தமிழ், தமிழ், தமிழ் என்று சொன்னால் அமிழ்து, அமிழ்து என்று ஒலிக்கும் என்பார் பாரதிதாசன்.
தமிழை அமிழ்து என்று சொல்வதற்கு, ஏராளமான காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஒரு புலவர் காலை விந்தி, விந்தி நடந்து வருகிறார்.
அதனைக் கண்ட வேறொரு புலவர் கேட்கின்றார்.
நேற்றுவரை நன்றாகத்தானே இருந்தீர்கள், என்னவாயிற்று? எதற்காக காலை விந்தி விந்தி
நடந்து வருகிறீர்கள்?
அதை என் கேட்கிறீர்கள்? முக்காலைக் கொண்டு நடக்கையிலே, ஐந்து தலை பாம்பு வந்து, அழுத்திக் கடித்தது என்றார்.
அதற்கு அந்த மற்றொரு புலவர் உடனே ஒரு மருத்துவம் சொன்னார்.
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின்
கால் வாங்கித் தேய்
என்றார்.
அதாவது, மூன்று
காலை என்றால் இரண்டு கால் மற்றும் ஊன்றுகோலை ஊன்றி நடக்கையிலே, ஐந்து தலை நாகம், ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சி
முள் ஆழமாகக் குத்தியது என்றார்.
இதற்கு மருந்து, சதம் என்றால் நூறு, தசம் என்றால் பத்து, பத்து ரதன் என்றால் தசரதன்,
தசரதனின் புத்திரன் ராமன், இராமனின் மித்திரன் அதாவது
நண்பன் சுக்ரீவன்,
சுக்ரீவனின் சத்துரு அதாவது எதிரி வாலி,
வாலியின் பத்தினி தாரை.
தாரையின் காலை வாங்கிவிட்டால் தரை.
அதாவது காலைத் தரையில் தேய்த்து நடந்தால் முள் உதிரும்
என்று பொருள்.
இதுதான் தமிழ்.
தமிழமுதம்.
---
நாயன்மார் ஒருவர் பாடினார்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்
குனித்த என்றால் வளைந்த என்று பொருள்.
அதாவது, தமிழ்
இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வளையும்.
சாதாரணமாக சொல்லக்கூடிய விசயத்தை, இவ்வளவு சுற்றி வளைத்தும், மிகப் பெரிய காவியத்தை சாதாரணமாகவும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்
தமிழ்ப் புலவர்கள்.
கம்பன் நாட்டுப் படலம் எழுதுகிறார்.
எவ்வளவு அழகாக இருக்கிறது கோசலை நாடு.
இந்த கோசலை நாட்டினிலே, வயல் வெளிகளிலே நிறைய பயிர்கள் முளைத்திருக்கின்றன.
ஆங்காங்கே தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
தாமரை மலர்கள் பூத்திருக்கின்றன.
அப்படி ஒரு தாமரை மலரிலே, ஒரு அன்னப் பறவை, தன்னுடைய குஞ்சுகளை வைத்துவிட்டு, அந்தக் குஞ்சுகளுக்கு இறை தேடுவதற்காக
எங்கோ போயிருக்கிறது.
போன அன்னம் திரும்பி வரவேயில்லை.
அப்பொழுது எங்கிருந்தோ ஒரு எருமை ஒன்று, அந்த இடத்தில் தண்ணீர் அருந்துவதற்காக
வருகிறது.
அந்த எருமை அப்பொழுதுதான் கன்று ஈன்றிருக்கிறது.
அந்த எருமை, தண்ணீருக்குள்ளே
காலை வைத்தவுடன்,
எங்கிருந்தோ, ஒரு கன்று மா என்று குரல் எழுப்புகிறது.
இந்த எருமைக்கு தன் குழந்தையின் நினைவு வருகிறது.
கன்றினை நினைத்தவுடன், அந்தத் தாய் எருமையின் மடியில் இருந்து, அப்பொழுதே பால் சுரக்கிறது.
அந்தப் பால், வாயை
திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்த அன்னப் பறவையின் குஞ்சுகளின் வாயிலே போய் விழுகிறது.
எருமையின் பாலை அருந்திய அன்னக் குஞ்சுகள் அப்படியே உறங்குகின்றன.
தென்றல் வீசுகிறது.
தாமரை மலர்கள் அசைகின்றன.
இது தாலாட்டுவது போலவே இருக்கிறது.
டுபுக், டுபுக்
என்று தேரைகள் எல்லாம் கூவ,
அது இன்னும் தாலாட்டுப்
பாடல் பாடுவது போல் இருக்கிறது.
இக்காட்சியைச் சொல்ல வருகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
சேல்
உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செங் கால் அன்னம்
மால்
உண்ட நளினப் பள்ளி,
வளர்த்திய
மழலைப் பிள்ளை
கால்
உண்ட சேற்று மதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பால்
உண்டு,
துயில, பச்சைத் தேரை தாலாட்டும்
வார்த்தைகளினாலே ஒரு ஓவியம்.
இதிலே பத்தாயிரம் பாடல்கள் வரை நீண்டு இருக்கின்ற இராமாயணத்தினை
அடக்கிவிட்டான் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
தாய் எருமையினுடைய பால், யாருக்குப் போய் சேர்ந்திருக்க வேண்டும்?
அதனுடைய கன்றுக்குப் போய் சேர்ந்திருக்க வேண்டும்.
கன்றுக்கும் போகவில்லை.
அந்த எருமையினை யார் வளர்க்கிறார்களோ, அவர்களுக்கும் போய் சேரவில்லை.
எங்கேயோ இருக்கிற தாமரை மலரிலே, படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்ற
அன்னக் குஞ்சுகளுக்குப் போய் சேர்ந்திருக்கிறது.
இது எப்படி இருக்கிறது என்றால், அயோத்தியினுடைய பட்டம், அதற்கு உரிமையாளனான இராமனுக்குப்
போய் சேர்ந்திருக்க வேண்டும்.
இராமனுக்குப் போய் சேரவில்லை.
அடுத்ததாகப் பரதனுக்குப் போய் சேர்ந்திருக்க வேண்டும்.
பரதனுக்கும் போய் சேரவில்லை.
எங்கேயோ இருந்த பாதுகைகளுக்குப் போய் சேர்ந்தது.
இதுதான் இராமாயணம் என்று சொல்லி, பத்தாயிரம் பாடல்களிலே விரிந்திருக்கும்
இராமாயணத்தை,
ஒரு பாடலிலே சொன்னான்
கம்பன்.
ஒரு சாதாரண விசயத்தைக் கூட, சுற்றி வளைத்துச் சொல்வது, சுற்றி வளைத்துச் சொல்லவேண்டிய
விசயத்தைக் கூட இயல்பாக ஒரே வரியில் சொல்வது.
இந்த அழகு தமிழுக்கு உண்டு.
---
பாரதி புதுச்சேரியில் தங்கியிருக்கிறார்.
அவரது நண்பர் குவளைக் கண்ணன்.
அதிகாலை நேரத்தில், பாரதியும் குவளைக் கண்ணனும் அருகில்
இருந்த ஒரு மடுவில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
மடுவிற்குச் செல்லும் வழியில் தினந்தோறும் குவளைக் கண்ணன்
காத்திருப்பார்.
இருவரும் மடுவிற்குச்
செல்வார்கள்.
இதுதான் வழக்கம்.
ஒரு நாள் பாரதி வந்துவிடுகிறார்.
குவளைக் கண்ணனைக் காணவில்லை.
எனவே பாரதி குவளைக் கண்ணனின் வீட்டிற்குச் செல்கிறார்.
கதவைத் தட்டுகிறார்.
குவளைக் கண்ணனின் வயது முதிர்ந்த, கூன் விழுந்த தாயார், கண்களை இடுக்கிக் கொண்டு, யாரது? என்று கேட்கிறார்.
நான் குவளைக் கண்ணனின் நண்பன். என்னை பாரதி என்று அழைப்பார்கள்.
ஓ,
நீ தான் அந்த
பாரதியா?
கண்ணன் சொல்லியிருக்கிறான்.
நீ ஒரு கவிஞராமே? உனக்கு ஒரு சுப்ரபாதம் பாடத் தெரியுமோ?
சுப்ரபாதமா? சுப்ரபாதம்
என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது?
உன்னைப் போய் பெரிய கவிஞன் என்று சொல்லி, என் மகன், உன் பின்னால் அழைந்து கொண்டிருக்கிறான். அவனைச் சொல்ல வேண்டும்.
குவளைக் கண்ணன் வெளியே வந்தான்.
அம்மா, நான்
போய் வருகிறேன்.
போ,
போ, இவன் பின்னாலே போனால், நீ போய் சேரவேண்டியதுதான் என்று
தாயினுடைய உள் மனது பேசுகிறது.
மடுவுக்குச் செல்லும் வழியில், பாரதி கேட்டார்
கண்ணா, ஏதோ
சுப்ரபாதமாமே அது என்ன?
ஐயா,
சுப்ரபாதம் என்றால்
திருப்பள்ளி எழுச்சி,
கோயில்களில் இறைவனை
விடியற்காலையில்,
அன்பினாலே எழுப்புவதற்காக, அடியவர்கள் பாடுவது.
ஓ,
அவ்வளவுதானா?
அடுத்த நாள், காலை
பாரதி வழக்கத்திற்கும் முன்னதாகவே
போய்விடுகிறார்.
கதவைத் தட்டுகிறார்.
தாயார் வருகிறார்.
இப்பொழுது, அந்தத் தாயாருக்கு பாரதியிடம்
பேச விருப்பம் இல்லை.
திருப்பள்ளி எழுச்சி கூட தெரியாத, கவிஞரிடம் எனக்கென்ன பேச்சு.
பேசாமல், கதவைத்
திறக்கிறார்.
பாரதி வணங்குகிறார்.
அம்மா வணக்கம்., திருப்பள்ளி
எழுச்சி தெரியுமா?
என்று அந்தத்
தாயைக் கேட்டு,
பாரதி பாடத் தொடங்குகிறார்.
பொழுது
புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை
யிருட்கணம் போயின யாவும்
எழுபசும்
பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து
விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுணை
வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர்
பல்லாயிரவர் சூழ்ந்த நிற்கின்றோம்
விழி
துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பிது
காண் பள்ளி யெழுந்தருளாயே
என்று
பாடி, எல்லோரும் இறைவனுக்குத் திருப்பள்ளி
எழுச்சி பாடியபோது,
பாரத மாதாவிற்குத்
திருப்பள்ளி எழுச்சி பாடியவர் பாரதி.
இன்றைக்கும் பாப்பாரப்பட்டியிலே, பாரதமாதாவிற்கு ஒரு கோயில் இருக்கிறது.
எப்படி சிவன் கோயில்களில் 63 நாயன்மார்களுக்கு சிலைகளை வைத்திருக்கிறார்களோ? எப்படி பெருமாள் கோயில்களில்
பன்னிரு ஆழ்வார்களின் சிலைகளை வைத்திருக்கிறார்களோ? அதைப் போல, பாரத மாதாவின் கோயிலைச் சுற்றி, தேசபக்தர்களின் சிலைகளை வைத்திருக்கிறார்கள்.
அது பாப்பாரப்பட்டி சுப்ரமணிய சிவத்தினுடைய கனவு.
அந்தக் கனவிற்கு வித்திட்டது, பாரதியாரின் இந்தப் பாடல்.
பாரதியினுடைய தமிழை அனுபவித்தவர்கள், தமிழை அமுதென்றுதான் சொல்லுவார்கள்.
---
தமிழிலே இருக்கின்ற சந்தம் இருக்கிறதே, அது மிக மிக அழகு.
தமிழிலே சந்தம் கொட்டிக் கிடக்கிறது.
இந்த இரு பாடல்களையும் பாருங்கள், அப்பொழுதுதான் தமிழின் அழகு
முழுமையாய் புரியும்.
கும்பகர்ணன் மிகப்பெரிய மலையைப் போல் படுத்து உறங்கிக்
கொண்டிருக்கிறான்.
அவன் மூச்சை உள்ளே இழுக்கும்பொழுது, அருகில் இருக்கும் மனிதர்கள்
எல்லாம், அவன் மூக்கிற்குள் செல்கிறார்கள்.
மூச்சை இழுத்து பின் வெளியே விடும்பொழுது, உள்ளே சென்றவர்கள் எல்லாம், பறந்து வந்து வெளியே
விழுகிறார்கள்.
கும்பகர்ணன் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது போர் வந்துவிடுகிறது.
அவனை எழுப்பி ஆகவேண்டும்.
எப்படி எழுப்புவது?
உலக்கைகளைக் கொண்டுபோய் இடித்து இடித்து எழுப்புகிறார்கள்.
இந்நிகழ்வை ஒரு பாட்டில் விவரிக்கிறார் கம்பர்.
படித்துப் பாருஙகள், உலக்கை இடிக்கிறபோது, எப்படி, என்ன ஒலி எழுமோ, அந்த ஒலி, அந்த சந்தம் இந்தப் பாட்டில்
ஒலிப்பதைக் கேட்கலாம்.
உறங்குகின்ற
கும்பகர்ண,
உங்கள்
மாய வாழ்வெ லாம்
இறங்குகின்றது, இன்று காண், எழுந்திராய், எழுந்திராய்
கறங்குபோல
வில் பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய், இனிக் கிடந்து உறங்குவாய்
இதேபோல் இன்னொரு பாடல்.
சீறாப்புராணப் பாடல்.
முகமது நபி அவர்கள், குதிரையில் அமர்ந்தவாறு, வீதிகளின் வழியே பயணிக்கிறார்.
அவரைப் பார்ப்பதற்காகப் பெண்கள் எல்லாம் குவிகிறார்கள்.
பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்.
மென்மைமிகுந்த பெண்கள் ஏராளமான நகைகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள்.
உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை நிறைய நகைகளை அணிந்து
கொண்டிருக்கிறார்கள்.
அந்த நகைகள் ஒன்றோடு ஒன்று மோதி, சிலீர் சிலீர் என்ற ஒலியை எழுப்புகின்றன,
இத்தகு பெண்கள் முகமது நபியைக் காண வருகிறார்கள்.
பெண்களின் மென்மையையும் காட்ட வேண்டும், அவர்கள் வேகமாக ஓடிவரும் பொழுது, நகைகள் ஒன்றோடு ஒன்று மோதி
எழும் ஒலியினையும் காண்பிக்க வேண்டும்.
பாட்டு மலர்கிறது.
பதச்
சிலம்பரங்கள் சூழ வந்து
பண்புற
முகமன் கூறிச்
செதிலுறு
மரக தத்தால்
செய்தபொற்
பீடத் தேற்றி
மதியுறு
முகத்தார்க் கெல்லாம்
வள்ளலார்
வடிவைப் பெற்ற
முதியவர்
மகிழ்ர்ச்சி கூர
முன்வைத்து
வாழ்த்தி னாரே
---
நதிக்கரையிலே பூக்கள் பூத்திருக்கும்.
பார்த்திருப்போம்.
கடல் பூத்தது என்றால் எப்படி இருக்கும்?
அதுவும் எப்படி?
அழகான சந்திரன் பூ பூத்தாற்போல் இருந்தால் எப்படி இருக்கும்.
இப்பாடலைப் பாருங்கள்.
மதிப்புலம்
கடல் பூத்தென்ன மலர்ந்தவன் முகத்தைக் கண்டு
கதிப்பொலி
வெயில் முக்கோடி கண்டெனக் களிப்புக் கூர்ந்து
விதிப்புறு
தூதர் தம்மை மேன்மையால் வாழ்த்தி நின்று
துதிப்பொடு
பணிந்து போற்றித் தொழுது நின்றிருந்தாரன்றே
---
தமிழுக்கு ஒரு சிறப்பு உண்டு.
எல்லோரும் எங்கேயோ இருக்கின்ற கடவுளைத் தெரிந்தவர் என்று
சொல்கிறார்கள்.
ஆனால் அந்தக் கடவுளையும் விட்டுவைக்காமல், வம்புக்கு இழுக்கின்ற தன்மை தமிழுக்கு
உண்டு.
திருச்சிக்கு அருகிலே உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சார்ந்தவர்
ராமகவிராயர் என்னும் புலவர்.
வறுமையில் வாடுபவர்.
ஒருமுறை, திருச்சி
மலைக்கோட்டை,
உச்சிப் பிள்ளையாரைப்
பார்க்கப் புறப்படுகிறார்.
பல வருடங்களுக்கு முன், எப்போதோ ஒரு வள்ளலைப் பாடி, பண முடிப்பும், இரு சால்வைகளையும் அன்பளிப்பாய்
பெற்றவர் இவர்.
அதில் ஒரு சால்வை முற்றாய் கிழிந்து விட்டது.
மற்றொரு சால்வையில், ஆங்காங்கே ஓட்டைகள்.
ஓட்டைகள் வெளியே தெரியாமல் இருக்க, சார்வையை, விசிறி மடிப்பாய் மடித்து, மேலே போட்டுக் கொண்டு போகிறார்.
அந்த சால்வையின் ஒரு நுனியில், இரண்டு காசுகளை முடிந்து வைத்திருக்கிறார்.
மாலை வேளையில், குளிந்த காற்று விசுகிறது.
பிள்ளையாரின் நினைவில் இவர் மலை ஏறத் தொடங்குகிறார்.
பிள்ளையாரைப் பார்க்க எப்படி வெறும் கையோடு போவது?
சால்வையில் முடிந்து வைத்திருந்த இரண்டு காசுகளுள் ஒன்றைக்
கொடுத்து,
பழங்களையும், பூவையும் வாங்கிக் கொண்டு மலை
ஏறுகிறார்.
உச்சிப் பிள்ளையாரை தரிசணம் செய்கிறார்.
மனமகிழ்வோடு, உள்ளம்
குளிர இறைவனைப் பார்த்து அனுபவித்துவிட்டு கீழே இறங்கத் தொடங்குகிறார்.
இறங்கும்போது, ஏதோ ஒன்று குறைவது போலத் தோன்றுகிறது.
என்னவென்று தெரியவில்லை.
பூ,
பழம் எல்லாம்
இறைவனுக்குக் கொடுத்தாகிவிட்டது.
ஓட்டைகள் வெளியே தெரியாமல் இருக்க, விசிறி மடிப்புபோல் மடித்து
வைத்திருந்தார் அல்லவா,
ஒரு சால்வை, அந்தச் சால்வையைக் காணவில்லை.
யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.
சால்வை போய்விட்டது.
சால்வையில் முடித்து வைத்திருந்த, ஒரு காசும் போய்விட்டது.
எந்தப் படுபாவி என் சால்வையை எடுத்தானோ தெரியவில்லையே.
புலம்புகிறார்.
புலம்பப் புலம்ப, சிறிது நேரத்தில், கோபமெல்லாம் பிள்ளையார் மேல்
திரும்புகிறது.
ஏ,
பிள்ளையாரே, உன்னைப் பார்க்க வந்தேனே, என்னைச் சொல்ல வேண்டும்.
மனம் நொந்து பிள்ளையாரையே கடிந்து, ஒரு பாடல் பாடுகிறார்.
தம்பியோ
பெண் திருடி,
தாயாருடன்
பிறந்த
வம்பனோ
நெய்திருடி மாயனாம் –
அம்புவியில்
மூத்தபிள்ளை
யாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தில்
உள்ள குணம்.
ஆனால், இப்பாடலால்
கொபம் கொள்ளாத பிள்ளையார்,
அப்பாடலில் உள்ள
தமிழுக்காக,
அப்புலவருக்கு
ஏராளமான பொன்னையும்,
பொருளையும் கொடுத்து
வாழ வைத்தது,
தனிக் கதை.
இறைவனே தமிழுக்காக இறங்கி வருகிறான் என்பதுதான் தமிழக்குப்
பெருமை.
---
திருமழிசை ஆழ்வார் என்று ஒரு ஆழ்வார்.
கணிக் கண்ணன் என்பார் இவரது சீடர்.
இந்த ஆழ்வாருக்கு ஓர் அற்புதமான சக்தி இருந்தது.
யாராவது நோய்வாய்ப் பட்டவர்கள், இந்த ஆழ்வாரின் அருகில் வந்தால்
போதும், இவரது பார்வை பட்டதும், அந்த நோய் குணமாகிவிடும்.
இத்தகு திறமை வாய்ந்த ஆழ்வார், காஞ்சிபுரத்திற்கு அருகிலே நடந்து போய்க்
கொண்டிருந்தபோது,
ஒரு கூன் விழுந்த
கிழவி எதிரே வந்து நின்றார்.
அம்மா, நான்
உனக்கு என்ன செய்ய வேண்டும்?
எனக்கு யாருமில்லை, என்னை இந்த முதுமையில் இருந்து விடுவித்தால்
போதும்.
ஆழ்வார் ஒரு பாட்டுப் பாடுகிறார்.
அடுத்த நொடி, அந்த
வயது முதிர்ந்த கிழவி,
அழகிய இளம் பெண்ணாக
உரு மாறுகிறார்.
இந்தப் பெண், ஒரு
நாள், உப்பரிகையிலே, அதாவது மாடியிலே நின்று, தன் கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அந்த வழியாக வந்தான் ஒரு பல்லவ மன்னன்.
இந்த அழகியப் பெண்ணைப் பார்த்தான்.
மயங்கினான்.
அந்த அழகியப் பெண்ணை திருமணமும் செய்து அரசியாக்கினான்.
ஆண்டுகள் செல்லச் செல்ல பல்லவ மன்னனுக்கு முதுமை தட்டுகிறது.
ஆனால் அரசியோ இளமை குன்றாமல் அப்படியே இளமையோடு இருக்கிறார்.
அரசன், தன் மனைவியிடம் இளமையின் இரகசியத்தைக்
கேட்டான்.
ஒரு ஆழ்வாரிடத்திலே போய் நின்றேன். இளமை கிடைத்தது. அந்த ஆழ்வாருடைய சீடர் கணிக்
கண்ணன் என்பவர்,
நாள்தோறும், நம்முடைய அரண்மனைக்கு வருகிறார்., பிச்சை எடுத்து உண்பதற்காக
வருகிறார்.
நீங்கள் அவரிடத்திலே போய், உங்களை ஆழ்வாரிடத்திலே கொண்டு போய்
சேர்க்கச் சொல்லுங்கள்.
அவர் பாடினால்
உங்களுக்கு இளமை கிடைக்கும் என்றார்.
அடுத்த நாள், கணிக்
கண்ணனுக்காக,
அரண்மனை வாசலிலேயே
காத்துக் கிடந்தான் மன்னன்.
கணிக் கண்ணன் வருகிறான்.
மன்னர் வணக்கம் சொல்லி, கணிக் கண்ணரே, உங்கள் ஆழ்வார் இருக்கும் இடத்திற்கு
என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்.
எதற்காக அழைத்துச் செல்லவேண்டும்?.
உங்கள் ஆழ்வார் பாடினால், இளமை திரும்புமாமே? எனக்கு இளமை வேண்டும். என்னை அழைத்துப் போ.
அப்படி அழைத்துக் கொண்டு செல்ல இயலாவிட்டால், நீ
பாட்டுப் பாடு, நான் இளமையினைப் பெறுகிறேன்.
அவருக்கு அந்த சக்தி இருக்குமானால், அவருக்குத் தொண்டாற்றும் உனக்கும்
அந்த சக்தி இருக்கும்.
எனவே நீ பாடினாலே
என் இளமை திரும்பும்.
பாடு என்றார்.
கணிக் கண்ணன் மறுக்கிறான்.
நான் பெருமாளைப் பாடும் வாயால், மானிடர்களைப் பாடுவதில்லை.
நீ பாடித்தான் ஆகவேண்டும்.
ஒரு நாட்டினுடைய அரசனைப் புகழ்ந்து பாடுவது என்பது, இறைவனைப் பாடுவதற்குச் சமம், எனவே என்னை நீ பாடு என கட்டாயப்படுத்தினார்.
கணிக் கண்ணன் பாடினான்.
நின்றார்
இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம்
சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும்ய
அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங்
கணைந்தவர் சேர்கின்ற வாறே
அரசன் கோபமடைந்தான்.
என்ன?
என்னைப் பற்றிப்
பாடச் சொன்னால், நீ திருமாலைப் பற்றிப் பாடுகிறாயே.
நீங்கள் என்ன சொன்னீர்கள். திருமாலைப் பாடினால் அரசனைப் பாடுவதாக
அர்த்தம்,
அரசனைப் பாடினால்
திருமாலைப் பாடியதாக அர்த்தம் என்றீர்கள் அல்லவா?
நான் திருமாலைப் பற்றிப் பாடினேன்.
உங்களைப் பற்றிப் பாடியதாக வைத்துக் கொள்ளுங்கள் என்று
கூறியபடி,
நடந்து போகத்
தொடங்கினான்.
பல்லவ மன்னனின் கோபம் எல்லை கடந்தது.
என்னுடைய நாட்டிலே, என்னுடைய அரசிலே, ஒருவன் என்னுடைய பேச்சைக் கேட்காமல்
போகிறான் என்றால்,
அவனை எப்ப்டி
இந்த நாட்டிலே விட்டு வைப்பது.
இந்த பல்லவ தேசத்தில் இருந்து உடனே வெளியே போ.
கணிக் கண்ணன் போனான்.
திருமழிசை ஆழ்வாரைச் சந்தித்தான்.
விவரம் சொன்னான்.
உடனே,
ஆழ்வார், நீ போய்விட்டால், எனக்கு இங்கு என்ன வேலை என்றவர், நேராகச் சென்று, திருவைக் காட்டிலே, கருவறையிலே இருந்த திருமாலைப்
பார்த்தார்.
பாடினார்.
கணிக்கண்ணன்
போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா, நீ கிடக்க வேண்டா – துணிவொன்றிச்‘
செந்நாப்
புலவனும் யான்செல்கின்றேன் நீயுமுன்றன்
பைநாகப்
பாய்சுருட்டிக் கொள்.
உடனே,
பெருமாளும், பாம்பைச் சுருட்டி கக்கத்திலே
வைத்துக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார்.
கணிக்கண்ணன் போனான்.
திருமழிசை ஆழ்வாரும் போனார்.
திருமாலும் போய்விட்டார்.
இறைவன் இல்லாத நாடு எப்படி இருக்கும்.
இருண்டு போய்விடுகிறது.
செய்த தவற்றை உணர்ந்த பல்லவ மன்னன், ஆழ்வாரின் காலடியிலே விழுந்து
கதறுகிறான்.
மன்னிக்க வேண்டுகிறான்.
மீண்டும் வந்துவிடுங்கள் என்று மன்றாடுகிறான்.
மன்னனுக்காக ஆழ்வாரும் மனம் இரங்கி வருகிறார்.
மீண்டும் பெருமாளின் கருவறைக்குச் சென்று பாடுகிறார்.
கணிக்கண்ணன்
போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா, நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும்
போக்கொழிந்தேன்
நீயும்
உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்
இந்தப் பாடல் இன்றைக்கும் வழக்காக இருந்து கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு இரவு மட்டும், அந்தக் கணிக்கண்ணனும், ஆழ்வாரும் போய் தங்கிய இடம்
இருக்கிறதே,
அது இன்றைக்கும்
காஞ்சிக்கு அருகிலே இருக்கிறது.
அவ்விடத்தின் பெயர் ஓர் இருக்கை.
தற்பொழுது ஓரிக்கை என்றும் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
ஒரு மொழியினாலே, இறைவனை ஈர்ப்பது சாத்தியம் என்றால், அது தமிழால் மட்டும்தான் முடியும்.
---
ஒரு புலவர் பசியோடு, ஒரு மரத்தடியிலே அமர்ந்திருக்கிறார்.
அவருக்கு அருகிலே ஒரு மூட்டை.
சுவடி மூட்டை.
சுவடி மூட்டையினைப் பார்த்து, சோற்று மூட்டை
என நினைத்து, ஒரு பிச்சைக்காரன் ஒடி வருகிறான்.
ஐயா, எனக்கு நீங்கள் சாப்பாடு போட வேண்டும்.
உணவிட வழியில்லையே என்று நினைத்த அந்தப் புலவரின்
கண்கள் குளமாயின.
அந்த மூட்டையை அவிழ்த்துக் காட்டினார்.
ஏடுகள்.
பிச்சைக்காரனின் கண்களில் ஏமாற்றம்.
பாட்டு பிறக்கிறது.
கல்லைத்தான்
மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான்
பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் ரட்சித்தானா?
அல்லைத்தான்
சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான் ஐயா எங்கும்
பல்லைத்தான்
காட்டித்தான் பிழைக்கத்தான்
பிரமத்தான் பண்ணிட்டானே
---
தமிழுக்கு ஈரமுண்டு.
பாரதியிடத்திலே ஒரு கொய்யாப் பழக்காரி, கூடையிலே
இருக்கின்ற பழங்களை வாங்கிக் கொள்ளுங்கள் ஐயா, வறுமை வாட்டுகிறது என்று சொன்னபோது பாடினான்.
தனி
ஒருவனுக்கு உணவில்லை எனில்
இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்.
தமிழுக்கு ஈரமுண்டு.
தமிழுக்கு இரக்கமுண்டு.
தமிழ் ஏன் இவ்வளவு அழகு தெரியுமா?
பொதுவாக அமங்கலமான சொற்களை, எல்லாம் மேடையிலே
பேச மாட்டார்கள்.
மகாகவி பாரதி ஒருமுறை, செல்லம்மாவிற்கு ஒரு கட்டளை
போட்டாராம்.
அரிசி இல்லை, உப்பு இல்லை, பருப்பு இல்லை என்று
என்னிடத்திலே சொல்லாதே.
உனக்கு ஏதாவது வேண்டும் என்றால், ஒரே ஒரு சொல்லை
மட்டும் பயன்படுத்து.
அகரம், இகரம் என்று சொல்.
நான் புரிந்து கொள்வேன்.
அகரம் என்றால் அரிசி.
இகரம் என்றால் இல்லை.
இனி, இல்லை என்று உன் வாயால் சொல்லாதே.
தமிழ்
மங்கலமான மொழி.
அமலங்கலமான சொற்களைக் கூட, மங்கலமாக மாற்றுகின்ற
வல்லமை தமிழுக்கு உண்டு.
எப்படி?
இராமன் காட்டில் நடந்து போகின்றான்.
ஒரு புறம் சீதை.
மறுபுறம் இலக்குவன்.
சீதைக்கு மெல்லிய இடை.
ஆனால், இல்லாதது போல் இருக்கிறது.
இடை இருப்பதே தெரியவில்லை.
மாலை நேரம்.
சூரியன் மறையத் தொடங்குகிறான்.
சூரியனுடைய ஒளி, இராமனுடைய மேனியிலே பட்டுத்
தெறிக்கிறது.
இராமன் கருமை நிறம்.
கருப்பும் பச்சையும் நேர்ந்த அழகான நிறம்.
இந்தப் பாடலை எழுத வருகிறான் கம்பன்.
வெய்யோன்
ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே
எனும் இடையாளொடும்
இளையானொடும் போனான்.
மையோ,
மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ
ஐயோ,
இவன் வடிவு என்பது ஓர்
அழியா அழகு உடையான்
அமங்கலமான சொல்லைக்கூட, மங்கலமாக மாற்றக்கூடிய
தன்மை தமிழுக்கு மட்டுமே உரியது.
எனவே தமிழ் அமிழ்து.
---
ஏடகம்
ஞாயிறு முற்றம்
13.9.2026
ஞாயிற்றுக் கிழமை மாலை,
ஏடக
அரங்கில்,
பட்டுக்கோட்டை,
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி,
முதுகலை
கணிப்பொறி ஆசிரியர்,
கவிஞர்,
எழுத்தார், கட்டுரையாளர்
தலைமையில்,
தஞ்சாவூர்,
தாமரை பன்னாட்டுப் பள்ளி,
முதுநிலை முதல்வர்
தமிழமுதம்
என்னும்
தலைப்பில்
உரையாற்றி
அமர்ந்தபோது,
தமிழின்
இனிமை கேட்டு, தமிழின் பெருமை அறிந்து
அரங்கே
மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.
முன்னதாக,
நிழ்விற்கு வந்திருந்தோரை
ஏடகம்,
கல்வெட்டியல் மாணவி
வரவேற்றார்.
நிகழ்வின்
நிறைவில்
ஏடகம்,
சுவடியியல் மாணவி
நன்றி
கூறினார்.
தஞ்சாவூர்,
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி
தமிழ்த்
துறை உதவிப் பேராசிரியர்
நிகழ்வினை
அழகுத் தமிழால் தொகுத்து வழங்கினார்.
ஏடக அரங்கை
பாற்கடலாக்கி
அன்பர்களுக்கெல்லாம்
தமிழை
திகட்டாத அமிழ்தாய்
வாரி வாரி
வழங்கிய
ஏடக நிறுவனர், தலைவர்
பாராட்டுவோம் வாழ்த்துவோம்.






