06 செப்டம்பர் 2025

கண் மறை மனிதர்கள்

     கடந்த 31.8.2025 ஞாயிற்றுக் கிழமை காலை, என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில் நண்பர் வெற்றிவேல் முருகன்.

     ஜெயக்குமார் சார், நான் குடும்பத்துடன், இரும்புதலை வந்திருக்கிறேன் என்றார்.

     இன்று மாலை தங்களைச் சந்திக்க வருகிறேன் என்றேன் நான்.

     மாலை நண்பர் முனைவர் ப.இராஜதுரை அவர்களுடன், இருசக்கர வாகனத்தில் பயணித்து, இரும்புதலை சென்றேன்.

     இரும்புதலை வளர்ச்சிக்காக  இருபத்து நான்கு மணிநேரமும் அயராது பாடுபட்டுவரும் நண்பர் துரை.நடராசனார் அவர்களின் இல்லம் சென்று, துரை.நடராசனாரைச் சந்தித்தோம்.

    


நண்பர் துரை.நடராசனாரின் மைத்துனர் திரு பழனியப்பன் அவர்கள், பிறவியிலேயே கண் பார்வையினை இழந்தவர். இருப்பினும் இக்குறையினைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது, தானே முன்னின்று விவசாயப் பணிகளைச் செய்து வருபவர். இதற்காகவே உயிர் கொடுக்கும் உழவன் என்னும் விருதினையும் பெற்றவர்.


      இவருக்கு ஒரு மகள், ஒரு மகன்.

     மூத்தவர் நித்யா.

     இளையவர் கார்த்திக்.

     இவர்கள் இருவருமே, தங்கள் தந்தையைப் போலவே, பிறவி முதலே கண் பார்வையினை இழந்தவர்கள்.

     பார்வை இல்லாவிட்டால் என்ன? படிப்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து, நித்யா அவர்கள் எம்.ஏ., பி.எட்., பட்டங்களைப் பெற்றவர்.

     கார்த்திக்கோ முனைவர் பட்டமே பெற்றவர்.

     இந்த நித்யாவின் வாழ்வில், இணையராக இணைந்தவர்தான், நண்பர் வெற்றிவேல் முருகன் அவர்கள்.

    இவரும் பிறவியிலேயே கண் பார்வையினை இழந்தவர்.

     இருப்பினும், தன்னந்தனியாக, அமெரிக்கா வரை பறந்து சென்று, பல ஆண்டுகள், ஒரு தனி வீட்டில், தன்னந்தனியாகத் தங்கி, தனக்கான உணவினைத் தானே சமைத்துக் கொண்டு, ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

     தற்பொழுது, பெங்களூருவில் உள்ள, SISCO எனும் நிறுவனத்தில் HR Recruitment ஆகப் பணி புரிந்து வருகிறார்.

     நித்யா அவர்கள், தருமபுரியில் உள்ள பார்வையற்றோருக்கானப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

    


      இவர்களுக்கு இரு குழந்தைகள்.

     முத்துக் குமரன்.

     கவினையா.

     இருவரும் இவ்வுலகினைக் கண்ணாரக் கண்டு, தங்கள் பெற்றோர்களுக்கும் கண்களாக விளங்கி வருகின்றனர்.

   


       நித்யாவின் சகோதரர் கார்த்திக்.

     இவரது வாழ்ககை இணையர் விஜயா.

     இவரும் கண் பார்வையினை இழந்தவர்தான்.

     கார்த்திக் அவர்கள், தாய்க் கரங்கள் அறக்கட்டளை என்னும் அமைப்பின் மூலம், தன் போன்ற பார்வையற்ற மாணவிகளுக்காக, ஒரு இலவச உண்டு, உறைவிட விடுதியை நடத்தி வருகிறார்.

     இவரது இணைவர் திருமதி விஜயா அவர்கள், கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

     நாள்தோறும் தனியராகவே, இரும்புதலையில் இருந்து பேருந்தில் பயணித்துக் கும்பகோணம் சென்று, அங்கிருந்து கல்லூரிக்குச் சென்றுப் பணியாற்றிவிட்டு, அரசுப் பேருந்திலேயே தன் இல்லம் திரும்புகிறார்.

      வியப்பாக இருக்கிறதல்லவா?

     மேலும் ஒரு வியப்பிற்குரிய செய்தியும் இருக்கிறது.

     கார்த்திக், விஜயா இருவரும் ஒருவரை ஒருவர் முற்றாக உணர்ந்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

     இவர்களுக்கும் இரு பிள்ளைகள்.

    


      நிரஞ்சன்.

     சாதனா.

     இவர்கள் இருவரும் ஒளிபடைத்த கண்களைப் பெற்றவர்கள்.

---

     நண்பர் துரை.நடராசன் அவர்களோடும், நண்பர் முனைவர் ப.இராஜதுரை அவர்களோடும், நண்பர் துரை.நடராசனார் அவர்களின் மைத்துனர் திரு பழனியப்பன் அவர்களின் இல்லம் சென்றேன்.

     நண்பர் வெற்றிவேல் முருகன் அவர்கள், கடந்தமுறை பார்த்ததைவிட, சற்று இளைத்திருந்தார்.

     காரணம் கேட்டேன்.

     அக்குபஞ்சர்.

     வெற்றிவேல் முருகன் அவர்கள், ஒரு ஆறுமாத கால, அக்குபஞ்சர் வகுப்பிற்குச் சென்றிருக்கிறார்.

     முதல் நாள், முதல் வகுப்பிற்குச் சென்ற பொழுது, அன்று காலை சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பிற்கு மாத்திரைகளை விழுங்கியவர்தான், அதன் பிறகு எதற்கும் எந்த மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவே இல்லை.

     மருந்து, மாத்திரைகளைத் துறந்த, தேவைப்படாத மனிதராக மாறியிருக்கிறார்.

     அக்குபஞ்சர் அதிசயம் நிகழ்த்தி இருக்கிறது.

     இன்று, இவர் தன் ஓய்வு நேரத்திலும், விடுமுறை நாட்களிலும், அக்குபஞ்சர் மருத்துவராகவும் செயல்பட்டு வருகிறார்.

     அக்குபஞ்சர் என்பது மருந்து, மாத்திரைகள் இல்லாத ஒரு புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும், நம் ஆயுளையும் நீட்டிக்கும் என்கிறார்.

     உணவே மருந்து.

     என்ன சாப்பிடுகிறோம், எப்பொழுது சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம் என்கிறார்.

     உடலின் கழிவு நீக்கம் முழுமையாக நடைபெற வேண்டும், அதற்குத் தகுந்தார்போல் உணவு பழக்கத்தினை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

     பசித்தபின்தான் புசிக்க வேண்டும்.

     அக்குபஞ்சர் என்பது ஒரு வாழ்வியல் முறை.

     நமது வாழ்க்கை முறையைச் சிறிது மாற்றினால், பயணத்தின் பாதையை அக்குபஞ்சர் நோக்கித் திருப்பினால், நலமாக வாழலாம் என்கிறார்.

     அடுத்து எங்களின் பேச்சு, கார்த்திக், விஜயா தம்பதியினரின் காதல் பற்றித் திரும்பியது.

     பொதுவாகக் காதல் என்பது, கண்பார்வையினால்தான், தோன்றுகிறது. ஒருவரை ஒருவர் பார்ப்பதுதான் காதலின் தொடக்கம்.

     ஆனால், பார்வை அற்றவர்களைப் பொறுத்தவரை, காதால் கேட்பதும், கைகளால் தொட்டுப் பார்ப்பதன் மூலமும்தான் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்கிறார்கள். பேச்சு மற்றும் இந்த தொடு உணர்வின் மூலம்தான் காதல் வயப்படுகிறார்கள் என்றார்.

     இவர்களால், கண்களால் பார்க்க இயலாது ஆகையால், எந்தவொரு பொருளாக இருந்தாலும், தொட்டுப் பார்த்துதான் அறிகிறார்கள்.

     காதலுக்கும் இது பொருந்தும்.

     கண்பார்வையினை இழந்தவர்கள், ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவதைப் பலர் தவறாகப் பார்க்கிறார்கள், தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

     கண்பார்வை அற்றவர்கள் திருமணம் செய்து வாழ்க்கை நடத்துவதையே பலர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.

     எப்படி குழந்தைகளை வளர்ப்பார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

     உண்மையிலேயே, இவர்களது குழந்தை வளர்ப்பு, நம்மைவிட மேலானது, மேன்மையானது.

     இவர்களது பிள்ளைகள், தங்கள் பெற்றோர்களைப் புரிந்து கொண்டவர்களாக, தங்கள் பெற்றோர்களின் சூழ்நிலையை உணர்ந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

     வெற்றிவேல் முருகன் பெங்களூருவில் பணியாற்றுகிறார்.

     வீடு தர்மபுரியில்.

     காரணம் என்ன தெரியுமா?

     பெங்களூர் பள்ளிகளில் தமிழ் படிக்க வழியில்லை.

     கன்னடமும், ஆங்கிலமும்தான்.

     எனவே, தங்கள் பிள்ளைகளை, தமிழைப் படித்தே ஆகவேண்டும் என்பதற்காகத் தர்மபுரியில் வீடு.

     தினமும், காலையும், மாலையும் தர்மபுரியில் இருந்து, பெங்களூருவிற்குத் தொடர் வண்டியில் பயணிக்கிறார்.

     இவரது மகன், முத்துக் குமரன், தன் தந்தையை தினமும் தொடர் வண்டி நிலையத்திற்குச் சென்று வழி அனுப்புகிறார், மாலையில் மீண்டும் சென்று அழைத்து வருகிறார்.

     கார்த்திக்கின் மகன் நிரஞ்சனும் இப்படித்தான்.

     கார்த்திக் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் தஞ்சைக் கிளையினைக் கவனித்து வருகிறார் என்பதை முதலிலேயே பார்த்தோம்.

     இதற்காக, தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரிக்கு எதிரில், கண்ணன் நகர் மூன்றாவது தெருவில், ஒரு வீட்டின், முதல் தளத்தை வாடகைக்கு எடுத்து, கண்பார்வையற்ற மாணவியருக்கான விடுதியினை நடத்தி வருகிறார்.

     தஞ்சைக் கல்லூரிகளில் படிக்கும் பதினைந்து கண்பார்வையற்ற மாணவிகள் இங்குத் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

     இவர்களுக்கான உணவும், விடுதி வசதியும் இலவசம்.

     தொண்டுள்ளம் உடைய அன்பர்களின் நிதி உதவியால், கார்த்திக் இவ்வமைப்பினை நடத்தி வருகிறார்.

     இதற்காக நாள்தோறும், தஞ்சைக்கு சென்று வரும் தன் தந்தையினையும் அவர்களையும், கும்பகோணம் கல்லூரிக்குச் சென்று திரும்பும் தன் தாயினையும், இவர்களது அன்பு மகன் நிரஞ்சன், இரும்புதலை பேருந்து நிறுத்திமிடத்திற்குச் சென்று காத்திருந்து இல்லம் அழைத்து வருகிறார்.

---

     வெற்றிவேல் முருகன் பெங்களூரில் பணியாற்றுகிறார்.

     இவரது வாழ்க்கை இணையர் நித்யா, தர்மபுரி பார்வையற்றோருக்கானப் பள்ளியில் ஆசிரியையாயகப் பணியாற்றுகிறார்.

     கார்த்திக் தாய்க் கரங்கள் பொறுப்பாளர்.

     இவரது வாழ்க்கை இணையர் விஜயா கல்லூரி, வருகை தரு விரிவுரையாளர்.

     இவர்களது இரும்புதலை இல்லம், எப்பொழுதும் கலகலப்பாக இருக்கிறது.

     மன நிறைவான, மன மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

     வாழ்த்துவோம், பாராட்டுவோம்.