ஆண்டு 1942.
ஓராண்டுப் பணி.
அப்படித்தான் சொன்னார்கள்.
கை நிறைய
சம்பளம். அதுவும் டாலரில் தருவோம்.
பணி முடிந்து திரும்பும்பொழுது, பணிக் கொடையும்
தருவோம்.
இத்திட்டத்தில் சேர்ந்து பணியாற்றினால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவோம்.
இப்படியும் சொன்னார்கள்.
ஒரு அரசே இப்படிச் சொல்லும்போது நம்பித்தானே
ஆக வேண்டும்.
நம்பினார்கள்.
தமிழர்கள் நம்பினார்கள்.
கூட்டம், கூட்டமாய் சென்று வேலைக்குச் சேர்ந்தார்கள்.
ஆங்கிலேயர்கள் அப்பகுதியை விட்டு அகன்றபிறகு,
ரப்பர் தோட்டங்களில் வேலை செய்தவர்கள் எல்லாம், வேலை இழந்து, உணவிற்குக் கூட வழியின்றி
தவித்த காலம் அது.
எனவே ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், நாங்களும்
வருகிறோம் என்றனர்.
பலர் குடும்பத்தை விட்டுச் சென்றனர்.
ஆயிரக் கணக்கானோர் குடும்பத்தோடு சென்றனர்.
அப்படியும் ஆட்கள் போதவில்லை.
தொடக்கத்தில் ஆசை காட்டி அழைத்தவர்கள், பின்னர்
மிரட்டத் தொடங்கினார்கள், தங்களின் சுய உருவத்தைக் காட்டினார்கள்.
வீடு வீடாகச் சென்று ஆள் பிடித்தனர்.
வேலைக்கு வர மறுத்தவர்களின் தலைகளை ஈவு இரக்கமின்றி
வெட்டினார்கள்
வெட்டிய தலைகளை, தோட்ட வேலிகளின் மீது சொருகி
வைத்தனர்.
மக்கள் பயந்து போயினர்.
வேலைக்கு வந்தனர்.
மக்கள் சேரச் சேர லாரிகளில் ஏற்றப்பட்டு அழைத்துச்
சென்றனர்.
அப்படியும் எண்ணிக்கை போதவில்லை.
இரவு நேரங்களில், அங்கிருந்த பெரும் திரையரங்கு,
இராணுவத்தினர் சுற்றி வளைப்பார்கள்
படம் முடிந்து திரும்பியவர்கள் அனைவரும், துப்பாக்கி
முனையில், லாரிகளில் ஏற்றி அழைத்துச் செல்வார்கள்
இப்படி, ஆள் பிடிக்கும் வேலையைச் செய்த இராணுவத்தினர்
யார் தெரியுமா?
ஜப்பான் இராணுவத்தினர்.
இதற்காகவே, ஆள் பிடிக்கும் பணிக்காகவே, கொரிய
இராணுவத்தினரை வாடகைக்கும் எடுத்திருந்தனர்.
இரவு நேரங்களில், வீடு வீடாகச் சென்று சோதனை
செய்து, தூங்கிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் அள்ளிச் சென்றனர்.
இலட்சக் கணக்கில் வேலையாட்கள் தேவை. அதற்காக
கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் பிடித்துச் சென்றனர்.
எங்கு தெரியுமா?
மலேசியாவில்.
எதற்காக?
ஒரு இரயில் பாதை அமைப்பதற்காக.
---
அமெரிக்கா, நெதர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற
நாடுகள் ஒரு புறமும், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி போன்ற அச்சு நாடுகள் ஒரு புறமும் போருக்கானத்
தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் அது.
எண்ணெய் வளமோ, கனிம வளமோ ஏதுமின்றி, இயற்கையின்
சீற்றங்களின் மேல், அமர்ந்திருந்த ஜப்பானுக்கு ஓர் ஆசை.
பிற நாடுகளைத் தனது காலனித்துவ நாடுகளாக மாற்றினால்,
அந்நாடுகளின் கனிம வளத்தைக் கொண்டு, தங்கள் நாட்டை வளப்படுத்திக் கொள்ளலாம் என்னும் பேராசை.
எனவே ஜப்பான் முதல் அடியை எடுத்து வைத்தது.
அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்திலும், மலேசியாவின் கிளைண்டான் பகுதியிலும், சிங்கப்பூரின் நகரப் பகுதியிலும் ஒரே நேரத்தில் குண்டுகளை வீசியது.
அந்நாள் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள்.
இதுதான் இரண்டாம் உலகப்போரின் தொடக்கப் புள்ளி.
சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் குண்டுகள் விழுந்ததைத்
தொடர்ந்து, அதுவரை அப்பகுதிகளை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு பின்வாங்கியது.
சிங்கப்பூரும், மலேசியாவும் ஜப்பானின் ஆதிக்கத்திற்குள்
வந்தது.
மலேசியாவிற்குள் நுழைந்த ஜப்பான், மலேசியாவின்
வழியாக, தரை மார்க்கமாக, இந்தியாவிற்குள் நுழைய விரும்பியது.
நுழைந்து இந்தியாவைக் கைப்பற்றி, அகண்ட ஆசியாவை
உருவாக்க எண்ணியது.
இதற்காக, ஒரு திட்டத்தை முன்னமே வகுத்துத் தயாராக
வைத்திருந்தது.
ஜப்பாயின் கனவுத் திட்டம் இது.
சயாம்
பர்மா இரயில் பாதை திட்டம்.
சிங்கப்பூரில் தொடங்கி, மலேசியா வழியாக, தரை
வழிப் பயணித்து, தாய்லாந்திற்கு வந்து, தாய்லாந்தில் இருந்து அடர்ந்த காடுகள், மலைகள்,
காட்டாறுகள் வழிப் பயணித்து பர்மாவிற்கு வந்து, பர்மாவின் வழியாக, இராமாங் பள்ளத்தாக்கு
வழியாக இந்தியாவை அடைவது.
அகண்ட ஆசிரியாவை வடிவமைப்பது.
ஜப்பானின் திட்டம், கனவுத் திட்டம் இதுதான்.
இதற்காகத்தான், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும்
குண்டுகளை வீசி, ஆங்கிலேயர்களை அப்புறப்படுத்திவிட்டு, ஜப்பானியர் உள் நுழைந்தனர்.
ஆங்கிலேயர்கள் மலேசியாவை விட்டுச் சென்ற பொழுது,
அவர்களது ரப்பர் தோட்டங்களில் உழைத்த, இலட்சக் கணக்கானத் தமிழர்களை நிராதரவாக விட்டுச்
சென்றனர்.
இரப்பர் தோட்டங்களையும் அப்படியே விட்டுத்தான்
சென்றார்கள்.
மரங்களில் இருந்து, தமிழர்கள் பால் எடுக்கலாம்,
ஆனால் அதனை சேமித்து வைப்பதற்கும் மற்ற தொடர் பணிகளுக்கும் வழி இல்லாமல் போனது.
எனவே தமிழர்கள் வறுமையின் பிடிக்குள் சென்றனர்.
ஜப்பான் வந்தது.
சயாம் பர்மா இரயில் திட்டத்தைத் தொடங்கியது.
இதற்காகத்தான் ஆள் பிடிக்கும வேலையில் முழுதாய்
இறங்கியது.
இலட்சக் கணக்கானத் தமிழர்களைப் பிடித்தது.
முதலில் ஆசை காட்டிப் பிடித்தது.
பின்னர் மிரட்டி, பயமுறுத்திப் பிடித்தது.
தாய்லாந்தில்
உள்ள பான் போங் என்னும் இடத்தில் இருந்து, பர்மாவில் உள்ள, தான்பியுசாயாட் வரை இரயில்
பாதை அமைக்கும் பணியைத் தொடங்கியது.
மொத்த
இரயில் பாதையின் நீளம் 415 கி.மீ.,
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் நேச நாட்டுப் போர்க்
கைதிகள் 60,000 பேர் மற்றும் இலட்சக் கணக்கானத் தமிழர்களைக் கொண்டு ஜப்பான்,
இரயில் பாதை அமைக்கும் பணியைத் தொடங்கியது.
1942
ஆம் ஆணடு ஜுன் மாதம் 22 ஆம் நாள் பணிகள் தொடங்கின.
பொதுவாக எந்தவொரு கட்டுமானப் பணியினைத் தொடங்குவதாக
இருந்தாலும், ஓரிடத்தில் இருந்துதான் தொடங்குவார்கள்.
ஆனால், இப்பணி பர்மாவில் இருந்தும், தாய்லாந்தில்
இருந்தும் ஒரே நாளில் தொடங்கியது.
இரயில் பாதை அமைக்கும் பணியானது, சமவெளியில்
அல்ல, அகன்று அடர்ந்த காடுகள், ஓங்கி உயர்ந்த மலைகள், பெரும் பெரும் காட்டாறுகளைக்
கடந்து, இப்பாதையினை அமைக்க வேண்டி இருந்தது.
போர்க் கைதிகள் 60,000 பேர், இலட்சக் கணக்கானத்
தமிழர்கள், இவர்களை வழிநடத்த 12,00 ஜப்பானிய இரயில்வே பொறியாளர்கள், அடக்கி ஆள, ஆயிரக்கணக்கான
ஜப்பானிய, கொரியப் படை வீரர்கள்.
மலேசியாவில் பிடித்தத் தமிழர்களை தாய்லாந்து
வரை சரக்கு இரயிலில் அழைத்துச் சென்றனர்.
சரக்கு இரயில் வழியில் எங்கும் நிற்கவே இல்லை.
இயற்கை உபாதைகளைக் கழிக்க, ஒரு நாளைக்கு ஒரே
ஒரு முறை, எங்காவது, இரயிலை நிறுத்துவார்கள்.
இரயில் பயணத்தின்போது, மல ஜலம் கழிக்க வேண்டும்
என்றால், நின்ற இடத்திலேயே, ஓடும் இரயிலிலேயே கழித்து, அதே இடத்திலேயே தொடர்ந்து நின்றாக
வேண்டும்.
தங்கள் வாழ்வு வளம் பெறும் என்று நம்பி வந்த
தமிழர்களுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது, இனி தங்களின் வாழ்வு நரகத்தை நோக்கித்தான்
என்பது புரிந்தது.
ஓடும் இரயிலில் இருந்து தப்பிக்கவும் வழி இல்லை.
அப்படியும் தப்பிக்க முயன்றவர்களின் தலைகளை வெட்டி,
இரயிலிலேயே தொங்க விட்டார்கள்.
தாய்லாந்து சென்றவுடன், பணி தொடங்க இருக்கும்
இடத்தை நோக்கி நடைப் பயணம்.
நூற்றுக் கணக்கான கி.மீ., நடந்தே சென்றனர்.
பர்மாவில் இருந்து 115 கி.மீ. இரயில் பாதை.
தாய்லாந்தில் இருந்து 300 கி.மீ. இரயில் பாதை.
மொத்தம் 415 கி.மீ., இரயில் பாதை.
செல்லும் வழியெல்லாம் மனித உடல்கள் சிதறிக் கிடந்தன.
அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து செல்லும் பொழுது,
அப்பாவுக்கு உடல் நிலை குன்றி கீழே விழுந்தாலும், மகன் உடல் நலம் குன்றி கீழே விழுந்தாலும்,
ஜப்பானியர் துப்பாக்கிக் கட்டைகளால் வேகமாய் அடிப்பார்கள்.
பிள்ளைகளாக இருந்தாலும், அப்பாவாக இருந்தாலும்,
மற்றவறை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.
எனவே பயண வழியெங்கும் இறக்கும் தருவாயில் எண்ணற்றவர்கள்
கிடப்பார்கள்.
இதுபோதாதென்று வழியில் புலி அடித்துப் பலர் இறந்தனர்.
பாம்பு கடித்துப் பலர் இறந்தனர்.
நச்சுப் பூச்சுகள் கடித்துப் பலர் இறந்தனர்.
இரவில் தூங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வெறும்
நான்கு மணி நேரம் மட்டும்தான்.
இரவு 12.00 மணி முதல், அதிகாலை 4.00 மணி வரை.
உடல் வலுவானர்களை மரம் வெட்ட வைத்தனர்.
ஸ்லீப்பர் கட்டைகளை தயாரிக்க வைத்தனர்.
கல் உடைக்கத் தனி ஆட்கள்.
பாதையை சமப்படுத்த தனி ஆட்கள்.
பலவித வேலைகள்.
ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனிக் குழுக்கள்.
பகலில் கடுமையான வெயில்.
இரவில் பெரும் மழை.
தரையெல்லாம் சேறும் சகதியுமாய் இருக்கும்.
புலிகள் சிறுத்தைகள் குழந்தைகளைத் தூக்கிச் சென்றுவிடும்.
எனவே கிடைக்கும் நான்கு மணி நேரத்திலும் முழுமையாய்
தூங்க முடியாது.
மண்வெட்டி, சிறு, சிறு உளிகள். சின்னச் சின்ன
கத்திகள், மண் கூடைகள் மட்டுமே தரப்பட்டன.
உணவு இடைவேளை 15 நிமிடம் மட்டும்தான்.
வரிசையாய் உட்கார வைத்து சாப்பாடு போடுவார்கள்.
ஆற்று மீன், கொஞ்சம் கருவாடு, மிகக் கொஞ்சம்
உப்பும் இவற்றோடு சுண்ணாம்பும் கலந்த அரிசியை அவித்து, கஞ்சியைப் போல், தட்டுகளில்
ஊற்றிச் செல்வார்கள்.
சாப்பிட்டே ஆக வேண்டும்.
சாப்பிடா விட்டாலும், கீழே கொட்டினாலும், கொஞ்சம்கூட
இரக்கம் காட்டாமல், கையை அல்லது காலை வெட்டி
விடுவார்கள்.
எனவே அழுது கொண்டே சாப்பிடுவார்கள்.
பலர் அடி வாங்கியே செத்தார்கள்.
ஜப்பானிய மொழி புரியாமல், என்ன சொல்லுகிறான்
என்பது புரியாமல், அடிவாங்கிச் செத்தவர்கள் ஏராளம்.
தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கச் சொல்லிவிட்டு,
அடி மரத்தை வெட்டுவார்கள்.
தமிழர்கள் கீழே விழுந்து சிதைந்துபோய் சாவார்கள்.
ஜப்பானியர்களுக்கு இது ஓர் பொழுது போக்கு.
இவர்களிடம் இருந்து தப்பிக்கவும் முடியாது.
தப்பிச் செல்ல முயன்றவர்கள் பலர்.
தப்பிச் செல்ல முயன்று பிடிபட்டால், அவர்கள்
கழுத்தை, இரண்டு அல்லது மூன்று பேர் இணைந்து, அனைவர் முன்னிலையிலும வெட்டி, தலையைத்
தனியே எடுத்துத் தொங்க விடுவார்கள்.
பல நேரங்களில், கண்களைக் கட்டி, துப்பாக்கியால்
சுட்டும் கொன்றிருக்கிறார்கள்.
மழைக் காலங்களில் விடாது மழை பொழியும்.
மழையிலும் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும்.
நேசநாட்டுப் படைவீரர்கள் இவற்றை எல்லாம் பார்த்துப்
பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர்.
நம்மவர்கள் இச்சித்திரவதைகளை, நாட்டுப்புறப்
பாடல்களாகப் பாடி வைத்துள்ளனர்.
மழைககாலங்களில் வேலை செய்துவிட்டு, குளித்துவிட்டுப்
படுக்க, ஆற்றிற்குச் சென்றால், ஆற்றில் பிணங்கள் மிதந்து கொண்டிருக்கும்.
ஒவ்வொரு மழை நாளிலும், இரவில் படுத்து, காலையில்
எழும்போது, அவர்கள் பார்க்கும் முதல் வேளை, யார் யார் உயிரோடு இருக்கிறார்கள், யார்
யார் இறந்திருக்கிறார்கள் எனப் பார்ப்பதுதான்.
மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீரைத்தான் குடித்தாக
வேண்டும்.
விளைவு காலரா.
காலரா வந்தவர்களை, ஸ்லீப்பர் கட்டைகளில் குப்புறப்
படுக்க வைத்து கட்டி விடுவார்கள். அதையும் தமிழர்களே செய்ய வேண்டும்.
காலராவில் இறந்தவர்களை, இரயில் பாதைக்கு அருகிலேயே,
பெரிய பெரிய குழிகள் தோண்டி, அதில் போடுவார்கள்.
ஒரு வாரத்திற்குக் குழிகளை மூடமாட்டார்கள்.
குழிகள், முழுமையாய் மனித உடல்களால் நிரம்பிய
பிறகுதான் மூடுவார்கள்.
பலமுறை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை
எல்லாம், ஒன்றாய் குவித்து, பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.
இரயில் பாதை பணி நடந்தது 15 மாதங்கள்.
இரயில் பாதை எங்கும் ஏராளமான மரணக் குழிகள்.
ஒவ்வொரு ஸ்லீப்பர்க கட்டைகளுக்கும் இடையில்,
குறைந்தது இரண்டு தமிழனின் உடலாவது புதைக்கப்பட்டிருக்கும்.
மனைவி இறந்தாலும் கணவன் தொடர்ந்து வேலை பார்க்க
வேண்டும்.
மணவன் இறந்தாலும் மனைவி தொடர்ந்து வேலை பார்க்க
வேண்டும்.
மகன் இறந்தால் தகப்பனும், தகப்பன் இறந்தால் மகனும்
தொடர்ந்து வேலை பார்த்துதான் ஆக வேண்டும்.
இறுதிச் சடங்கு செய்யக்கூட அனுமதிக்கமாட்டார்கள்.
இரயில் பாதையில் அவ்வப்போது, எதிரி நாட்டு விமானங்கள்
குண்டு போடும்.
உடனே அதன் பாதிப்புகளையும் சரி செய்தாக வேண்டும்.
மலையைக் குடைந்து பாதை அமைத்தனர்.
Hell Fire Pass.
நரகத்
தீ கணவாய்
400 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலம்.
தமிழர்கள் அதிகம் செத்ததும் இங்குதான்.
மலைப் பாதைக்காக வெடி வைத்துத் தகர்க்க மருந்து
வைத்துக் கொண்டிருக்கும்போரே, ஜப்பானியர் இணைப்பைக் கொடுத்து வெடிக்கச் செய்து விடுவார்கள்.
தமிழர்கள் உடல் சிதறிச் சாவார்கள்.
இக்கணவாய்
வேலையை முடித்த பிறகுதான், பார்மாவில் இருந்து தொடங்கப் பட்டப் பணியும், தாய்லாந்தில்
இருந்து தொடங்கப் பட்டப் பணியும் ஒன்றை ஒன்று சந்தித்தன.
பர்மாவில் இருந்துத் தொடங்கி முடிக்கப்பட்ட இரயில்
பாதையின் நீளம் 115 கி.மீ.
தாய்லாந்தில் இருந்துத் தொடங்கி முடிக்கப்பட்ட
இரயில் பாதையின் நீளம் 300 கி.மீ.
இரண்டு பணிகளும் ஒரே நாளில் தொடங்கின.
இரண்டு பணிகளும் ஒரே நாளில் நிறைவுற்றன.
அவர்கள் 115, தமிழர்கள் 300.
இதிலிருந்தே தமிழர்கள் பணியாற்றிய வேகத்தையும்,
தமிழர்களின் திறமையையும் அறியலாம்.
ஆயிரக் கணக்கானப் பாலங்களை காட்டாறுகளின் மீது
எழுப்பி இருக்கிறார்கள்.
பாலங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தால், பாலங்களின்
நீளம் மட்டுமே 16 கி.மீ. ஆகும்.
தரைப் பகுதியில் மட்டும் 4 மில்லியன் கியூபிக்
டன் பாறைகளை வெட்டி எடுத்திருக்கிறார்கள்.
மலையில் இருந்து 3 மில்லியன் கியூபிக் டன் பாறைகளை
தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.
---
15 மாதங்கள் இரவு பகலாகத் தொடர்ந்த பணி,
1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் நிறைவுற்றது.
இந்தப் பதினைந்து மாதத்தில், போர் கைதிகள்
60,00 பேரில் 30,00 பேர் இறந்து போயிருந்தனர்.
தமிழர்களில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் மாண்டு
போயிருந்தனர்.
எவ்வளவு பேர் செத்தால் என்ன? எங்கள் வேலை முடிந்துவிட்டது
என எண்ணிய, ஜப்பான் அரசு இதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாடியது.
முதல் இரயில் வந்தது.
ஏராளமான தாய்லாந்து மற்றும் கொரியப் பெண்கள்
வந்து இறங்கினார்கள்.
அனைவரும் விலைமாதர்கள்.
பணியினைச் செவ்வனே செய்து முடித்த ஜப்பானிய மற்றும்
கொரிய வீரர்களை மகிழ்விக்க வந்தப் பெண்கள் இவர்கள்.
போர் கைதிகளுக்கு தாய்லாந்து பணம் கொடுக்கப்பட்டு
அவர்கள் முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
தமிழர்கள்?
தமிழர்களை மட்டும் விடவில்லை.
இரயில் பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்
அல்லவா?
---
ஆறு மாதங்கள் கடந்த நிலையில், நேதாஜி சுபாஷ்
சந்திர போஸ் சிங்கப்பூர் வருகிறார்.
முயற்சி எடுக்கிறார்.
தமிழர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு தமிழருக்கும் கட்டுக் கட்டாக, ஜப்பானியப்
பணம் கொடுக்கப் பட்டது.
இவ்வளவு காலம் பட்ட கடினமெல்லாம், மீதம் இருந்தவர்களுக்குப்
பறந்து போயிற்று.
இவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள்.
நமது எதிர்காலம் வளமானதாக இருக்கப்போகிறது என்று
எண்ணி மகிழ்ந்தார்கள்.
நடந்தே மலேசியா திரும்பினார்கள்.
மலேசியா திரும்பியபின், ஜப்பானியப் பணத்தைக்
கொண்டு தங்களின் வாழ்வினை மறுசீரமைத்துக் கொள்ள முயற்சி எடுத்தபோதுதான், அந்தப் பேரதிர்ச்சி
அவர்களுக்காகக் காத்திருந்தது.
தமிழர்களுக்குக் கட்டுக் கட்டாகக் கொடுக்கப்
பட்ட ஜப்பானியப் பணம் முழுவதும், ஏற்கனவே, ஜப்பானிய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட
பணம்.
தமிழர்கள் முழுதாய் உடைந்து போனார்கள்.
15 மாதங்களுக்கும் முன் பிரிந்த பல தமிழர்களது
குடும்பங்கள் சிதைந்து போயிருந்தன.
பலர் இறந்து போயிருந்தனர்.
பல குடும்பங்கள் எங்கு சென்றனர் என்பதையே கண்டு
பிடிக்க முடியவில்லை.
கணவர் இறந்து விட்டார் என்று வந்த செய்தியினை
நம்பி, மறுமணம் செய்து கொண்ட பெண்கள் பலர், மீண்டும் தங்கள் கணவர் உயிருடன் வந்ததைக்
கண்டு, செய்வதறியாது திகைத்து, குற்ற உணர்வில் தற்கொலை செய்து கொண்டனர்.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள், ஜப்பான் மீது
அமெரிக்கா வீசிய அணுகுண்டால், போர் முடிவிற்கு வந்தது.
அதற்குள், 415 கி.மீ. இரயில் பாதை, இரண்டரை இலட்சம் தமிழர்களின்
உயிரைக் குடித்திருந்தது.
---
ஏடகம்
ஞாயிறு முற்றம்
கடந்த
13.4.2025 ஞாயிறு மாலை நடைபெற்றப் பொழிவில்,
தமிழ்ப்
பல்கலைக் கழக,
அயல்நாட்டுத்
தமிழ்க் கல்வித் துறைத் தலைவைர்
வரலாற்றில் சயாம்-பர்மா
இரயில் பாதை
என்னும்
தலைப்பில் உரையாற்றிய பொழுது,
இந்த
மரண இரயில் பாதை அமைந்திருக்கும் பகுதியை நேரில் சென்று பார்த்ததோடு, ஆவணப் படமும்
எடுத்திருப்பதாகக் கூறிய பொழுது, இந்த மரண
இரயில் பாதையினை, ஈழப் பெருந்துயரைப் போன்ற ஒரு வரலாற்றுத் துயரம் எனப் பதிவு செய்தபொழுது,
அரங்க முழுவதும் ஓர் அமைதி, மயான அமைதி.
தஞ்சாவூர்,
பூண்டி புட்பம் கல்லூரி
பொருளாதாரத்
துறை, மேனாள் பேராசிரியர்
முனைவர் பெ.நாடிமுத்து அவர்கள்
தலைமையில்
நடைபெற்ற,
இப்பொழிவிற்கு வந்திருந்தோரை
செயிண்ட்
ஜோசப் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்
செல்வன் பா.சிதம்பரம் அவர்கள்
வரவேற்றார்.
பொழிவின்
நிறைவில்
பாரத
மிகுமின் நிலைய மேனாள் அலுவலர்
திரு செ.சமரசம் அவர்கள்
நன்றி
கூற நிகழ்வு பெருத்த மௌனத்தோடு நிறைவு பெற்றது.
இந்து
சமய அறநிலையய்த துறை, செயல் அலுவலர்
திருமதி மா.தனலெட்சுமி அவர்கள்
விழா
நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
ஏடக அரங்கு
தமிழர்களின்
மரண ஓலம் கேட்டு
மௌனித்துப்போனது.