19 ஜூன் 2026

ஏடகம் 100



     ஓருவருக்கு ஏடு படிக்க வேண்டும் என்ற ஆசை.

     கிடைத்த  ஓலைச் சுவடிகளை எல்லாம், மார்போடு அணைத்துக் கொண்டு அழுவார்.

     படிக்க முடியவில்லையே என ஏங்குவார்.

     காரணம், அவர் பிறவியிலேயே கண் பார்வையினை இழந்தவர்.

     ஏடுகளைத் தடவியும் படிக்க இயலாது.

     மிகக் கடினம்.

     அந்த மனிதர் மனம் தளரவில்லை.

     கல்லில் எழுதினார்.

     மணலில் எழுதினார்.

    விடா முயற்சியால் பெரும் புலவரானார்.

    சந்திரவாணன் கோவை

    எழுத இயலாவிட்டாலும், இவர் சொல்லச் சொல்ல, இவரது மாணவர் எழுதினார்.

    காஞ்சிபுரத்தில், ஒரு பெரிய அவையில், இவரது சந்திரவாணன் கோவை அரங்கேற்றம்.

     மாணவர் படிக்கிறார்.

    முப்பழச் சேற்றின் அமுதவயல் என்றொரு தொடர்.

     மாணவர் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு அம்மையார் அவைக்குள் நுழைகிறார்.

     கவிஞருக்கு கண்தான் கெட்டிருக்கிறது என்று நினைத்தேன், ஆனால் கருத்தும்என்று இழுத்தார்.

     குரல் பெண் குரலாக இருக்கிறதே என்றார் கவிஞர்.

     குரல், எந்தக் குரலாக இருந்தால் என்ன? பாட்டில் பிழையுள்ளதே, பதில் சொல்லுங்கள்.

     மாணவர் மீண்டும் படித்தார்

     முப்பழச் சேற்றில் அமுத வயல்.

     கவிஞர் பிழையை உணர்ந்தார்.

     கவிஞர் சொல்லச் சொல்ல, மாணவர் எழுதியபோது, செய்திட்ட எழுத்துப் பிழையை உணர்ந்தார்.

     மூன்று பழங்களைப் பிழிந்தால் சாறுதான் கிடைக்குமே தவிர, சேறு கிடைக்காது அல்லவா?

     முப்பழச் சாற்றின் அமுத வயல் என்பதற்குப் பதிலாக மாணவர், முப்பழச் சேற்றின் அமுத வயல் என்று எழுதியிருக்கிறார்.

     கவிஞர் உடனே பிழையைத் திருத்தச் சொன்னார்.

     தம்பி, கொம்பை வெட்டி, காலை நட்டுப் படி.

     அம்மையார் அசந்து போனார்.

     இதுபோன்ற ஒரு புலவரை இதுநாள் வரை பார்த்ததில்லை என மகிழ்ந்து போனார்.

     இவர்தான்,

     அந்தகக் கவி வீரராகவ முதலியார்.

---

      புலவர் ஒருவர், இராமநாதபுரம் அரசரைப் பார்க்கச் சென்றார்.

     மகிழ்வோடு வரவேற்ற மன்னர், அவரை, தன் ஆசனத்தில், தனக்கு அருகில் அமரவைத்து, மரியாதைகள் செய்தார்.

     உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

     நீங்கள்தான் சமஸ்தானத்தையே கொடுத்துவிட்டீர்களே என்றார் புலவர்.

     மன்னர் திடுக்கிட்டுப்போனார்.

     என்ன? சமஸ்தானத்தையே கொடுத்துவிட்டேனா?

     ஆம், சம ஸ்தானத்தையே கொடுத்துவிட்டீர்களே, இதற்கும்மேல் எனக்கு என்ன வேண்டும் என்றார்.

      புலவரின் வார்த்தை விளையாட்டில் மகிழ்ந்த மன்னர், புலவருக்கு ரூ.300 அன்பளிப்பாக வழங்கினார்.

     இந்தத் தொகைதான், புறநானூறு நூலாக மலர்ந்தது.

     அந்தப் புலவர்தான் உ.வே.சாமிநாதய்யர்.

---

     .வே.சா அவர்களை விரும்பாதவர்களும் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள்.

     .வே.சா அவர்களுக்கு, சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரு விழா.

     விருது வழங்கும் விழா.

     மகாமகோபாத்யாய விருது வழங்கும் விழா.

     விருது வழங்கிச் சிறப்பித்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

     இதனைப் பற்றி பாரதி எழுதியிருக்கிறார்.

     விடுதலை அடையாத இந்தியாவில், அயல் நாட்டவர்களாகிய வெள்ளையர்கள், தமிழ்ப் பணி செய்த சாமிநாதய்யருக்கு விருது வழங்குகிறார்கள்.

    விருது வழங்கும் விழாவிற்கு வந்த பாரதி, .வே.சா., அவர்களைப் பாராட்டி அவையில் பாடுகிறார்.

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்கு வாயே.

     பாரதியின் இப்பாட்டுப் பிழை என்று ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.

     உண்மையில், இப்பாட்டில் இலக்கணப் பிழை ஒன்றும் இல்லை, இருந்தும் ஒருவர் வேண்டுமென்றே குற்றம் சாட்டினார்.

     வருத்தப்பட்ட பாரதி, அவையை விட்டு வெளியேறிவிட்டார்.

     விழா முடிந்தபிறகு, .வே.சா அவர்கள் கேட்கிறார்கள்

     அருமையானப் பாட்டு.

     அவர் எங்கே?

---

     மதுரை சேதுபதி கலாசாலையில் ஒரு ஆசிரியர்.

     அவருக்கு இடதுபுற வயிற்றில் ஒரு கட்டி.

     மதுரை மருத்துவர்கள், தஞ்சையில் இருக்கும் ஒரு இசுலாமிய மருத்துவர், இந்த அறுவை சிகிச்சையில் வல்லவர், எனக்கூறி தஞ்சை செல்லச் சொன்னார்கள்.

     சேதுபதி கலாசாலையில், ஊதியமின்றி, ஒருமாத விடுப்பிற்கு விண்ணப்பித்தார்.

     அரசரோ, ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்கினார்.

     தஞ்சை வருகிறார்.

     அறுசை சிகிச்சை செய்யப்பெற்று குணமடைந்தார்.

     அந்நாளில், தஞ்சை, தெற்கு வீதியில் ஒரு கூட்டம்.

     தலைமை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

     அவரைத் தொடர்ந்து பேசியவர் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்.

     இருவரும், ஒரு எடுத்துக்காட்டு பற்றிப் பேசினர்.

     மூன்றாவதாய் அந்தப் புலவர் மேடையேறினார்.

     நாட்டார் தலைமையில், நகரத்தார் பேசினார், இப்பொழுது காட்டான் பேசுகிறேன்.

     கூட்டம் திடுக்கிட்டது.

     காட்டான் என்றால் எடுத்துக் காட்டான் பேசுகிறேன் எனக்கூறி, இருவரின் கருத்தையும் மறுத்துப் பேசினார்.

     இவர்தான் சோழவந்தான் அரசஞ் சண்முகனார்.

     தொல்காப்பியத்திற்குப் பாயிரவிருத்தி எழுதியவர்.

     இவர்கள் எல்லாம், ஓலைச் சுவடிகளை வைத்துத்தான் படித்தார்கள், பண்டிதர் ஆனார்கள்.

     அப்பொழுது காகிதமே கிடையாது.

---

     அவர் ஒரு மிகப்பெரும் அறிஞர்.

     திருக்குறளை ஆராய்ந்து அற்புதமான நூல் ஒன்றினை எழுதியவர்.

     திருக்குறள் சொல்லடைவு.

     திருக்குறள் 4310 சொற்களால் ஆனது என இவர்தான் கணக்கிட்டு இந்நூலில் கூறினார்.

     அதுமட்டுமல்ல,

     எந்த சொல், எந்த பொருளில், எந்தெந்த இடங்களில் வருகின்றது என்பதை பத்து ஆண்டுகள் ஆய்ந்து இந்நூலை எழுதினார்.

     இந்நூலை அச்சிட பதிப்பகத்தாரிடம் கொண்டுபோய் கொடுத்தபோது, பத்தாண்டுகால உழைப்பிற்கு அவர்கள் கொடுத்த தொகை என்ன தெரியுமா?

     ரூ.25

     பொருள் வாராது.

     புகழ் வாராது.

     இவர்தான் சாமி.வேலாயுதம்

---

     எழுதப்படுதலின் எழுத்தே அவ்வெழுத்து

அசைத்துஇசை கேட்டலின் அசையே

அசைஇயைந்து சீர்கொள் நிற்றலின் சீரே

     எழுதப்படுதலின் எழுத்தே என்பது ஒரு எழுத்தைத்தான் குறிக்கும்.

     சொல்லப்படுகின்ற எழுத்தை அது குறிக்காது.

     எழுத்து என்பது, உண்மையிலேயே, முதலிலே எழுதப்பட்டது அல்ல.

     முதலில் பேசப்பட்டது.

     எனவே சொல்லில் இருந்து எழுதப்படுதலின் எழுத்து என்றார்.

     முதலில் ஒலி வடிவம்.

     பின்னர்தான் வரி வடிவம்.

     அதன்பின் சித்திர எழுத்து

     தொடர்ந்து பலவகையான எழுத்துக்கள்.

     1876 இல்தான் முதன் முதலில் சுவடிகளைப் பார்த்து ஆராயக்கூடியப் பணியினைத் தொடங்கியவர் ஹீலர்.

     அதன்பிறகு டி.என்.சுப்பிரமணியன் என்பவர் சுவடிகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார்.

     அக்காலத்தில் சுவடிகளைத்தான் எல்லோரும் படித்தார்கள்.

---

தன்னலன் கருதாது,

பொருள் நலன் நாடாது,

புகழைத் தேடி ஓடாது

பணியாற்றுபவராக

முனைவர் மணி.மாறன்

அவர்களை நான் பார்க்கிறேன்.

     எழுத்துக் கலையின் மிக மிக நுட்பமான, அரிதினும் அரிதானப் பணியினை முனைப்புடன் செய்பவராக இருக்கிறார்.

     ஏடகம் என்னும் உன்னத, உயரிய அமைப்பினை நிறுவி, ஓலைச்சுவடி பயிற்சி வகுப்புகள், சுவடி பதிப்புப் பணி, ஞாயிறு முற்றம் என்னும் பெயரில் தமிழின் தகைமை சாற்றும் பொழிவுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

ஞாயிறு முற்றத்தின்

நூறாவது பொழிவை

எட்டிப் பிடித்திருக்கிறார்.

     முனைவர் மணி.மாறன் அவர்கள் பணி கண்டு வியந்து, ஹவாய் தீவில் இருக்கும் அம்மையாரிடம் பேசினேன்.

     தொடர்ந்து ஓலைச் சுவடி வகுப்புகளை நடத்தி வருகிறார். மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார். இவரை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

     வைதேகி அம்மையார் உடனே பதிலளித்தார்.

     வாடிகனிலும், இலண்டனிலும் தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன.

     அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

     சுவடிகள் கிடைக்கப்பெற்றவுடன், இச்சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியினை முனைவர் மணி.மாறன் அவர்களைக் கொண்டு சிறப்பாகச் செய்வோம்.

     மேலும், உலகெங்கிலும் இருக்கின்ற தமிழ் ஆர்வலர்களுக்கு, ஏடு படிப்பதைப் பற்றி, இணைய வழி பாடம் நடத்த விரைவில் ஏற்பாடு செய்கிறோம்.

     மாதம் ஒன்றுக்கு நான்கு பொழிவுகள் வீதம் நடத்தட்டும்.

     மாண்புமிகு பாரதப் பிரதமர் வரை எட்டியிருக்கும், முனைவர் மணி.மாறன் அவர்களின் தன்னலமற்ற பணி, இனி இந்திய எல்லையினைக் கடந்து, உலகெங்கும் பரவ ஆவண செய்வோம்.

திருமதி வைதேகி

டாக்டர் அழகப்பச் செட்டியார் அவர்களின் பெயர்த்தி.

---

     திருமதி வைதேகி அவர்களின் பதிலினை மகிழ்வோடு அறிவித்தப் பொழிவாளர் மேலும் சொன்னார்.

முனைவர் மணி.மாறன் அவர்கள் செய்துவரும்

பணி மிகவும் பாராட்டத் தக்கது.

இன்று சுவடிப் பணியினைச் செய்வதற்கு

ஆள் கிடையாது.

எனவே

முனைவர் மணி.மாறன் அவர்களை

ஏடக எழுத்தறிவித்தவர்

என்று அறிவிக்கிறேன்.

பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன் என்றார்.

அரங்கில் எழுந்த வாழ்த்தொலி விண்ணைத் தொட்டது.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 14.6.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை

நூறாவது சொற்பொழிவு.

தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் பதிவாளர்


தமிழ்ச் செம்மல், பேராசிரியர் , முனைவர் சி.தியாகராஜன் அவர்கள்

தலைமையில்

இந்திய ஆட்சிப் பணியாளர் தேர்வுக்குழு உறுப்பினர்

முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

ஏடக எழுத்தறிவித்தவர்

என்னும் தலைப்பில் உரையாற்றி.

முனைவர் மணி.மாறன் அவர்களை

ஏடக எழுத்தறிவித்தவராக

அறிவித்து அமர்ந்தபோது, ஏடக அரங்கே மகிழ்ந்து போனது,

நெகிழ்ந்து போனது.

ஏடகப் பெரும்புரவலர், சிங்கப்பூர், மேனாள் விரிவுரையாளர்

கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள்

நன்றி கூற பொழிவு இனிது நிறைவுற்றது.

முன்னதாக, பொழிவு கேட்க வந்திருந்தோரை

ஏடக ஊடகப் பிரிவு பொறுப்பாளர்

கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

வரவேற்றார்.

கம்பன் கழகத் துணைத் தலைவர்

குறள்நெறிச் செல்வர் இராம.சந்திரசேகரன் (எ) அழகு நிலவன் அவர்கள்

அழகுத் தமிழால் விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.



தன் பெண்டு, தன் பிள்ளை

சோறு வீடு, சம்பாத்தியம்

இவையுண்டு தானுண்டு

என்று பாராது – ஓய்வு நேரத்திலும்

சுவடி, சுவடி என சுவடித் தமிழுக்காகவே

உழைத்து – இன்று

ஏடக எழுத்தறிவித்தவராய்

உயர்ந்து நிற்கும்

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களின் புகழ்

எல்லைகளற்று, எங்கும் பரவப்

பாராட்டுவோம் வாழ்த்துவோம்.