02 ஜனவரி 2026

நம்மை செதுக்கும் புத்தகம்



 

     சிறை.

     நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்த இடம் சிறை.

     மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.

உலக சரித்திரம் (Glimpses of Wold History), இந்தியாவைக் கண்டேன்எ(Discovery of India) என்ற புகழ் பெற்ற நூல்களை நேரு எழுதியது சிறையில்தான்.

     முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஓ.வி.அழகேசன் அவர்கள் நேருவின் நூலான உலக சரித்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்ததும் சிறையில்தான்.

     மகாத்மா காந்தி சத்தியசோதனையை எழுதியதும் சிறையில்தான்.

     நெல்சன் மண்டேலா என்னுடனான உரையாடல்கள் (Conversation with Myself) என்னும் நூலினை எழுதியதும் சிறையில்தான்.

     ஹிட்லர், மெய்ன் காம்ஃப் (Mein Kampf) என்னும் நூலினை எழுதியதும் சிறையில்தான்.

---

     தன் நாட்டை கொடுங்கோலர்களின் பிடியில் இருந்து விடுவித்தே தீரவேண்டும் என்று எண்ணி, தன் சொத்துக்களை எல்லாம் விற்று, ஆயுதம் வாங்கி, புரட்சியாளர்களை ஒன்று திரட்டிப் போராடினார்.

     வெற்றிபெற முடியவில்லை.

     சுதந்திரம் கிடைக்க வில்லை.

     ஆனால், ஒரு புத்தகம் கிடைத்தது.

     யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது.

     For Whom the bell tolls

     இந்தப் புத்தகம்தான் இவருக்கு ஒரு புது போர் முறையை போதித்தது.

     கொரில்லா போர் முறை.

     கொரில்லாக்கள் எப்படி வாழ வேண்டும்?

     எப்படிப் பதுங்கிப் பாய வேண்டும்?

     எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

     படித்தார்.

     எச்சரிக்கையாக இருந்தார்.

     பதுங்கிப் பாய்ந்தார்.

     சுதந்திரம் கிடைத்தது.

இவர்தான்

பிடல் காஸ்ட்ரோ.

கியூபா

இன்றும் தலைநிமிர்ந்து நிற்கிறது.

---

     ஒரு புத்தகம்.

     ஒரே ஒரு புத்தகம்.

     ஒரு இனத்தையே மீட்டிருக்கிறது.

     ஒரு புத்தகத்தால், அமெரிக்காவில் ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் நான்கு ஆண்டுகள் உள்நாட்டுப் போர் நடந்திருக்கிறது.

     நீக்ரோக்கள் அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற்றனர்.

     இந்தப் புத்தகத்தின் தாக்கத்தால்தான் ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆனார்.

கருப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட

கொடுமைகளைக் கண்டு மனம் நொந்து,

ஒரு கருப்பரை கதாநாயகனாக்கி,

ஒரு தொடர் கதையை எழுதி

ஒரு பெரும் எழுச்சியை, புரட்சியை உருவாக்கியவர்.

ஹேரியர் பீச்சர் ஸ்டோவ்

இவரது நூல்

டாம் மாமனின் குடில்

Uncle Tom’s Cabin

ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியான பிறகு,

வெள்ளை மாளிகையில்

இவரை எப்படி வரவேற்றால் தெரியுமா?

பெரிய உள்நாட்டுப் போரை உருவாக்கிய

புத்தகத்தை வரைந்த

சிறிய மங்கையே

வருக

---

     படிக்கப் படிக்க வியப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

     ஒவ்வொரு பக்கமும், பல்வேறு புத்தகங்கள் தோன்றிய வரலாற்றையும், அப்புத்தகங்கள் சாதித்த வரலாற்றையும், ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இப்புத்தகங்கள் ஏற்படுத்திய உள்ளக் கிளர்ச்சியையும் உரத்து முழங்குகிறது.

     பதினைந்து ஆண்டுகள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராய்ப் பணியாற்றி, நூலிழைகளை ஒன்று சேர்த்து ஆடையாக்கி, மனிதர்களுக்கு அழகு சேர்த்தவர், தோற்றப் பொழிவை உயர்த்தியவர், எழிலூட்டியவர், இன்று உள்ளத்திற்கு வலு சேர்க்க, எழுதுகோலை கையில் எடுத்து, எழுத்துக்களைக் கோர்த்து நெய்து நூலாக்கி இருக்கிறார்.

நூலின் ஒவ்வொரு பக்கமும் நம்மைச் செதுக்குகிறது.


நம்மை செதுக்கும் புத்தகம்.

நூலாசிரியர்

தன்னம்பிக்கைப் பேச்சாளர்

போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்


திரு இரா.மணிமாறன் அவர்கள்.

படித்துப் பாருங்கள்,

ஒவ்வொரு பக்கமாய் கண்களை ஓடவிட்டு

மனதை நிலைநிறுத்தி

வாசித்துப் பாருங்கள்.

 

பத்துப்

பறவைகளோடு பழகி

நீங்கள்

ஒரு பறவையாகிவிட முடியாது.

பத்து

நதிகளோடு பழகி

நீங்கள்

ஒரு நதியாகிவிட முடியாது.

பத்துப்

புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்

நீங்கள்

பதினோறாவது புத்தகமாக

படிக்கப்படுவீர்கள்

என்னும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவி வரிகளுக்குப் பொருள் முழுமையாய் புரியும்.

வாழ்த்துகள் நண்பரே.

 

தொடர்பிற்கு

திரு இரா.மணிமாறன்,

manimaran22576@gmail.com

95 66 35 09 33