01 பிப்ரவரி 2025

தி.ம.நா.,

 

     ஆண்டு 1948.

     பாபநாசம்.

     தஞ்சை மாவட்டம்.

     காலை 10.00 மணி.

     அந்தச் சிறுவனுக்கு வயது வெறும் 14.

     பாபநாசம் கிளைச் சிறையில் இருந்து வெளியே வருகிறான்.

      கிளைச் சிறையில் இருந்தா?

     ஆம், கிளைச் சிறையில் இருந்துதான்.

     ஆனால், அச்சிறுவன் குற்றவாளி அல்ல.

     இவரது வீட்டில் குடியிருந்த காவலர், இங்குதான் இங்கிருக்கும் காவல் நிலையத்தில்தான் பணி செய்கிறார். அதனால் அவருக்கு காலை உணவினைக் கொடுத்துவிட்டு வெளியே வருகிறான்.

     பாபநாசத்தில், காவல் நிலையமும், கிளைச் சிறையும் ஒரே இடத்தில் இருந்த கால கட்டம் அது.

     கிளைச் சிறைக்கு வெளியே ஒரு மகிழ்வுந்து நின்று கொண்டிருக்கிறது.

     மகிழ்வுந்தில் இருவர் அமர்ந்திருக்கின்றனர்.

     இருவரில் ஒருவர் சற்று உயரம் குறைந்தவர்.

     அவர், அச்சிறுவனை, கை அசைத்துக் கூப்பிடுகிறார்.

     சிறுவனும் மகிழ்வுந்தின் அருகில் செல்கிறார்.

     உயரம் குறைவானவர் சிறுவனைப் பார்த்து கேட்டார்.

     மீண்டும் கிளைக் சிறைக்குள் உன்னால் சென்றுவர முடியுமா? எங்களுக்காகச் செல்வாயா?

     சிறுவன் தலையைட்டினான்.

     அவர் இரு பைகளை எடுத்து, அந்தச் சிறுவனிடம் கொடுத்து, கிளைச்சிறையில், ஒரு அம்மாவும், ஒரு ஐயாவும் இருக்கிறார்கள், அவர்களிடம் இதைக் கொடு என்றார்.

     சிறுவன் இரு பைகளையும் பெற்றுக் கொண்டு, மீண்டும் சிளைச் சிறைக்குள் சென்று, அவர் குறிப்பிட்ட அம்மாவிடமும், ஐயாவிடமும் பைகளைக் கொடுத்துவிட்டு வெளியே வருகிறான்.

     சிறுவன் வெளியே வரும் பொழுது, சிறுவன் வீட்டில் குடியிருந்தக் காவலரும், சிறுவனோடு சேர்ந்து வெளியே வருகிறார்.

     மகிழ்வுந்தில் அமர்ந்திருப்பவர்களைப் பார்க்கிறார்.

     அவரிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

     வெகுவேகமாய் மகிழ்வுந்திற்கு அருகில் சென்று வணக்கம் செலுத்துகிறார்.

     பணிவுடன் பேசுகிறார்.

     இவற்றையெல்லாம் பார்த்தபடியே, சிறுவன் வீடு திரும்புகிறான்.

     ஆனால், அந்தச் சிறுவனுக்குள் ஒரு கேள்வி எழுகிறது.

     சிறையில் இருப்பவர்கள் யார்?

     மகிழ்வுந்தில் இருந்தவர்கள் யார்?

     காவல் துறையைச் சார்ந்தவரே, வணக்கம் வைத்துப் பணிவோடு பேசுகிறாரே, அப்படியென்றால் அவர்கள் யார்?

     கேள்விகளுக்கான விடையினைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் அந்தச் சிறுவன் காத்திருந்தான்.

     காவலர் தன் பணி முடிந்து, வீடு திரும்பியபோது, ஓடிப்போய் அவரிடம் கேட்டான்.

     காவலர் பதில் சொன்னார்.


    சிறையில் இருப்பவர் மணியம்மை.

     கும்பகோணத்தில் நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக, சில நாட்களாகச் சிறையில் இருக்கிறார்.

      மகிழ்வுந்தில் இருந்தவரும், சென்னையில் நடைபெற்றப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்தான், ஆனால் அவரை கைது செய்து அன்று மாலையே விடுவித்துவிட்டார்கள். எனவே பாபநாசம் சிறையில் இருக்கும் மணியம்மையாருக்குத் தேவையானவற்றைக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்.

      வந்தவர்கள் பெயர் என்ன? என்றான் சிறுவன்.

      ஒருவர் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த, வடுவூர் நடராஜன்

      அப்படியா, மற்றொருவார் யார்?

    


      பேரறிஞர் அண்ணா.

     காவலரின் பதில் கேட்டுச் சிறுவன் வியந்தான்.

     இவர்தான் அண்ணாவா?

     நம்மோடு பேசியவர்தான் அண்ணாவா?

     செய்தித் தாள்களில் அவ்வப்போது, அண்ணா பேசினார், அண்ணாதுரை பேசினார் என்று படித்திருக்கிறோமோ, அந்த அண்ணா இவர்தானா?

     சிறுவனின் மனதிலும், உடலிலும் ஓர் இனம் புரியா உணர்வு மெல்ல மேலெழுந்தது.

     அன்றிலிருந்து, பாபநாசம் பகுதிகளில், திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தொடங்கினான்.

     திராவிடர் கழக மேடைகளில் நிகழ்த்தப்படும் உரைகளைக் கேட்டுக் கேட்டு, தன்னையும் அறியாமல், திராவிடர் கழகத்தில் முழுமையாய் கலந்து போனான், கரைந்து போனான்.

     இனி தன் வழி, திராவிடர் கழக வழி எனப் புரிந்து, தெளிந்து, திராவிடர் கழகம் காட்டிய பாதையில் பயணிக்கத் தொடங்கினான்.

     சிறுவன் வளர்ந்து இளைஞரானார்.

     1952 ஆம் ஆண்டில், தனது 18 ஆம் வயதில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு சுயம்பிரகாசம் என்பவருக்காக, இராசகிரி தங்கராசு மற்றும் திருப்பாலத்துறை ஆர்.கே., என்று அழைக்கப்படும் கருப்பையா பிள்ளை இருவருடனும் இணைந்து, தேர்தல் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபட்டார்.

     தேர்தல் முடிந்ததும், திராவிடர் கழகப் போராட்டங்களே, இவரது வாழ்வியல் களங்களாகவும், சிறைச்சாலைகளே இவரது இருப்பிடமாகவும் மாறிப்போனது.

          1954 இல் இந்தி பெயர் அழிப்புப் போராட்டத்தால் சிறை.

     1957 இல், திருவல்லிக்கேணியில், பிராமணாள் ஓட்டல் பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தால் சிறை.

     அதே 1957 இல் இராமர் பட எரிப்புப் போராட்டத்தால் சிறை.

     1958 இல் இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தால் சிறை.

     1980 இல் அன்றைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கும்பகோணம் வந்தபொழுது, இந்தி எதிர்ப்பிற்காக, கருப்புக் கொடி காட்டியதற்காகச் சிறை என சென்னை, பாபநாசம், திருச்சி, புதுக்கோட்டைச் சிறைகளில் இவர் பெருமையோடு கழித்த நாட்கள் அதிகம்.

     தந்தை பெரியார் பேசும் கூட்டங்களில் எல்லாம், திராவிடர் கழக வெளியீடுகளைச் சுமந்தபடி, சுழன்று, சுழன்று, கூட்டத்திற்குள் புகுந்து, புகுந்து விற்றவர் இவர்.

    

ஐயா ஜி.கே.மூப்பனார் மற்றும் கபிஸ்தலம் ஆர்.சௌந்தரராஜ  மூப்பானர் முன்னிலையில், தந்தை பெரியார்தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணக் காட்சி

1962 ஆம் ஆண்டில், ஜெயகாந்தம் அம்மையாரை, தன் வாழ்க்கை இணையராக ஏற்று, இல்லற வாழ்வில் நுழைந்தபோது, இவர்களது திருமணத்தை, சுயமரியாதைத் திருமணமாக நடத்தி வைத்தவர் தந்தை பெரியார்.
    
1960 ஆம் ஆண்டு நடைபெற்ற, சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் படிப்பகத் திறப்பு விழாவின்போது, குன்றக்குடி அடிகளார் மற்றும் ஐயா ஜி.கே.மூப்பனார்




ஐயா ஜி.ஆர்.மூப்பனார், ஐயா ஆர்.சௌந்தரராஜ மூப்பனார், ஐயா சம்பத் மூப்பனார், ராஜகிரி தங்கராசு மற்றும் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு ராம்குமார் முன்னிலையில் நடைபெற்ற 70 ஆம் ஆண்டு அகவைத் திருநாள் விழா


தந்தை பெரியார் மீது, தான் கொண்டிருந்த பற்றை, பாசத்தை, வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், காண்போர் வியக்கும் வகையில் வெளிப்படுத்தியவர் இவர்.

     நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம்.

     அன்று பெரியாருக்கு 84 ஆம் ஆண்டு பிறந்தநாள்.

     மேடையேறிய இவர்,  பெரியாரின் 84 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், 84 பொருட்களை பெரியாருக்கு அன்பளிப்பாய் வழங்கியதோடு, பெரியாரை துலா பாரத்தில் அமரவைத்து, அவரது எடைக்கு நிகரானப் பொருட்களையும் வழங்கி மகிழ்ந்தவர் இவர்.

     பெரியாரின் 85 ஆவது பிறந்த நாளின்போது, கவித்தலம் பெரியவர் திரு ஆர்.சௌந்தராஜ மூப்பனார் அவர்கள் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில், 85 நூறு ரூபாய் நோட்டுகளை மாலையாய் அலங்கரித்து, அணிவித்து மகிழ்ந்தவர் இவர்.

     தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், திருப்பாலத்துறையில் பிறந்த இவர், பின்னாட்களில், தேர்தல் அரசியலில் நுழைந்து, பல பதவிகளில் அமர்ந்து, பாபநாசத்தை அனைத்து வகையிலும் உயர்த்திட்ட உன்னத மனிதர் இவர்.

     1965 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆணடுவரை, பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியில் துணைத் தலைவைராய் இருந்து, 1969 ஆம் ஆண்டில் தலைவராய் உயர்ந்தவர்.

     தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன், பாபநாசம் கூட்டுறவு வங்கிக்கு என, ஒரு தனியிடத்தை விலைகொடுத்து வாங்கி, கட்டடம் எழுப்பி, வங்கியை அதன் சொந்த இடத்தில் செயல்பட வைத்து அழகு பார்த்தவர் இவர்.

     1966 முதல் 1972 வரை சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலையின் இயக்குநராகவும், 1968 முதல் 1971 வரை நில வள வங்கியின் இயக்குநராகவும் பணியாற்றியவர் இவர்.

     இதுமட்டுமல்ல, முழுதாய் ஐந்து ஆண்டுகள், 1986 முதல் 1991 வரை, பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவராய் அமர்ந்து, பாபநாசம் நகர வளர்ச்சிக்கு இவர் ஆற்றிட்டப் பணிகளை, இன்றும் பாபநாசம் பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கிறது.

     பாபநாசத்திற்கு என்று புத்தம் புதிதாய்,

     ஒரு தீயணைப்பு நிலையம்,

     காய், கறி அங்காடி

     மீன், கறி அங்காடி

     நகரின் மத்தியப் பகுதியில் கழிவறைக் கட்டடங்கள்

     பேரூராட்சிக்கென சொந்தக் கட்டடம்

     திருமண மண்டபம்

     வணிக வளாகம், எனச் சொல்லிக் கொண்டே போகலாம், இவர் ஆற்றிய ஒப்பற்றப் பணிகளை.

     இவரது பணிகளைக் கண்டு வியந்த, அன்றைய தமிழக அரசானது, தமிழகத்தின் ஆறு சிறந்த பேரூராட்சிகளுள் ஒன்றாக, பாபநாசம் பேரூராட்சியை அறிவித்து, அங்கீகரித்துப் பாராட்டியது.

     ஆட்சிப் பணியில் மட்டுமல்ல, கல்விப் பணியிலும் களம் கண்டு வென்ற வேங்கை இவர்.

     பாபநாசம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி உருவாகக் காரணமே இவர்தான். புத்தம் புதிதாய் இடம் வாங்கியவரும் இவர்தான், கட்டடம் கண்டவரும் இவர்தான்.

     பாபநாசம் அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியின், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும் இருந்து, அரும் பணிகள் பல ஆற்றியவரும் இவர்தான்.

     தன் மறைவிற்குப் பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ ஆராய்ச்சிக்காகத் தன் உடலையே கொடையாய் வழங்க விரும்பி, சாசனம் எழுதிக் கொடுத்தவரும் இவர்தான்.

     பதினான்கு வயதில் தொடங்கி, எழுபத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்றும் தனது தொன்னூற்று ஒன்றாம் அகவையிலும், தளராத சமூகப் பணியாற்றிவரும் இவரது, தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டும் வகையில்,

கவித்தலம்

தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றத்தின்

சார்பில்,

மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்


திருமிகு வி.மோகன் அவர்களும்

அவரது குழுவினரும்,

பல்வேறு புரவலர்களின் ஆதரவுடனும்,

பல்வேறு அமைப்புகளின் உதவியுடனும்

தன்னலமற்ற மன்ற உறுப்பினர்களின் ஓய்வறியா உழைப்பாலும்,

கடந்த 25.1.2025 சனிக்கிழமை மாலை நடத்தப்பெற்ற,

சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின்

19 ஆம் ஆண்டு

அந்தி முதல் விடியல் வரையிலான

தமிழ் மக்கள் கலை விழாவில்

கவிஞர் ப.திருநாவுக்கரசு மற்றும் திரு ஐயனார் அவர்களுடன்

சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம்

தி.கணேசன் நினைவு

சமுதாயத் தொண்டர் 2025

விருது வழங்கிச்

சிறப்பிக்கப் பட்டிருக்கிறார் இவர்.

இவ்விருதினை,

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்

மானமிகு வீ.அன்புராஜ் அவர்கள்

வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார்.

இவர் யார் தெரியுமா?

இவர்தான்


பெரியார் பெருந்தொண்டர்

பெரியவர், மானமிகு தி.ம.நாகராஜன் அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர்

இன்னுமொரு

நூறாண்டு வாழ வாழ்த்துவோம்.