17 ஜனவரி 2026

காயகல்பம்

     ஒரு மனிதன் பிறந்து, வாழ்ந்து, தன்னை உணர்ந்து, தன் கடைசி காலத்தில் கரைசேரும் பொழுது, உடல் உறுப்புகளை இழந்தும், உடல் உபாதைகளைச் சுமந்தும், மனவேதனையுடன் மரணிக்கிறான்.

     மனிதன் வாழும் இந்த உலகில், மற்ற விலங்கினங்களும் வாழத்தான் செய்கின்றன.

     உலகில் உள்ள எந்த விலங்கினமாவது, நம்மைப் போல் மன வேதனை அடைகிறதா?

     நாம் மட்டும் வேதனை அடையக் காரணம் என்ன?

     நாம் நன்கு கல்வி கற்றுத் தேர்ந்த பின்பும், உடலைப் பராமரிக்கக்கூடியச் செயல்களைக் கைவிட்டதுதான் காரணம்.

     நாம் எதை நேசிக்கிறோமோ

     அது நம்மை நேசிக்கும்.

     எதைக் கைவிடுகிறோமோ,

     அது நம்மைக் கைவிடும்.

---

     ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க ஆயில் கொண்டு சுத்தப்படுத்துவதைப் போல, நம் ஆயுளை நீட்டிக்கவும் ஆயில் தேவை.

     ஆயில் ஆயுளை வளர்க்கும்.

     ஆயில் ஆயுளைக் கொல்லும்.

     எண்ணெயை உடம்பில் தேய்த்துக் குளித்தோம் என்றால் ஆயுளோடு இருப்போம்.

     அதே எண்ணெணை உள்ளுக்குள் சாப்பிட்டோமென்றால், ஆயுளை இழப்போம்.

     இன்றைய விளம்பரங்கள், நான்கு ஸ்பூன் குடிக்கச் சொல்கின்றன.

     ஆனால், அந்த நான்கு ஸ்பூன் ஆயில்தான், இன்று நம்மை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

     குணங் கெட்டதால்தான் கோர்ட்டில் கூட்டம்.

     மனங் கெட்டதால்தான் கோயிலில் கூட்டம்.

     இனங் கெட்டதால்தான் போலிஸ் ஸ்டேசனில் கூட்டம்.

     இந்த மூன்றும் கெட்டதால்தான், வாழ்க, ஒழிக என்று முச்சந்தியில் கூட்டம்.

     இதற்கு என்ன காரணம்?

     நாம் அன்றாடம் கடைபிடிக்கும் உணவு முறைகள்தான்.

     இன்றைய மாறுபட்ட உணவுதான், மரணத்தின் இருப்பிடம்.

     இன்றைய மாறுபட்ட உணவு முறைகளை மாற்றி, மனிதனாக வாழக்கூடிய உணவு முறைகளை உண்டால், இந்த மனித தேகம், தன் முழுமையான ஆயுட் காலம் வரை வாழும்.

     மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா?

காக்கை கருநீலி கரந்தை கரிசாலை

வாக்குக்கு இனிமை வல்லாரை

இவ் வைந்தும் பாக்கள் வேணும்

பாலில் கரைத்து உண்ண ஆக்கைக்கு

ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன்

அழிவு இல்லை ஆயிரம் எட்டு ஆண்டும்

இராஜ மார்த்தாண்டம்.

     மனிதனுடைய ஆயுட்காலம் ஆயிரத்து எட்டு ஆண்டு காலம் என்று உரைக்கிறது இப்பாடல்.

     இதற்கு உதாரணம், திருவாரூரில் சுவாமி தெட்சிணாமூர்த்தி உடல் இன்றும் இருக்கிறது.

     ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் உடல் இன்றும் இருக்கிறது.

     திருச்செந்தூரில் ஜெயதேவன் உடல் இன்றும் இருக்கிறது.

     இதைத்தான் வள்ளுவர், பின்வருமாறு கூறுகிறார்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

     நாம் ஏடுகளைத்தான் படித்துள்ளோம்.

     வாழ்க்கையைப் படிக்கவில்லை.

     உலகத்திலேயே, தமிழகத்தில்தான், தலைசிறந்த மகான்கன் அதிகம் வாழ்ந்திருக்கிறார்கள்.

     அவர்கள்தான், இந்த மனித தேகம், மரணமில்லா பெருவாழ்வு வாழ முடியும் என்று உரைத்திருக்கிறார்கள்.

      மரணமே மனிதனுக்கு வரக் கூடாது.

     வரவும் வராது.

     அப்பேர்ப்பட்ட தேகத்தை நாம் அடைய முடியும்.

     இதுதான் காயகல்பம்.

     இந்த காயம் என்ற உடம்பை, கல்லாக மாற்ற முடியும்.

     இதற்கு என்ன செய்ய வேண்டும்?

     ஆயிரம் பிறை கண்ட வேம்பின் (83 ஆண்டுகள், 4 மாதம்) சம்மூலத்தைக் கொண்டு வந்து, இடித்து, ஒரு மண் சட்டியில் பரப்பி, அதில் கதலி வாழைப் பழத்தை (ரஸ்தாளி) புதைத்து வைத்து, 41 ஆம் நாள் எடுத்துப் பார்த்தால், அந்தப் பழம், காயாக மாறியிருக்கும்.

     அந்தக் காயானப் பழத்தை உண்டால், வயோதிகன் வாலிபனாக மாறிவிடுவான்.

     இந்த வேப்பமரத்தைத் தேடியிருக்கிறோமா?

     காசைத்தான் தேடுகிறோம்.

     அரசன் முதல் ஆண்டி வரை காசைத்தான் தேடுகிறார்கள்.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்

கேடுகெட்ட மாமனிடரே கேளுங்கள்கூடுவிட்டிங்

காவிதான் போயினபின் யாரோ யநுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.

     இன்றைய மக்களுக்கு இது முற்றாய்ப் பொருந்தும்.

     இன்றையத் துன்பம் எல்லாவற்றிற்கும் காரணம், அடுத்தவரைப் போல் வாழ வேண்டும் என்ற ஆசைதான்.

     இந்த ஆசையைக் கட்டுப்படுத்தினால்தான், நாம் ஆரோக்கியத்தை அடைய முடியும்.

     உலகத்தில் உறவை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தவன் தமிழன்.

     சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லக்கூடிய, அந்த ஆற்றுச் சமவெளியில், உணவைப் பயிரிட்டு, அதைத் திரித்துச் சுவையூட்டிச் சமைத்து உண்ட முதல் மனிதன் தமிழன்.

     அப்பேர்ப்பட்டத் தமிழன்தான், இந்த உடல், இந்த உணவுடன் நட்பாக இருக்குமா? பகையாய் இருக்குமா? என உணர்ந்து, உணர்ந்து சாப்பிட்டான்.

     உணர்ந்து, உணர்ந்து சாப்பிட்டதால் உயர்ந்த நிலையில் இருந்தான்.

          இன்று எத்தனை பேர் கஞ்சி குடிக்கின்றோம்.

      மாவுதான் மரணத்தின் இருப்பிடம்.

     இன்று ஒருநாள் மாவு அரைத்து, அதை அந்த வாரம் முழுவதும் பயன்படுத்துகிறோம்.

     168 மணி நேரம் மாவு இருந்தால், அதன் குணம் எப்படி இருக்கும்.

     இதை வைத்து உணவு தயாரித்தால், அந்த உணவு எப்படி இருக்கும்.

     இந்த உணவை சுவையூட்டிச் சாப்பிட்டால், அந்த உடல் எப்படி இருக்கும்.

     இதுதான் தீதும் நன்றும் பிறர்தர வாரா.

     வியாதிகள் வருவதற்குக் காரணமும் இதுதான்.

     இன்று பலரும் மூக்குக் கண்ணாடி அணிகிறார்கள்.

     இதை சரி செய்யலாம்.

     பொன்னாங் கன்னி.

     இந்தப் பொன்னாங் கன்னியை அரைத்து, நீராகாரத்தில் கலந்து குடித்தால், 120 நாள்களில் கண்கள் முழு பார்வையைப் பெறும்

     பாதத்தில் எண்ணெய் தேய்த்தால் அறுபதே நாட்களில் கண் தெரியும்.

     அதனால்தான், நம் முன்னோர்கள், அந்தக் காலத்தில், காடு கழனி எல்லாம் அலைந்து, உழைத்துக் களைப்புற்று, இரவு உறங்கச் செல்லும் முன், இரண்டு உள்ளங்கால்களிலும் எண்ணெய் தேய்ப்பார்கள்.

     அவர்கள் எல்லாம் கடைசி வரையில் ஊசியில் நூல் கோர்த்தார்கள்.

     இன்று பிறந்த குழந்தைக்கே கண்ணாடி மாட்டி விடுகிறோம்.

     ஆ மணக்கும் எண்ணெய்.

     ஆ என்றால் உயிர்.

      உயிர் மணக்கும் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய்.

     நாம் என்ன நினைக்கிறோம்.

     அது விளக்கெண்ணெய்.

     குழ, குழ என்று இருக்கும்.

     ஆனால் அந்த குழ குழப்புதான் நம் உடலை, உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை, எலும்பை, எலும்பின் உள் இருக்கும் மஜ்ஜையை உறுதிப் படுத்துவதுதான் விளக்கம் எண்ணெய்.

     நோயை விலக்கும் எண்ணெய்.

     மற்றொரு எண்ணெய் நல்லெண்ணெய்.

     உடலையும், உயிரையும் பேணிப் பாதுகாக்கக் கூடிய எண்ணெய் நல்லெண்ணெய்.

     இதனால்தான், நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு என்பார்கள்.

     இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

     நாள் இரண்டு. ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலையும் மாலையும் மலம் கழிக்க வேண்டும். இது உடலின் கழிவுகளை நீக்க உதவும்.

     வாரம் இரண்டு. வாரத்திற்கு இரண்டு முறை, நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது உடல் நாலத்திற்கும், ஆரோக்கியமான தலை முடிக்கும் நல்லது.

     மாதம் இரண்டு. திருமணமானவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை உடலுறவு கொள்வது நன்று.

     வருடம் இரண்டு. வருடத்திற்கு இரண்டு முறை பேதி மருந்துகளை உட்கொள்வது உடலை சுத்திகரித்து நோய்கள் வராமல் தடுக்கும்.

     இந்த நாலும் தெரிந்தவர்கள் நன்றாக இருப்பார்கள்.

---

     ஒரு வேளை உண்பவன் யோகி.

     இரண்டு வேளை உண்பவன் போகி.

     மூன்று வேளை உண்பவன் ரோகி.

     நாம் உண்ணும் உணவை உடல் ஏற்கிறதா?, எதிர்க்கிறதா? என்று என்று என்றாவது யோசித்திருப்போமா? இதைத்தான்,வள்ளுவர்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

என்றார்.

     இந்த உடலுக்கு மருந்தே தேவையில்லை, அருந்தியது அற்றது போற்றி உணின்.

     முதலில் உடலைப் பார்.

     உடல் உள்ளிருக்கும் இயக்கத்தைப் பார்.

     இது இரண்டையும் இணைத்து, அதற்குப் பிறகு உணவைப் பார்.

     தன்னைத் தானும் உணர்ந்தாருக்கு, தனக்கொரு கேடில்லை.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்மை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

என்பார் திருமூலர். மேலும்,

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே

---

     ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம்.

     இந்த 24 மணி நேரத்தை ஆறு பாகங்களாகப் பிரிக்கலாம்.

     காலை 6 மணி முதல் 10 மணி வரை வாத காலம். இது புளிப்பு, கருப்பு

     10 மணி முதல் 2 மணி வரை பித்த காலம். இது நெருப்பு, சிகப்பு

     2 மணி முதல் 6 மணி வரை கப காலம். இது உப்பு, வெளுப்பு

     மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை. இது துவர்ப்பு, மாநிறம், பொன் நிறம்

     நள்ளிரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை. இது இனிப்பு. மாநிறம்.

     இதன் பொருள் என்ன தெரியுமா?

     ஒரு பெண் கருத்தரிக்கும் பொழுது, வாத காலத்தில் கருத்தரித்தால் கருப்பாகவும், பித்தகாலத்தில் கருத்தரித்தால் குழந்தை சிகப்பாகவும், கப காலத்தில் கருத்தரித்தால் குழந்தை வெளுப்பாகவும், வாத காலத்தில் கருத்தரித்தால் குழந்தை மாநிறம் அல்லது பொன் நிறமாகவும் பிறக்கும் என்று பொருள்.

     தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு அருகில்  திருநல்லூல் கோயிலில் இருக்கும் லிங்கம், நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை நிறம் மாறும்.

     சோழன் கோச்சங்கனால் கட்டப்பெற்ற கோயில் இது.

     இதனால்தான் நம் முன்னோர்கள், தெய்வத்திற்கு ஆறு கால பூசைக்கு உத்தரவிட்டார்கள்.

     அறு காலத்திலும் ஆறு சுவைகளைப் படைத்தார்கள்.

     இந்த ஆறு சுவைகளையும், இன்று மனிதன் சாப்பிட்டால், அவன் 1008 ஆண்டுகள் வாழ்வது உறுதி.

     ஆறு சுவைகள் இன்று எத்தனைப் பேருக்குத் தெரியும்.

---

      சர்க்கரை நோயை இருபதே நாட்களில் வெல்லலாம்.

     ஒரு பட்சம், இருபது நாட்கள்.

     எறிவதை எடுத்தால், கொதிப்பது அடங்கிவிடும்.

     எரிபொருளை எடுத்தால், கொதிநிலை குறைந்துவிடும்.

     அடிவயிற்றில் எண்ணெய் தேய்த்தால் சார்க்கரை வியாதி போய்விடும்.

     வயிற்றில் எரியக்கூடிய அந்த மூலஅக்கினிதான் சார்க்கரைக்குக் காரணம்.

     அந்த மூல அக்கினி என்கிற நெருப்பினால்தான் பேங்க்கிரியாஸ் வளர்கிறது.

     பேங்க்கிரியாஸ் வளர்ந்ததால்தான் இன்சுலின் சுரப்பதில்லை.

     இன்சுலின் சுரக்காததால், குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.

     இதனால்தான் நம் முன்னோர்கள் தினமும் எண்ணெய் தேய்க்கச் சொன்னார்கள்.

     கோயிலுக்குச் சென்றால், கோயில் படிகளை மிதித்துச் செல்கிறோம்.

     கடவுள் சிலைகளை வணங்குகிறோம்.

     இரண்டும் கல்தான்.

     ஒன்றை மிதிக்கிறோம்.

     மற்றொன்றை வணங்குகிறோம்.

     காரணம்.

     சிலை மீது எண்ணெய் பூசி, தண்ணீர் ஊற்றி, பூவும் வைப்பதால்தான்.

     இதைத்தான் சிவவாக்கியம்,

நட்டகல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொனமொன என்று சொல்லு மந்திரம் எதடா?

நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

என்று கூறியதோடு, இன்னும் ஒரு படி மேலே சென்று,

ஓடி ஓடி ஓடி ஓடி

உட்கலந்த ஜோதியை

நாடி நாடி நாடி நாடி

நாட்களும் கழிந்து போய்

வாடி வாடி வாடி வாடி

மாண்டு போன மாந்தர்கள்

கோடி கோடி கோடி கோடி

எண்ணிறந்த கோடியே

     நாம் எடுத்த பிறவியை இன்புற வாழ்வதற்கு வழிகள் பல இருந்தும், வாழத் தெரியாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     நாம், நம் உடலை உன்னிப்பாக உணர வேண்டும். இந்த உடல்

     ஆண்பாதி, பெண்பாதி

     அர்த்தநாரீஸ்வரன்.

     ஆண் என்பது வலது புறம்.

     பெண் என்பது இடது புறம்.

     ஆண் என்றால் உஷ்ணம் சம்பந்தமான வர்க்கம். நெருப்பு.

     பெண் என்றால் நீர் வர்க்கம்.

     இதனால் சூடு ஏற்படுத்தும் பகுதிகள் எல்லாமே வலது புறம்.

     அந்த சூடு மிகாமலும், குறையாமலும் தற்காத்துக் கொள்வதற்கு இடது புறம்.

     நீர், நெருப்பு.

     இந்த நீரும், நெருப்பும் இணைந்ததுதான், அந்த கொதிநிலை என்ற இயக்கம்.

     பாதம் முதல் இடுப்பு வரை, வலது புறம் புளிப்பு.

     இடுப்புக்கு மேல் மார்பு வரை, வலது புறம் கசப்பு.

     மார்புக்கு மேல் உச்சி வரை, வலது புறம் காரம்.

     இதேபோல்,

     பாதம் முதல் இடுப்பு வரை, இடது புறம் துவர்ப்பு.

     இடுப்பு முதல் மார்பு வரை, இடது புறம் உப்பு.

     மார்புக்கு மேல் உச்சி வரை, இடது புறம் இனிப்பு.

     இடது புறம், துவர்ப்பு, உப்பு, இனிப்பு

     வலது புறம் புளிப்பு, கசப்பு, காரம்.

     இந்த சுவைகள் மிகுந்தாலும், குறைந்தாலும் உடலில் நோய் வரும். இதைத்தான் வள்ளுவர்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று

     புளிப்பும், துவர்ப்பும் வாதம்.

     உப்பும், கசப்பும் பித்தம்.

     காரமும், இனிப்பும் கபம்.

     இதுதான் உடற் கூறு.

     இந்த மூனறு கூறுகளில் வாதம் என்பது குடலுக்கும் கீழ் உள்ளங்கால் வரை, அது மலத்தில் ஒடுங்கும்.

     பித்தம் என்பது இடுப்புக்கு மேல் மார்பு வரை, அது பித்தத்தில் ஒடுங்கும், கல்லீரலில் ஒடுங்கும்.

     கபம் என்பது மூளையில் ஒடுங்கும்.

     இந்த ஒடுக்க நிலையை உணர்ந்தால், நாம் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

     சார்க்கரை வியாதி.

     சர்க்கரை வியாதி வருவதற்குக் காரணம், உடலில் சூடு ஏறுவதுதான்.

     இந்த உடலில் எதனால் சூடு ஏறுகிறது?

     நாம் உண்ணக்கூடிய உணவும், பருகக்கூடிய நீரும் சேருமிடத்தில், ஆவி உண்டாகும்.

     இந்த ஆவி மேல் நோக்கும் பொழுது, அந்த வெப்பச் சலனம், மூளையைத்தான் முதலில் தாக்கும்.

     இதனால், மண்டையில் இருந்து வெளிவரும் நீர், கீழிறங்கி, அது வயிற்றுக்குப் போக, மீதம் மார்பில் தங்கி சளியாகக் கட்டும்.

     முதல் அறிகுறி இதுதான்.

     இதுதான் மூளைச் சூடு.

     இந்த மூளைச் சுடுதான், சிரசு நோய் 96 க்கும் காரணம்.

     இந்த மூளைச் சுட்டுக்கு மனிதன் ஆட்படாமல் இருக்க வேண்டும் என்றால், மாவு உணவுகளை நிறுத்த வேண்டும்.

     இந்த மாவு, புளிப்புத் தன்மை எய்திய மாவு, வயிற்றிற்குச் சென்று, ஏற்கனவே சேர்ந்த கழிவுகளுடன் சேர்ந்து, இன்னும் வேகமாக மூலத் தன்மையை அதிகப்படுத்தும்.

     இந்தப் புளிப்பு அதிகரிக்க, அதிகரிக்க, நம் வயிற்றில் இருந்து வாயு என்கிற அந்த வாதம், அந்தக் காற்று, உடல் முழுவதும், யானை கானகத்தில் சஞ்சரிப்பது போல, உடல் முழுவதும் பரவி, நம் உடலில், மூட்டு தோசம், வலி, பிடிப்பு, நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் உண்டாக்கும்.

     இதற்காக நாம், 90 நாட்களுக்கு ஒருமுறை, அந்தக் கழிவுகள் தேங்காமல் இருக்க, குடல் சுத்தம் செய்ய வேண்டும்.

     இதுதான் பேதி.

     இந்தக் குடலை சுத்தம் செய்துவிட்டால், மீண்டும் அந்தக் குடலில் கழிவுகள் சேர்வதற்கு 90 நாட்கள் ஆகும்.

     எனவே கழிவுகள் சேர்வதை, 90 நாட்களுக்கு ஒருமுறை வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

     சுத்தமான விளக்கெண்ணெய் 100 மி,லி., முருங்கைப் பட்டைச் சாறு 100 மி.லி., சின்ன வெங்காயச் சாறு 100 மி.லி., வெற்றிலைச் சாறு 100 மி.லி., நான்கையும் ஒன்று கலந்து, அடுப்பில் வைத்துக் காய்ச்சினால், அவை சுண்டி 50 அல்லது 100 மி.லி., எண்ணெய் கிடைக்கும்.

     இதனை மூன்று பாகமாகப் பிரித்து, நான்கு மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம்.

     சாப்பிட்டால், குடிலில் உள்ள கழிவுகளை எல்லாம், பின் விளைவுகள் இல்லாமல் வெளியேற்றி விடலாம்.

     குடலுக்கு மேலே உள்ளவை, இரைப்பை, நுரையீரல், மண்ணீரல், இதயம்.

     எலும்பிச்சைப் பழம் வாங்கி, ஒரு குச்சி அளவு ஓட்டை போட்டு, அதில் ஒரு நான்கு அல்லது ஐந்து சொட்டு, எருக்கம்பால் விட்டு, பத்து நிமிடம் கழித்து அரிந்து, பிழிந்து, குடித்தால், இரைப்பை, நுரையீரல், மண்ணீரல், இதயம் இந்த நான்கில் உள்ள அசுத்தத்தையும் வெளியேற்றி விடலாம்.

     இதனை ஆறு மாதத்திற்கு ஒருமுறை குடிக்க வேண்டும்.

     நம் இதயம், நம் உடலில் எப்போது பொருத்தப்பட்டது என்று தெரியுமா?

     தாயின் கருவில் மூன்றாவது மாதத்தில் இருந்து இதயம் துடிக்கத் தொடங்கும்.

     எத்தனை ஆண்டுகள், நம் இதயம் தொடர்ந்து துடிக்க வல்லது தெரியுமா?

     1008 ஆண்டுகள்.

     ஆனால், நாம் இதயத்திற்கு எது ஒவ்வாததோ அதனைச் செய்து, சீக்கிரமே துடிப்பை அடக்கி விடுகிறோம். இதைத்தான் ஔவையார்.

வாக்குண்டாம் நல்ல முனமுண்டாம்

மாமலராள் நோக்குண்டாம்

மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனித்

தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

     வாக்குண்டு, நல்ல மனமூண்டு, மேனி நுடங்காது – மேனி பாயில் முடங்காது, அந்தப் பூவை உட்கொண்டால், தாமரைப் பூவை உட்கொண்டால், வாக்குண்டு, நல்ல மனமுண்டு, மேனி நுடங்காது, பூக்கொண்டு, துப்பார் திருமேனி – நான்கு பேர் பார்த்து கேலி செய்யும் வகையில் மேனி, தோல் நோயுற்று சுருங்காது, உடல் நலிவுற்று, உடல் அழுகாது தும்பிக்கையான் பாதம் – தும்பைச் செடி, கையாந்திரை, குப்பை மேனி தப்பாமல் சார்வார் தமக்கு – இது ஐந்தும் சாப்பிட்டால் 1008 வருடம் இந்த உடம்பு இருக்கும்.

     தாமரைப் பூ, குப்பை மேனி, தும்பைச் செடி, கரிசலான் கன்னி, சிறு செருப்படை.

     இந்த தேகத்தில் உள்ள ஆறு சுவைகளுக்கும், நாம் உணவின் மூலமாக அறு சுவையாகக் கொடுக்கின்றோம்.

     நம் உடல், உணவைக் கசக்கி, அப்படியே அக்கு அக்காகப் பிரித்து, எந்தெந்தப் பகுதிக்கு, எது தேவை என்று அறிந்து பிரித்துக் கொடுக்கிறது.

     அதுதான் உடம்பினுள் உருபொருள் கண்டேன்.

     அந்த சுவையினை உணர்ந்து, உடலில் எது குறைகிறதோ, அதைக் கூட்டுவதற்கும், எது கூடுகிறதோ, அதைக் குறைப்பதற்கும் ஏற்படும் போராட்டம்தான் வியாதி.

     யாகவராயினும் நா காக்க.

     இந்த உணவு நம் உடலுக்குத் தேவையா? இந்த நேரத்தில் இந்த உணவு தேவையா? என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா?

     இதுபோன்ற நேரங்களில், வயிற்றைச் சுத்தப்படுத்தத் தேவை,

     வெந்நீர்.

திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமல்

பெண்ணின் பால் ஒன்றை பெருக்காமல் – உண்ணுங்கால்

நீர்கருக்கி மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்

பேருரைக்கிற் போமே பிணி

     ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால், நோய் ஓடிவிடும்.

     இதுதான் நீரைப் கருக்கி.

     மோரைப் பெருக்கி உண்வான் நீடூழி வாழ்வான்.

---

     நீரிழிவு நோய்.

     உப்பு நோய்.

     சிறுநீரகம் என்பது மாமிசத்தால் ஆன ஒரு உறுப்பு.

     நாம் பிறந்தது முதல், நோய் இந்த உடலை அணுகும்வரை, சிறுநீரகம் வேலை செய்யும்.

     யூரியா இல்லை.

     கிரியாட்டின் இல்லை.

     பொட்டாசிரியம் இல்லை.

ஆற்று நீர் வாதம் போக்கும்

அருவி நீர் பித்தம் போக்கும்

ஊற்று நீர் கபத்தைப் போக்கும்

சோற்று நீர் அனைத்தையும் போக்கும்.

     இந்த நீராகாரம்தான் உலக ஔஷதத்திலேயே, உயர்ந்த ஓளஷதம்.

     ஔஷதம் என்றால் மருந்து.

     இன்று காபி, டீ குடித்துக் கொண்டிருக்கிறோம்.

     இந்த பால் என்பது பெரிய பாதகம்.

     நம் முன்னோர், இந்தப் பாலை, மோராக, தயிராக, வெண்ணெய்யாக, நெய்யாகத்தான் பயன்படுத்தினார்கள்.

     நேரடியாகப் பாலை யாரும் குடிக்கவில்லை.

      அன்று தாகம் தணிக்க நீர்மோர் கொடுத்தார்கள். நீர் மோர் பந்தல் அமைத்தார்கள்.

     மோரைப் பெருக்கி வாழ்ந்ததால்தான் பெரு வாழ்வு வாழ்கிறோம்.

     மோரை பயன்படுத்துவதுதான் நல்லது.

     அதுவும் ஒரு பங்கு மோர், 16 பங்கு தண்ணீர் கலந்து குடிப்பதுதான் சாலச் சிறந்தது.

     எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் நாம் வென்றுவிடலாம்.

     இருப்பினும், அந்த நோய் தோன்றுவதற்கானக் காரணத்தை நாம் உணர வேண்டும். இதைத்தான் வள்ளுவர்,

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

     எனவே, சிறுநீரகக் குறையைப் போக்க வேண்டும் என்றால், நாம் அவசியம் தினசரி அதிகாலை நான்கு மணிக்கு எழ வேண்டும்.

     எழுந்து அடிவயிறு, நெஞ்சு, பிடரி, கை, கால்களில் எண்ணெய் தேய்த்து, அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

     குளித்தவுடன், மல்லிக் கீரை, புதினா கீரை, கரு வேப்பிலை, வில்வ இலை, வல்லார இலை, துளவி, வெற்றில இலை இதில் ஏதோ ஒரு இலையை அரைத்து, நீராகாரம், நீர்த்த மோர் அல்லது தெளிந்த நீர் ஏதேனும் ஒன்றுடன் கலந்து குடிக்கவேண்டும்.

     ஒரு மணி நேரம் கழித்து, நல்ல நீர்த்த மோர் சாதம், பழைய சோறு, கஞ்சி சோறு அல்லது கொள்ளும் அரிசியும் வேக வைத்த கஞ்சி, அரிசி உளுந்து வேக வைத்த கஞ்சி, அரிசி வெந்தயம் வேக வைத்த கஞ்சி, இதுபோன்ற நீர்த்த உணவு சாப்பிட வேண்டும்.

     காலை 10 மணிக்கு மேல் 2 மணிக்குள் சாப்பிடுவதாக இருந்தால், நல்ல திருப்தியான உணவு, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் என சைவ உணவு சாப்பிடலாம்.

     கடுமையான உடல் உழைப்பு செய்பவர்கள் ராட்ஷச உணவு சேர்த்துக் கொள்ளலாம்.

     மாலை 2 மணிக்கு மேல் 6 மணிக்குள், வயிற்றில் மட்டும் அல்லது உள்ளங்காலில் மட்டும் எண்ணெய் தேய்த்து, பின் துணியால் துடைத்துக் கொள்ளலாம் அல்லது வெந்நீரால் துடைத்துக் கொள்ளலாம்.

     ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால், அவல், பொறி, பொட்டுக் கடலை, வெல்லம் சாப்பிடலாம். முருங்கை இலையையும், சீரகத்தையும் வேகவைத்துக் கசாயம் குடிக்கலாம்.

     இரவு உணவு வேண்டும் என்றால் சாப்பிடலாம் அல்லது ஒரு மூடி தேங்காய், இரண்டு வாழைப் பழம், கொஞ்சம் வெல்லம் சாப்பிட்டுப் படுப்பது நல்லது.

     இவையெல்லாம் நோய் அணுகா விதிமுறைகள்.

     இரவு திருப்தியாக சாப்பிட வேண்டுமென்றால், நல்ல பால் சோறு, மோர் சோறு, கஞ்சி சோறு, மறு உலைக் கஞ்சி, அரிசி உப்புமா, இடியாப்பம், புட்டு இவைபோன்று சாப்பிடலாம்.

     இதுதான் சரிவிகித உணவு.

     இதுதான்,

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

என்பது.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

கடந்த 11.1.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடக அரங்கில்

ஏடகப் பொருளாளர்


திருமதி கோ.ஜெயலெட்சுமி அவர்கள்

தலைமையில்

தஞ்சாவூர், பொதிகை மூலிகை மருத்துவ நலச் சங்கம்

அறுசுவை ஆலோசகர்


திரு மா.புண்ணியமூர்த்தி அவர்கள்,

அறுசுவையும் ஆரோக்கியமும்

என்னும் தலைப்பில் உரையாற்றி,

நாம் உண்ணும் உணவு, உண்ண வேண்டிய உணவு

பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஏடகம் சுவடியியல் மாணவி


செல்வி செ.கிருத்திகா அவர்கள்

பொழிவின் நிறைவில் நன்றி கூறினார்.

முன்னதாக,

ஏடகம் சுவடியியல் மாணவி


செல்வி கி.லோகதர்ஷினி அவர்கள்

வரவேற்புரையாற்றினார்.

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வாளர்


திருமதி ப.ராகவி அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

நாம்

உண்ணுவதெல்லாம் உணவா?

பெருங் கேள்வி எழுப்பி

விடைதேட

வழி வகுத்த

ஏடக நிறுவுநர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்


போற்றுவோம், வாழ்த்துவோம்.