அந்தோ தமிழகமே, ஏனோ நின் மக்கள், அவர்தம் கடமையை உணர்ந்திலர்? வெள்ளம் மிகுந்து வருகின்றதே, ஏ, தமிழா, நின் கரைகளை வலிமை பெறச் செய்க. விரைந்து நோக்குதி. அன்றேல் நினது வீர வாழ்வு மாயும். நீ அடிமைத்தளைப் பூணுவாய். இஃதுண்மை, இஃதுருதி. இது வீண்மொழியல்ல.
தமிழ்க்கேடு சூழ்பவர் சுற்றம் நின்னைக் கீழ்நிலைப் படுத்தி, உய்தியில் தீவினைப் புகுத்தும் என்பதை நின் உள்ளத்தில் உறுதியாகப் பற்றுவாயாக.
கரந்தைத்
தமிழ்ச் சங்கம் தோன்றிய முதல் நாளில் இருந்தே, உமாமகேசுவரனாரின் நிழல் போல் தொடர்ந்தே
வந்தது, பொருளாதாரத் தட்டுப்பாடு ஒன்று மட்டும்தான்.
சாதனைகள் பல புரிந்தாலும், காலத்தை மிஞ்சிய தீர்மானங்களை
இயற்றியும், போராட்டக் களங்கள் பலவற்றை முன்னின்று நடத்தியும், அயராது பாடுபட்ட கரந்தைத்
தமிழ்ச் சங்கத்திற்குப் பெருந்தடையாய் நின்றது பொருள் தட்டுப்பாடு ஒன்று மட்டும்தான்.
ஆனாலும் தமிழவேள் உள்ளம் தளர்ந்தாரில்லை.
வழக்கறிஞர் பணியின் மூலம் தனக்குக் கிடைத்த வருமானத்தை
எல்லாம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே உரிமையாக்கினார்.
நல்லோர்களை நாடினார்.
அள்ளி அள்ளிக் கொடுத்தனர்.
பொருளுதவிப் பெற்றுப் பெற்றுத்தான் கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தை நடத்தினார்.
1916 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கென்று
சொந்தமாய் ஒரு அடி நிலம் கூட இல்லாத நிலையில், கரந்தைத் தமிழ்ச் சங்க செந்தமிழ்க் கைத் தொழிற் கலாசாலை என்னும் பெயரில்
பள்ளி ஒன்றினை நிறுவினார்.
திக்கற்ற
மாணவர் இல்லம் ஒன்றினைத் தொடங்கினார்.
பள்ளியில் படிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது.
திக்கற்ற மாணவர் இல்லத்திலோ, தங்க இடம், உண்ண
உணவு, உடுக்க உடை, தலைக்கு எண்ணெய் என அனைத்தும் இலவசம்.
சங்கத்தின் ஒரே வரவு, உறுப்பினர் ஆண்டுக் கட்டணம்
ஒன்று மட்டும்தான். அதுவும் ஆண்டிற்கு ஒருவருக்கு ஒரு ரூபாய்தான். இத்தொகை யானைப் பசிக்கு
சோளப் பொறியைக் கொடுத்த கதைதான்.
அப்படியானால், பொருளில்லாத நிலையில், இப்பணியினை
எப்படிச் சாதித்திருப்பார் எனும் கேள்வி எழுகிறதல்லவா?
நினைத்தாலே வியப்பாக இருக்கிறதல்லவா?
பொருள் வேண்டி பொதுமக்களை நாடினார்.
உமாமகேசுவரனார் வணிகக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
எனவே வணிகர்களை நாடுவது, பொதுமக்களை அணுகுவது என முடிவு செய்தார்.
அக்கால கட்டத்தில், தஞ்சையின் மிகப் பெரிய கடைவீதி
கீழவாசல்தான்.
எனவே, சங்க அன்பர் ஒருவர், ஒரு நாள், இருநாள்
அல்ல, தினமும், நாள்தோறும், மாலைப் பொழுதில், ஒரு உண்டியலை ஏந்தியவாறு, கீழவாசலில்
இருக்கும் ஒவ்வொரு கடைக்கும் செல்வார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்களுக்கு கட்டணம்
ஏதுமின்றி கல்வி புகட்டுகிறார்கள், திக்கற்றோருக்கு இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த
உடை தருகிறார்கள்.
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்பான்
பாரதி. ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்கமோ அன்ன சத்திரமும் வைத்து எழுத்தறிவையும் ஊட்டுகிறது.
எனவே, இது நம் சங்கம்.
இதனைக் காப்பது நம் கடமை.
இதனை வளர்ப்பது நம் பொறுப்பு என்று எண்ணி, ஒவ்வொரு
கடை உரிமையாளரும், அன்றைய வருமானத்தில் இருந்து, ஒரு ரூபாயையோ அல்லது சில அணாக்களையோ
தினம், தினம் உண்டியலில் செலுத்துவார்கள்.
இதற்கு உமாமகேசுவரனார் வைத்த பெயர்.
உண்டிகை
தருமம்.
இன்று எங்கு பார்த்தாலும், அரிசிக் கடைகள் இருக்கின்றன.
ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களுக்குத் தேவையான
அரிசியை, அரிசியாகவே கடைகளில் வாங்கிவிடுகிறோம்.
விவசாயம் செய்யும் பலரும்கூட, தங்கள் வயல்களில்
விளைந்த நெல்லை, அவித்துக் காயவைத்து அரைத்து அரிசியாக்குவதில்லை. விளைந்த நெல்லை விற்பனை
செய்துவிட்டு, தங்களுக்குத் தேவையான அரிசியை கடைகளில் வாங்கிக் கொள்கிறார்கள்.
ஆனால், அன்று அப்படியல்ல.
வீடுகளில், பத்தாயம் எனப்படும் செவ்வக வடிவ அல்லது சதுர வடிவ மரத்தால் ஆன, கொள்கலனில்,
அறுவடை செய்த நெல்லினைக் கொட்டிப் பாதுகாப்பார்கள்.
தங்களின் தேவைக்குத் தகுந்தபடி, அவ்வப்போது,
பத்தாயத்தில் இருந்து நெல்லினை எடுத்து, அவித்து, காயவைத்து, அரவை மில்லில் கொடுத்து,
அரைத்து, அரிசியாக்கிப் பயன்படுத்துவார்கள்.
அதனால், சிறு சிறு அரவை இயந்திரங்கள் தஞ்சையின்
ஒவ்வொரு பகுதியிலும், மூலை முடுக்கெல்லாம் நிறைந்திருந்த காலம் அது.
ஒவ்வொரு அரவை மில்லிலும், ஒரு சாக்குப் பை, கரந்தைத்
தமிழ்ச் சங்கம் என்று பெயர் எழுதிய ஒரு சாக்குப் பை, இருக்கும்.
தங்களின் வீட்டின் தேவைக்காக, அரிசியினை அரைத்துச்
செல்லும் ஒவ்வொருவரும், இது நமது சங்கம், ஏழைகளுக்கு இலவசமாய் உணவிடுகிறார்கள், இச்சங்கத்தைக்
காப்பது நம் கடமை என்று எண்ணி, தங்களின் சாக்கில் இருநது பல கைப்பிடி அரிசியினை எடுத்து,
சங்கத்தின் சாக்குப் பையில் போட்டுச் செல்வார்கள்.
சங்க அன்பர்கள், வாரம் ஒருமுறை, தஞ்சையின் பல
பகுதிகளிலும் இருக்கும், அரவை மில்களுக்குச் சென்று, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சாக்குப்
பைகளில் நிறைந்திருக்கும் அரிசிகளை, தாங்கள் கொண்டு செல்லும் சாக்குப் பையில் சேகரித்து
வருவார்கள்.
அரிசி
தருமம்.
இப்படித்தான் உமாமகேசுவரனார் அவர்கள் பள்ளியைத்
தொய்வின்றி நடத்தினார்.
தஞ்சை மக்கள் பள்ளியைப் பாதுகாத்தனர்.
தமிழகமே சங்கத்தை வளர்த்தது.
1911 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்
பெற்றாலும், முதல் 13 ஆண்டுகள், சங்கத்திற்கு என்று ஒரு தனியிடம் இல்லாமல்தான் இருந்தது.
அமிழ்தினும்
இனிய தமிழ் அன்னைக்கு, வடவேங்கடம் முதல் தென்குமரி இடைப்பட்ட நிலம் யாவும் உரியனவாக
இருந்தும், கரந்தையம்பதியில், தமிழ் அன்னைக்கு இல்லம் எடுக்க ஓர் அடி நிலம்கூட சொந்தமாய்
இல்லையே என உமாமகேசுவரனார் ஏங்கினார்.
சங்கமானது தோன்றிய நாளில் இருந்து, கந்தப்ப செட்டியார் சத்திரத்திலேயே செயல்பட்டு
வந்தது.
விழாக் காலங்களிலும், திருமண நாட்களிலும், கந்தப்ப
செட்டியார் சத்திரம், வாடகைக்கு விடப்படும்.
அத்தகைய நாட்களில், சங்கப் பணிகளை அச்சத்திரத்தில் செய்வது இயலாத காரியம். எனவே சங்கத்திற்கென்று
சொந்தமாய் ஓர் இடத்தினை வாங்கியே தீருவது என்று எண்ணி முயச்சியில் இறங்கினார்.
உமாமகேசுவரனாரின் மனக்குறையினைப் போக்க எண்ணிய,
வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள்,
சங்கத்திற்கு இடம் வாங்குவதற்காக ஒரு பெருந் தொகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்.
சங்கத்திற்கு இடம் வாங்கும் பொருட்டு, வள்ளல்
பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1923ஆம் ஆண்டின் மத்தியில், உமாமகேசுவரனாரை அழைத்துக்
கொண்டு, தஞ்சையில் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார்.
இறுதியில் கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த,
ஒரு பெரும் இடத்தினை வாங்குவதென்று முடிவு செய்தனர். அவ்விடம் கரந்தை பாவா மடத்திற்குச் சொந்தமானதாகும்.
பாவா மடத்தினரிடமிருந்து, இவ்விடத்தினை நேரடியாக வாங்குவதற்கு உரிய பொருளில்லாத காரணத்தாலும்,
மேலும் மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய
சட்டச் சிக்கல்களையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார் உமாமகேசுவரனார்.
மாபெரும்
தமிழ்ப் பணியாற்றிவரும் கரந்தைத் தமிழ்ச் சங்கம், காலூன்ற இடமின்றியும், இடம் வாங்கப்
பொருளின்றியும் தவிக்கின்றது. எனவே ஆட்சியாளர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு இடம்
வழங்கி உதவிட வேண்டும் என்று, அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
வேண்டுகோள் பலித்தது.
சென்னை மாகாண சட்டத்துறை செயலாளர் திவான் பகதூர் ராமச்சந்திர ராவ் அவர்களின், உத்தரவிற்கு இணங்க, கரந்தையின் வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, பாவா மடத்திற்குச் சொந்தமான இடம், 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தின்படி அரசால் கையகப் படுத்தப்பட்டது.
அன்றைய ஆங்கிலேய அரசினர், கரந்தைத் தமிழ்ச்
சங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட தொகை ரூ.1,807 மற்றும் 5 அணா மட்டுமே. அவ்விடத்திற்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையின்
அரசாங்கமே, பாவா மடத்திற்கு வழங்கியது
இவ்வாறாக, பெத்தாச்சி செட்டியார் அவர்களின் வள்ளல்
தன்மையாலும், பல அறிஞர்களின்ஆதரவுடனும், ஆங்கிலேய அரசாங்கத்தின் மாபெரும் உதவியோடும்,
ஆதரவோடும், 44,662 அடி நிலமானது, 1924ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமானது
பெத்தாச்சி செட்டியார் அவர்களின் வள்ளல் தன்மையினாலும்.
ஆங்கிலேய அரசின் ஆதரவினாலும், சங்கத்திற்கு என்று ஒரு பெரிய இடத்தினை உரிமையாக்கிய
உமாமகேசுவரனார், அவ்விடத்தில், கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக ஒரு பெரிய விழா அரங்கு
ஒன்றினைக் கட்டும் பணியினைத் தொடங்கினார்.
சங்கம் தொடங்கிய காலம் தொட்டு இன்றுவரை, அதன்
வளர்ச்சிப் பணிகளுக்குப் பெருந் தடையாக இருப்பது நிதிப் பற்றாக்குறைதான். விழா அரங்கு
கட்ட நிதி திரட்ட எண்ணிய உமாமகேசுவரனார் குலுக்கல் சீட்டு முறை ஒன்றினை ஏற்படுத்தினார்.
குலுக்கல் சீட்டு முறைக்குக் கூட, தூய தமிழில் பெருநிதிச் சீட்டு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பெருநிதிச் சீட்டு
என்னும் பெயருடன் தொடங்கப் பெற்ற, இக்குலுக்கல் முறை அன்பர்கள் முயற்சியால் ஒருவாறு
நிறைவேறியது.
இப்பெருநிதிச் சீட்டின் மூலம் கிடைக்கப் பெற்ற மொத்த தொகை ரூ.13,010 ஆகும். பரிசுகள் அளித்த வகையில் செலவிடப் பெற்ற தொகை ரூ.5,225 ஆகும். பரிசும் செலவுகளும் போக எஞ்சிய தொகையும், கொடை வள்ளல் பெத்தாச்சி செட்டியார் கட்டிட நிதிக்கென்று வழங்கிய நன்கொடையான ரூ.1000மும், இவ்விழா அரங்கிற்குக் கிட்டிய நிதி ஆதாரங்களாகும்.
சங்கத்திற்கென்று இடம் வாங்கியாகி விட்டது. அவ்விடத்தில்
கட்டிடம் கட்ட நிதியும் சேர்த்தாயிற்று. கட்டிடப் பணிகளை மேற்கொள்ள பொறியாளரையும் நியமித்தாகிவிட்டது.
அடுத்து முடிவு செய்யப்பட வேண்டியது, விழா அரங்கு மற்றும் மேடை குறித்த அளவுகள் மற்றும்
புறத் தோற்றம் பற்றிய வரைபடப் பணியாகும்.
புண்ணிய நெடுவரைப் போகிற நெடுங்கழைக்
கண்ணிடை யொருசாண்
வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின்
அரங்கம் அளக்கும்
கோலன விருபத்து
நால் விரலாக்
எழுகோலாகத் தெண்போல்
நீளத்து
ஒரு கோல் உயரத்து
உறுப்பினதாகி
உத்தரப் பலகையோடு
அரங்கின் பலகை
வைத் இடைநிலம்
நாறகோலாக
ஏற்ற வயிலிரண்டுடன்
பொலியத்
தோன்றிய அரங்கு
எனச்
சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் விவரிக்கும்
அரங்க அமைப்பை ஒட்டியே, சங்கத்தின் அரங்கையும் உருவாக்கிய உமாமகேசுவரனார், அவ்வரங்கிற்குத்
தமிழ்ப்பெரு மன்றம் எனப் பெயர் சூட்டி
மகிழ்ந்தார்.
விழா அரங்கின் ஒவ்வொரு பணியினையும் உடனிருந்து கவனித்துச் செயல்படுத்திய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்ப்பெரு மன்ற மேடைக்குப் படிகள் மட்டும் அமைத்தாரில்லை. தமிழ்ப் பெருமன்ற மேடையில் விழாத் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், மரத்தாலான படிக்கட்டுகள் மேடையுடன் பொருத்தப்படும். விழா நிறைவடைந்த மறு நொடியே, அம் மரப் படிக்கட்டுகள் அகற்றப்படும். காரணம், தமிழறிஞர்களின் காலடி பதிந்த அம்மேடையினைத் தமிழ்த் தாயின் தடம் பதிந்த தமிழ்க் கோயிலின் கருவறையாகவே உமாமகேசுவரனார் கருதினார்
நீராருங் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதிற்
றக்கசிறு பிறைநுதலுந்
தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமு மதிற்சிறந்த
திரவிடநற் றிருநாடும்
அத்திலக வாசனைபோ
லனைத்துலகு மின்பமுற
எத்திசையும் புகழ்மணக்க
விருந்தபெருந் தமிழணங்கே
எனத்
தொடங்கும், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலை, தமிழ்த் தாய் வாழ்த்தாக முழங்கியவர்,
சங்கத் தொண்டர் கூடலூர் வே. இராமசாமி வன்னியராவார்.
தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் தவறாமல்
கண்டு செல்வதற்குரிய, தமிழ் வழிபாட்டுத் தலமாக விளங்கும், தமிழ்த் தலமாம், கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின் கருவறையே, தமிழ்ப்பெரு மன்றம்தான் எனில் அது மிகையாகாது.
அடுத்ததாக, 1931 ஆம் ஆண்டு மார்ச் திங்கள்
14 ஆம் நாள், கரந்தை வடவாற்றின் கரைக்குத் தெற்கேயும், பழைய திருவையாறு சாலைக்கு கிழக்கேயும்
உள்ள, 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய
வெற்றிடத்தை ரு.3,400 க்கு உமாமகேசுவரனார் விலைக்கு வாங்கினார்.
இவ்விடத்தை
மாணவர்களுக்கு உரிய விளையாட்டிடமாக மாற்றினார். மேலும் இவ்விடத்தின் பெரும் பகுதியைத்
தோட்டமாக உருவாக்கினார். திக்கற்ற மாணவர் இல்லத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான
காய், கனிகள் இவ்விடத்தே பயிர் செய்யப்பட்டன.
சங்கத்திற்கு என்று இடம் வாங்கியாகிவிட்டது.
ஆண்டு விழாக்களை நடத்துவதற்காக, சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தினையும் கட்டி முடித்தாகிவிட்டது. இருப்பினும் நிதிப் பற்றாக்குறை மட்டும் சங்கத்தை விட்டு நீங்கியபாடில்லை.
குடுகுடுப்பைக்காரன் பாத்திரம்.
இந்த குடுகுடுப்பைக்காரன் பாத்திரம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்காலத்தை முன்கூட்டியே கூறுவது போன்ற ஒரு காட்சியை அமைத்தார்.
இப்பகுதி, நாடகத்தைப் பார்க்கும் இளைஞர்களுக்குச்
சுவையூட்டுவதற்காக எழுதப்பட்டது என்று கூறுவார் கவிஞர். ஆயினும் அது மட்டுமே உண்மையன்று.
தமிழ் நாட்டுச் செல்வர்கள், தம்முடைய காசு, பணத்தை தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல்,
தாசிக்கும், வேசிக்கும் செலவிடுவதைச் சுட்டிக் காட்டிச் சாடுவதோடு,கரந்தைத் தமிழ்ச்
சங்கம் எதிர்காலத்தில் பொருளாதார தேக்க நிலையில் இருந்து விடுபடும், வளம்பெறும் என்ற
நம்பிக்கையினையும் முன்னிலைப் படுத்துகிறார்.
கல்வி நிலையங்களை நடத்துவதற்கு மட்டுமல்ல, ஆண்டுதோறும்,
ஆண்டு விழாக்களை நடத்துவதற்கும், பொருளாதாரக் குறைவு என்பது பெருந்தடையாகத்தான் முன்
வந்து நின்றது.
இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நடைபெற வேண்டிய,
ஆண்டு விழாக்களை, தொடர்ந்து நடத்த இயலாமல், பலமுறை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை,
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, என பொருள் சேர்த்த பிறகு நடத்தியிருக்கிறார்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் கண்டது
1911 ஆம் ஆண்டில். எனவே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவை 1936 ஆம் ஆண்டிலேயே
கொண்டாடி இருக்க வேண்டும்.
ஆனால், பொருளாதார நெருக்கடியால் நடத்த இயலவில்லை.
1938 ஆம் ஆண்டில்தான், தமிழவேள் உமாமகேசுவரனார்,
வெள்ளி விழாவை நடத்தினார்.
இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக்கொண்டு,
நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி, வெள்ளி விழாவை இவ்வுலகு காணா பெரு விழாவாக, மூன்று
நாள் தொடர் விழாவாக, 1938 ஆம் ஆணடு ஏப்ரல் திங்கள் 15,16 மற்றும் 17 ஆம் தேதிகளில்
நடத்தினார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்கள் சீரோடும்,
சிறப்போடும் நடைபெற, தஞ்சைப் பொதுமக்கள், தஞ்சை நகர வணிகர்கள் தொடர்ந்து உதவினார்கள்
என்றால், வெள்ளி விழா நடைபெற தஞ்சை மக்களோடும்,
வணிகர்களோடும், தமிழகமே, தமிழினமே மனமுவந்து முன்வந்து கைகோர்த்து, தங்கள் விழாவாக,
தமிழினத்தின் உன்னத உயரிய விழாவாக, உள்ளத்தால் எண்ணி, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து
மகிழ்ந்தது.
வெள்ளிவிழா சிறப்புடன் நடைபெற நிதியுதவி வழங்கியோரின்
பெயர் பட்டியலையும், வழங்கிய தொகையினையும்,
வெள்ளி விழா அறிக்கையில் மகிழ்வோடு அச்சிட்டு அறியத் தந்திருக்கிறார்கள்.
பட்டியலையும், தொகையினையும் பார்க்கப் பார்க்க
வியப்பு கூடிக்கொண்டே செல்கிறது.
வெள்ளிவிழா அறிக்கையில், நன்கொடையாளர்கள் பட்டியல்
பதினாறு பக்கங்கள் வரை நீள்கிறது.
பக்கம் பக்கமாய், ஒருவர் விடாமல் எண்ணிப் பார்த்தேன்.
மொத்தம் 660 நன்கொடையாளர்கள்.
அதிகபட்ச அன்பளிப்புத் தொகை ரூபாய் ஆயிரம்.‘
1938 ஆம் ஆண்டில் இத்தொகை, பெருந்தொகை.
குறைந்தபட்ச அன்பளிப்பு ஒரு ரூபாய்க்கும் குறைவாக
8 அணா, 7 அணா, 4 அணா, இன்னும் குறைவாக 2 அணா வரை வழங்கியிருக்கிறார்கள்.
வியப்புதான் மிஞ்சுகிறது.
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம் அல்லோம்.
அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு
நோயராய்
ஆ உரித்துத் தின்னும் புலையரேனும்
செந்தமிழுக்கோர் அன்பராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே
எனத்
தமிழன்பர்களைத் தெய்வமாய் போற்றிய, கரந்தைத் தமிழ்ச் சங்கம், பொருள் வேண்டி விடுத்த
வேண்டுகோளைப் பார்த்தால் நம் நெஞ்சம் விம்மும்.
நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தோர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றோர் இன்சொல் அருளுவீர்.
பொற்காசுகள் கொடுத்தாலும் மகிழ்வோம், காசுகள்
கொடுத்தாலும் மகிழ்வோம், செவிக்கு இனிய சொற்களைக் கொடுத்தாலும பெரிதினும் பெரிதாய்
மகிழ்வோம்.
ஆயிரமும் வந்தது.
அணாவும் வந்தது.
இன்சொல்லும் குவிந்தது.
இதுதான் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
இவர்தான் உமாமகேசுவரனார்.
வெள்ளி விழாவிற்காக மூவர் ஆயிரம் ரூபாய் நன்கொடை
வழங்கியுள்ளனர்.
157 பேர் ஒரு ரூபாய் வழங்கியுள்ளனர்.
97 பேர் ஒரு ரூபாய்க்கும் குறைவாக வழங்கியுள்ளனர்.
நிதி வழங்கியோரின் ஊர்ப்பெயரைப் பார்த்தால, பெயர்
பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தஞ்சை, நாகூர், மாயவரம், மதறாஸ், பிறையாறு, திருக்காட்டுப்
பள்ளி, பாபநாசம், உரத்தநாடு, ஐயம்பேட்டை, ஒன்பத்துவேலி,உளுந்தூர்பேட்டை, செங்குரிச்சி,
தேவனூர், திருக்கோயிலூர், குன்னூர், போடிநாயக்கனூர், குற்றாலம், உறையூர், சிதம்பரம்,கோயமுததூர்,
திருவனந்தபுரம், திருநாமநல்லூர், திருப்பாதிரிப்புலியூர், கும்பகோணம், ஆரணி, பட்டுக்கோட்டை,
தூத்துக்குடி, பண்ருட்டி, மேலைச்சிவபுரி, கூணம்பட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், மதுரை,
திருவாரூர், திருநெல்வேலி, மன்னார்குடி, என நன்கொடையாளர்களின் ஊர்ப்பெயரும் நீண்டு
கொண்டே செல்கிறது. மொத்தத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழன்பர்கள், தங்களின்
உதவிக் கரங்களை, நேசக் கரங்களை, கரந்தைவரை நீட்டியிருக்கிறார்கள். ரங்கூனில் இருந்துகூட
ஒருவர் தொகையினை அனுப்பியிருகிறார்.
மொத்தத்தில் தமிழகமே வழங்கியிருக்கிறது.
திருவையாறு போர்டு பாடசாலை மாணவர்கள் ஒரு ரூபாய்
இரண்டே கால் அணா வழங்கி இருக்கிறார்கள்.
மேலைச் சிவபுதி சன்மார்க்க சபைக் கல்லூரி மாணவர்கள்
மூன்று ரூபாய் வழங்கி இருக்கிறார்கள்.
நாவலர்
ந.மு.வேங்கடசாமி நாட்டார் 107 ரூபாய் வழங்கி இருக்கிறார்.
பண்டிதமணி
மு.கதிரேசஞ் செட்டியார் 110 ரூபாய் வழங்கி இருக்கிறார்.
கரந்தை வித்துவான் வகுப்பு மாணவர்கள் 24 ரூபாய்
14 அணா வழங்கி இருக்கிறார்கள்.
மறைமலை அடிகளாரின் திருமகனார், மறை.திருநாவுக்கரசு,
சென்னையில் இருந்து இரண்டு ரூபாய் அனுப்பி இருக்கிறார்.
திரு கே.தியாகராசப் பிள்ளை என்பார் பாம்பேயில்
இருந்து ரூபாய் ஐம்பது அனுப்பி இருக்கிறார்.
திரு டி.சதாசிவம் பிள்ளை என்பார் புது தில்லியில்
இருந்து ரூபாய் ஐம்பது அனுப்பி இருக்கிறார்.
சர்
ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள் ரூபாய் நாற்பத்து மூன்று வழங்கி இருக்கிறார்.
பசுமலை சோமசுந்தர பாரதியார் ரூபாய் பதினைந்து
மற்றும் பத்து அணா வழங்கி இருக்கிறார்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் ஐந்து ரூபாய் வழங்கி இருக்கிறார்.
தமிழவேள் அவர்களின் மூத்த சகோதரி தர்மசம்வர்த்தின
அம்மாள் அவர்கள் ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறார்.
இருவர் பெயர் குறிப்பிடாமல் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள்.
ஒருவர் இரண்டு ரூபாய் மற்றொருவர் ஒரு ரூபாய்.
இவர்களையும் விட்டுவிடாமல் பதிவு செய்திருக்கிறார்கள்.
எப்படி தெரியுமா?
தமிழன்பர், நாகை இரண்டு ரூபாய்.
ஒரு தோழர், திருப்புரம்பியம் ஒரு ரூபாய்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்பெற்ற
நன்கொடைகளைத் துல்லியமாய் வரவு வைப்பதில் மட்டுமல்ல, பெறப்பெற்ற நன்கொடைகளை வீண் விரயமின்றி
தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்காக செலவிடுவதிலும் தமிழவேள் உறுதியாக இருந்தார்.
புதுக்கோட்டையை அடுத்த திருமயத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர் கோணாபட்.
தமிழவேளின் கடைசிக் கடிதம் |
உமாமகேசுவரனார் மீது கொண்ட பற்றால், உமாமகேசுவரனாரின் தமிழ்ப் பணிகளின் மீது கொண்ட ஈர்ப்பால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பொருளுதவியை வாரி வாரி வழங்கியவர் இவர்.
கடிதத்தைப் படித்துப் பாருங்கள் நெகிழ்ந்து போவீர்கள்.
தாங்கள் செய்த நன்றியோ, ஞாலத்தின் மானப்பெரிது.
அதனால் நலம் பெற்று வளரும் சங்கம், நெறிப்பட்டு நடக்கின்றதாவென ஓரோர்கால் இங்கு வந்து
நீங்கள் கண்காணிப்பது நற்பயன் விளைவிக்கும்.
இப்படித்தான்,
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்
கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தைக்
காத்தார்,
வளர்த்தார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் 25 ஆண்டுகால
வரவு செலவு கணக்கினையும், வெள்ளி விழா அறிக்கையில், பதிவு செய்து, தமிழுலகே அறியும்படி
வெளியிட்டிருக்கிறார்கள்.
முதல் 25 ஆண்டுகளில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குக்
கிடைத்த மொத்த வரவு 1,10, 642 ரூபாய் 7 அணா.
இதில் சந்தா வரவு என்பது 14,312 ரூபாய் 3 அணா
8 பைசா
அரசியலார் நன்கொடை 41,577 ரூபாய் 8 அணா, 0 பைசா
அன்பர்கள்
நன்கொடை 30,304 ரூபாய் 0 அணா, 2 பைசா
தமிழ்ப் பொழில் வரவு 7,824 ரூபாய் 5 அணா, 0 பைசா
இதர வரவு 9,303 ரூபாய்
6 அணா, 2 பைசா
பெருநிதிச் சீட்டு 7,321 ரூபாய் 0 அணா, 0 பைசா
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் 25 ஆண்டுகளில்,
தமிழன்பர்களிடம் இருந்து நன்கொடையாய் பெற்ற தொகை 30,304 ரூபாய் 2 அணா.
இவற்றுள் தமிழவேள் உமாமகேசுவரனார், தன் சொந்த
வருவாயில் இருந்து, திங்கள்தோறும் வழங்கிய தொகையும் அடங்கியிருக்கிறது.
தமிழவேள்
அவர்கள் சங்கத்திற்குக் கொடுத்தது
7,160 ரூபாய் 2 அணா, 9 பைசா.
அதாவது 25 ஆண்டுகளில் கிடைத்த மொத்த நன்கொடையில்
23 சதவீதம் உமாமகேசுவரனார் அவர்களுடையது.
இப்படித்தான் வழக்கறிஞர் தொழில் மூலம் தான் ஈட்டிய
வருவாயை எல்லாம் சங்கத்திற்கு என்றே வழங்கினார்.
இதனால்தான், தமிழவேள் அவர்களின் மாசற்ற மனத்தையும்,
தன்னலமற்ற தமிழ்த் தொண்டினையும், தன் வருவாய் முழுவதையும் சங்கத்திற்கே உடமையாக்கிய
நல் தமிழ் உள்ளத்தையும் கண்டதால்தான், உணர்ந்ததால்தான், இது நம் சங்கம், இது நம் சங்கம்,
இதற்கு உதவுதல் நம் கடமை, போற்றுதல் நம் உரிமை, என்று எண்ணித் தமிழகமே, தமிழுலகே கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தைப் போற்றிக் காத்தது, வளர்த்தது.
வாழ்க
கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
வாழ்க
தமிழ் முனிவன் உமாமகேசுவரனார் திருப்பெயர்.
போற்றுந் தமிழும் புலவரும் வாழ்கநலஞ்
சாற்றுங் கரந்தைத் தமிழ்ச்சங்கம் –
ஏற்றமொடு
பல்லாண்டு வாழ்கவருள் பாலித் ததுபுரக்கும்
எல்லோரும் வாழ்க இனிது.