26 ஜூலை 2013

கரந்தை - மலர் 17

------ கடந்த வாரம் ------
மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கலையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார் உமாமகசுவரனார்.
----------------------
     மாபெரும் தமிழ்ப் பணியாற்றிவரும் கரந்தைத் தமிழ்ச் சங்கம், காலூன்ற இடமின்றியும், இடம் வாங்கப் பொருளின்றியும் தவிக்கின்றது. எனவே ஆட்சியாளர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு இடம் வழங்கி உதவிட வேண்டும் என்று, அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் உமாமகேசுவரனார் வேண்டுகோள் விடுத்தார்.
 
பாவா மடம்
     வேண்டுகோள் பலித்தது. சென்னை மாகாண சட்டத்துறை செயலாளர் திவான் பகதூர் ராமச்சந்திர ராவ் அவர்களின், உத்தரவிற்கு இணங்க, கரந்தையில் வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, பாவா மடத்திற்குச் சொந்தமான இடம், 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தின்படி அரசால் கையகப் படுத்தப்பட்டது.

      கையகப் படுத்தப் பட்ட நிலத்தினை ஆங்கிலேய அரசாங்கம், முறைப்படி பத்திரப் பதிவு செய்து சங்கத்திற்கு வழங்கியது.
 
வள்ளல் பெத்தாச்சி செட்டியார்
   . இவ்விடத்தினை வாங்கும் பொருட்டு வள்ளல் பெத்தாச்சி செட்டியார், சங்கத்திற்கு ரூ.1000த்தினை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் அன்றைய தினம் வரை சங்கத்தால் சேமிக்கப்பட்ட தொகை முழுவதும், இந்நிதியுடன் சேர்க்கப்பட்டு, அரசாங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.

      அன்றைய ஆங்கிலேய அரசினர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட தொகை ரூ.1,867 மற்றும் 6 அணா மட்டுமே. அவ்விடத்திற்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையின் அரசாங்கமே, பாவா மடத்திற்கு வழங்கியது


     இவ்வாறாக, பெத்தாச்சி செட்டியார் அவர்களின் வள்ளல் தன்மையாலும், பல அறிஞர்களின் உதவியுடனும், ஆங்கிலேய அரசாங்கத்தின் மாபெரும் உதவியோடும், ஆதரவோடும், 44,662 அடி நிலமானது, 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமானது.

தமிழ்ப் பொழில்

                வாழி  கரந்தை  வளருந்  தமிழ்ச்சங்கம்
                வாழி  தமிழ்ப்பொழில்  மாண்புடனே வாழியரோ
                மன்னுமதன்  காவலராய்  வண்மைபுரி  வோரெவரும்
                உன்னுபுக  ழின்நலம்  உற்று
                         - நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற மூன்றாவது ஆண்டிலேயே, திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உமாமகேசுவரனார் உள்ளத்தே உயிர் பெற்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைத் தமிழ்ப் பேருலகினருக்கு நன்கு தெரிவித்து, அன்னார் உதவிபெற்று அவற்றினை நிறைவேற்றுமாறு காண்டலும், தமிழ் மக்களையும், அவர்தம் தெய்வத் திருமொழியினையும் இழிதகவு செய்து, உண்மை சரித நெறி பிறழ எழுதிவரும் விசயங்களை நியாய நெறியில் கண்டித்தலும், மேல் நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துக் கொள்ளுதலுமாகிய, இன்னோரன்ன நோக்கங்களோடு, சங்கத்தினின்று ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஐவர் கொண்ட குழு ஒன்று 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

     திருவாளர்கள் நா.சீதாராம பிள்ளை, ஐ.குமாரசாமி பிள்ளை, த.வீ.சோமநாதராவ்  மற்றும் த.வே.இராதாகிருட்டினப் பிள்ளை ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இக்குழுவினர் பத்திரிக்கைத் தொடங்குவதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்குரிய பணிகளைத் துவக்கினர். இதே வேளையில் பத்திரிக்கை ஆரம்பிப்பதென்றால் அதற்கு வேண்டும் மூலதனத்தைத் திரட்டும் பணியும் தொடங்கப் பெற்றது. தமிழ் அன்பர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது.

      பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனர் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சிகள், பல்வேறு காரணங்களாலும் நிதிப் பற்றாக் குறையாலும், நிறைவேறாமலே இருந்தது.  இருப்பினும் 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற இருக்கின்ற மாதாந்திர இதழுக்கு தமிழ்ப் பொழில் என்னும் பெயர் சூட்டப்பெற்றது.  1929-21 லும் போதிய அளவு புரப்போர் சேராமையினால் தமிழ்ப் பொழில் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

     இவ்வாண்டில் திருவாளர்கள் உமாமகேசுவரம் பிள்ளை, கும்பகோணம் த.பொ.கை. அழகிரி சாமி பிள்ளை, கூடலூர் வே. இராமசாமி வன்னியர், பட்டுக்கோட்டை வேணுகோபால் நாயுடு, திருச்சிராப்பள்ளி உ.க. பஞ்ச ரத்தினம் பிள்ளை, திருச்சி நா.துரைசாமி பிள்ளை, கும்பகோணம் ஆர்.சாமிநாத அய்யர் ஆகியோர் தமிழ்ப் பொழில இதழுக்குப் பங்குத் தொகை வழங்கினர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவானது, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அறநிலையத்தில, கீழையூர் சிவ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, தமிழ் மொழியின் மேண்மையைப் பேணுதற் பொருட்டாகத் தமிழ்ப் பொழில என்னும் திங்கட்டாளை வெளியிடுவதற்கு தக்கவாறு பொருளுதவி செய்ய வேண்டுமெனத் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இவ்வாண்டில் திருவாளர்கள் வேணுகோபால நாயுடு மற்றும் திருச்சி டி.நாராயண சாமி பிள்ளை ஆகியோர் தமிழ்ப் பொழில் பங்குத் தொகையாக ரூ.23 வழங்கினர்.

     1913 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சியானது, பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது. 1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.  தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழினை அச்சிட்ட பெருமை, தஞ்சாவூர் லாலி அச்சகத்தையேச் சாரும். இதன் முதல் பொழிற்றொண்டராகப் பணிபுரிந்தவர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளையாவார்.
 
1925 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் பொழில் இரண்டாவது இதழின் அட்டை
 (முதல் இதழின் அட்டை கிடைக்கப் பெற வில்லை)
     பொதுவாக ஒரு இதழ் எனின் ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியர் என்று அச்சிடுதல் மரபு. ஆனால் உமாமகேசுவரனாரோ, இதழாசிரியர் என்பதற்குப் பதிலாக பொழிற்றொண்டர் என்றே அச்சிடச் செய்தார். உறுப்பினர் கட்டணம் என்பதற்கு மாறாக கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதை உறையுள் என்றும், ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலைகொளும் அஞ்சல் என்றும் பயன்படுத்தத் தொடங்கினார்.

     பல்வேறு இன்னல்களைத் தாண்டி தமிழ்ப் பொழில் இதழானது வெளிவரத் தொடங்கிய பின்னரும் கூட,  ஒவ்வொரு மாதமும், இவ்விதழ் சந்தித்த சோதனைகள், தாண்டிய தடைகள் ஏராளம். தமிழ்ப் பொழில் இதழினைப் போற்றுவார் போதிய அளவு இல்லாததால் வருந்திய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்ச் செல்வர்கள், தாய் மொழித் தொண்டிற்காக, ஆண்டிற்கு இரண்டு மூன்று ரூபாய் செலவிடுவதற்குத் தயங்கும் நிலை கண்டு வருந்தினார். தமிழ்ப் பொழில உறுப்பினராக அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
தமிழ்ப் பொழில்

கருந்திட்டைக்குடி,
விசு, சித்திரை,க
ஐயா,
     இத்துடன் பொழிற் கையொப்ப விண்ணப்பம் ஒன்று இணைத்துள்ளோம். தங்கள் நண்பருள் ஒருவரையேனும் கையொப்பக்காரராகச் சேரும்படி வேண்டி, இணைத்துள்ள விண்ணப்பத்தில் அவர்கள் ஒப்பம் வாங்கி அனுப்ப வேண்டுகிறோம். ஒருவரைத் தாங்கள் சேர்த்தனுப்புவது, பொழிலின் பயனை ஆயிரவர்க்கு அளித்ததாகும் என்பதை நினைவூட்டுகிறோம். சிறுதொண்டு பெரும்பயன் விளைவிக்கும் வகைகளுள் இது ஒன்றெனக் கருத்திற் கொள்ள வேண்டுகிறோம்.

தங்கள் அன்பன்,
த.வே. உமாமகேசுவரன்
பொழிற்றொண்டர்

     உமாமகேசுவரனார் மேற்கொண்ட அயரா முயற்சிகளின் பயனாக, தஞ்சை மாநாட்டாண்மைக் கழகத்தினரும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தினரும், பாவநாசம் நாட்டாண்மைக் கழகத்தினரும், தத்தம் ஆட்சி எல்லையிலுள்ள பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் தமிழ்ப் பொழில இதழினை அனுப்பிட ஆணை வழங்கி உதவினர்.

     தஞ்சைமா நாட்டின் கல்வி நெறி ஆராய்ச்சியாளர் தலைவராக இருந்த, திரு பி.பி.எஸ்.சாஸ்திரியார் அவர்களும், இத் தமிழ்ப் பொழில் கல்லூரி பள்ளிக் கூடங்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் சிறப்பினை உடைய உண்மையை அறிவித்து, அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களும் வாங்குமாறு செய்தார்.
 
மறைமலை அடிகள்
     தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ட மறைமலையடிகள் மனம் மகிழ்ந்து கூறியவற்றைப் பாருங்கள். தாங்கள் விடுத்த தமிழ்ப் பொழில் முதலிரண்டு மலர்களும் பெற்று மகிழ்ந்தேன். தாங்களும் ஏனை கற்றறிஞரும் எழுதியிருக்கும் தமிழ்க் கட்டுரைகளை உற்று நோக்கி வியந்தேன். தமிழ்ப் பொழில் நீடு நின்று நிலவுமாறு முயல்க. ஏனெனில், இஞ்ஞான்று பற்பல இதழ்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மேலும் வடசொற்கள் சிறிதும் கலவாத தனித் தமிழிழேயே, தாங்களும் மற்றைக் கல்வியறிஞரும் கட்டுரைகள் எழுதுவதை விடாப்பிடியாய்க் கைக்கொள்ளல் வேண்டும். வடசொற் கலப்பால் தமிழைப் பாழாக்க மடிகட்டி நிற்கின்றனர். ஆதலால் நம்மனோர் தமிழில் வடசொற்களைக் கலத்தற்கு சிறிதும் இடம் விட்டுக் கொடுத்தல் ஆகாது. தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா.


15 கருத்துகள்:

 1. // இவ்வாறாக, பெத்தாச்சி செட்டியார் அவர்களின் வள்ளல் தன்மையாலும், பல அறிஞர்களின் உதவியுடனும், ஆங்கிலேய அரசாங்கத்தின் மாபெரும் உதவியோடும், ஆதரவோடும், 44,662 அடி நிலமானது, 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமானது.//

  நல்ல பல பழமை வாய்ந்த் வரலாற்றுத் தகவல்களை அறிய முடிகிறது. அந்தக்கால ரூபாய் அணா பைசா கணக்குப்புத்தகம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

  1965 வரை என் தகப்பனாரும் இதே போல ரூபாய், அணா, பைசாக்களுக்கு மூன்று கோடுகள் வரைந்து, தின்மும் வரவு செலவு கணக்குகள் எழுதுவார். அந்த ஞாபகமும் வந்தது.

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. //தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை.// மறைமலை அடிகள் அல்லாமல் வேறு யாரால் இவ்வாறு வரையறுத்துக் கூற முடியும்.. பழைமையான செய்திகளைத் தாங்கிய அருமையான பதிவு!..

  பதிலளிநீக்கு
 3. பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலைகொளும் அஞ்சல் - தமிழ் சிறப்புகளை என்னவென்று சொல்வது...? சிறப்பான பல தகவலுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. தமிழ்த்துறை பேராசிரியர் ஒருவர் வரலாற்று நோக்கோடு எழுதுவது போன்று “கரந்தை தமிழ்ச் சங்கம்’ வரலாற்றினை ஆவணங்களோடு ஆர்வத்தோடு எழுதி வருகிறீர்கள். பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு

 5. பொழிற்றொண்டர், கையொப்பத்தொகை, உறையுள் விலைகொள்ளும் அஞ்சல்--- எல்லாமே உற்சாகப் படுத்துகிறது.இவற்றை வழக்கில் கொண்டு வர ஏன் முயலக் கூடாது.?வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

  ( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
  http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )

  பதிலளிநீக்கு
 7. பழைய தமிழ் எழுத்துகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறதே!!!!!

  பதிலளிநீக்கு
 8. சற்றொப்ப நூறாண்டுகளுக்கு முன் வந்த தமிழ்ப்பொழில் இதழினைப் பார்த்துப் பரவசமடைந்தேன்.ஒரு இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது என்பது மிகவும் சிரமமே. இவ்விதழின் உருவாக்கம் அமைப்பு ஆரம்ப நிலை போன்றவற்றைப் பார்க்கும்போது இதனை உருவாக்க அப்போதைய அறிஞர்கள் பட்ட சிரமங்களை அறியமுடிகிறது. இத்தகு பெருமையுடைய இதழில் என் கட்டுரைகள் வந்துள்ளதை எண்ணிப் பெருமையடைகிறேன். வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. வாழி கரந்தை வளருந் தமிழ்ச்சங்கம்
  வாழி தமிழ்ப்பொழில் மாண்புடனே – வாழியரோ
  மன்னுமதன் காவலராய் வண்மைபுரி வோரெவரும்
  உன்னுபுக ழின்நலம் உற்று

  வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 10. கரந்தை தமிழ்ச் சங்கம் பற்றிய செய்திகள் வாராவாரம் படித்து மகிழ்ச்சி....

  தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 11. ஆங்கில அரசே தமிழ்சங்கத்திற்கு இடம் வழங்க உதவியது ஆச்சர்ய செய்தி. பத்திரிக்கை நடத்த படாத பட்ட வரலாறும்,மறைமலை அடிகளின் வாழ்த்தும் உண்மையில் போற்றத் தக்கவை. .இச்சயம் உங்களுக்கு இணையத்தில் ஒரு சிறப்பிடம் உண்டு

  பதிலளிநீக்கு
 12. Dear KJ.,
  The news given by you about the KARANTHAI TAMIL POZHIL is a very informational and very important one for the TAMIL PEOPLE.

  பதிலளிநீக்கு
 13. 88 வருடங்களுக்கு முந்திய இதழின் முகப்பைப் பார்த்ததும் அசந்துவிட்டேன். மற்ற இதழ்கள் இருக்கிறனவா? பாதுகாக்கப்படுகின்றனவா? (2) எந்த நாளுமே தமிழர்கள் மாதப்பத்திரிகை வாங்குவதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது தெரிகிறது. பொது நன்மைக்காகத் தன் பணப்பையைத் திறப்பது விரும்பத்தகாத காரியம் என்று எப்படித்தான் காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறதோ? வருந்தத் தக்க செய்தியே.

  பதிலளிநீக்கு
 14. This week very nice . Lots of more information gives about TAMILSANGAM .very thanks.I was wrote tamilletters comment yesterday but not update sorry.

  பதிலளிநீக்கு
 15. This week very nice . Lots of more information gives about TAMILSANGAM .very thanks.I was wrote tamilletters comment yesterday but not update sorry.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு