05 ஏப்ரல் 2025

இசையின் எதிரொலிகள்

 

     எலிகளும் நம்மைப்போல் இவ்வுலகில் வாழ முழு உரிமை பெற்றவை. அவற்றைக் கொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?. அவை நம் வேளாண்மையை நாசப்படுத்தாமல், சேதப்படுத்தாமல் இருப்பதற்கு என்ன வழிகள் உள்ளதென்று சிந்தித்துச் செயல்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

வயல் வரப்புகளில் நாம் அதிக அளவில் எருக்குச் செடிகளை வளர்க்க வேண்டும். அவற்றின் இலைகளை வரப்போரங்களில் தூவிவிட்டால், அதன் வாடைக்குப் பயந்து அந்தப் பக்கம் எலிகள் வரவே வராது.

     சம மனிதர்களைப் பற்றிக்கூட, கவலைப்படாத மனிதர்கள் வாழும் இக்காலத்தில், எலிகளைப் பற்றி இவர் கவலைப் படுவதைப் பார்க்கும் பொழுது, நமக்கு வியப்பாகத்தான் இருக்கிறது.

     இவர் தலைமையாசிரியராய் பணியாற்றி ஓய்வும் பெற்றவர், இவர் தன் பணிக்காலம் தொடங்கி, இன்று வரை விவசாயத்திலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருபவர், எலிகளால் நெற்கதிர்களுக்கு ஏற்படும் அழிவை நண்கு உணர்ந்தவர்.

      இருப்பினும் எலிகளுக்காகக் கவலைப்படுகிறார்.

     நான் ஆலமரத்தான் பட்டியைச் சேர்ந்த 82 வயது கிழவி.

     எனக்கு சின்ன வயசுலேயே கல்யாணம் ஆகி, எனக்குப் பதினோறு புள்ளங்க இருக்காங்க.

     இப்பவும் அவங்க நல்லபடியாத்தான் இருக்காங்க.

     ஆனா, எனக்குத் துணையா, இப்ப, இந்த ஊர்ல ஒருத்தன்கூட இல்ல.

     எல்லோரையும் நல்லா படிக்க வச்சேன்.

     அவனுங்க எல்லோரும் இப்ப வெளிநாடுகள்ல, வேற வேற தேசத்துல இருக்கானுங்க.

     ஒருத்தன் ஆஸ்திரேலியாவுல, ஒருத்தன் சிங்கப்பூர்ல, ஒருத்தன் கனடாவுல, ஒருத்தன் தான்சானியாவுல, இப்படி எல்லாரும் குடும்பத்தோட வெளிநாட்டுல இருக்கானுங்க.

     என்னோட வீட்டுக்காரரு, அதான் மச்சான் மருதமுத்து, ஆறு வருசத்துக்கு முன்னாடியே, எந்த சிக்கல், சிரமமும் இல்லாம, நல்லபடியா போய் சேர்ந்துட்டாரு.

     ஆனா, அவரு செத்ததுக்குக் கூட இந்த பயலுவல்ல மூனு பேரு மட்டும் வந்துட்டு, அதுவும் அவதி அவதியா போயிட்டானுங்க. கருமாதிக்குக் கூட இருக்கல.

     மத்தவனுங்க இப்ப வரமுடியாது, அப்றம் வர்றேன்னானுங்க. பரதேசிப் பயலுவ.

     அப்பன் செத்ததுக்குக்கூட வராம, அப்படி என்னடா பொல்லாத வேலை அவனுங்களுக்கு.

     படிக்கப் படிக்க, அந்தக் கிழவியின் வேதனை நமக்குள்ளும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

     வாழ்வதே சம்பாதிப்பதற்கும், வசதியாக வாழ்வதற்கும் மட்டும்தான் என்று, சுயநல நோக்கின் பக்கம் திரும்பிவிட்ட இக்காலத்தில் உறவிற்கு ஏது மதிப்பு.

     உறவை உணராமலும், உறவினர்கள் யார் யார் என்பது கூட அறியாத உலகமாக, இன்றைய தலைமுறை வளர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனை.

     நாமெல்லாம் தமிழன் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றோம். ஆனால் தமிழனாக வாழவில்லை. வாங்கும் பொருட்களில் மட்டுமல்ல, நாம் பேசும் தமிழிலும் கலப்படம்.

     தமிழ் இலக்கியங்கள் என்னவென்றும், அவை எப்படிப்பட்டவை என்பதும் நமக்கு அரைகுறையாகவே தெரிகிறது.

     வணிக நிறுவனங்களின் பெயர்களில் தமிழ் காணாமல் போய்விட்டது. திரைப்படங்களின் பெயர்களிலும், தமிழ் மறைந்து, ஆங்கிலம் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

     பள்ளிகளில் அதிகமாகத் தமிழ்ப் பாடங்களில்தான் மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள்.

     உண்மைதான். தமிழின தொன்மை, அருமை, அறியாத மனிதர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

     தமிழின் பெருமை அறியாத, அறிந்து கொள்ளக்கூட விரும்பாத, ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.

     தமிழ் படித்தால் என்ன கிடைக்கும்? என்று கேள்வி கேட்டு, தங்களது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி விட்டதாக பலரும் நினைக்கும் நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது.

     ஓர் உண்மையை பொய்யாக்கிச் சொல்வதும், பொய்யை உண்மையாக்கிச் செல்வதும், ஓர் எழுத்தாளனின் கைதேர்ந்த கலையாகி வெளிப்படுவதுதானே அவனது படைப்பு.

     அது உண்மையாயினும், பொய்மையாயினும், அது படிப்பாளிக்கு எதோ ஒரு வகையில், ஒரு பயனை, ஒரு படிப்பினையை, ஒரு நெகிழ்ச்சியை, ஏதேனும் ஒரு மகிழ்ச்சியை அல்லது ஏதாவது ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்திச் செல்லவேண்டும்.

     ஒரு கைதேர்ந்த எழுத்தாளனின் கலை, இவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் பொய்யை உண்மையாக்கிச் செல்லாமல், உண்மையை, உள்ளத்தைத் தொடும் வகையில் எடுத்து வைப்பதிலும், படிப்பவர் மனதுள் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் எழுதுவதிலும் வித்தகராகி இருக்கிறார் இவர்.

     இவர் தன் கல்லூரிப் பருவத்திலேயே கதை, கவிதை என எழுதி எழுதி மகிழ்ந்தவர்தான். இருப்பினும் கல்லூரிப் படிப்பு முடிந்து, ஆசிரியராய் பள்ளிக்குள் நுழைந்து, ஆசிரியராய், முதுகலை ஆசிரியராய், தலைமை ஆசிரியராய் தொடர்ந்து உயர்ந்தவர் இவர்.

     பொறுப்பு அதிகரிக்க அதிகரிக்க, வேலை நேரமும் அதிகரித்து, ஓய்வு என்பதே இல்லாத சூழலில், எழுத்துப் பற்றிச் சிந்திக்கக்கூட இவருக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

     எனவே இவருக்குள் இருந்த கவிஞரும், எழுத்தாளரும் பல ஆண்டுகள் கண்மூடி தூக்கத்தில் ஆழ்ந்து போனார்கள்.

     இவர் தன் பணி ஓய்விற்குப் பிறகு, மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில், மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா, மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு க.அன்பழகன், மக்கள் சிந்தனைப் பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரு கலியபெருமாள், திரு சோழன் ஆகியோரின் முயற்சியால், மாதந்தோறும் நடத்தப்பெற்று வரும் நூல் அறிமுகக் கூட்டங்கள் மற்றும் நூல் ஆய்வரங்கக் கூட்டங்களில் பங்குபெறும் பொழுதெல்லாம், இவருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர், அவ்வப்போது கண் திறந்து பார்ப்பதுண்டு.

     இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சிந்தனைப் பேரவையின் வெள்ளி விழாவில், இரு எழுத்தாளர்கள் பாராட்டப்பெற்ற நிகழ்வைப் பார்க்கிறார்.

     ஒருவர் நீர்வழிப் படூஉம் என்னும் அற்புத நாவலின் ஆசிரியர் தேவிபாரதி.

     மற்றொருவர் 18 வயதே நிரம்பியக் கல்லூரி மாணவி.

     சக்தி ஸ்ரீதேவி.

     இவர் தன் 18 வயதில், 18 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

     பெரும் சாதனையல்லவா?

     எனவே இவருக்கும் பாராட்டு.

     இந்நிகழ்வுகளைப் பார்த்த அந்த நொடியில், அந்த நிமிடத்தில், இவருக்குள் பல்லாண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த, எழுத்தாளர் பீறிட்டு வெளிக் கிளம்பினார்.

     மூன்றே மாதத்தில், 11 சிறுகதைகளை எழுதி நூலாக்கி இருக்கிறார்.

     ஆங்கிலம் படித்தவர்.

     ஆங்கில ஆசிரியர்.

     முத்தமிழ்ப் பித்தனாய் மாறிப்போனார்.

     இசையின் எதிரொலிகள்

     இந்நூலினை எழுதிய வேகத்தில், கடந்த 22.2.2025 சனிக்கிழமை மாலை, தஞ்சை பெசண்ட் அரங்கில், நூல் வெளியீட்டு விழாவினையும் நடத்தி அசத்தி விட்டார்.

இவர்தான்,



முத்தமிழ்ப் பித்தன்

திரு கா.ஆசைத்தம்பி

வாழ்த்துகள் ஐயா

தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்.

எழுத்துகள் நூல்களாய் மலரட்டும்.

 

 

இசையின் எதிரொலிகள்

முத்தமிழ்ச் சாரல் பதிப்பகம்,

2/523ஏ, அன்னை இல்லம்,

சேவியர் நகர் 3 ஆம் தெரு,

விளார் சாலை,

தஞ்சாவூர் - 613 006.

பேச : 90438 82213

ரூ.165