29 செப்டம்பர் 2025

வள்ளுவரும் பாரதியாரும்

 

     இவர் காவிரிக் கரையில், திருவையாற்றில் பிறந்தவர், வளர்ந்தவர்.

     வேளாண்துறை அலுவலர்.

     சென்னையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

     சென்னை, சைதாப்பேட்டை, பாரதி கலைக் கழகக் கூட்டத்திற்கு ஒரு முறை செல்கிறார்.

     நாகநந்தி அவர்களின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு.

     அன்றுதான் தொடங்குகிறது.

     இனி வாரந்தோறும் பொழிவு தொடரும்.

     முதல் பொழிவிலேயே இவர் மயங்கிப் போனார்.

     நாகநந்தி என்னும் புனைப்பெயர் கொண்ட பேராசிரியர் வேணுகோபாலன் அவர்களின் பொழிவில், தன்னையே மறந்துபோனார்.

     பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கி மு.வ., தெ.பொ.மீனாட்சி சுந்தரம், தமிழண்ணல், குன்றக்குடி அடிகளார் போன்ற பல உரையாசிரியர்களின் விளக்கங்களையும் மேற்கோள் காட்டி, நவீன இலக்கியங்களையும் பொருத்தமான இடங்களில் ஒப்புமைகாட்டி, நாகநந்தி நிகழ்த்தியப் பொழிவு இவரைக் கட்டிப்போட்டுவிட்டது.

     அன்றுமுதல் ஒவ்வொருவாரமும், திருக்குறள் தொடர் சொற்பொழிவு கேட்கத் தவறாமல் செல்லத் தொடங்கினார்.

     திருக்குறள் மீது பாரதிக்கு இருந்த ஈடுபாட்டையும், பெரும் புலமையையும் நாகநந்தி பேசப்பேச, இவர் வியந்து போனார்.

     அன்றுமுதல் இவர் எண்ணமும் சிந்தனையும் பாரதியைச் சுற்றத் தொடங்குகிறது.

     பாரதி தன்பாடலில், திருக்குறளின் கருத்துக்களை எங்கெங்கெல்லாம் சாறுபிழிந்து தந்திருக்கிறார் என்பதை ஆராயத் தொடங்குகிறார்.

     பாரதி கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று, கவிதைக்கு ஓர் இலக்கணம் கூறுவார்.

தெளிவுறவே அறிந்திடுதல்

தெளிவு தர மொழிந்திடுதல்

சிந்தப்பார்க்கே களிவளர

உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல்

கண்ணீர்த் துளி வர உள் உருக்குதல்

     பாரதியின் கவிதை இலக்கணத்தை அடியொற்றி, பாரதி திருககுறளில் எந்த அளவிற்குத் தோய்ந்து கிடந்திருக்கிறார் என்பதை தெளிவுறவே அறிந்து, அதனால் தன் நூலில் அனைவருக்கும் புரியும்வண்ணம் தெளிவுதர மொழிந்திருக்கிறார் இவர்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

கல்வி அறிவு இல்லாதவர்களை விலங்கு என்பார் வள்ளுவர்.

மானமற்று விலங்குகள் போல

மண்ணில் வாழ்வதை வாழ்க்கை எனலாமோ

என வள்ளுவனின் எண்ணத்தினைத் பாரதி தன் பாடலிலும் கையாண்டிருப்பதைக் சுட்டிக் காட்டுகிறார்.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்

தகைமைக் கண்தங்கிற்(று) உலகு

என பகைவனை நண்பனாக்கி வாழ வள்ளுவர் வலியுறுத்துவதைப் போல,

பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே

பகைவனுக்கு அருள்வாய்

என வள்ளுவரின் வழி நின்று பாரதியும் வற்புறுத்துகிறார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

என துறவுக்கு இலக்கணம் வகுப்பார் வள்ளுவர். இதனையே இன்னும் ஒரு படி மேலே சென்று பாரதியும், பரமசிவ வெள்ளம் பாடலில் முழங்குகிறார்.

காவித்துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா

பாவித்தால் போதும் பரமநிலை எய்துதற்கே.

     இதுமட்டுமல்ல, இப்படிப் பலப்பல கருத்துக்களை வள்ளுவன் வழி நின்று பாரதி பாடியதை, பக்கத்துக்குப் பக்கம் பறை சாற்றிக் கொண்டே செல்கிறார்.

இவர்தான்,

தமிழ்நாட்டு அரசின்

தமிழ்ச் செம்மல்

விருது பெற்ற விருதாளர்


திருமிகு ரா.சிவக்குமார் அவர்கள்.

இவரது நூல்


வள்ளுவரும் பாரதியும்.