11 நவம்பர் 2026

பாரினில் அதிசயம் பாரதி

 

    பாண்டிச்சேரியில் பெரும் புயல், மழை.

     மரங்கள் எல்லாம் வேறோடு சாய்ந்தன.

     தந்திக் கம்பங்கள் முறிந்து தொங்கின.

     கட்டடங்கள் பல சரிந்தன.

     ஆனாலும், முத்தியாலுப் பேட்டை, கிருஷ்ணசாமி செட்டியார் தோட்டம் மட்டும் எழில் குன்றாமல் அப்படியே இருந்தது.

     மரங்கள் நிமிர்ந்து நின்றன.

     செடிகள் செழித்து சிரித்தன.

     காரணம், இத் தோட்டம் பாரதியின் பாதம் பட்ட தோட்டம்.

     பாரதியின் குயில் பாட்டு உயிர் பெற்ற தோட்டம்.

     படிக்கும்போதே, நம் விழிகள் வியப்பால் விரிகின்றன.

     பாரதியின் பாடலை இயற்கையும் கேட்டிருக்கிறது, ரசித்திருக்கிறது.

---

     மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஒரு போட்டி.

     கவிதைப் போட்டி.

     பாரதியும் பாடல் எழுதி அனுப்புகிறார்.

     ஆனாலும், பாரதிக்கு ஆறுதல் பரிசுகூட கிடைக்கவில்லை.

     செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என இன்றும் நிலைத்து நிற்கும் பாரதியின் பாடலுக்குப் பரிசு இல்லை.

     ஏன்?

     எதற்காக?

     காரண காரியங்களை, அரசியல் பின்புலத்தை, இந்நூலின் ஆசிரியர் விளக்கும்பொழுது, வருந்தாமல் இருக்க முடியவில்லை.

---

     மிஸ்டர் காந்தி, இன்று நான் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா?

     காந்திக்கு வந்திருப்பவர் யார் என்றே தெரியவில்லை.

     காந்தி, பாரதியை முதன் முறையாகப் பார்க்கிறார்.

     இன்று நமக்கு வேறொரு நிகழ்ச்சி இருக்கிறது. பொதுக்கூட்டத்தை நாளைக்கு மாற்ற முடியுமா? என்கிறார்.

     முடியாது, பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்.

     சட்டென்று புயல்போல் கிளம்பி மறைந்தார் பாரதி.

     இந்நிகழ்வினை இந்நூலின் ஆசிரியர் விளக்க, விளக்க, பாரதியின் முழு ஆளுமையும் நம் கண் முன்னே விரிந்து, நம்மைத் திக்குமுக்காட வைக்கிறது.

---

     பாரதி, எப்படி இறந்தார்?

     யானை தாக்கி இறந்தார்.

     நம் பொது புத்தியில், இப்படித்தான் பாரதியின் மறைவு பதிவாகி இருக்கிறது.

     ஆனால், இது தவறு, யானை தாக்கிய பிறகும், ஒன்பது மாதங்கள் பாரதி வாழ்ந்திருக்கிறார் என்பதையும், தன்னை கோயில் யானை தாக்கியதை மையக் கருவாக வைத்து, கோயில் யானை என்னும் பெயரில் ஒரு நாடகத்தையும் இயற்றியிருக்கிறார் என்பதையும், தக்க தரவுகளுடன், இந்நூலின் ஆசிரியர் விவரிக்கும் பொழுது, நம் விழிகள் வியப்பால் விரிகின்றன.

---

பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்

     புன்மை யிருட்கணம் போயின யாவும்

என பாரதமாதாவிற்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியவர் பாரதி.

     அடிமை தேசத்தில், அடிமைகளாய் வாழ்கிறோம் என்பதையே உணராமல் வாழ்ந்த மக்களுக்கும், தன் பாடல்களால் திருப்பள்ளி எழுச்சி பாடி, தூக்கம் கலைத்து, விழித்தெழச் செய்த மகாகவியின் மகத்தான வாழ்வு முடிந்து, 105 ஆண்டுகள் கடந்துவிட்டன.

 105 ஆண்டுகள் கடந்த பிறகும், மகாகவியின் வரலாறு இன்னும் முழுமையாய் எழுதப்படவில்லை என்பதுதான் உண்மை.

இக்குறையினைத் தன்னால் இயன்றவரை, நீக்கிட

பாரினில் அதிசயம் பாரதி

என்னும் தனது நூல் மூலம் முயற்சி செய்திருக்கிறார்


நண்பர் திரு இரா.மணிமாறன் அவர்கள்.

     படிக்கப் படிக்க, நம்மையும் வெகுவேகமாய் கரம் பிடித்து இழுத்துச் செல்கிறது, இவரது இயல்பான, எளிமையான எழுத்து.

     பதினைந்து ஆண்டுகள் ஆயத்த ஆடை நிறுவனத்தில் மேலாளராய் பணியாற்றி, நூலின் தன்மையை உணர்ந்தவர், எழுத்தின் வல்லமையையும் நன்கு உணர்ந்திருக்கிறார்.

     பதிமூன்று ஆண்டுகளாய் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழும், கணிதமும் கற்பித்துக் கற்பித்து, தானே ஒரு தமிழாசிரியராகவும், உள்ளத்தில் இருப்பதை எழுத்தாய் வடிக்கும் கலையைக் கற்றவராகவும் உயர்ந்திருக்கிறார்.


பாரினில் அதிசயம் பாரதி

     நண்பர் திரு இரா.மணிமாறன் அவர்களின் இந்நூல், தமிழுக்கு அழகு சேர்ப்பதோடு, பாரதிக்கும் பெருமையினை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

     வாழ்த்துகள் நண்பரே.