாம் ஆண்டு நிறைவில், அம்மா என, என் அம்மாவைப் பற்றி, ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கு.

     என் அத்தான் கவிஞர் ப.திருநாவுக்கரசு, என் அக்காள் திருமதி தமிழ்ச் செல்வி திருநாவுக்கரசு, சகோதரர் திரு.மு.பத்மநாபன், உறவினர், எழுத்தாளர், அண்ணன், முனைவர் க.அன்பழகன் (ஹரணி) நால்வரும், தங்கள் நினைவலைகளை எழுத்தாக்கிக் கொடுக்க, நானும் என் தாயைப் பற்றியும், அவர்தம் தாய், தந்தையர் பற்றியும் ஒரு கட்டுரை எழுதி, தாய் வழி உறவுகளைக் கொண்டு ஒரு குடும்ப மரமும் வரைந்து நூலாக்கினேன்.

    


நண்பர் திரு எஸ்.கோவிந்தராஜ் அவர்கள், நூலுக்கான அட்டையினை எழிலுற வடிவமைத்துக் கொடுத்தார்.


புத்தகத்தை வடிவமைக்க, எழுத்தாளர் ஹரணி அவர்கள், நண்பர் திரு லட்சுமி சிவக்குமாரிடம் என்னை அழைத்துச் சென்றார்.

     கரந்தையில் நாங்கள் வசித்தபொழுது, எங்களுக்கு எதிர் வீட்டில் வசித்தவர் நண்பர் லட்சுமி சிவக்குமார்.

     இவர், தன் நண்பர்களுடன் இணைந்து திருப்பதி சென்று, ஏழுமலையானைத் தரிசித்து, மனம் மகிழ்வதற்காக, ஒரு வாடகைச்  சிற்றுந்தில் சென்ற பொழுது, ஒரு விபத்து.

     ஒருவர் அந்நொடியே மரணம்.

     நண்பர் லட்சுமி சிவக்குமாருக்கோ, இடுப்புப் பகுதியில், ஒரு நரம்புத் துண்டாகிப் போனது.

     விளைவு, இடுப்புப் பகுதிக்கும் கீழ், உடல் செயலிழந்து போனது.

     பலப்பல ஆண்டுகள் கடந்தும், இன்றும் அதே நிலை.

      மேல்பாதி உடலின் செயல்பாட்டோடு வாழ்ந்து வருகிறார்.

      கீழ்பாதி உடல், வீட்டிற்குள் அவரை முடக்கிப் போட்டபோதும், இன்று, தன் மன வலிமையால் எழுத்தையே, ஊன்றுகோலாக்கி எழுந்து  நிற்கிறார்.

     ஆம், இவர் இன்று ஒரு சிறந்த எழுத்தாளர்.

     இப்படிக்குக் கண்ணம்மா.

     நியமம்.

     லங்கூர்

     போர்த்துகீசியனின் விரல்கள் எனும் நூல்களின் ஆசிரியர்.

     எழுத்தோடு, கணினியில் புத்தகங்களை வடிவமைப்பதில் வல்லமை பெற்றவர்.

    


அம்மா
நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக நேர்த்தியாக வடிவமைத்துக் கொடுத்ததோடு, நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத விலையில், தானே சென்னைக்கு, மின்னஞ்சலில் அனுப்பி, அச்சிட்டு, அழகிய நூலாக வரவழைத்துக் கொடுத்தார்.

     நூல் தயாராகிவிட்டது.

     நூலினை எங்க வெளியிடுவது?

     நினைத்த நேரத்தில், என் உள்ளம் பெருங்குரலெடுத்து முழங்கியது, சங்கத்தில், சங்கத்தில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் என.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் எங்கள் குடும்பத்திற்குமான உறவு என்பது நீண்டது, நெடியது.

     என் தாத்தா, அதாவது, என் அம்மாவின் அப்பா, திரு பெ.வெங்கடாசலம் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றியவர்.

     சங்கச் செயலாளரின் அனுமதியோடு, சகோதரர் திரு மு.பத்மநாபன் அவர்களோடு, இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளிக்குச் சென்றபொழுது, அப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி க.சத்யா அவர்கள் அன்போடு வரவேற்று, பழங்காலப் பதிவேடுகளை எல்லாம் எடுத்துக் கொடுத்தார்.

     1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, பள்ளியின் ஆசிரியர் வருகைப் பதிவேட்டில், என் தாத்தா சுருக்கொப்பம் இட்டுள்ளார்.

     1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வருகைப் பதிவேட்டில், தாத்தாவின் பெயர் இருக்கிறது, ஆனால் சுருக்கொப்பங்கள் இல்லை.

     எனவே, இம்மாதத்தில்தான், உடல் நலிவுற்று இறந்திருக்க வேண்டும்.

     ஒரு எட்டு ஆண்டுகள் அவர் பணியாற்றியிருந்தாலும், 1940 ஆம் ஆண்டில் இருந்து, என் தாத்தா ஆசிரியர்.

     எனவே, 1940 ஆண்டு முதல் எங்கள் குடும்பத்திற்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குமான உறவு, தொடர்பு தொடங்கி இருக்கிறது.

     என் அம்மா, அம்மாவின் இரு அக்காள்கள், அம்மாவின் அண்ணன் அனைவரும் இங்கு படித்தவர்களே.

     நான் படித்ததும இங்குதான்.

     பணியாற்றியதும் இங்குதான்.

     84 ஆண்டுகால தொடர்பு.

     எனவே, அம்மாவின் நூலை, கரந்தை மண்ணில், கரந்தைத் தமிழ்ச் சங்க மேடையில் வெளியிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று எண்ணி, கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளரிடம் அனுமதி கேட்டேன்.

     ஒரு நொடிகூட யோசிக்காமல், தாராளமாய் நடத்துங்கள் என அனுமதி கொடுத்ததோடு, முன்னின்று ஏற்பாடுகளையும் கவனித்து உதவினார்.

     அடுத்ததாக, அம்மா நூல் வெளியீட்டு விழாவின்போது, அம்மாவின் படத்திறப்பு விழாவினையும் நடத்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

     படத்திறப்பு விழா என்ற எண்ணம் தோன்றியதும், படத்தினைத் திறந்து வைத்திட, மிகவும் பொருத்தமானவராக, மனக்கண் முன் தோன்றினார் சித்தர்காடு சு.சண்முகம்.

     என் அம்மாவின் தாய்மாமன் மகன்.

     சுமார் 75 வருடங்களுக்கு முன், ஏதேதோ காரணங்களால், தொடர்பின்றிப் போன உறவு.

    


நண்பர் துரை.நடராசன் அவர்களின் உதவியுடன்தான் இவரைக் கண்டுபிடித்தேன்.

     எனவே, பெரியவர் சித்தர்காடு சு.சண்முகம் அவர்களை அணுகியபோது, மிகவும் மகிழ்வுடன் இசைவினைத் தெரிவித்தார்.

     கடந்த 28.4.20024 ஞாயிறு மாலை அம்மா நூல் வெளியீட்டு விழா, அம்மா படத்திறப்பு, உறவும், நட்பும் சூழ இனிது நடைபெற்றது.


என் பெரியம்மாவின் மகன், அன்பு சகோதரர் திரு மு.பத்மநாபன் அவர்கள் வரவேற்புரையாற்றியதோடு, நிகழ்வினையும் தொகுத்து வழங்கினார்.


சித்தர்காடு திரு சு.சண்முகம் அவர்கள் அம்மாவின் திருஉருவப் படத்தினைத் திறந்து வைத்தார்.

    
என் அத்தான் கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள் அம்மா நூலினை வெளியிட, என் பெரியம்மாவின் மூத்த மகன் திரு ப.மணிவண்ணன் அவர்கள் முதற்படியினைப் பெற்றுக்  கொண்டார்.

     தொடர்ந்து, என் மற்றொரு பெரியம்மாவின் மகள், அக்கா திருமதி தமிழ்ச்செல்வி திருநாவுக்கரசு அவர்களும், திரு மு.சுகுமாரன் அவர்களும் நூலினைப் பெற்றுக் கொண்டார்கள்.

   


  தொடர்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு இரா.சுந்தரவதனம் அவர்களும், என் அண்ணன் திரு ப.மணிவண்ணன் அவர்களும், என் அத்தான் கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களும், எழுத்தாளர் முனைவர் க.அன்பழகன் (ஹரணி) அவர்களும் புகழுரையாற்றினர்.

     உன்னத உறவுகளாலும், நயத்தக்க நண்பர்களாளும், மேன்மைமிகு தஞ்சைத் தமிழறிஞர்களாலும், தமிழ்ப் பெருமன்றம் நிரம்பி வழிந்தது.

     என் மனம் நெகிழ்ந்தது.

     கண்கள் கசிந்து உருகின.

     என்றும் வேண்டும் இந்த அன்பு.