29 மார்ச் 2026

கனவில் வந்தவர்

 

 

      மருத்துவர்.

     அவர் ஒரு மருத்துவர்.

     ஆங்கில மருத்துவர்.

     அறுவை சிகிச்சை மருத்துவர்.

     ஓய்வின்றி மருத்துவப் பணியாற்றுபவர்.

     அன்றும் அப்படித்தான்.

     ஒரு பெரும், சிக்கலான அறுவை சிகிச்சை.

     சற்று கவனம் குறைந்தாலும் ஓர் உயிர் பறந்து விடும்.

     பலமணி நேரம் செலவிட்டு, திறம்பட அறுவைச் சிகிச்சையினை செய்து முடித்தார்.

     ஓர் உயிர் பிழைத்தது.

      மருத்துவர் மனதில் ஒரு நிம்மதி.

     வீட்டிற்குப் புறப்பட்டார்.

     உடல் அசதியால் துவண்டு போயிருந்தது.

     வீட்டிற்கு வந்தவுடன் முகம், கை, கால் கழுவி, படுக்கையில் சாய்ந்தார்.  

     அடுத்த நொடி ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துபோனார்.

     ஒரு கனவு வந்தது.

     கனவில் ஒரு வெள்ளாடைத் துறவி வந்தார்.

     என்னுடன் வா, என்னுடன் வா எனக் கூறி கையைப் பற்றி இழுக்கிறார்.

     மருத்துவர் திடுக்கிட்டு விழிக்கிறார்.

     என்ன இது? என்றுமில்லாதப் புதுக் கனவு என்று சில நிமிடங்கள் செய்வதறியாது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து யோசிக்கிறார். 

     ஒரு முடிவிற்கு வர இயலாமல், மீண்டும் படுக்கிறார்.

     கண்ணயர்ந்து போகிறார்.

     மீண்டும் அதே கனவு.

     அதே வெள்ளாடைத் துறவி.

     என்னுடன் வா.

     என்னுடன் வா.

     திடுக்கிட்டு விழித்து எழுந்து அமர்கிறார்.

     உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து போகிறது.

     மெல்ல எழுந்தார்.

     தன் வீட்டு நூலகத்திற்குள் நுழைகிறார்.

     மனதில் ஒரே ஒரு கேள்வி.

     யார் அந்த வெள்ளாடைத் துறவி?

     நூலகத்தில் உள்ள நூல்களை ஒவ்வொன்றாய்ப் பார்க்கிறார்.

     இது என்ன நூல்?

     அந்த புத்தகத்தை, புத்தக அடுக்கில் இருந்து வெளியே எடுக்கிறார்.

     புத்தகத்தின் அட்டையில், கனவில் வந்த அதே வெள்ளாடைத் துறவி.

     திருவருட் பிரகாச வள்ளலார்.

     அந்நொடியில், மருத்துவரின் விழியில் நுழைந்து, உடலில் நிறைந்து, உயிரில் கலந்து உறவாய் மாறுகிறார் வள்ளலார்.

பாதி இரவில் எழுந்தருளி

பாவி எனை எழுப்பி

அருட்சோதி கலந்தென் உள்ளகத்தை

சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்.

நீதி நடஞ்செய் பேரின்ப நிதி

நான் பெற்ற நெடும் பேற்றை

ஓதி முடியாதிது என் போல்

இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே.

     அன்று முதல் புது மனிதராய் மாறிப் போனார்.

என் அன்பு தயவானது

என் அறிவு ஞானமானது

என் பதவி சேவையானது

என் பணம் பகிரப்பட்டது

என் புகழ் ஜீரணிக்கப்பட்டது

என் மனம் அமைதியானது.

     மருத்துவர், ஒரு முழுமையான, சுந்த சன்மார்க்கத் தொண்டராய் மாறிப் போனார்.

வள்ளலாரைக் கனவில் கண்ட அந்த நொடி தொடங்கி,

கடந்த 35 ஆண்டுகளாக

வள்ளல் பெருமானின் கொள்கைகளில் திளைத்து

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய

ஜீவகாருண்ய ஒழுக்கமே, பேரின்ப வீட்டின

திறவுகோல் என்பதை உணர்ந்து,

எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணும்,

ஆத்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை

வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து

வாழ்ந்து காட்டி வருகிறார்

இவர்,

இருபது மருத்துவ நூல்களின் ஆசிரியர்

மேலும்

வள்ளலாரின் மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

வள்ளலாரின் அறிவியல் தியானம்

திருவருட்பிரகாச வள்ளலாரின் தெய்வத் தமிழும்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாரமும்

வள்ளலார் கண்ட சாகாக்கலைத் தத்துவம்

முதலான பல நூல்களின் ஆசிரியர்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறை

தலைமைப் பேராசிரியர்

மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ)

தலைமை சிறப்பு நிலைப் பேராசிரியர்

எம்.ஜி.ஆர்.,மருத்துவப் பல்கலைக் கழக சட்டப் பேரவை உறுப்பினர்

மருத்துவத் தமிழ் மேம்பாட்டுக்குழு மாநில துணைத் தலைவர்

மருத்துவப் பல்கலைக் கழக முதுநிலை பாடத்திட்டக் குழு உறுப்பினர்

முதலான பல பொறுப்புகளை வகித்தவர்.

பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

கடந்த 15.2.2026 அன்று சென்னையில் நடைபெற்ற

அனைத்துலக வள்ளலார் மாநாட்டில்

வாழ்நாள் சாதனையாளர் விருது

வழங்கித்

தமிழக அரசால் பாராட்டப் பெற்றவர்.

இவர்தான்

சன்மார்க்க அன்பர்


தஞ்சாவூர், மருத்துவர் பி.கி.சிவராமன் அவர்கள்.

வள்ளலார் வழி வாழ்ந்து வரும் வாழ்நாள் சாதனையாளரை

நாமும் வாழ்த்துவோம், வணங்குவோம்.