05 அக்டோபர் 2025

எலி வலை

 


     நாங்க இங்க வாழுற வாழ்க்கையே வேற, பொண்ணுங்க மனசு, எலி வலை மாதிரி… நெனச்சத செஞ்சிட முடியாது. அடக்கி அடக்கி வச்சுக்கனும். குடும்பம்கிற வலை இருக்கே, அது பல நேரம் எங்கள சுருக்கி இறுக்கிடும்.

படிக்கப் படிக்க மனம் கனத்துப் போகிறது. அறிவியல் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், எவ்வளவுதான் பட்டங்களை வாங்கிக் குவித்திருந்தாலும், இன்னும் பல குடும்பங்களில் பெண்களின் வாழ்வு பொறிக்குள் அகப்பட்ட எலியாகத்தான் இருந்து வருகிறது.

     சொல்லி வைத்தாற் போல், அண்ட்ராயர் பாகெட்லேருந்து பூச்சிக் கொல்லி மருந்த வாங்கி வச்சிருக்கான் பாவி, என்ன சும்மா மெரட்டுரியான்னு கிட்டே எடுத்து நீட்டுனான். நீட்டுன அவன் கையிலேருந்து வாங்கி, அடுத்த நொடி முழு பாட்டிலயும் அப்படியே வாயில கவுத்தவதான்… ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயி சேக்குறத்துக்குள்ளாரவே போயி சேந்துட்டா என் அக்கா.

     தவமாய் தவமிருந்து பெற்று, பாசத்தையெல்லாம் கொட்டி, சீராட்டித் தாலாட்டி வளர்த்த பெண்ணை, காதல் என்றதும், மிகக்கொடூரமான எதிரிபோலப் பாவித்து, எப்படி மூர்க்கமாய் நடந்து கொள்ள இவர்களுக்கு மனம் வருகிறது என்பதுதான் புரியவில்லை.

     கட்டிலில் மீனா சுயநினைவை இழந்தவளாகக் காணப்பட்டாள். வாயில் மூச்சுக் குழாய் சொருகப்பட்டு, செய்கை சுவாசக் கருவியோடு இணைக்கப்பட்டிருந்தது. இரண்டு கைகளிலும், ஒரு காலிலும் சிரை வழி மருந்துகள் ஏறிக் கொண்டிருந்தன. விரல் நுனியில் இணைக்கப்பட்டிருந்த மானிட்டர், அவளது உடலி நிலை குறியீடுகளை, நொடிக்கு நொடி பிரகடனப்படுத்தியபடி இருந்தது.

     மருத்துவமனை நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றுகின்றன. மீனா பிழைத்து எழ வேண்டுமே என்ற ஒரு படபடப்பு ஏற்படுகிறது.

     ஆமா, வீட்டுல ஒரே எலித்தொல்லையா இருக்குன்னு, மீனாக்கா அம்மாதான் வாங்கியாரச் சொன்னாங்க.

     படிக்கும்போரே நெஞ்சம் பதறுகிறது. இப்படியும் இருப்பார்களா? பெண்களைப் பெண்களே இப்படி நடத்துவார்களா? பெண்களின் மனதைப் பெண்களே அறிவார்கள் என்று சொல்வார்களே? அது எல்லாம் பொய்தானா?

தினசரி நாளிதழ்களிலும், தொலை காட்சிகளிலும் வரும் செய்திகள், காட்சிகள், இன்றும், ஆவணக் கொலைகள் நடப்பதை உரத்து முழங்கிக் கொண்டுதானே இருக்கின்றன.

---

     கதைதான்.

     அதிலும் இது ஒரு சிறுகதைதான்.

     ஐந்தே ஐந்து பக்கங்கள்தான்.

     ஆனாலும், நம் நெஞ்சை உலுக்குகிறது.

     கதையாகவே தோன்றவில்லை.

     மீனா பிழைத்தெழ வேண்டுமே என்று நம் உள்ளம் துடிக்கிறது.

     இன்றைய தலைமுறையினர் நன்கு படித்திருக்கிறார்கள், பட்டங்களை வாங்கி வாழ்வில் உயர்ந்திருக்கிறார்கள். பொருளாதார நிலையில் வளர்ந்திருக்கிறார்கள். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியைத் தங்களின் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

    ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும், மனதில் சாதிய உணர்வுகளை அல்லவா, பத்திரமாய் ஒரு  எரிமலையைப் போல், வெடித்துச் சிதறும் வகையில், சேமித்து வைத்திருக்கிறார்கள்.

     இருப்பினும் எனக்குள் ஒரு வியப்பு.

     கதையைப் பற்ற அல்ல.

     கதையை எழுதியவரைப் பற்றி.

     எனக்கு, இவர் கதை எழுதுவார் என்று தெரியாது.

     காரணம் இவர் ஒரு மருத்துவர்.

     இக்கால மருத்துவர்களுக்கு ஓய்வுதான் ஏது?

     எழுதுவதற்குத்தான் நேரம் ஏது?

     அதிலும் இவர் அறுவை சிகிச்சை மருத்துவர்.

     அதிலும், தஞ்சை மருத்துவக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றியவர்.

     கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தஞ்சை மருத்துவக் கல்லூரியின் தலைவராக முதல்வராக இருந்து, இருபத்து நான்கு மணி நேரமும் அயராது பணியாற்றியவர்.

     இருப்பினும், மருத்துவத்திற்கு இணையாகத் தமிழையும் நேசிப்பவர், சுவாசிப்பவர்.

     தன் பணி ஓய்விற்குப் பிறகு, சொந்தமாய் ஒரு மருத்துவமனையினைத்  தொடங்காமல், தஞ்சை நல்லூர் முற்றம் என்னும் அமைப்பினை தொடங்கித் தமிழ்ப் பணியாற்றி வருபவர்.

சிறந்த பேச்சாளர்.

சிறந்த நூல் விமர்சகர்.

சிறந்தப் பாடகர்.

இவர்தான்


மருத்துவர் ச.மருதுதுரை

காக்கைச் சிறகினிலே மாத இதழில் வெளிவந்த

இவரது சிறுகதை


எலி வலையும், பாச வலையும்.