24 ஜனவரி 2025

கரந்தை

 


     கரந்தையில் பிறந்தவன் நான்.

     கரந்தையில் வளர்ந்தவன் நான்.

     கரந்தையில் படித்தவன் நான்.

     கரந்தையில் பணியாற்றியவன் நான்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் படித்து, அதே பள்ளியில், பட்டதாரி நிலை கணித ஆசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றி, பணி ஓய்வும் பெற்றவன் நான்.

     தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில், எழுத்தராய் பணியாற்றிய, என் மீது பேரன்பு செலுத்திய, திரு ஆ.பக்கிரிசாமியின் உதவியாளராய் இரண்டு வருடம்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், புத்தம் புதிதாய் தொடங்கப்பெற்ற தி.ச.பழனிச்சாமி பிள்ளை தொழிற்பயிற்சி மையத்தில் எழுத்தராய் இரண்டு வருடம்.


உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், அலுவலக உதவியாளராய் ஒரு வருடம். பின்னர் பட்டதாரி நிலை கணித ஆசிரியர் எனப் பல நிலைகளில், கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றும் பொழுதே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், தமிழாராய்ச்சித் திங்களிதழான, தமிழ்ப் பொழில் இதழின் அச்சுப் பணிகளையும், அஞ்சலில் அனுப்பும் பணியினையும் செய்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பினை, அன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், கரந்தைத் தமிழ்ச் செம்மல் திரு ச.இராமநாதனார் அவர்கள் எனக்கு வழங்கினார்.

     1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற தமிழாராய்ச்சித் திங்களிதழான தமிழ்ப் பொழில், இவ்வாண்டில், தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

     நூறு ஆண்டு கால தமிழ்ப் பொழில் வரலாற்றில், அதன் அச்சுப் பணியினை, இருபத்தைந்து ஆண்டுகள் செய்திட்டப் பெருமை எனக்கு உண்டு.

     கட்டுரைகளைப் பெறுதல், பாவலர் ச.பாலசுந்தரனார் போன்றோரிடம் கட்டுரைகளைக் கொடுத்து, தமிழ்ப் பொழில் இதழில், இடம்பெறத் தக்கத் தகுதியான கட்டுரைகள்தான் என்பதற்கான ஒப்புதலைப் பெற்று, அச்சகத்தில் கொடுத்து, எழுத்துக் கோர்த்து, பிற்காலத்தில் தட்டச்சு செய்து, திரும்பவும் பாவலர் போன்றோரிடம் கொடுத்து, பிழை திருத்தி, அச்சகத்தில் கொடுத்து அச்சிட்டு, சந்தாதாரர்களுக்கு, அஞ்சல் வழி அனுப்பும் பணியினை, ஒரு கால் நூற்றாண்டு செய்திருக்கிறேன்.

     அவ்வமயம், 1925 ஆம் ஆண்டு முதல், அதுநாள் வரை அச்சான, அனைத்து தமிழ்ப் பொழில் இதழ்களும் என் பொறுப்பிலேயே இருந்தன.

     தொடக்க காலம் முதலாகத் தமிழ்ப் பொழில் இதழ்களில் இடம் பெற்றிருக்கும் தமிழாராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து புரிந்து கொள்வதற்கானத் தமிழறிவு, இன்றுவரை என்னிடம் இல்லவே இல்லை.

     ஆயினும், தமிழ்ப் பொழில் இதழில் இடம் பெற்றிருக்கும், சங்கப் பணிகள் தொடர்பானச் செய்திகளையும், பொழிற்றொண்டர் கருத்துரைகளையும் விடாது படிப்பேன்.

     படிக்கப் படிக்க, கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்பது, வான் நோக்கி ஓங்கி உயர்ந்து  நிற்கும் மேரு மலை என்பது புரிந்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம், அதன் அயராப் பணிகள், போராட்டங்கள், தீர்மானங்கள், பற்றிப் படிக்கப் படிக்க வியப்பு தோன்றி, மலைப்பாய் மாறி, என்னையும் அறியாமல், என் பெயருடன் கரந்தையினையும் சேர்த்து கரந்தை ஜெயக்குமார் ஆனேன்.

     புத்தகங்களை ஒவ்வொன்றாய் வாங்கி, வாங்கி, சிறுகச் சிறுகச் சேர்த்து, இன்று என் வீட்டில், அமைத்திருக்கும் நூலகத்தின் பெயர் கரந்தை நூலகம்.

     கரந்தை.

     கரந்தை என் உணர்வோடு கலந்து, உயிரோடு ஒட்டிக் கொண்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடர்பான செய்திகளைப் படிக்கப் படிக்க, என்னுள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

     அது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெயருக்கானக் காரணம்.

     மதுரையில் தோன்றியதால், மதுரைத் தமிழ்ச் சங்கம்.

     மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அடியொற்றிக் கரந்தையில் தோன்றியதால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று, பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைந்திருக்கும் சிற்றூரின் பெயர் கருந்திட்டைக்குடி.

     இன்றுவரை அரசு ஆவணங்களில், இப்பகுதி கருந்திட்டைக்குடி என்றுதான் அழைக்கப் படுகிறது.

     கருந்திட்டைக்குடியின் மரூஉ கரந்தை.

     இப்படித்தான் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன், சில கட்டுரைகளில் படித்தும் இருக்கிறேன்.

     ஆனாலும், எனக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

     வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி முதலியவை புறப்பொருள் வெண்பா மாலை கூறும் திணைகளாகும்.

     மேலும் உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடான், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை முதலிய திணைகளைப் பற்றியும் புறப்பொருள் வெண்பா மாலை பேசும்.

     இவற்றுள் வெட்சி என்பது ஆநிரைகளைக் கவர்தல்.

     கரந்தை என்பது, கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டல்.

     கரந்தை என்றால், இழந்ததை மீட்டல்.

     தமிழின் இழந்த பெருமைகளை மீட்கத் தோன்றிய, தமிழ்ச் சங்கம் என்பதால்தான், சங்கத்திற்குத் திணைகளின் அடிப்படையில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று பெயர் வைத்திருப்பார்களோ என்னும் ஒரு சிந்தனை என்னுள் எழுந்தது.

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்க ஆவணங்களில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெயருக்கானக் காரணத்தை, எங்கேயும் குறிப்பிட்டிருக்கிறார்களா என தேடத் தொடங்கினேன்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் இருபத்து ஐந்து ஆண்டு கால, ஆண்டு அறிக்கைகள் கிடைத்தன.

      ஆர்வமுடன் அட்டையைத் திருப்பினேன்.

     முதல் இரண்டு பக்கங்களைக் காணவில்லை.

     1925 ஆம் ஆண்டு தொடங்கப்பெற்ற, தமிழ்ப் பொழில் இதழின், முதல் இதழில் எதேனும் செய்திகள் கிடைக்கலாம் என்று எண்ணி, முதல் இதழைப் பார்த்தேன்.

     முதல் நான்கு பக்கங்களைக் காணவில்லை.

     வேதனைதான் மிஞ்சியது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்ககால அறிக்கைகளில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள இடம் கருந்திட்டைக்குடி என்றுதான் இருக்கிறது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது ஒரு மலரினை வெளியிட்டிருக்கிறார்கள்.

     மலரின் பெயர்.

     கரந்தைக் கட்டுரை.

     இம்மலரின் முதல் கட்டுரையே, தமிழவேள் உமாமகேசுவரனாரின் கட்டுரைதான்.

     நமது சங்கமும் தமிழ் வளர்ச்சியும்.


இக்கட்டுரையில் தமிழவேள் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

     தமிழின் தனி நிலை, தொன்மை, செம்மை முதலிய உயரிய பண்புகளை நன்குணர்ந்து, மக்கள் அனைவரும், இவ்வுயர்வை யோர்ந்து பயனடைய வேண்டும் என்னும் விருப்பத்தினாலும், உலக மொழிகளுள் உயர் மொழியாய் வீற்றிருந்த தமிழ் மொழி மீண்டும் அவ்வுயர்வைப் பெறவேண்டும் என்னும் ஆராத காதலினாலும், தமிழ் மக்கள் கலைநலம் முதலிய எல்லா நலங்களையும் பெற்று, உலக மக்களுள் ஒருவராகக் கருதப்பட வேண்டும் என்னும் கருத்தினாலும, நம் சங்கம் 1911 ஆவது ஆண்டு வைகாசித் திங்கள் முதல் நாள், சில இளைஞர்களால் நிறுவப்பெற்றது.

     நம்மவரது பண்டைய மருத்துவ முறையின் சிறப்பையும், எளிமையையும், இக்காலத்து அஃது அடைந்துளள நிலையையும் யாவரும் நன்குணர்வர். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக, நம் நாட்டின் நிலைக்கு ஏற்ற வண்ணம் அமைந்து, மக்களைக் காத்து வந்த இம்முறை, மீண்டும் தக்க நிலையில், நம் நாட்டில் நிலைபெற்று, கால வளர்ச்சிக்கேற்பத் தன் தனி நிலையிலே வளர்ந்து வருமாயின், நம் நாட்டிற்கு எவ்வளவு துணை புரியுமென்பதையும், எத்தனை கோடி ரூபாயைச் சேமித்து வைக்குமென்பதையும் நன்குணர்ந்த, நம் சங்கம், தன்னிலைக்கேற்ப ஒரு தமிழ் மருத்துவ சாலையை ஏற்படுத்தி, தஞ்சையில் பலருக்கும் நோய் தீர்த்து வருகின்ற செய்தி, நம்மவருக்கு உவகையூட்டுமென்றே எண்ணுகிறோம். இம்முறையை மீண்டும் நிலைபெறச் செய்யவேண்டுமென்பது, நம் சங்க நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்காகும் வழியிலும் பாடுபட்டு வருகிறது.

     தமிழவேள் உமாமகேசுவரனார், சங்கத்தின் நோக்கங்களாக முன்வைப்பதைப் பாருங்கள்.

இழந்த தமிழின் பெருமைகளை மீட்பது.

இழந்த தமிழ் மருத்துவ முறைகளை மீட்பது.

இழந்ததை மீட்பதுதானே கரந்தை, கரந்தை திணை.

---

     திரு மு.வே.மா.உலக ஊழியன் என்றொரு அறிஞர் தமிழ்ப் பொழில் இதழில் தொடக்க கால இதழ்களில் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

    


இவர் தனது ஒவ்வொரு கட்டுரையினை நிறைவு செய்யும் பொழுது, தனது பெயரை எழுதி, பெயருக்குக் கீழே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று எழுதவில்லை.

தமிழ்ச் சங்கம், வாடாக் கரந்தை

     என்று எழுதுகிறார்.

     பூ வாடும் தன்மை உடையது.

     ஆனால், கரந்தையை வாடாக் கரந்தை என்கிறார்.

     வாடாத கரந்தை.

     வாடாத பூ.

     கரந்தையை திணை வகைகளுள் ஒன்றான, கரந்தையாக, கரந்தைப் பூவாக, இழந்ததை மீட்பதற்குப் போரிடும் வீரர்கள் அணியும் பூவாக, கரந்தைப் பூவாகவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிப்பிடுகிறார்.

     மேற்கண்ட செய்திகள் எல்லாம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெயருக்கானக் காரணத்தை, நேரடியாகச் சொல்லவில்லை, எனினும் குறிப்பால் உணர்த்துகின்றன.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

     தமிழ்ச் சங்கத்திற்கு முன், கரந்தை இணைந்திருப்பதற்கானக் காரணத்தை ஒருவர் நேரடியாகவே குறிப்பிடுகிறார்.

     தமிழ்ப் பொழில் இதழின் துணர் 15, இச்செய்தியினைப் பதிவு செய்திருக்கிறது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 28 ஆம் ஆண்டு, ஆண்டு விழா, 1939 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றிருக்கிறது.

இவ்விழாவிற்குத் தலைமை ஏற்றவர்.

ஈழத்து அரசவை உறுப்பினர், பரமேசுவரக் கல்லூரி முதல்வர்

ஆனரபிள் சு.நடேசப் பிள்ளை.

    



தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், அருகில் அமர்ந்திருக்க, விழா தலைமையேற்ற, ஈழத்து  திருவாளர் சு.நடேசப் பிள்ளை அவர்கள், தன் தலைமையுரையில் பேசுவதைச் செவிகொடுத்துக் கேளுங்கள்,

    


திருவருளால் இது கரந்தைத் தமிழ்ச் சங்கமெனப் பெயர் பெற்றுள்ளது. யாவர் தமிழர் மொழி, நாகரிகக் கலைகளைப் பற்றிக் குலைக்கிறார்களோ, அந்நிலையிலெல்லாம், தமிழ் மக்களைத் தூண்டியுய்த்துப் பழம் பெருமைகளை மீட்டுக் கொண்டு வருவது பற்றியே,
இது கரந்தைத் திணைக்குரிய பெயர் பெற்றதென்பதை நீங்கள் அறிவீர்கள்.

     கரந்தை திணை.

     திணைக்குரியப் பெயராகிய, மீட்டலை உணர்த்தக்கூடிய கரந்தையினைப் பெயராகப் பெற்றதுதான், கரந்தைத் தமிழ்ச் சங்கம் எனத் தெள்ளத் தெளிவாகவே உணர்த்துகிறார்.

     ஆனரபிள் சு.நடேசப் பிள்ளை அவர்களுக்கு நன்றி.

கரந்தை.

மீட்டலின் பெயர்.

கரந்தை

கருந்திட்டைக்குடியின் மரூஉ பெயரல்ல.

கரந்தை

திணையின் பெயர்.

காரணப் பெயர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால்தான், இவ்விடத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைந்திருப்பதால்தான், கருந்திட்டைக்குடி என்பது தமிழ்ச் சங்கத்தின் பெயரால்தான், கரந்தை என்று அழைக்கப்படுகிறது.

     கருந்திட்டைக்குடி, கருந்தட்டான்குடி என்ற பெயர்களின் மரூஉ அல்ல, அல்லவே அல்ல.

கரந்தை

தமிழ்த் தலமாம்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால்

பெயர் பெற்ற ஊர்

பெருமை பெற்ற ஊர்

உயிர் பெற்ற ஊர்