பர்மா.
பர்மாவிற்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவு,
தொடர்பு என்பது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த, மிகவும் தொன்மையான உறவாகும்.
பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்று விளங்கிய
காலமும் உண்டு.
பர்மாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழர்கள் விளங்கிய காலமும் இருந்தது.
ஆனால் இன்று, தமிழர்கள், பர்மா மைய நீரோட்டத்தில் கலந்து, தங்களது அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர்.
இந்நிலையினை மாற்ற, தமிழர்களிடையே, தமிழ் உணர்வை
ஊட்ட, 1950 ஆம் ஆண்டு ஒரு கழகம் தோன்றியது.
இவ்வமைப்பு ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள்
இயக்கமாகவே இயங்கி வந்தது.
1965 ஆம் ஆண்டு, பர்மா திராவிட முன்னேற்றக் கழகம்
என்னும் பெயர் மாற்றப்பெற்று, இவ்வியக்கம், ஒரு புதுப் பெயரினைப் பெற்றது.
தமிழர்
அறநெறிக் கழகம்.
இக் கழகம், பர்மியத் தமிழர்களிடைய, தமிழ் மொழியைக்
கொண்டு செல்ல, ஒரு புது முழக்கத்தை முன்னெடுத்து உரத்து முழங்கியது.
பாட்டன்
தமிழை வீட்டில் பேசு.
இவ்வியக்கத்தையும், இந்த உன்னத முழக்கத்தையும்
முன்வைத்து, தனது எண்பத்து இரண்டாவது வயது வரை, தளராது இயங்கியவர் ஐயா கோ.கலைச் செல்வன்
அவர்களாவார்.
ஊரெங்கும் தமிழ்ப் பள்ளிகளைத் திறந்தார்.
தமிழர்களின் இல்லம் தேடிச் சென்றார்.
பிள்ளைகளை அனுப்புங்கள்.
தமிழ் சொல்லித் தருகிறோம்.
தமிழ் எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறோம்.
உங்கள் பிள்ளைகளை தமிழர்களாய் உயர்த்துகிறோம்.
கல்விக் கட்டணம் வேண்டவே வேண்டாம்.
பிள்ளைகளை அனுப்பினால் போதும்.
ஐயா கோ.கலைச்செல்வன், பர்மாவில் தமிழ் மங்காது, மறையாமல் காக்க, ஓயாது உழைத்தார்.
1989 ஆம் ஆண்டு, பர்மாவும் புதுப்பெயர் பெற்றது.
மியான்மர் என்று மாறியது.
ஓயாது உழைத்த பெரியவர் ஐயா கோ.கலைச்செல்வன் அவர்கள்
தன் முதுமையின் காரணமாக. தனது 82 ஆவது அகவையில், 2017 ஆம் ஆண்டு, மீளா உறக்கத்தில்
ஆழ்ந்து ஓய்வெடுக்கத் தொடங்கினார்.
தந்தை
ஒப்பர் மக்கள் என்பார் தொல்காப்பியர்.
தந்தையின் தடம் பற்றிப் பிள்ளைகள் களமிறங்கினர்.
திரு க.கருணாநிதி
திரு க.சந்திரசேகரன்
திரு இளங்கோவன் மற்றும் இவர்களது இரு சகோதரிகளும்
தமிழ் காக்கப் புறப்பட்டனர்.
இவர்களது ஒரே இலக்கு, மியான்மரில் வசிக்கும்,
சற்றேறக்குறைய 12 இலட்சத்திற்கும் அதிகமானத் தமிழர்களிடம், தமிழைக் கொண்டுபோய் சேர்க்க
வேண்டும் என்பது மட்டும்தான்.
இவர்கள், இதற்காக, இன்று, தமிழர் அறநெறிக் கழகத்தின்
சார்பில், 41 தமிழ்ப் பள்ளிகளைச் சிறப்புடன் நடத்தி வருகின்றனர்.
இப்பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல்,
பத்தாம் வகுப்பு வரை, வகுப்புகள் நடைபெறுகின்றன.
புலவர் மா.கோபாலகிருட்டினன் அவர்கள், மியான்மர்,
தமிழர் அறநெறிக் கழகத்தின் தேவையை, ஆசிரியர் மனது திட்ட ஒருங்கிணைப்பாளர், நல்லாசிரியர்,
சிகரம் சதீஷ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
நல்லாசிரியர் சிகரம் சதீஷ் அவர்கள், பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம், இச்செய்தியை, கொண்டுபோய் சேர்த்தார்.
விரைந்து
செயல்பட்ட, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மியான்மர் தமிழர்களின் கோரிக்கையை,
மாண்புமிகு தமிழக முதல்வரிடம் நேரில் சொல்ல, தமிழ்ப் புத்தகங்கள் உடனே, மியான்மர் நோக்கிப்
பறந்து சென்றன.
கடந்த 31.12.2024 செவ்வாய்க் கிழமை மாலை,. தஞ்சாவூர்,
அண்ணா நகர், பர்மா காலனியைச் சார்ந்த, அன்பர்கள் சிலருடன், தமிழர் அறநெறிக் கழகப் பொதுச்
செயலாளர், கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை கவிஞர் க.பஞ்சாட்சரம் அவர்கள் செய்திருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
மியான்மர் தமிழர் அறநெறிக் கழகப் பொதுச் செயலாளர்
தமிழ்த்திரு கோ.க.சந்திரசேகரன் அவர்களும், அவரது மைந்தர் திரு கோ.க.ச.சின்னதுரை அவர்களும்,
ஒரு காலத்தில் பர்மாவில் வசித்து, தற்பொழுது தஞ்சை பர்மா காலனியில் வசிக்கும் தமிழன்பர்களிடம்
பேசினார்கள்.
தமிழர்
அறநெறிக் கழகத்தின்
தேவையை
எழுத்துரைத்தனர்.
பண உதவியோ, பொருள் உதவியோ தேவையில்லை.
மியான்மரில் வசிக்கும் தமிழர்கள், தமிழை மறந்து
மெல்ல மெல்ல பர்மியர்களாகவே மாறிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, தற்பொழுது தஞ்சையில் வசிக்கும், முன்னாள்
பர்மிய மக்கள், தற்பொழுது, பர்மாவில் வசிக்கும், தங்களின் தமிழ் உறவுகளுடனும், நண்பர்களுடனும்
தொடர்பு கொண்டு, அவர்களது பிள்ளைகளைத் தமிழ் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.
தமிழர் அறநெறிக் கழகத்தின் சார்பில், தமிழ் படிக்கும்,
பர்மியத் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவிட வேண்டும்.
தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கையினையும் அதிகரிக்கத் தயாராக இருக்கின்றோம்.
இன்றைய பர்மிய அரசு தமிழர்களுக்குச் சாதகமாகத்தான்
விளங்குகிறது.
தமிழ்ப்
பள்ளிகள் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும், இன்றைய பர்மிய அரசு எள்ளளவும் தடைபோடுவதில்லை.
தமிழர்கள்தான், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் படிக்க
அனுப்பத் தயங்குகின்றனர்.
இவர்களின் தயக்கத்தைப் போக்க, தஞ்சை வாழ் பர்மியத் தமிழர்கள்
உதவிட வேண்டும்.
அதேபோல், மேற்படிப்பிற்காக, மியான்மரில் இருந்து,
தமிழகம் வரும் பர்மியத் தமிழர்களுக்குத் தற்காலிகமாய் தங்க இடம் கொடுத்து, மேற்படிப்பிற்கான
வழிகாட்டுதல்களைச் செய்திட வேண்டும்.
மேலும், தஞ்சையில் இருந்து மியான்மர் வரும்,
தமிழன்பர்கள், மியான்மரில் செயல்படும், தமிழர் அறநெறிக் கழகப் பள்ளிகளைப் பார்வையிட்டு,
அதில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் பெருமைகளை எடுத்துக்கூறி, அம்மாணவர்களை
ஊக்குவிக்க வேண்டும்.
இதுவே, தமிழர் அறநெறிக் கழகத்தினரின் கோரிக்கையும்,
வேண்டுகோளுமாகும்.
மியான்மர், தமிழர் அறநெறிக் கழகத்தின் உயர்ந்த,
உன்னத நோக்கங்களுக்குத் தோள் கொடுத்து உதவுவது, தமிழகத் தமிழர்களாகிய, நம் ஒவ்வொருவரின்
கடமையாகும்.
மியான்மரில் வசிக்கும் நம் உறவுகளுடனும், நண்பர்களுடனும்
பேசுவோம், மியான்மரில் தமிழ் தழைக்க, நம்மால் ஆன உதவிகளைச் செய்வோம்.