23 ஜனவரி 2026

கும்பகோணம் ஜாலியன் வாலாபாக்

 


     ஆண்டு 1942.

     ஆகஸ்ட் 16.

     போர்ட்டர் அரங்கிற்கு எதிரில் ஒரு பெரும் போராட்டம்.

     வெள்ளையனே வெளியேறு போராட்டம்.

     போராட்டம் உச்ச நிலையை அடைந்த போது, தொடங்கியது அந்த மழை.

     குண்டு மழை.

     போராட்டத்தில் ஈடுபட்டத் தமிழர்களை, ஆங்கிலேய அரசு கண்மூடித்தனமாக அணிவகுத்து நின்று சுட்டது.

     ஒருவர், இருவர்அல்ல, 21 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

     இறந்து போனவர்களின் உடல்களைக்கூட, ஆங்கிலேயர்கள் விட்டு வைக்கவில்லை.

     இறந்து போனவர்களின் உறவினர்கள், இறந்தவர்களை கடைசியாய் ஒருமுறைக் கண்ணாரக் காண்பதற்கோ அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கோ கூட வாய்ப்பு கொடுக்கவில்லை.

     ஒரு வண்டியில், மூட்டைகளை ஏற்றுவதுபோல், இறந்தவர்களின் உடல்களை, ஒன்றின்மேல் ஒன்றாகத் தூக்கிப் போட்டனர்.

     பின்னர், நெடுந்தூரம் பயணித்து, கொள்ளிடக் கரை வரை சென்று, 21 உடல்களையும், இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த, அந்த வீரத் தியாகிகளின் உடல்களை, கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் வீசி எறிந்தனர்.

     படிக்கும்போதே, நெஞ்சம் பதறுகிறது அல்லவா?

     இந்தக் கொடூரம், எங்கு அரங்கேறியது தெரியுமா?

     தஞ்சை மாவட்டத்தில்.

     கும்பகோணத்தில்.

     காங்கேயன் குளத்திற்கு எதிரில்.

     காந்தி 1921 ஆம் ஆண்டு, இவ்விடத்தில் பேசியதால், காந்தி பூங்கா எனப் பெயர் மாற்றம் பெற்ற, காந்தி பூங்காவிற்கு எதிரில்.

     வாழ்நாள் முழுவதும், அகிம்சையை போதித்தவரின் பெயர் தாங்கி நின்ற இடத்திற்கு எதிரில், ஆங்கிலேயர்களின் கோரத் தாண்டவம்.

     ஆங்கிலேயர்களின் கோரத் தாண்டவத்தை பறைசாற்றியபடி, இன்றும் இங்கே நிற்கிறது ஒரு கல்வெட்டு.

     கும்பகோணம் ஜாலியன் வாலாபாக்.

     இத்துயர நிகழ்வு குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட வேண்டும், உயிர் நீத்த தியாகிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

     இம்கொடும் பாதகத்தை அரங்கேற்றிய ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள், வரலாற்றில் கரும் புள்ளிகளாய் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது, வற்புறுத்துகிறது, இந்த நூல்.

---

     தீண்டாமை ஒழியும்போது, ஜாதியும் தானே ஒழியும் என்றார் காந்தி.

     ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியாது என்றார் அம்பேத்கர்.

     அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை போக்குவதிலும், தீண்டாமையை எதிர்த்து செயல்படுத்துவதிலும் ஒரே குறிக்கோள்தான்.

     ஆனால், அவைகளை நடைமுறைப் படுத்துவதில் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டார்கள்.

     இருவருக்கும் இலட்சியம் ஒன்று.

     பாதை வேறு.

     பின் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் எப்படி வந்தன?

     அவர்கள் வேறுபட்டது எங்கே?

     விடையளிக்கிறது இந்த நூல்.

---

     காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, பகத் சிங், அந்த இயக்கத்தில், தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார்.

     ஆனால், 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள், சௌரி சௌரா சம்பவத்தினால், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத் சிங், காந்தியின் மீதான நம்பிக்கையை இழந்தார்.

     ஒத்துழையாமை இயக்கம் தோல்வியுற்றால், அதற்கு மாற்றாக, வேறு வழியில் போராட்டத்தைத் தொடங்க வேண்டுமே தவிர, இப்படிப் பாதியில் நிறுத்துவது தவறு என்ற பகத் சிங் கருதினார்.

     இருவருடைய நோக்கமும் இந்திய விடுதலைதான்.

     ஆனால் வழிமுறைகள் வேறு வேறாக மாறிப் போயின.

     பின் என்னவாயிற்று?

     பகத் சிங் தூக்கு மேடையில் நின்றபோது, காந்தி அதனைத் தடுத்திட முயற்சி எடுத்தாரா? இல்லையா?

     விடையளிக்கிறது இந்த நூல்.

---

     இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும்.

     அந்த சுதந்திரத்தை காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, அகிம்சை முறையில்தான், அகிம்சை வழியில்தான் பெற வேண்டும் என்று காந்தி கருதினார்.

     இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும்.

     அதுவும் உடனடியாக வேண்டும்.

     இதனை அடைவதற்கு, எந்த வழிமுறையும் ஏற்றதுதான் என்று நேதாஜி கருதினார்.

     காந்தியும், நேதாஜியும் தங்களக்குள் ஒற்றுமையே இல்லாமல், எதிரெதிர் திசையில்தான் இருந்தார்களா?

    விடையளிக்கிறது இந்த நூல்?

---

      தென்னாப்பிரிக்கத் தமிழர்கள், கப்பலோட்டிய தமிழன் வ..சிதம்பரனார் அவர்களுக்காக, காந்தியிடம் கொடுத்தனுப்பிய பணத்தை, ..சிதம்பரனார் அவர்களிடம் கொடுக்காமல், காந்தி ஏமாற்றி விட்டாரா?

     விரிவாய் விடையளிக்கிறது இந்த நூல்.

---

     காந்தி.

     காந்தியின் மதம் எது?

     காந்தியின் ஆன்மிகம் என்பதுதான் என்ன?

     இதென்ன கேள்வி என்கிறீர்களா?

     இதற்கும் பதில் கூறுகிறது இந்த நூல்.

     சக மனிதரின்மேல் கொண்டிருக்கும் கருணையே காந்தியின் மதம்.

     வேதாந்தம் அல்ல, காந்தியின் மதம்.

     எல்லா சமூகமும் சண்டை சச்சரவுகளை விடுத்து, அனைவரும் ஒன்றாகச் செயல்பட மதம் பயன்பட வேண்டும் என்று எண்ணித்தான் காந்தி செயல்பட்டார்.

     இறை நம்பிக்கை என்பது, நெற்றியில் திருநீறு அணிந்து ஆலயங்களுக்குச் சென்று வணங்குவது, சிலுவை அணிந்து தேவாலயம் சென்று வழிபடுவது, தொப்பி அணிந்து பள்ளிவாசல் சென்று தொழுவது மட்டும் அல்ல.

     தன்னலம் துறந்து, பொதுநலன் நாடுபவனே ஆன்மிகவாதி.

     இதுதான் காந்தியின் ஆன்மிகம்.

     இப்படி காந்தியின் மதத்தையும், ஆன்மிகத்தையும் இன்னும் விரிவாய் விவரித்துக் கொண்டே செல்கிறது இந்த நூல்.

---

     காந்தியடிகளைப் பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழிகளில், ஏதோ ஒரு மூலையில் இருந்து நூல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

     காந்தி பிறந்து 156 ஆண்டுகள் ஆனாலும், அவர் இறந்து 77 ஆண்டுகள் கடந்த பிறகும், இன்றும் ஆய்வாளர்களின் முக்கிய ஆளுமையாக காந்தியே தொடர்கிறார்.

     இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் காந்தியச் சிந்தனைகளைத் தாங்கிய நூல்கள் புத்தம் புதிதாய், வேர்விட்டு முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

     ஆனாலும், இந்த நூலைப் போல் ஓர் ஆய்வு நூல், தமிழில் வெளிவந்ததே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

     வாராது வந்த மாமணியாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல்.

     காந்தியின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும்,  காந்தியின் வழக்கறிஞராக நின்று, தகர்க்க இயலாத தகுந்த தரவுகளை முன்வைத்து வாதாடி, காந்தி மீது வீசப்பட்டக் கறைகளை எல்லாம் களைந்து, நீக்கி, முழுதாய் துடைத்தெறிந்து நம்மை  நெகிழ வைக்கிறது இந்த நூல்.

காந்தியத் தடம்

     இந்நூலின் ஆசிரியர் ஒரு காந்தியவாதி.

     தென்னாப்பிரிக்காவின், பீட்டர் மாரிட்ஸ்பர்க் புகைவண்டி நிலையத்தில், புகைவண்டியின், முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து காந்தி, தள்ளிவிடப்பட்ட நாள் 1893 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7 ஆம் நாள்.

     இந்நிகழ்வின் 130 ஆவது ஆண்டு நினைவு நாளின்போது, அதே ஜுன் மாதத்தில், அதே 7 ஆம் தேதியில், காந்தி தள்ளிவிடப்பட்ட அதே இரவு நேரத்தில், தொடர் வண்டியில் இருந்து காந்தி கீழே விழுந்த, அதே, அதே இடத்தில் நின்று, நெஞ்சம் விம்மியவர்தான், இந்த நூலின் ஆசிரியர்.

    









தஞ்சாவூர், பூட்டி புட்பம் கல்லூரியில், வணிகவியல் துறைப் பேராசிரியராக 36 ஆண்டுகள் பணியாற்றியவர்.

     வணிகவியல் துறைப் பேராசிரியர் எப்படி காந்தியவாதியாக முற்றாய் மாறிப்போனார் என்னும் கேள்வி எழுகிறதல்லவா?

     பல காரணங்கள் இருக்கலாம்.

     ஆனாலும் முக்கிய காரணமாய் நம் கண்முன், ஒரு காரணம் தெள்ளத் தெளிவாய் தெரிகிறது.

     பூட்டி புட்பம் கல்லூரியின் தாளாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களுள் ஒருவராய் விளங்கியவரும், காந்தியக் கொள்கைகளில் முழுவதுமாய் மூழ்கிய, மூத்த, பழுத்த காந்தியவாதியாய் விளங்கிய,

பூண்டி கி.துளசி ஐயா வாண்டையார் அவர்களின்

தனிச் செயலாளராய், 26 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றியதும், நிச்சயம் ஒரு காரணமாக, முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது புரிகிறது.

காந்தியத் தடம்

இவர், தனது இந்த நூலினைக் கூட,

பூண்டி கி.துளசி ஐயா வாண்டையார் அவர்களுக்குத்தான்

படையலிட்டிருக்கிறார்.


எனக்கு எல்லாமா இருந்து

என் வாழ்க்கையே என் செய்தி

என்று எனக்கு, உணர்த்தி வழிகாட்டிய

பெருமகன், காந்திய நெறியாளர்

பூண்டி கி.துளசி ஐயா வாண்டையார்

அவர்களுக்கு

இந்நூல்

சமர்ப்பணம்

என மனமகிழ்வோடு படையல் இட்டிருக்கிறார்.

இவர்,

தென்னாப்பிரிக்காவில்

காந்தியத் தடத்தின் வழிப் பயணித்த போது,

மகாத்மா காந்தியின் பெயர்த்தி

இலா காந்தி அவர்களால்

பாராட்டப்பெற்றவர்.

இவர்தான்,


பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம்.

இவரது நூல்



காந்தியத் தடம்

காந்தியத் தடத்தில் பயணிப்போம் வாருங்கள்.

 

 

காந்தியத் தடம்,

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

விலை ரூ.255

 

நூலாசிரியரின் அலைபேசி எண்.

94 43 13 73 57