16 அக்டோபர் 2025

அலைகடல் நடுவே

 

 

      சோழர்கள்.

      நான்கு நூற்றாண்டுகள் இடைவெளியின்றி, தொடர்ச்சியாக ஆட்சி செய்தவர்கள்.

     சோழ அரசு என்றால் என்ன?

     சோழ அரசு எப்படி செயலாற்றியது?

     சோழப் பேரரசில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறுநில மன்னர் இருந்தார். அவர்கள் தங்கள் பகுதியை கட்டுப்படுத்துபவர்களாகவும், அப்பகுதியை மேலாண்மை செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

     இவர்களை எல்லாம் கட்டுப்படுத்தும் அரசாக, சோழ அரசர் இருந்தார்.

     மேலாதிக்கம் செய்கின்ற சக்தியாக அரசர் இருந்தார்.

     குறுநில மன்னர்களின் ஆட்சி குடியாட்சி.

     இவர்கள் குலமாகத் தங்களை அறிவித்துக் கொண்டவர்கள்.

     சோழ அரசில் பத்து குலங்கள் இருந்திருக்கின்றன.

     குடியாட்சியை மேலாண்மை செய்தவர்கள், முடியாட்சி சோழர்கள்.

     சோழ அரசு அமைந்த பொழுது, நிலம் சார்ந்த கடவுளர்களும், நிலம் சார்ந்த பண்பாடும், அந்தந்தப் பகுதி சார்ந்த பழக்க வழக்கங்களும், குலக்கொடி வீரர்களும் இருந்தார்கள்.

     பக்தி மறுமலர்ச்சி ஏற்பட்டபிறகு, சின்னச் சின்ன குடியாட்சிகள், சைவம் என்ற சமய அமைப்பிற்குள் வந்தன.

     சைவத்தை எல்லா குடியாட்சிகளும் ஏற்றுக்கொண்ட பிறகு, சைவ சமயத்திற்கு, மேலாண்மை செய்யும், சமய அதிகாரம் கொண்ட அரசாக சோழ அரசு மாறியது.

     சைவ சமயம் பிராமணச் சடங்குகளுடன் இரண்டறக் கலந்தது.

     பிராமணச் சடங்குகளை அரசு நடைமுறைப் படுத்தவும், அதுசார்ந்த அதிகாரங்களைச் செலுத்தவும், பிராமண ஊர்கள் அதாவது பிரமதேயங்கள் தோன்றின.

     ஆகமங்கள் உருவாக்கப்பட்டன.

     ஆகமங்களின் அடிப்படையில் கோயில்கள் கட்டப் பெற்றன.

     அரச அதிகாரம், மதச் சடங்குகளின் மூலம் புனிதமாக்கப்பட்டது.

     பிராமணீயச் சடங்குகள் ஆலயத்தை மையமாகக் கொண்ட, சைவ ஒழுங்கு வழங்கிய புனித அதிகாரம்தான் இறையாண்மை.

     இதன் விளைவுதான் இன்றிருக்கும் சிவாலயங்கள், கற்றளிகள்.

     தஞ்சைப்  பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் விமானங்கள் உயரமாக உயர்த்திக் கட்டப்பெற்றதற்குக் காரணமே உளவியல்தான்.

     அது ஒரு கண்காணிப்புக் கோபுர உளவியல்.

     அக்கால கல்வெட்டுக்களில், சூரியர், சந்திரர் சாட்சியாக என்ற சொற்றொடரைக் காணலாம்.

     சூரியன் பகலில் இருப்பார்.

     சந்திரன் இரவில் இருப்பார்.

     இருவரும் மக்களுடைய செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும் உளவில்.

     செயல்களுக்கு சாட்சியாக இருக்கிறார்கள் என்னும் நம்பிக்கை.

     இது கண்காணிப்பு அரசியல்.

     கண்காணிப்புக் கருவியாக கடவுளரையே பயன்படுத்துதல்.

     அதனால்தான், தட்சிணமேரு, தென்கயிலாயம்.

     இவர்கள், மக்களை,  கோயிலின் கலசம் வழியாக கண்காணிக்கிறார்கள் என்னும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துதல்.

     கண்காணிப்பு அரசியல்.

     இது பௌத்தத்திலும் உண்டு.

     ஒரு தூணின் மேல், நான்கு சிங்கங்கள்.

     நாற்புறமும் பார்த்தவாறு அமர்ந்திருக்கும்.

     சிங்கம் என்பது அதிகாரத்தின் குறியீடு.

     அரசனின் குறியீடு.

     அரசனின் கண்கள், சிங்கங்களின் கண்கள் வழியாக்க் கண்காணிக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துதல்.

     இப்படியெல்லாம்தான், சைவ ஒழுங்கு, அரசர்களுக்கு புனித அதிகாரத்தை வழங்கியது.

     இதற்காகவே பிரமதேயங்கள்.

     பிரமதேயங்கள் எல்லாம், பதிகங்களால் பாடப்பெற்ற இடமாக இருக்கும்.

     பிரமதேயங்களுக்கு அருகில் கோயில் இருக்கும் அல்லது கோயில்களுக்கு அருகில் பிரமதேயங்கள் இருக்கும்.

     எனவே, சடங்கும், சமயமும், அரசியல் அதிகாரமும் கொண்டது பிரமதேயம்.

     பிரமதேயங்கள் இல்லாவிட்டால், சோழ அரசாங்கம் நடந்திருக்காது.

     சோழர்களுக்குப் பெரும்பாண்மை அதிகாரம் கிடைத்திருக்காது.

     சோழர்களுடைய அரசை, ஒழுங்குபடுத்தியவை பிரமதேயங்கள்.

---

     சோழர்கள் நீர் அதிகாரத்தைத்தான் முதலில் கைப்பற்றினார்கள்.

     இன்றைய கொள்ளிடத்தின் அன்றைய பெயர்.

     கரிகாலப் பேராறு.

     பின்,

     உத்தமச் சோழப் பேராறு.

     பின்னர்,

     இராஜேந்திர சோழன் பேராறு.

     இந்த நீர் அதிகாரத்தின் மூலம், குடியாட்சிகள் கட்டுப்படுத்தப்பட்டன.

     விவசாயம் ஒழுங்கு படுத்தப்பட்டது.

---

     இராஜேந்திர சோழன் அரியணை ஏறியபிறகு, மேற்கொண்ட படையெடுப்புகளை, மூன்று விருதுப் பெயர்களுக்குள் அடக்கி விடலாம்.

     முடி கொண்டான்.

     கங்கை கொண்டான்.

     கடாரம் கொண்டான்.

     முதல் ஐந்து ஆண்டுகளில் ஈழத்தின்மீது படையெடுக்கிறான்.

     இராஜேந்திரன் காலத்திற்கு முன், தென் இலங்கை மட்டும்தான், சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

     இராஜேந்திரன் படையெடுக்கிறான்.

     ஈழம் முழுமையும், இராஜேந்திரன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

     முடி கொண்டான்.

     அடுத்து வடபுலப் படையெடுப்பு.

     கிழக்குக் கடற்கரையினையும், மேற்குக் கடற்கரையினையும் இணைத்து வெற்றி கான்கிறான்.

     கங்கை வரை இராஜேந்திரன் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது.

     கங்கை கொண்டான்.

     அடுத்து கடாரம்.

கங்கையும் கடாரமும் பூர்வதேசமும் கொண்டு

சிங்காதனத்திருந்த செம்பியர்கோன்.

     பூர்வதேசம்.

     பூர்வதேசம் பற்றி வரலாற்று ஆய்வாளர்களிடையே பல முரண்பட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன.

     இந்தியாவின் வடகிழக்கு ஆசியப் பகுதிதான் பூர்வதேசம்.

     இப்படி ஒரு கருத்து.

     பர்மாதான் பூர்வதேசம்.

     இப்படி ஒரு கருத்து.

     உலக வரைபடத்தில், பர்மாவிற்குக் கீழே கடாரம்.

     எனவே, பர்மாதான் பூர்வதேசமாக இருக்க வேண்டும்.

     கடாரம் என்பது, அன்று சொர்ணபூமி என்றழைக்கப்பட்ட சிங்கப்பூரை உள்ளடக்கிய மலேசியா.

---

     கடாரத்தை வெற்றிகொள்ள, சோழர்களுக்குப் பெரிதும் உதவியது, கடல் நீரோட்டம்.

     கடல் நீரோட்டத்தை சோழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

     மார்கழியில், கடல் நீரோட்டம் கடாரம் நோக்கிச் செல்லும்.

     ஆனி மாதத்தில், கடல் நீரோட்டம், சென்ற வழியே திரும்பி வரும்.

     மார்கழி மாதத்தில், நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் புறப்பட்டால், நீரோட்டம் கப்பலை அதுவாகவே இழுத்துச் சென்று, 14 ஆம் நாள் கடாரத்தில் சேர்த்துவிடும்.

     ஆனியில் கடாரத்தில் இருந்து புறப்பட்டால், 14 நாட்களில் நாகப்பட்டினம்.

     இராஜேந்திரன் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு, கடாரம் சென்று, வென்று, மீண்டும் நாகைக்கு வர எடுத்துக்கொண்ட நாட்கள் வெறும் 113 நாட்கள்தான்.

     அலைகடல் வழியே பல கலம் செலுத்தி, பல நாடுகளை வென்று, 113  நாட்களிலேயே நாகையை அடைந்தான்.

     கடலின் தன்மை.

     காற்றோட்டம்.

     நீரோட்டம்.

     மூன்றையும் சோழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

     எனவே, அன்று வங்காள விரிகுடாவின் பெயர்.

     சோழ ஏரி.

     இராஜேந்திரன் கடற்கரைகளைக் கைப்பற்றினான்.

     ஈழக் கடற்கரை முழுவதையும் கைப்பற்றினான்.

     முடி கொண்டான்.

     கிழக்கு, மேற்கு கடற்கரை முழுவதையும் கைப்பற்றினான்.

     கங்கை கொண்டான்.

     தென்கிழக்கு ஆசியக்கரை முழுவதையும் கைப் பற்றினான்.

     கடாரம் கொண்டான்.

     இதனால், இந்துமகா சமுத்திரம் முழுமையும் இராஜேந்திரன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

---

     சோழர்களுடைய காலத்தில், அவர்களது அரசாங்கத்திற்கு மிகவும் வலு சேர்த்தது சந்தைப் பொருளாதாரம்.

     மணிகிராமம்.

     ஜநூற்றுவர்.

     ஞானாதேசிகர்.

     அஞ்சுவண்ணம்.

     வளஞ்சியர்.

     சோழர்கள் காலத்தில் இருந்த வணிகக் குழுக்கள் அனைத்தையும், இந்த ஐந்து பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம்.

     சோழ அரசாங்கமானது சைவ வைதீகச் சடங்குகளை பின்பற்றக் கூடிய அரசாங்கம்.

     அன்று இலங்கையில், புத்த அரசியல் சட்டப்பூர்வ மையமாக இருந்தது.

     தென்கிழக்கு ஆசியா பௌத்தத்தை பெரும்பான்மையாகக் கொண்டதாக இருந்த்து.

     கம்போடியாவில் பௌத்தமும், சைவமும் கலந்து இருந்தது.

     சீனாவில் கன்ஃபியூசியஸ், பௌத்தம் இரண்டும் இருந்த்து.

     இதுதான் அன்றைய கடற்புரத்தைச் சார்ந்த அரசுகளின் சமயமாக இருந்தது.

     எல்லா அரசுகளுமே சமயச் சார்போடு இருந்தன.

     சமய அதிகாரத்தை ஏற்றுக் கொண்டு, சமய அதிகாரத்தை உறுதிப் படுத்துவதாகத்தான் அன்றைய அரசாங்கங்கள் இருந்தன.

     கடல் வணிகத்தை ஏற்றுக் கொண்டிருந்த நாடுகளின் பெரும்பான்மை மதமாக பௌத்தம் இருந்தது.

     எனவே, கடற்கரையை ஒட்டி இருக்கின்ற நாடுகள், பௌத்தத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளாக இருந்தன.

     கடல்வழிப் பாதையானது, புத்த மதம் பரவுவதற்கும், புத்தருடைய பயணிகள் பயணிப்பதற்கும் உகந்த பாதையாக இருந்தது.

     அக்கால வணிகர்கள் தங்கி இருந்த இடங்கள் எல்லாம், பௌத்த மடாலயங்களாகவோ அல்லது பௌத்தர்களால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு இடங்களாகவோ இருந்தன.

     எனவே, பௌத்தம்  வணிகத்தைப் பாதுகாக்கிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, உண்மையில் வணிகத்தை ஆதிக்கம் செய்தது.

     இந்த ஆதிக்கத்தைத் தகர்ப்பதுதான் இராஜேந்திரனின் நோக்கமாக இருந்தது.

     எனவே, சைவ வைதீக சடங்கு அரசியலுக்கும், பௌத்த அரசியலுக்கும் இடைப்பட்ட ஒரு போர்தான், இராஜேந்திரனின் அயலகப் படையெடுப்பிற்கான அடிப்படைக் காரணமாகும்.    

---

ஏடகம்.

ஞாயிறு முற்றம்.

கடந்த 12.10.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடக அரங்கில்

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர்

பொறியாளர் இரா.கோமகன் அவர்கள்


இராஜேந்திர சோழன் அயலகப் படையெடுப்பின் பின்னனி

என்னும் தலைப்பில், தகுந்த தரவுகளுடன் நிகழ்த்திய நீண்ட பொழிவு கேட்டு, ஏடக அரங்கே, தன்னை மறந்து போனது.

தஞ்சாவூர், பசுபதிகோயில், புனித கபரியேல் மேனிலைப் பள்ளி

இடைநிலை ஆசிரியர்


ஆசிரியர் திலகம், திருமதி இரா,இராஜேஸ்வரி அவர்கள்

தலைமையில்

நடைபெற்றப் பொழிவிற்கு வந்திருந்தோரை

தஞ்சை நகர மனவளக்கலை மன்ற


அருள்நிதி, பேராசிரியர் ஜெ.சங்கர் அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

கரந்தை சமணர் ஆலய அறங்காவலர்


திரு ரி.இராமகிருட்டினன் அவர்கள்

நன்றி கூறினார்.

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி செ.ஐஸ்வர்யா அவர்கள்

விழா நிகழ்வுகளை, அழகுத் தமிழில், தெளிவுற தொகுத்து வழங்கினார்.

ஏடக அரங்கே

கடலாய் மாறிப்போனது.

சோழர் கப்பல்களால்

திணறித்தான் போனது.

பொழிவின் நிறைவில்

நெஞ்சம் நிறைந்து போனது

நெகிழ்ந்துதான் போனது.

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

பாராட்டுவோம் வாழ்த்துவோம்.