ஆண்டு 1949. தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி, விழா அரங்கு.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மேடையைப் பார்த்தவாறு, மேடையில் நடு நாயகமாய்
அமர்ந்திருக்கும், அம் மனிதரைப் பார்த்தவாறு ஆர்வத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.
கருணை பொங்கும் கண்கள்.
பரந்து விரிந்த நெற்றி. ஒளி வீசிப் பிரகாசிக்கும் முகம். ஒலிப் பெருக்கியின்
முன்வந்து, பாடத் தொடங்குகிறார்.
தமிழிசைப் பாடல்கள் அரங்கு முழுதும்
நிரம்பி வழியத் தொடங்குகிறன. மாணவர்கள் அனைவரும், மெய் மறந்து, இவ்வுலகினையே
மறந்து, தமிழிசையில் மூழ்கி, புதியதோர் உலகில், காற்றுடன் கலந்து, காற்றோடு
காற்றாய் மிதக்கின்றனர்.
உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டே
சென்றவர், திடீரென்று பாடலை நிறுத்தி, பாடலின் பொருளினை விளக்குகிறார்.
பாடலின் பொருளினை விளக்கிக்
கொண்டே சென்றவர், பொருளினை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறி முடித்த, அடுத்த
நொடி, பாடலினை, விட்ட இடத்தில் இருந்து, அதே உச்சஸ்தாயியில் தொடருகிறார்.
