12 மார்ச் 2026

ஆத்தா உன் சேல



     மனித வாழ்வு என்பது பாடல்களால் நிரம்பியது.

     தாலாட்டில் தொடங்கும் மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டமும், பாடல்களாலேயே நகர்ந்து சென்று ஒப்பாரியில் முடிகிறது.

கண்ணான பூ மகளே

கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப்

பெருகி வந்து

தொட்டில் நனைக்கும் வரை

உன் தூக்கம் கலைக்கும் வரை

கண்ணான பூ மகளே

கண்ணுறங்கு சூரியனே.

 

ஆராரோ ஆரீராரோ

என் கண்ணே அம்மா

ஆராரோ ஆரீராரோ

மாமன்மார் எத்தனை பேர் என் கண்ணே

மதிப்புடைய மூனு பேரு.

மூத்த மாமன் என்ன தந்தான்?

என் கண்ணே

மூனு எருமை கன்னு தந்தான்.

நடுமாமன் என்ன தந்தான்?

என் கண்ணே

கை பவள மாலை தந்தான்.

இளைய மாமன் என்ன தந்தான்?

என் கண்ணே

சித்தான குட்டி தந்தான்.

     இதுமட்டுமல்ல, குழந்தையை தொட்டிலில் இட்டு தாயும், தந்தையும் என இருவரும் பாடும் தாலாட்டுப் பாடல்களும் இருக்கின்றன.

ஆராரோ ஆரீராரோ என் ண்ணே

யாரடிச்சா? சொல்லி அழு.

அத்தே அடிச்சாரோஅரளிப் பூ

செண்டாலேமாமன்

அடிச்சானோ

மல்லிகைப் பூ செண்டாலே

இவ்வாறு தாய் பாட, அடுத்து குழந்தையின் தகப்பனும், தனக்கே உரிய குரும்புடன் பாடுகிறான்.

யாரும் அடிக்கவில்ல

ஐவிரலும் தீண்டவில்ல

தானா அழுகிறாண்டிஒரு தம்பி

துணை வேணுமுன்னு.

      ஒரு பெண் குழந்தை பிறந்து, வளர்ந்து, ஆளாகி, சாதகம் பார்த்து திருமணம் உறுதி செய்து, உறவினரை அழைக்கும் ஒரு பாட்டு.

நிகழும் பார்த்திப ஆண்டு

ஆவணித் திங்கள் இருபதாம் நாள்.

திருவளர் செல்வன் சிவராமனுக்கும்

திருவளர் செல்வி இராஜேஸ்வரிக்கும்

நடைபெறும் திருமணத்திற்குசுற்றம் சூழ

வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்.

தங்கள் நல்வரவை விரும்பும்

ரகுராமன்  ரகுராமன்ரகுராமன்.

     பெண்ணை திருமண மேடைக்கு அழைத்துச் செல்வதற்கும் ஒரு பாட்டு.

மாதனார் தங்கள் மகளென்று பார்த்திருக்க

மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க

கன்னியவள் மெல்ல கால் பார்த்து நடந்து வர.

கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர.

காளைத் திருக்கரத்தில், கனகமனி சரமெடுக்க

ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க

கொட்டியது மேளம்

குவிந்தது கோடி மலர்

கட்டினான் மாங்கல்யம்

மணை வாழ்க

துணை வாழ்க

குலம் வாழ்க.

     திருமணம் என்றால் சீரி வரிசை இல்லாமலா. அதற்கும் ஒரு பாட்டு.

தாயாம்  பூ முடிச்சி

தடம் பார்த்து நடை நடந்து

வாழை இலை போல வந்த

பொன்னம்மா

என் வாசலுக்கு

வாங்கி வந்தது என்னம்மா?

 

தம்பிமார் பெரும் பொருளும்

தாயாரின் சீதனமும்

மாமியார் வீடு வந்தால் போதுமாஅது

மானாபி மானங்களை காக்குமா.

 

மானமே ஆடைகளாம்

மரியாதை பொன் நகையாம்

நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்

நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே.

     பெண்ணுக்குத் திருமணம் செய்து, புகுந்த வீட்டிற்கு அனுப்புவதற்கும் ஒரு பாட்டு.

கத்தாழக் காட்டு வழி

கள்ளிப்பட்டி ரோட்டு வழி

வண்டி கட்டிப் போறவளே

வாக்கப்பட்டுப் போறவளே

 

தாயி விருமாயி மனசு மருகுதம்மா

உழுத புழுதியிலும் ஒம் மொகமே தெரியுதம்மா

தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு

கத்தாழக் காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா

வாசப்படி கடக்கையிலே வரலயே பேச்சு

பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு

     ஆண்களுக்கு ஒரு வீடு. பெண்களுக்கோ இரண்டு வீடு. பிறந்த வீடு, புகுந்த வீடு.

     புகுந்த வீட்டில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் ஒரு பாடல்.

புருஷன் வீட்டில்

வாழப்போகும் பெண்ணே – தங்கச்சி கண்ணே

சில புத்திமதிகள் சொல்லுறேன்

கேளு கண்ணே.

     மண வாழ்க்கை எப்படி அமைய வேண்டும். தம்பதிகள் மனமொத்து எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் ஒரு பாடல்.

நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்.

நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும்.

நான் காணும் உலகங்கள்

நீ காண வேண்டும்

நீ காணும் பொருள் யாயும்

நானாக வேண்டும்.

     திருமண வாழ்வில் இணைந்த பெண் கருவுற்றபின் இருக்கிறது ஒரு நிகழ்வு. வளையல் அணி விழா.

வாழ்த்துறேன் வாழ்த்துறேன்

வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன்.

பொண்ண பெத்த தாயாரே

போதரமா கேட்டுருங்க

மாப்பிள்ளையைப் பெத்தவங்க

மனம் மங்கலமா கேட்டுருங்க.

     பிறந்த குழந்தையினை மூட நம்பிக்கைக்கு ஆளாக்காமல் வளர்க்கவும் ஒரு பாட்டு, ஒரு எச்சரிக்கைப் பாட்டு.

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும்போது

சொல்லி வப்பாங்க – உந்தன்

வீரத்த கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க

 

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே – நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பிவிடாதே.

 

தானும் வளரனும் அறிவும் வளரனும்

அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு

அதுவே நீ தரும் மகிழ்ச்சி

     வாழ்வின் நிறைவில் ஒப்பாரி. ஒப்பாரிப் பாடல்களோடு வாழ்க்கை நிறைவடைகிறது. தாயைப் பிரிந்த மகள் பாடுகிறாள்.

எத்தனையோ கோயில் உண்டு

எத்தனையோ சாமி உண்டு

என் சாமி நீ இருக்க

கோயில் தேடி போனதில்ல

நான் கையெடுத்துக் கும்பிட

மெல்ல உயிர் பிழைத்து

வா அம்மா

 

என்ன பெத்த அம்மாவே

என் ஆச அம்மாவே

செல்ல மகள் வந்திருக்கேன்

கண் விழிச்சுப் பாரம்மா

கண் விழிச்சுப் பாரம்மா.

தாயின் பிரிவை எண்ணி துடிதுடித்து மகன் பாடும் பாடலும் உண்டு.

ஆத்தா உன் சேல அந்த

ஆகாயத்த போல

தொட்டி கட்டித் தூங்க

தூளி கட்டி ஆட

ஆத்துல மீன் பிடிக்க

எங்கப்பனுக்குத் தலை துவட்ட

பார்த்தாலே சேர்த்தணைக்கத் தோணும்

நான் செத்தாலும் என்னைப் போத்த வேணும்.

 

நா இடுப்புல கட்டிக்கிட்டு

நீச்சல் பழகியதும் உன் சேலதானே

வண்ணப் பூசோலை தானே.

ஈர சேல காயும்போது

வான வில்லா தோணும் – ஏ ஆத்தா

இத்துபோன சேல

அந்த சோக்க் கத புரியும் – நீ

சேல கட்டி இறைச்ச தண்ணி

சக்கரையா இனிக்கும்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

8.3.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை

நடைபெற்றப் பொழிவில்

சமூக முன்னேற்றத்திற்கு உதவிய திரையிசைப் பாடல்கள்

என்னும் தலைப்பில்

பிறப்பு முதல் இறப்பு வரை

பாடல்களால் நிரம்பித் ததும்பும் மனித வாழ்வை

இராகத்தோடு பாடிப்  படம் பிடித்துக் காட்டினார்

திருச்சி, ஜமால் முகமது கல்லூரி தமிழாய்வுத் துறை

உதவிப் பேராசிரியர்


முனைவர் வே.சிவானந்தம் அவர்கள்.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக

ஓய்வு வெற்ற அலுவலர்


திரு ஜே.எம்.ஆனந்த் அவர்கள்

தலைமையில் நடைபெற்றப் பொழிவிற்கு வந்திருந்தோரை

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி ந.டானியா அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

சாஸ்த்ரா பல்கலைக் கழக, சாஸ்த்ரா தமிழ்ச் சங்கத் தலைவர்


பொறியாளர் க.நவீன் அவர்கள்

நன்றி கூறினார்.

தஞ்சாவூர், பண்டாரவாடை, கிரசண்ட் மெட்ரிக் மேனிலைப் பள்ளி

நிருவாக அலுவலர்


திருமதி க.பத்மாவதி அவர்கள்

நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

ஏடக அரங்கில்

வாழ்வியல் பாடல்கள்

ராகத்தோடு முழங்க

கேட்டோர் மனங்கள்

மகிழ்வால் துள்ள

ஆவண செய்த


ஏடக நிறுவனர் தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.