08 டிசம்பர் 2025

மலரும் மலர்கள்

 


அப்பா இல்லமல் அம்மா

நாள் முழுக்கப் பேசுகிறாள்.

அமைதியாய் கேட்கின்றன

புழங்காதப் பாத்திரங்கள்.

     நான்கே நான்கு வரிகள்தான், ஆனாலும் என் அம்மாவின் நான்கு வருட வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன. என் தந்தை மறைந்ததை, என் தாயின் மனம், கடைசிவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

     என் தந்தை இருப்பதைப் போலவே பேசுவார்.

     கடைசி வருடத்தில் என்னை முழுதாக, முற்றாக மறந்து போனார். என்னை என் அப்பாவாக எண்ணியே பேசுவார்.

     வாங்க, சாப்புடுறீங்களா, தோசை ஊத்தட்டுமா என்பார்.

     அம்மா, நான் குமாரு என்பேன். ஆமாம் குமாரு என்பார். அடுத்த நொடி, சாப்புடுறீங்களா? என்பார்.

பாரம் வலியல்ல அனுபவம்

அனுபவம் வலியல்ல வாழ்வு.

அனுபவ வலிகள் வழியே

வழியே வாழ்தல் வரம்.

     அனுபவ வலிகளைச் சுமந்து அதன் வழியே வாழ்தல்தான் வாழ்க்கை, வரம் என்பதை அண்மைக்காலமாக உணர்ந்து வருகிறேன்.

     ஐம்பத்து எட்டு வயது வரை அருகில் வாராத, உள்ளத்து வலிகள் எல்லாம், தற்பொழுது வரிசைகட்டி வருகின்றன.

     வலிகளைப் புறந்தள்ளி வாழ்தல்தான் வாழ்க்கை என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து, வலிகளைச் சுமந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகின்றேன்.

பேருந்து நிறுத்தம் அருகில்

பிச்சைக்காரி பிணம்.

கடந்து போகிறார்கள்

சிறப்பு தரிசனத்திற்கு.

     படிக்கும்போதே மனது  வலிக்கிறது. ஆனாலும் இன்றைய வாழ்வியல் யதார்த்தம் உள்ளத்தைச் சுடுகிறது.

ஆடு தொலைத்தவர்கள்

அழுதபடியே தேடுகிறார்கள்.

ஆர்வமாய் நிற்கிறார்கள்

கறிக்கடையில் சிலர்.

     எப்படி இவரால், இரண்டு காட்சிகளை, நான்கே வரிகளில், ஒன்றாய் இணைத்து, இதயத்தில் இடியாய் இறக்க முடிகிறது என்பதுதான் புரியவில்லை.

அம்மா இறப்பதற்குப்

போராடிக் கொண்டிருக்கிறாள்.

முண்டியபடி நிற்கிறார்கள்

டாஸ்மாக் முன்பாக.

     இன்றைய தலைமுறையினரின் நிலையை எண்ணும்போது, காலம் செல்லச் செல்ல, இது எதில் போய் முடியுமோ? என்னும் அச்சம்தான் தோன்றுகிறது.

வரம் வாங்கிப் பிறந்தது

வளமாக வளர்ந்த பிள்ளை.

வாழும் காலத்தில் உறவை

வதம் செய்கிறது.

     இன்று பெரும்பாலான பெற்றோர்களின் நிலை, தலைமுறை இடைவெளியால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

எண்ணெய் குளியல்

நின்றே போய்விட்டது.

சாவுச் சடங்கில் இருக்கிறது

எண்ணெய்க் குளியல்.

     உண்மைதான். பெரும்பாலான மனிதர்கள் எண்ணெய் குளியலை மறந்து, மருத்துவரைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

---

     ஒரு நூல் முழுவதும் பக்கத்துக்குப் பக்கம், உள்ளத்தை உருக்கும் நான்கு வரிக் கவிதைகள்.

     தன்முனைக் கவிதைகள்.

     ஒவ்வொரு வரியிலும் குறைந்த பட்சம் இரண்டு சொற்கள், அதிகபட்சமாய் மூன்று சொற்கள்.

     எளிமையாய், ஈடுபாட்டோடு இருக்க வேண்டும்.

     மூன்றாவது மற்றும் நான்காவது வரிகள், முதல் இரண்டு வரிகளுக்கு இயைந்தும் செல்லலாம், முற்றிலும் முரணாகவும் அமையலாம்.

     இவைதான் தன்முனைக் கவிதைகள்.

     எப்படி இவரால், தன்முனைப்போடு இப்படி எழுத முடிகிறது என்று எண்ணினால், வியப்புதான் மிஞ்சுகிறது.


மலரும் மலர்கள், மனிதர்களுக்கன்று

எழுத்துலகில் 45 ஆண்டுகாலமாய் தொடர்ந்து,

தொய்வின்றி இயங்கி வருபவர்.

சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை.

கவிதை, சிறார் இலக்கியம், பெண்ணியம், நாடகம்

என இவர் தொடாத, எழுதாத துறையே இல்லை.

இவர்தான்

நாம்

நன்கறிந்த


எழுத்தாளர், கவிஞர்

ஹரணி.