29 மார்ச் 2025

படத்திறப்பு

 



     படத் திறப்பு,

     படத்திறப்பு என்பது, இவ்வுலக வாழ்வு துறந்தவர்களுக்குச் செய்யப்பெறும், 16 ஆம் நாள் நீத்தார் கடன் சடங்குகளுள் ஒன்றாக நிலை பெற்றுவிட்டது.

     நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மட்டும், செய்யப்பெறும் ஒரு நிகழ்வாகவே, படத்திறப்பு இன்று மாறிவிட்டது.

     படத்திறப்பு என்பது இறந்தவர்களுக்கு மட்டும்தானா?

முற்காலத்திலும் இப்படித்தானா? என்றால், இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது.

     உயிரோடு இருப்பவர்களுக்கும் படத்திறப்பு விழா நடத்தி இருக்கிறார்கள்.

     செயற்கரிய செயல்களைச் செய்தவர்களைப் போற்ற, சாதனையாளர்களை வாழ்த்த, பொது வாழ்வில், தங்களின் தன்னலமற்ற அறச் செயல்களால், மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த, மாமனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களின் முன்னிலையிலேயே, அவர்களது படத்தினைத் திறந்து பெருவிழாவாகக் கொண்டாடி இருக்கிறார்கள்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     ஆனாலும் உண்மை.

     1952 ஆம் ஆண்டில் ஒரு படத்திறப்பு விழா.

     சென்னை, தியாகராயர் கல்லூரியில் ஒரு படத்திறப்பு விழா.

     பதவியில் இருக்கும் ஓர் உயர் அதிகாரிக்குப் படத்திறப்பு விழா.

     பொதுக் கல்வித் துறையின் இயக்குநருக்குப் படத்திறப்பு விழா.

    


நெ.து.சுந்தரவடிவேலு என்னும் உன்னத மனிதருக்குப் படத்திறப்பு விழா.

     அவரைக் கேட்காமலேயே விழாவிற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

    படத்திறப்பு விழா நடைபெறவிருக்கும் அன்று காலையில்தான், தனக்குப் படத்திறப்பு  விழவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதையே. நெ.து.சுந்தரவடிவேலு அறிகிறார்.

     படத்திறப்பாளரின் பெயரைக் கண்டு திடுக்கிட்டுப் போகிறார்.

     இவரா?

     எனக்கும் மேல், மிகமிக உயர்ந்த இடத்தில் இருப்பவர் அல்லவா?

     உடனே புறப்பட்டுச் சென்று, படத்திறப்பாளரைச் சந்திக்கிறார்.

     நான் பணியில் இருக்கிறேன். நீங்களோ உச்சத்தில் இருப்பவர். நீங்கள் என் படத்தைத் திறந்து வைப்பதா? வேண்டாம் ஐயா.

     மன்றாடுகிறார்.

     இவரது வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.

     அன்று மாலை படத்திறப்பு நடக்கிறது.

     படத்தினைத் திறந்து வைத்தவர் பேசுகிறார்.


ஸ்ரீமான் சுந்தரவடிவேலு கருப்பா, செவப்பா என்றுகூட எனக்குத் தெரியாது.

     பலர் கல்வித்துறை சம்பந்தமா என்னிடம் வந்திருக்கிறார்கள்.

     பள்ளிக்கூட நிர்வாகி வந்தாலும், நெ.து.சு.வுக்குச் சொல்லுங்கள், அவர் உதவியாக இருப்பார் என்பார்கள்.

     ஆசிரியர்கள், நிர்வாகிகள் மேல் புகார் கொண்டு வந்தாலும், நெ.து.சு. கண்டிப்பானர், நியாயமானவர் என்று சொல்வார்கள்.

    ஆசிரியர்கள் இவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நிர்வாகிகளும் இவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மாணவர்களும் இவரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

     எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருப்பதால், இவரை  இயக்குநராக நியமித்தோம்.

     படம் திறக்கிறது, இவரைப் பெருமைப்படுத்த அல்ல.

     கிராமத்தில், சாதாரண விவசாயி வீட்டில், பிறந்தவர்கூட, பெரிய நிலைக்கு வரலாம் என்பதை நினைவுபடுத்தி, இளைஞர்களை ஊக்கு விப்பதற்காகத்தான், அவரே தடுத்தும் கேளாமல், அவரது படத்தைத் திறந்து வைத்தேன்.

     படத்தினைத் திறந்து வைத்தவர்.

     அன்றைய முதல்வர்.

     கர்மவீரர் காமராசர்.

     இப்படத்திறப்பு விழா நடைபெறுவதற்கும் முன், இதற்கும் 26 ஆண்டுகளுக்கும் முன், தஞ்சையில், ஒரு படத்திறப்பு விழா.

     1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள், தஞ்சை நாட்டாண்மைக் கழக அலுவலகத்தில், (Taluk Office) ஒரு படத்திறப்பு விழா.

     யாருக்கு?

     தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவருக்கு.

     1920 ஆம் ஆண்டுமுதல், தஞ்சை நாட்டாண்மைக் கழகத் தலைவராக சிறப்புடன், மக்கள் நலப் பணியாற்றிவரும் தலைவருக்குப் படத்திறப்பு விழா.

     கல்வி ஒன்று மட்டும்தான் அனைவரையும் உன்னத நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதை உணர்ந்து, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை 40 இல் இருந்து 170 ஆக உயர்த்தியவர்.

     தஞ்சை மாவட்டத்தில் இருந்த அன்ன சத்திரங்களை எல்லாம், அருகில் இருந்த பள்ளிகளின் உணவு விடுதிகளாக, மாணவர்கள் தங்குமிடங்களாக மாற்றிய பெருமைக்கு உரியவர்.

     தஞ்சை மக்களின் மனதில், தன் தன்னலமற்ற பணிகளால் நீங்கா இடத்தைப் பிடித்தவர்.

மக்கள் அன்பினோன் ஆன்ற அறிவினோன்

பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்

பெருக அழைக்கவும் நேரமே யில்லை

உற்றார் உறவினர் க்காக உழைக்க

ஒருநாள் ஒருநொடி இருந்ததே யில்லை.

கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை

காணவேண்டி இல்லந் துறந்து

முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்

வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்

என பிற்காலத்தில், பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப் பெற்றவர்.

     தஞ்நை மாநாட்டாண்மைக் கழக உறுப்பினர்கள், நாட்டாண்மைக் கழக உறுப்பினர்கள், தஞ்சை நகரத்து உயர்நிலைத் திருவினர்களும் பிறருமாக பலப்பலர் கூடினர்.

    



இரண்டு ஆண்டுகளுக்கும் முன், நாட்டாண்மைக் கழகத் தலைவரின் பெருமுயற்சியால், புத்தம் புதிதாகக் கட்டி எழுப்பப்பெற்ற, நாட்டாண்மைக் கழக அலுவலகத்திலேயே படத்திறப்பு விழா.

     தஞ்சை மாநாட்டாண்மைக் கழகத் தலைவராகவும், பின்னாளில், சென்னை மாகாண நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவருமான, சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், உமாமகேசுவரனாரின், அருமை பெருமைகளையும், அவர்தம் சிறப்பியல்புகளையும் பெருமையோடு எடுத்துரைத்தார்.

     இவ்விழாவிற்குத் தலைமை எற்றிருந்த, அந்நாள் மாவட்ட நீதியரசர் பி.சி.லோபோ அவர்கள், உமாமகேசுவரனாரின் பெருமைகளை எடுத்துரைத்து, உமாமகேசுவரனாரின் முன்னிலையிலேயே, உமாமகேசுவரனாரின் உருவப் படத்திறைத் திறந்து வைத்தார்.

     இந்நிகழ்வினைத் தமிழ்ப் பொழில் இதழில் பதிவு செய்திருக்கும், அந்நாள் பொழிற்றொண்டர், கரந்தைக் கவியரசு அவர்கள், மனமகிழ்ந்து வாழ்த்துவதைப் பாருங்கள்.

     தமிழ்த் தாய்க்கும், தமிழன்பர்களுக்கும் பெரும் பற்றுக்கோடாகி மிளிர்வது தஞ்சை மாநாட்டாண்மைக் கழகமும், தஞ்சை நாட்டாண்மைக் கழகமுமாகும்.

     இவ்விரு கழகங்களின் தலைவர்கள், இங்ஙனம் தமிழ் மக்களாற் போற்றிச் சிறப்பிக்கப்பெறுதல், முற்றும் பொருந்துவதேயாகும்.

     இத்தஞ்சை மாநாட்டில் நிலவும் இவ்விருவர்கள் உமா-செல்வம் ஆட்சி, நெடிது இனிது நிலவுவதாக.

தூய தமிழ்த்தொண்டும் தோமில் பொதுத்தொண்டும்

மேய தமதுயர்வா மேவினார் – ஆயபிறை

அன்ன உமா-செல்வத் தாட்சி இனிதோங்க

மன்னு சிறப்பெல்லாம் வாய்ந்து.

---

     இந்நிகழ்வினைப் பற்றி 1926 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் பொழில் இதழில் படித்தபோது, மாவட்ட நீதியரசரால்  அன்று திறந்துவைக்கப் பெற்ற உமாமகேசுவரனார் படம் இன்றும் இருக்கிறதா? என் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.

     கடந்த 22.3.2025 சனிக்கிழமை காலை, என் நண்பர் முனைவர் ப.ராஜதுரை அவர்களுடன், தஞ்சாவூர், ரயிலடி, பழைய பேருந்து நிலையம் சாலையில், எல்.ஐ.சி., அலுவலகக் கட்டிடத்திற்கு அடுத்து அமைந்திருக்கும், சுகாதாரத் துறை அலுவலகத்திற்குச் சென்றோம்.

     இதுதான் அன்றைய நாட்டாண்மைக் கழக அலுவலகம்.

     அலுவலகத்தின் முகப்பின் மேல் தளத்தில் ஒரு பெயர் பலகை..

      பெயர் பலகை.

     



UMAMAHESWARAM BUILDINGS.

     உமாமகேசுவரனாரின் மறைவிற்குப் பின், இக்கட்டடத்திற்கு, உமாமகேசுவரனார் பெயரையே சூட்டியிருக்கிறார்கள்.

    இவ்வலுவலகத்தில் பணியாற்றும், நண்பர், பெருஞ்கவிஞர், சொற் பொழிவாளர், தஞ்சை இனியன் அவர்களிடம் பேசி, அனுமதி பெற்றுக் கொண்டு, அலுவலகத்திற்குள் நுழைந்தோம்.

    




நுழை வாயிலுக்கு நேர் எதிரே, உமாமகேசுவரனார் படம்.

     உடலும், உள்ளமும் சிலிர்த்துப் போனது.

     ஆனால், 99 ஆண்டுகளுக்கு முன், 1926 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பெற்ற படம் அல்ல இது.

     கால ஓட்டத்தில் படம் பழுதாகிப் போனதால், இவ்வலுவலகத்தில் பணியாற்றிய தமிழ் உணர்வாளர் ஒருவர், தானே தன் சொந்த செலவில், புத்தம் புதிதாய், ஒரு உமாமகேசுவரனாரின் படத்தினைத் தயார்   செய்து, பழைய படம் இருந்த அதே இடத்தில் மாட்டி, சந்தன மாலையும் அணிவித்துள்ளார்.

மனம் மகிழ்ந்து போனது.

வாழ்க தமிழ் முனிவன் தமிழவேள்.