17 ஏப்ரல் 2025

அம்பேத்கரின் தங்கை

  



     சென்னையில் எனக்கொரு தங்கை இருக்கிறார்.

     கேட்டவருக்கு, தன் காதுகளையே நம்பமுடியவில்லை.

     என்ன, என்ன, உங்களுக்குச் சென்னையில் ஒரு தங்கை இருக்கிறாரா?

உரையாடல் நடைபெற்ற இடம் மும்பை.

     செய்தியைக் கேட்டு வியந்து போனவர் செட்டிநாட்டரசர் ராஜா சர் முத்தையா செட்டியார்.

     ஒரு அலுவலர் தொடர்பாக, பம்பாய் சென்ற செட்டிநாட்டரசர், அந்த மாமனிதரைச் சந்தித்தபோது, இந்தச் செய்தியைக் கேட்டு மலைத்துப் போனார்.

     எப்படி, எப்படி எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது?

     அம் மாமனிதரோ, முகமெங்கம் மகிழ்ச்சி படர, பெருமை பொங்க மீண்டும் கூறினார்.

     ஆம். சென்னையில் எனக்கொரு தங்கை இருக்கிறார்.

     சொன்னவர் யார் தெரியுமா?

     பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்.

---

     ஆண்டு 1920.

     சென்னை.

     கௌரவ நீதிபதிக்கான நேர்முகத் தேர்வு.

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்ற மன நிலையில் தமிழகம் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அடுப்பங்கரையின் நான்கு சுவர்களுக்குள் பெண்களின் வாழ்வு முடங்கிப் போயிருந்த, அக்காலத்திலேயே, இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்.

     இவரது கணவரும் வழக்கறிஞர்.

     உங்கள் கணவர் வழக்கறிஞராக இருக்கும் பொழுது, நீங்கள் நீதிபதியானால், உங்கள் கணவர் வாதாடுகின்ற வழக்குகளில், அவருக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்ல மாட்டீர்களா?

     நேர்முகத் தேர்வில் கேள்வி வில்லாய் புறப்பட்டு வந்தது.

     வீட்டில் அவர் கணவர், நான் மனைவி.

     நீதிமன்றத்திற்கு வந்துவிட்டால் அவர் வழக்கறிஞர், நான் நீதிபதி.

     கணவன், மனைவிக்கு நீதிமன்றத்தில் வேலை இல்லை.

     நீதிபதியானார்.

·         ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் பதினாறு ஆண்டுகள் கௌரவ நீதிபதி.

·         கவுன்சிலராக ஆறு ஆண்டுகள்

·         சென்னை மாநகராட்சியின் துணை மேயர்

·         திரைப்படத் தணிக்கைகுழு உறுப்பினராக ஆறு ஆண்டுகள்

·         சென்னை மாகாண ஆலோசனைக்குப உறுப்பினராக ஒன்பது ஆண்டுகள்

·         தொழிலாளர் தீர்ப்பாய உறுப்பினர்

·         சென்னை நகர ரேசன் ஆலோசனைக் குழு உறுப்பினர்

·         சென்னைப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராகப் 13 ஆண்டுகள்

·         போருக்குப் பின் புணரமைப்புக் குழு உறுப்பினர்

·         தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குநர்

·         அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராக ஆறு ஆண்டுகள்

·         சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குநர்

·         விடுதலை அடைந்த கைதிகள் நலச் சங்க உறுப்பினர்

·         காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்

·         மகளிர் தொழில் கூட்டுறவு குழுத் தலைவராக ஆறு ஆண்டுகள்

·         சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்

·         அடையாறு மதுரை மீனாட்சி விடுதி நடத்துநர்

·         லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக் குழுத் தலைவர்

படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது அல்லவா.

இவர், தன் கணவர் சிவராஜ் அவர்களுடன், பம்பாயில் உள்ள அம்பேத்கர் அவர்கள் வீட்டிற்குச் சென்றபொழுது, அம்பத்கர் அவர்களே இவர்களுக்காகச் சமையல் செய்து, அன்போடு பரிமாறிய நிகழ்வினை என்றென்றும் மறக்காதவர் இவர்.

     1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் கட்டாய இந்தி நுழைந்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தவர் இவர்.

     தமிழ் நாட்டில் 100 க்கு 98 பேர், கண்ணிருந்தும் குருடராய், தாய் மொழியில் கையெழுத்துப் போடக் கூடத் தெரியாதவர்களாக இருக்கும் நிலையில், சென்னை முதல் மந்திரியார், இந்நிலையினை மாற்றுவதற்கு ஆவண செய்யாமல், அதற்கு மாற்றாக, இந்தியைக் கட்டாயமாக்கி இருப்பதைக் கண்டிக்கிறேன்.

    மேலும், தமிழ் நாட்டுப் பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெரும் கூட்டங்கள் கூட்டித் தெரிவித்தும், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல், பிடிவாதமாக இருப்பதையும், இதைப் பற்றி தங்களக்குள்ள மனக் கொதிப்பைக் காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்பவர்களைச் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவதையும் வன்மையாய் கண்டிக்கின்றேன் என முழங்கியவர்.

     பின்னாளில், புரட்சியாளர் அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோர் பேரவையில் இணைந்து, இந்திய அளவில் பணியாற்றியவர்.

    அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து, இந்து மதத்தை விட்டு வெளியேறி, தன் இறுதிக் காலம் வரை, புத்த மதத்தைப் பின்பற்றி வாழ்ந்தவர்.

இவர்தான்,



அன்னை மீனாம்பாள்.

நாம் மறந்துபோன எண்ணற்ற வீராங்கனைகளுள் ஒருவர்.

அன்னை மீனாம்பாள் அவர்களின்

நினைவினைப் போற்றுவோம்.