05 ஜூலை 2026

சோற்றுத் துருத்தி

 


     இராமநாதபுரம் அரண்மனை.

     அரியாசனத்தில் அரசர் பாஸ்கர சேதுபதி.

     சரியாசனத்தில் அந்தத் தமிழறிஞர்.

     அரசருக்கு மனமெல்லாம் மகிழ்ச்சி.

     தமிழறிஞருக்கு வாரி வாரி வழங்க வேண்டும் என்ற எண்ணம்.

     ஒரு கணம் யோசித்தார்.

     அடுத்த கணம் அறிவித்தார்.

     அறிஞரே, தங்களுக்கு ஒரு பெரும் கிராமத்தையே அன்பளிப்பாக வழங்குகிறேன், ஏற்றருள்க.

    அறிஞர் வணங்கினார்.

    வேண்டாம் மன்னா, வேண்டாம்.

     தாங்கள் வழங்கும் கிராமத்தைப் பெற்றுக் கொண்டால், அதன் வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பதிலேயே, என் முழு நேரமும், கவனமும் சென்று விடும்.

     தமிழாய்வுக்கு நேரம் இருக்காது, பழைய நூல்களைப் பதிப்பிக்கவும் தோன்றாது.

     வேண்டாம் மன்னா வேண்டாம்

     ஒரு கிராமத்தையே ஒரு அறிஞர் தமிழுக்காக மறுத்திருக்கிறார்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     இவர்தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்

---

     காவிரி.

     நமக்குத்  தெரியும்.

     காவிதி.

     காவிதி என்றால் நம்மில் பலருக்கம் தெரியாது.

     எனக்குத் தெரியவே தெரியாது.

     காவிதி.

     மதுரையை அரசாண்ட பாண்டிய மன்னர்கள், சான்றோர்களுக்கு வழங்கும் பட்டங்களுள் ஒன்றுதான் இந்த காவிதி.

     அதுவும் யாருக்கு?

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்த அடக்கி

அன்பும் அறனும் ஒழியாது காத்து

பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த

சென்மை சான்ற காவிதி மாக்களும்.

-          மதுரைக் காஞ்சி

     அரசனிடம் உள்ள நன்மைகளையும், தீமைகளையும் அறிந்து, அத்தீங்குகளை ஆராய்ந்து, ஒழுகாமல், அடக்குபவர்களே காவிதி மக்கள்.

      மன்னருக்கே புத்தி புகட்டுபவர்கள்தான், மன்னர்களுக்கு நல் வழி காட்டுபவர்கள்தான் காவிதி மக்கள்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

---

     நம்முடைய கிராமப்புறத் தேவதைகள் எல்லாம் கையிலே ஆயுதங்களை ஏந்தி இருக்கின்றனவே ஏன்?

     உண்மைதானே?

     நம் பயணத்தின்போது, நகர்புறங்களுக்கு  வெளியே, பெரிய உருவில், உருட்டும் விழிகளுடன், நாக்கை நீட்டி, மடக்கிக் கடித்துக் கொண்டு, பெரிய அரிவாளைக் கையில் ஏந்தி அமர்ந்திருக்கும் தெய்வங்களைக் கண்டு மருண்டிருப்போம்.

     கடவுளர் கையில் ஆயுதங்கள் எதற்கு?

     விடை கூறுகிறது, இந்த நூல்.

---

     நமக்கெல்லாம் வயிறு என்றால்தான் தெரியும்?

    வயிறு முட்ட முட்ட சாப்பிடவும் தெரியும்.

     ஆனால் வயிற்றிற்கு, வேறு இரண்டு பெயர்கள் இருக்கின்றன, எனக்கூறி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இவர்.

     சோற்றுத் துருத்தி.

     தூராத் துருத்தி

---

     கொங்கு நாட்டின், பேரூரில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, கரந்தையில் கால் பதித்திருக்கிறார் இவர்.

     கரந்தைக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

பேரூராரின் முதல் படைப்பு

தலைப் பிரசவம்


இலக்கிய அளவல்

     எச்செயலில் ஈடுபட்டாலும் முழுமனதோடு  செய்தல்.

     வகுப்பறையில் மட்டுமல்ல, இலக்கியக் கூட்டங்களிலும், கண்டனக் கூட்டங்களிலும் ஓங்கி ஒலிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்.


நண்பர், முனைவர் ப.ஜெயராஜ் அவர்களின்

இலக்கிய அளவல்.

படித்துப் பாருங்கள், மகிழ்ந்து போவீர்கள்.

 

 

செண்பகம் வெயீட்டகம்,

2, சரவணா நகர், பெரிய புதுப்பட்டினம்,

கீழ வஸ்தாச்சாவடி, தஞ்சாவூர் – 614 904

அழைக்க 80 12 31 19 56

விலை ரூ.120