19 செப்டம்பர் 2025

சான்றாண்மை


     சான்றாண்மை.

     சான்றாண்மை என்பது எல்லாவிதமான பண்பு நலன்களும் நிறைந்த ஒரு சொல்.

     சான்றாண்மை என்பதும் சால்பு என்பதும் ஒன்றுதான்.

     சான்றாண்மை என்னும் இந்தத் தமிழ்ச் சொல்லுக்கு இணையான சொல், வேறு எந்த உலக மொழிகளிலும் இல்லை.

     சான்றாண்மைப் பண்புகளின் நிறைவுதான் பண்பாடு.

     ஒரு சமுதாயத்தில், காலப்போக்கில் படிந்து வருகின்ற சிறப்பானப் பழக்க வழக்கங்களின் தொகுப்புதான் பண்பாடு என்பார், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

     நிலையில்லாத இவ்வுலகத்தில், நிலைபெற வேண்டும் என்றால் சான்றாண்மைப் பண்புகள் தேவை.

     சான்றாண்மைப் பண்புகள் நிறைந்திருப்பவரைத் தேடி புகழ் தானே வரும்.

     இவ்வுலகம் அழியாமல் நிலைபெற்று நிற்பதற்குக் காரணம் கண்ணோட்டம்.

கண்ணோட்டம் என்னும்  கழிபெரும் காரிகை

உண்மையான் உண்டுஇவ் வுலகு

     கண்ணோட்டம் என்றால் இரக்கம்.

     அடுத்தவர்களுக்காக இரக்கப்படுவது என்பது ஒரு மனப் பக்குவம்.

     இப்படிப்பட்டவர்களால்தான் உலகம் இன்றும் இருக்கிறது.

அன்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்குள் மாய்வது மண்.

     இரக்கமுடையவர்கள் இருப்பதாலும், பண்பாடு உடையவர்கள் இருப்பதாலும்தான் இந்த உலகம் இருக்கிறது.

ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;

'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;

'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;

'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;

'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; 

'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;

'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;

'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;

'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;

என கலித்தொகையில் நல்லந்துவனார் நற்பண்புகளை பட்டியலிட்டுக் கூறுவார். அதேபோல,

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;

தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்

பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;

ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;

பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;

பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;

பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;

அற மனை காமின்; அல்லவை கடிமின்;

கள்ளும், களவும், காமமும், பொய்யும்,

வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்

இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா

உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-

மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்,

என இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில், வரந்தரும் காதையில் இருபத்தியோரு நற்பண்புகளைக் குறிப்பிடுவார்.

     இப்பண்புகளின் தொகுப்புதான் சான்றாண்மை.

     உலகின் மூத்த இனம் தமிழினம்.

     ஆதிகாலத்திலேயே, குணநலன்களை, நற்பண்புகளைத் தொகுத்து ஒரே பாட்டிற்குள் அமைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்

     அன்பு இருக்க வேண்டும்.

     நாண் இருக்க வேண்டும்.

     ஒப்புரவு இருக்க வேண்டும்.

     கண்ணோட்டம் இருக்க வேண்டும்.

     வாய்மை இருக்க வேண்டும்.

    இந்த ஐந்தையும், ஐந்து அதிகாரங்களில் கூறுவார் வள்ளுவர்.

---

     சால்பு.

     சால்பு என்றால் என்ன?

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.

     யாகம் செய்ய வேண்டியதில்லை.

     நோண்பு இருக்க வேண்டியதில்லை.

     எந்த உயிரையும் கொல்லாமல் இருந்தாலே போதும்.

வைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

     இல்லறத்தொடு கூடி வாழும் இயல்பினால் வாழ்பவன், வானில் உறைவும் தெய்வத்திற்கு இணையாகப் போற்றப்படுவான்.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இல்லாத சொலல்.

     தீமை அல்லாதச் சொற்களைப் பேசுவதே வாய்மை.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்

தாங்காது மண்ணோ பொறை.

     பல நல்ல குணங்களால் நிரம்பியர், தன் தன்மையில் இருந்து விலகுவாராயின் பூமி அழியும்.

சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன், சார்ந்தாய்க்குச்

சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின்,-சார்ந்தோய்! கேள்;

சாந்தகத் துண்டென்று, செப்புத் திறந்தொருவன்

பாம்பகத்துக் கண்டன்னது உடைத்து.

என்று உரைக்கிறது நாலடியார். அதாவது, சிலரை, இவர் எல்லாவிதமான நற்குணங்களும் நிரம்பிய சான்றோர் என்று எண்ணி நேசிப்போம். ஆனால் அவர்களிடத்தில் அத்தகைய பண்பு இல்லையெனில், ஒருவன் உள்ளே வாசனைச் சாந்து இருக்கிறது என்று செப்பைத் திறந்து, அதனுள்ளே பாம்பைக் கண்டது போன்ற நிலையை அடைவான்,

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”

     தனக்கென வாழாது, பிறர்க்கென வாழும் மனிதர்களுக்காகத்தான், இந்த உலகம் இருக்கிறது. இவர்கள்தான் சான்றாண்மை மிக்கவர்கள்.

     கோவலன், பாண்டியனால் கொலை செய்யப்பெற்ற பிறகு, கண்ணகி

ஏ, காய்கதிர் செல்வனே

சொல், என் கணவன் கள்வனா?

என சூரியனைக் கேட்கிறார். தன் கணவன் கள்வன் அல்ல என்று அறிந்தபின், எழுந்து நடந்தாள், கோபம் கொப்பளிக்கிறது.

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’

      இதெல்லாம் ஒரு ஊரா? கற்புள்ள பெண்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? சான்றோர்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா? எனக் கேட்கிறாள்.

     சான்றோர்கள் இருக்க வேண்டும்.

---

     அன்புதான் உலகத்திலேயே சிறந்தது.

     அன்பு, அன்பினால் ஒன்று.

     ஒன்று என்றால் ஒன்றுசேர் என்று பொருள்.

     அன்பினால் ஒன்று சேர்.

யாதும்ஊரே, யாவரும கேளிர்

என்பார் கனியன் பூங்குன்றனார்.

     இச்சொற்றொடர், வினாவும் விடையுமாக அமைந்திருக்கிறது என்பார் தமிழ்க் கடல் இளங்குமரனார்.

     யாது உன் ஊர்? யாதும் ஊரே.

     யாவர் உள் கேளிர்? யாவரும் கேளிர்.

     உலக மக்களை எல்லாம், ஒருதாய் மக்களாக நினைத்தவன் தமிழன்.

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

     ஏ தமிழே, நீ இருக்கின்றார் என்பதற்காக அல்லவா, நான் இருக்கின்றேன். தேவலோகத்திலே இருக்கக்கூடிய தேவாமிர்தம் கொடுத்தாலும், அங்கு செல்ல மாட்டேன், உன்னோடுதான் இருப்பேன்.

     என் தந்தை இறந்தபோது கூட நான் அழவில்லை. இருந்தமிழே உன்னால் இருந்தேன் என்று, தன் பெயரைக்கூடக் குறிப்பிடாமல் எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறானே ஒரு புலவன் என்பதை எண்ணி, எண்ணி இரண்டு நாட்கள் அழுதேன் என்பார் உ.வே.சா.

---

     நாண்.

     நாண் என்றால் நாணுடமை.

     நாணுடமை என்றால், தன் செயலால், பழி வந்து சேருமே, பாவம் வந்து சேருமே என அஞ்சுவது.

அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்

பிணிஅன்றோ பீடு நடை.

     ஒருவனுக்கு அழகு எதுவென்றால், நாண் உடைமைதான். பழி பாவத்திற்கு அஞ்சுவதுதான்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு.

     எவன் ஒருவன் பிறரால்  பழிவரக்கூடாது என்று நினைக்கிறானோ, பழி வரும்படியான காரியத்தையோ அல்லது ஒரு சொல்லையோ சொல்லிவிடக் கூடாது என்று நினைக்கிறானோ, அவனே சான்றாண்மை உடையவன்.

     கண்டராதித்தன் மனைவியாகிய, சோழர்குல திலகம் செம்பியன் மாதேவி அவர்கள், தன் மகன் மதுராந்தகத் தேவனாகிய உத்தம சோழனிடம், ஊர் பழிககும், உலகம் பழிக்கும், முறையாக அருண்மொழிதான் அரசராக வரவேண்டும், உனக்கு வேண்டாம், விட்டுக்கொடு என்று சொன்னார் அல்லவா? அதுதான் சான்றாண்மை.

     திருப்பத்தூரில் சின்ன மருதுவும், பெரிய மருதுவும் தூக்கில் இடப்படுகிறார்கள்.

     சின்ன மருதுவின் மகன் துரைசாமி நாடு கடத்தப்படுகிறார்.

     இந்தோநேசியத் தீவிற்கு நாடு கடத்தப்படுகிறார்.

     நாடு கடத்தப்பட்டு பதினான்கு வருடங்கள் கடந்த நிலையில், ஓர் ஆங்கில அதிகாரி, நாடு கடத்தப்பட்டவர்களின் நிலையை அறிய, இந்தோநேசியத் தீவிற்குச் செல்கிறார்.

     நாடுகடத்தப்பட்டு இந்தோநேசியாவில் இருப்பவர்களை எல்லாம், வரிசையாய் அவர் முன் நிறுத்துகின்றனர்.

     ஒருவரை மட்டும் காணவில்லை.

     துரைசாமி.

     தேடுகிறார்கள்.

     மறுநாள் ஒரு வாய்க்காலில், உடல் மெலிந்துபோன துரைசாமியின் உயிரற்ற உடலைக் கண்டு பிடிக்கிறார்கள்.

     நாடாள வேண்டிய ஒரு அரச இளங்குமரனை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டோமே என்று எண்ணி, எண்ணி, மனம் குமுறிய அந்த ஆங்கில அதிகாரி, தற்கொலை செய்து கொள்கிறார்.

     பிறர் பழியும், தம் பழியும்.

     இதுதான் சான்றாண்மை.

---

     ஒப்புரவறிதல்.

     ஒப்புரவு என்பது பிறரைத் தமக்குச் சமமாக மதித்து அவர்களுக்கு இயன்ற வகையில் உதவுதல், உலகத்தோடு ஒத்துப் போதல், பகிர்ந்து வாழ்தல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல்.

     இன்றைய பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம், இந்த ஒப்புரவு இல்லாததுதான்.

     ஒப்புரவு ஒழுகு என்றார் ஔவையார்.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

     ஒப்புரறிவு இல்லாதவன் செத்தாருள் வைக்கப்படுவான்.

ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து.

     ஒருவன் துன்பப்படுகிறான், பசியால் வாடுகிறான் என்பதற்காக, ஒடிப்போய் உதவினால், அதனால் எனக்கு வறுமை வரும் என்றாலும் பரவாயில்லை.

     ஒருமுறை தந்தை  பெரியார் வீட்டிற்கு விருந்தினராகச் செல்கிறார் திரு வி.க.,

     மறுநாள் காலை, ஆற்றில் குளித்துக் கரையேறும் போது, கையில் ஒரு பொட்டலத்துடன் நிற்கிறார் பெரியார்.

     பொட்டலத்தில் திருநீறு.

     வியந்து போகிறார் திரு வி.க.,

     இதுதான் ஒப்புரவறிதல்.

     திரு வி.க., மறைந்தபோது அவரது இறுதிச் சடங்கிற்கான செலவு முழுவதையும் ஏற்றவர் பெரியார்.

     அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் திரு வி.க.,அவர்களின் இறுதி நாட்களில் உடன் இருந்தவர்.

     திரு வி.க., அவர்கள் சொல்லச் சொல்ல எழுதியவர்.

     இறுதி ஊர்வலத்தின்போது, பெரியாரிடம் அச.ஞா., கேட்கிறார்.

     நான் கொள்ளி வைக்கிறேன்.

     வைத்தார்.

     இதுதான் சான்றாண்மை.

     வேலு நாச்சியார், திண்டுக்கல் கோட்டையில் சில ஆண்டுகள் மலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோது, வேலு நாச்சியாருக்காக, வேலு நாச்சியார் அவர்கள் வழிபட வேண்டும் என்பதற்காக, ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலைக் கட்டிக் கொடுத்தவர் ஹைதர் அலி.

     இதுதான் ஒப்புரவறிதல்.

---

     கண்ணோட்டம்.

பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

     எல்லோராலும் விரும்பப்படும் நாகரிகமானப் பண்பை விரும்புபவர்கள், தம் நண்பர்கள் நஞ்சைக் கையில் ஊற்றிக் கொடுத்தாலும், அதைக் கண்டு மருண்டு ஓடாமல், அந்த நஞ்சை உண்டு, மன அமைதியுடன் இருப்பார்கள்.

என்ஐமுன நில்லன்மின தெவ்விர் பலர்என்ஐ

முன்நின்று கல்நின் றவர்.

     பகைவர்களே, எங்கள் தலைவர் முன் நில்லாதீர்.

     நின்றவர் கல்லாகிவிட்டனர்.

     கல்லாகிவிட்டனர் என்றால், முன் நின்ற பகைவர்கள் இறந்து, கல் நிறுத்தி கருமாதியும் செய்துவிட்டோம் என்று பொருள்.

     இதெல்லாம் ஒரு கண்ணோட்டம்.

     பண்பாடு.

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

     யான் செய்தது எத்தகைய இழிவான செயல் என்று பின்னர் நினைத்து, தானே வருந்தும்படியானச் செயல்களை ஒருபோதும் செய்யாதே.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு

பிறருக்கு கேடு விளைவிக்கும் செயலை மறந்துகூட எண்ணாதே என்கிறார் வள்ளுவர்.

---

     மரம் சொல்கிறது.

     என்னை வெட்டாதே, நான் உனக்கு மழையைப் பெற்றுத் தருவேன்.

     கீழிருக்கும் பூமி சொன்னது.

     என்னை வெட்டு, நான் உனக்குத் தண்ணீர் தருகிறேன்.

     இதுபோல் இடத்திற்கு ஏற்ப, காலத்திற்கு ஏற்ப, இரக்கம் உடையவர்களாகவும், ஒப்புரவு உடையவர்களாகவும், அன்பு உடையவர்களாகவும் வாழ்ந்தால் இந்த உலகம் உய்யும்.

---

ஏடகம்.

ஞாயிறு முற்றம்.

கடந்த 14.9.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை, ஏடக அரங்கில்,

தஞ்சாவூர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர்


திரு சசிகுமார் அவர்கள்

தலைமையில்,

தஞ்சாவூர், தமிழறிஞர்


புலவர் மா.கந்தசாமி அவர்கள்

சான்றாண்மை

என்னும் தலைப்பில் ஓர் உணர்வுமிகு உரையாற்றி

ஏடக அரங்கையே நெகிழ வைத்தார்.

முனனதாக,

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி


இளஞ்சுடர் நா.சுபா அவர்கள்

வரவேற்புரையாற்றினார்.

பொழிவின் நிறைவில்,

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி


செல்வி பெ.ஜெனி சில்வெஸ்டர் அவர்கள்

நன்றியுரையாற்றினார்.

தஞ்சை, பசுபதிகோயில், புனித கபரியேல் தொடக்கப் பள்ளி

இடைநிலை ஆசிரியை


திருமதி ஜெ.பிலோமினாள் அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

மேலும்,

இப்பொழிவின்போது,

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால்

மனதில் குரல் நிகழ்ச்சியின் மூலம்

பாராட்டப்பெற்ற

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களுக்கு,



மக்கள் சிந்தனைப் பேரவையின்

மாநில துணைத் தலைவரும்,

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்களின்

விருப்பத்தின் பெயரில்

தென்னங்குடி க.சண்முகசுந்தரம் அவர்களும்

சிங்கப்பூர் மேனாள் தமிழ் விரைவுரையாளர்

அரசு இலக்கிய முற்றத்தின் நிறுவனர், தலைவர்

கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களும்

நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.

சான்றாண்மையை

நற்சான்றுகளோடும்

உணர்ச்சிமிகு உரையோடும்

ஏடக அரங்கில் உலாவவிட்டு

ஏடக அன்பர்களை

நெகிழ வைத்த.

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

பாராட்டுவோம், வாழ்த்துவோம்.