17 டிசம்பர் 2025

மந்திரம், இயந்திரம், தந்திரம்

 


     நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.

     பஞ்ச பூதங்கள்.

     சித்தர்கள் மேலும் ஐந்தைக் கூறுவார்கள்.

     தாய், தந்தை, மூதாதையர்கள், பறவைகள், மிருகங்கள்.

     இந்த ஐந்தினைவும் இயற்கையோடு ஒன்றி வணங்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள்.

     பஞ்ச பூதங்களைப் பற்றி மாணிக்கவாசகர் பாடுவார்.

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் விளைந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் மகிழ்ந்தாய் போற்றி.

     பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தின் குணங்களைப் பிரித்துப் பார்த்தால், மாணிக்கவாசகரின் பாடலுக்கானப் பொருள் தெளிவாய் புரியும்.

      நிலம் என்பதற்கு வாசனை உண்டு அதாவது மண் வாசனை உண்டு, சுவை உண்டு, பார்க்க முடியும், தொட்டு உணர முடியும், ஓசையும் உண்டு.

      நீர், தெளிந்த நீர் வாசனை அற்றது. மற்ற நன்கு குணங்களையும் உடையது.

     நெருப்பு மணமும் சுவையும் இல்லாதது, மற்ற மூன்று குணங்களையும் உடையது.

     காற்று என்பது மணம் மற்றும் சுவை அற்றது. பார்க்க இயலாதது. இருப்பினும் உணர முடியும், ஓசை உடையது.

     ஆகாயம் என்பது ஓசை ஒன்றை மட்டும் உடையது. ஆகாயம் என்பது வெறுமை.

     ஒன்றுமற்ற வெறுமையான தெர்மாஸ் பிளாஸ்கில் காது வைத்துக் கேட்டால், பிளாஸ்கின் வெறுமையில் இருந்து ஒலி தோன்றுமல்லவா, அதுபோலத்தான் ஆகாயம்.

     இதைத்தான் மாணிக்கவாசகர் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என மேலிருந்து கீழாக  வரிசைப் படித்திப் பாடியுள்ளார்.

பஞ்ச பூதம்

குணம்

நிலம்

 

நீர்

 

நெருப்பு

 

காற்று

 

ஆகாயம்

மணம் – சுவை – ஒளி – ஊரு – ஓசை

 

சுவை – ஒளி – ஊரு – ஓசை

 

ஒளி – ஊரு – ஓசை

 

ஊரு – ஓசை

 

ஓசை

     கைவிரல்களைப் பயன்படுத்தி முத்திரைகளைச் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.

     கை விரல்கள் ஐந்தும் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன.

சுண்டு விரல்

நீர்

மோதிர விரல்

நிலம்

நடு விரல்

ஆகாயம்

ஆள்காட்டி விரல்

காற்று

கட்டை விரல்

தீ

     கட்டை விரல் நுணியையும், ஆள் காட்டி விரல் நுணியையும் ஒன்றாய் இணைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு, மற்ற மூன்று விரல்களையும் நேராய் நீட்டிச் செய்வது ஒரு முத்திரை.

தீ + காற்று

     கட்டை விரல் நுணி, நடுவிரல் நுணி, மோதிர விரல் நுணி என மூன்று விரல்களின் நுணியையும் இணைத்து அழுத்திப் பிடித்து, சுண்டு விரலையும், ஆள்காட்டி விரலையும் நேராய் நீட்டிச் செய்வது ஒரு முத்திரை.

தீ + ஆகாயம் + நிலம்

     கட்டை விரல் நுஹண, மோதிர விரல் நுணி, சுண்டு விரல் நுணி மூன்றின் நுணிகளையும் இணைத்து அழுத்திப் பிடித்து, ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் நீட்டிச் செய்வது ஒரு முத்திரை.

தீ + நிலம் + நீர்

     கட்டை விரல் மற்றும் சுண்டு விரல் நுணிகளை இணைத்து அழுத்திப் பிடித்தபடி, மற்ற மூன்று விரல்களையும் நீட்டிச் செய்வது ஒரு முத்திரை.

தீ + நீர்

     இதேபோல், இரண்டு கைகளையும் பயன்படுத்தி, வலது கையின் சில விரல்களையும், இடது கையின் சில விரல்களையும் இணைத்துப் பல முத்திரைகளைச் செய்யலாம். இதனை

நீரை நிலத்தில் விட்டு

காற்றை ஆகாயத்தில் நிரப்பி

நெருப்பை நெருப்புடன் சேர்க்க

தச வாயு வசப்படும்

என்கிறார்கள்.

     உலகிலேய அதிவேகமானது மனம். மனதிற்குப் புற உருவம் கிடையாது. அதனால்தான் அகம். உள்ளே இருப்பதால் உள்ளம்.

     உள்ளத்தில் எழும் உள்ளுணர்வின் சிந்தனையால், இயற்கையின் இரகசியங்களை ஆராய்ந்து கண்டறியும் பேராற்றலைப் பெற்றவனாக மனிதன் இருக்கிறான்.

     இது ஆன்மீகம்.

     ஆன்மீகம்.

     ஆன்மீகத்தின் அடிப்படை நம்பிக்கை.

     ஆன்மீகம் என்பதை மூன்றாய் பிரிக்கலாம்.

     மந்திரங்கள்.

     இயந்திரங்கள்.

     தந்திரங்கள்.

     மந்திரம் என்பது ஒலி.

     மந்திரங்களுக்கு ஒலிதான் முக்கியமே தவிர, மொழியல்ல.

     மந்திரங்களைப் பற்றியும், அவற்றை உச்சரிக்கும் முறைகளைப் பற்றியும் சித்தர்களின் நூல்களின் வழி அறியலாம்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப

என்று உரைப்பார் தொல்காப்பியர்.

     மந்திரம்.

     மந் + திரம்.

     மந் – மனது

     திரம் – உறுதி

     மனதை உறுதியாக்கிக் கொள்ளும் முறையே மந்திரம்.

     இயந்திரம்.

     இயற்திரம் என்பது மண்டலம்.

     மண்டலம் என்பது வழிபாட்டு முறை.

     இயந்திரம் என்பது சக்கரம்.

     இயந்திரம் என்பது பேசாத வழிபாட்டு மொழி.

     ஒலியின் ஆற்றல்மிகு ஒளி வடிவம் சக்கரம்.

     சக்கரத்தை இயந்திரம் என்று கூறலாம்.

     இயந்திரம் என்றாலே சுழற்றி.

     இயந்திரம் என்பது கண்களுக்கு.

     மந்திரம் என்பது காதுகளுக்கு.

     தந்திரம் என்பது வழி முறைகள்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

கடந்த 14.12.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடக அரங்கில்.

தஞ்சாவூர், ஸ்ரீகணேசா நடுநிலைப் பள்ளி


நல்லாசிரியர் சி.புகழேந்தி அவர்கள்

தலைமையில்

தஞ்சாவூர், தொல்லியல் பொறியாளர்


பொறியாளர் எஸ்.இராசேந்திரன் அவர்களின்

ஆன்மீகமும் அறிவியலும்

என்னும் தலைப்பிலானப் பொழிவு,

சற்றேறக்குறைய ஒரு ஆன்மீகப் பொழிவாகவே அரங்கேறியது.

பொழிவின் நிறைவில்

ஏடகம், சுவடியியல் மாணவர்


செல்வன் லெ.சிவகங்காதரன் அவர்கள்

நன்றி கூறினார்.

முன்னதாக, பொழிவு கேட்க வந்திருந்தோரை

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி ம.சௌந்தரியா அவர்கள்

இரத்தினச் சுருக்கமாய் வரவேற்றார்.

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி ந.டானியா அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

ஒன்றல்ல, இரண்டல்ல – இதுவரை

95 பொழிவுகளைத்

தொய்வின்றித் தொடர்ந்து

அரங்கேற்றியிருக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், பாராட்டுவோம்.