01 ஆகஸ்ட் 2013

கணினியும் நானும்

     கரந்தை என்றால் மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கத் தோன்றிய அமைப்பே கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டுகால, தமிழ்ப் பயணத்தை, சிறிதேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தொடரினை வலைப் பூவில் எழுதத் தொடங்கினேன்.

     உண்மையினைச் சொல்ல வேண்டுமானால், தயக்கத்துடன்தான் தொடங்கினேன். நம்மால் முடியுமா? எழுதினால் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் என்னை வாட்டி வதைத்தது.

     வலையுலக நண்பர்களாகிய தாங்கள், இத்தொடரின் பேரில் காட்டிய ஆர்வமும், ஊக்குவித்தும் உற்சாகப்படுத்தியும், தாங்கள் எழுதிய பின்னூட்டங்களுமே, இத்தொடர் தொடரக் காரணம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

     கடந்த 26.6.13 இல் கரந்தை–மலர் 17 னை பதிவிட்டேன். அன்றே கருத்துரை வழங்கிய
திருமிகு தி. தமிழ் இளங்கோ அவர்கள்,
எனது எண்ணங்கள்
வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர். (எனது கணினி அனுபவங்கள் (தொடர் பதிவு)
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )
என எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

     அன்றே, மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து அனைவரின் உள்ளம் புகுந்து மகிழ்ச்சி மனம் பரப்பி வரும், கல்வியாளர் திருமிகு டி.என்.முரளிதரன் அவர்களின்
மூங்கில் காற்று
மூங்கில் காற்றினை சுவாசிக்கச் சென்றேன். என் முதல் கணினி அனுபவம் என்னும் பகிர்வு, மனதைக் கொள்ளை கொண்டது. பதிவில் இறுதியில்,
கொசுறு: நண்பர் சுரேஷ் கூட கணினி அனுபவத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி. நானும்  அஞ்சு பேரை கணினி அனுபவம் பற்றி எழுத பரிந்துரைக்கலாம்னு தேடிக்கிட்டிருக்கேன். ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச நிறையப் பேர் புக் ஆயிட்டாங்க. யாராவது சிக்காமலா போயிடுவாங்க!

ரெண்டு பேர் சிக்கிட்டாங்க  உங்கள் முதல் கணினி அனுபவங்களை எழுதும்படி           அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

1.
பரிதிமுத்துராசன்
2. கரந்தை ஜெயகுமார் 

மகிழ்ச்சியில் உறைந்து போனேன். எனது கணினி அனுபவத்தை எழுதும்படி ஒரு வங்கியாளரும், ஒரு கல்வியாளரும் அழைத்திருக்கிறார்கள்.

வங்கியாளரும் கல்வியாளரும்

     இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?. இந்த எளியேனை அழைத்தமைக்கு நன்றி கூறுகிறேன். இதோ எழுதத் தொடங்கிவிட்டேன்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாய் திகழும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், மாணவனாய் கல்வி பயின்ற எனக்கு, அப்பள்ளியிலேயே ஆசிரியராய்ப் பணியாற்றும் நல் வாய்ப்பு கிடைத்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கமானது 1925 ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பொழில் என்னும்  தமிழாராய்ச்சித் திங்களிதழ் ஒன்றினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இத் தமிழ்ப் பொழில் இதழினை மாதந்தோறும் அச்சிட்டு, அஞ்சலில் சேர்க்கும் பணி 1992 இல் எனக்குக் கிட்டியது. பின்னர் தமிழ்ப் பொழில் பதிப்பாசிரியர் குழுவிலும் ஓர் உறுப்பினராய் நியமிக்கப்பட்டேன். அன்று முதல் இன்று வரை 21 ஆண்டுகளாக இப்பணியினைச் செய்து வருகின்றேன்.

     1992 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கலைக் கல்லூரியில், கணினி படிப்பு தொடங்கப் பெற்றது. இதற்காக கணினி ஆய்வகம் ஒன்றும் நிறுவப் பட்டது. இங்குதான் முதன் முதலில் கணினியைப் பார்த்தேன்.

      சில ஆண்டுகளில் தமிழ்ப் பொழில் இதழினை அச்சிட்டு வந்த, லக்மி அச்சகத்திலும் கணினி நுழைந்தது. இங்குதான் முதன் முதலில், கணினியின் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்தேன்.

    கணினியில் விசைப் பலகையில் இருப்பதோ ஆங்கில எழுத்துக்கள். திரையில் தோன்றுவதோ தமிழ் எழுத்துக்கள். வியந்து பார்த்தது இன்றும் நன்றாக நினைவிருக்கின்றது. பிறகுதான் தெரிந்தது, தமிழுக்கென்றுத் தனியே விசைப் பலகை கிடையாது என்பது. தினந்தோறும் அச்சகத்தில் கணினியைப் பார்த்தாலும, அதனைத் தொட்டுப் பார்க்கக் கூட அச்சமாக இருந்தது. எதாவது ஒரு விசையினை அழுத்தி, பழுதடைந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம்.

     சங்கத்தின அனைத்து விழாக்களுக்கும், சங்கத்தின் சார்பில் வெளியிடப் பெறும் நூல்களுக்கும் அச்சகப் பணியினைச் செய்தவன் நான்தான். அச்சகத்தில் கணினியில் பணியாற்றுபவருடன் அமர்ந்து, இவ்வாறு செய்யுங்கள், அவ்வாறு செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றேனே தவிர, அதனை அவர் விசைப் பலகையினைப் பயன்படுத்தி எவ்வாறு செய்கிறார் என்று கவனித்ததே இல்லை. எனது கவனம் முழுவதும் திரையிலேயே இருக்கும்.

     இவ்வாறாக தினந்தோறும் அச்சகத்திற்குச் சென்று வந்த போதிலும், கணினி பற்றிய அடிப்படை அறிவினைக் கூற தெரிந்து கொள்ளாதவனாகவே, ஆண்டுகள் பலவற்றைக் கழித்திருக்கின்றேன்.

     கணினியைத் தொடக்கத்தில் குளிரூட்டப் பட்ட  அறைகளிலேயே பார்த்துப் பழகிவிட்டதால், கணினியானது எனக்கு எட்டாக் கனியாகவே தோன்றியது. பின்னர் இந்நிலை மாறியது. குளிரூட்டப் பட்ட அறை அவசியமானது அல்ல என்ற நிலை தோன்றியது.

      அதன்பிறகுதான் ஒரு கணினி வாங்கினால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. 2009 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், புத்தாண்டுச் சலுகை விலையில் ஒரு கணினியை வாங்கினேன்.

     ஓபல் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தி, இரண்டு நாட்கள் கழித்து, வீட்டிற்கு கணினி வந்தது. அந்நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிற்கு வந்து, கணினியை பொறுத்திக் கொடுத்தார்.

     கணினி நிறுவன ஊழியரிடம், அப்பொழுது ஒரே ஒரு சந்தேகத்தினை மட்டும் கேட்டேன். கணினியை ஆன் செய்யவும், ஆப் செய்யவும், எந்தெந்த பட்டன்களை அழுத்த வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே, சொல்லிக் கொடுத்தார். என் கணினி அறிவு அவ்வளவுதான்.

     அன்று முதல் பல நாட்கள் கணினியை ஆன் செய்வதும், ஆப் செய்தும் பார்த்தேன். எனது பெயரினைத் தட்டச்சு செய்து, திரையில் பெயர் தோன்றுவதைப் பார்த்து ரசிப்பேன். அவ்வளவுதான். கணினியை வைத்துக் கொண்டு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

      எனது மகனும், மகளும் கணினியில் உள்ள விளையாட்டுக்களை மணிக் கணக்கில் விளையாடுவார்கள். கணினி எனக்குத்தான் புரிபடாத புதிராகவே தொடர்ந்தது.

         இவ்விடத்தில் செய்தி ஒன்றினைக் கூறியாக வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு அறிந்தவன் நான்.

     தஞ்சை மன்னர் சரபோசி கல்லூரியில், இளங்கலை கணிதத்தினை மூன்றாண்டுகள் நிறைவு செய்தபோது, இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாமலே இருந்தேன். எனவே ஓராண்டு வீணானது. இக்கால கட்டத்தில் தட்டச்சு வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினேன். தமிழ் தட்டச்சு மற்றும் ஆஙகிலத் தட்டச்சு இரண்டிலும் ஹையர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதுவரை நான் வெளியிட்ட நூல்கள் மூன்றும் நானே தட்டச்சு செய்ததுதான்.

      தட்டச்சுப் பயிற்சிதான் இப்பொழுது எனக்கு கைகொடுத்து வருகிறது. கணினி வாங்கிய பிறகும் இரண்டாண்டுகள் இணைய இணைப்பு பெறாமலேயே இருந்தேன். இந்த இரண்டாண்டுகளும், கணினியானது ஒரு டி.வி.டி., ஆக மட்டுமே பயன்பட்டது.

     இணைய இணைப்பு பெறாததற்குக் காரணம். பயம். நண்பர்கள் பலரும் பலவாறு பயமுறுத்தினார்கள். எவ்வாறு பயமுறுத்தினார்கள் தெரியுமா?

     கணினியில் இணையதள இணைப்பின் வழியாக, ஏதாவது ஒரு தளத்தினைப் படித்துக் கொண்டோ, பார்த்துக் கொண்டோ இருக்கும் பொழுது, தொலைக் காட்சி போன்று, திடீர் திடீரென பல விளம்பரங்கள் தோன்றும். அவற்றுள் பல விளம்பரங்கள், உங்களை ஆபாச வலைத் தளத்திற்கு அழைக்கும். எனவே நீங்கள் இல்லாதபோது, கணினியைப் பயன்படுத்தும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப் படலாம் என்று பயமுறுத்தினர்.

       எனவே மிகவும் தாமதமாக, இரண்டாண்டுகள் கடந்த நிலையில் நானும், நண்பர் சரவணன் அவர்களும் ரிலையன்ஸ் இணையதள இணைப்பினைப் பெற்றோம்.

நண்பர் ஹரிசங்கர் பாபு
        பின்னர் ஒருநாள் எங்கள் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றும் நண்பர் க.ஹரிசங்கர் பாபு அவர்களிடம் மின்னஞ்சல், மின்னஞ்சல் என்று சொல்கிறார்களே, மின்னஞ்சல் என்றால் என்ன?, என்று கேட்டேன். ஒரு அலைபேசியில் இருந்து மற்றொரு அலைபேசிக்கு, குறுந் தகவல் அனுப்புகின்றோம் இல்லையா, அது போல், ஒரு கணினியில் இருந்து, மற்றொரு கணினிக்கு செய்தி அனுப்புவதுதான் மின்னஞ்சல், இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியதில்லை என்றவர், வாருங்கள் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கித் தருகின்றேன் என அழைத்தார்.

     நானும் நண்பர் சரவணனும், ஹரிசங்கர் பாபுவுடன், உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்றோம். அங்கிருந்த கணினியில் ஆளுக்கொரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கிக் கொடுத்தார். அவ்வாறு பெற்ற எனது மின்னஞ்சல் முகவரி


குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு மின்னஞ்சலாவது இம்முகவரிக்கு வரவேண்டும், இல்லையேல் இம்முகவரி காலாவதியாகிவிடும் என்றார்.

     உடனே கவலை தொற்றிக் கொண்டது. நமக்கு மின்னஞ்சல் அனுப்ப யார் இருக்கிறார்கள்? எவ்வாறு இம்முகவரியைத் தக்கவைத்துக் கொள்வது என்று புரியவில்லை.

     அன்று மாலையே நண்பர் சரவணனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் அனுப்பினார். ஒரு மின்னஞ்சல் வந்து விட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை என மனதைத் தேற்றிக் கொண்டேன்.

     வலைதளத்திற்குள் நுழைந்து பல பக்கங்களைப் பார்வையிட்ட பொழுது, ஈமெயில் அலர்ட் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. உடனே நான்கு அல்லது ஐந்து செய்திகளுக்கு ஈமெயில் அலர்ட் பெற, எனது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தேன். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

     இனி தினந்தோறும் ஒன்றிரண்டு ஈமெயில் அலர்ட் வந்துகொண்டேயிருக்கும், எனவே மின்னஞ்சல் முகவரி காலாவதியாவதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாமல்லவா?

     நான் தட்டச்சு இயந்திரத்திலேயே தட்டச்சு செய்து பழகியவன். ரெமிங்டன் தட்டச்சு இயந்திரம் சற்று மென்மையாக இருக்கும். ஆனால் கோத்ரெஞ் தட்டச்சு இயந்திரம் சிறிது கடினமாக இருக்கும். விரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து தட்டச்சு செய்ய வேண்டும்.

     நான் கரந்தைத் தமிழ்ச் சங்சத்தில் கோத்ரெஞ் தட்டச்சு இயந்திரத்துடன் வாழ்ந்தவன். கணினியிலோ மயிலிறகால் வருடுவது போன்று தட்டச்சு செய்ய வேண்டும். தொடக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யவே முடியவில்லை. a என்ற எழுத்தை அழுத்தினால் aaaaaaaaaaaaaaaa  என்று வந்தது. பிறகு மெல்ல மெல்ல விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பதைக் குறைத்துப் பழகிக் கொண்டேன்.

     ஏதேனும் ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்து பார்ப்பேன். ஆரம்பத்தில் புரியவில்லை.  தட்டச்சு இயந்திரத்தில் க் என்ற எழுத்தை தட்டச்சு செய்ய, முதலில் புள்ளியை தட்டச்சு செய்ய வேண்டும், பிறகு க வை தட்டச்சு செய்ய வேண்டும். செந்தமிழ் எழுத்துருவில் இதுவே தலைகீழாக இருந்தது. பழகிக் கொண்டேன்.

  
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
   ஒரு முறை சங்க விழாவிற்கு வந்திருந்த தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள், விழாத் தொடர்பான புகைப்படங்களை, வீட்டு முகவரிக்கு அனுப்பி வையுங்கள், எனது பிளாக்கில் வெளியிடுகிறேன் என்று கூறினார்.

     அப்பொழுதுதான் பிளாக் என்ற வார்த்தையினையே முதன் முறையாக் கேட்டேன். அடுத்த நாளே கணினியில் வலைப் பூ நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டேன். கரந்தைகேஜே என்னும் பெயரில் வலைப் பூவைத் தொடங்கினேன். டாஸ்போர்டில் மொழி என்று வந்தபொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தேன். குழப்பம் தொடங்கியது. டாஸ் போர்டில உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியவில்லை. கண்னைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. இக்குழப்பத்திலேயே ஆறு மாதங்கள் கழிந்த்து.

     ஒரு நாள் தஞ்சை, முரசு புத்தக நிலையத்திற்குச் சென்றேன். நீங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம் என்னும் கண்ணதாசன் பதிப்பக நூல் கண்ணில் பட்டது. வாங்கினேன். சுமஜ்லா என்பவர் எழுதிய நூல் இது. இந்நுலில்,
அதன் கீழே பார்த்தால்,Language என்று இருக்கும். அதில் English அல்லது தமிழ் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். English என்று இருப்பதுதான் முதலில் பழக எளிதாக இருக்கும். அதோடு சில வசதிகளும் கூடுதலாக இருக்கும்.

     புதிய ஒளி பிறந்தது.

     சிறு வயதில் இருந்தே புத்தகங்களை சேர்ப்பதில் ஓர் ஆர்வம். சுஜாதா, சுஜாதா என சுஜாதாவின் நூல்களைத் தேடி அலைந்திருக்கின்றேன்.

      வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும் என்பார் பாரதிதாசன். நானும் சிறுக சிறுக சேர்த்து இதுவரை 2000 நூல்கள் சேர்த்திருக்கின்றேன். 2000 நூல்கள் சேர்ந்தவுடன், எனது அறையினையே நூலகமாகக் கருதி, அதற்கு ஒரு பெயர் வைக்க விரும்பினேன். முதன் முதலில் தோன்றிய பெயர் கரந்தை. கரந்தை நான் படித்த இடம், பணியாற்றும் இடம், எனக்கு வாழ்வளித்த இடம். எனவே கரந்தை நூலகம் எனப் பெயரிட்டேன். நீங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம் நூலைப் படித்தவுடன், மீண்டும் புதிதாக ஒரு வலைப் பூ தொடங்கினேன்.
கரந்தை ஜெயக்குமார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் உமாமகேசுவரனார் அவர்களை வணங்கி முதற் பதிவினைப் பதிவிட்டேன்.

நாள் 23 ஆகஸ்ட் 2011

                            உமாமகேசன்

                              உமாமகேசனே
                              தமிழ் முனியே
                              என் இறையே
                              முதல் வணக்கம்.

                               உனை எழுதும்
                               பித்தன் எனக்கு
                               சொல்லெடுத்துத் தருவாய்
                               தனித் தமிழ் அருள்வாய்

     ஆனால் படிக்கத்தான் யாருமில்லை. ஒவ்வொரு நாளும், காலையும் மாலையும் என் பதிவை நானே படித்துப் பரவசப்பட்டேன்.
முனைவர் பா.ஜம்புலிங்கம்

       இந்நிலையில் ஒரு நாள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். நான்
சோழ நாட்டில் பௌத்தம்

என்னும் தலைப்பில் வலைப் பூ தொடங்கி எழுதி வருகிறேன். படித்துப் பாருங்கள். நீங்களும் ஒரு வலைப் பூ தொடங்குங்கள் என்றார். அய்யா நான் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வலைப் பூ தொடங்கியுள்ளேன் என்ற தகவலைத் தெரிவித்தேன். பாராட்டினார். நான் மாதம் ஒரு பதிவிடுவது என்று எண்ணி செயலாற்றி வருகிறேன். நீங்களும் மாதம் ஒரு பதிவாவது எழுதுங்கள் என்றார்.

     எனது வலைப் பூவின் முதல் வாசகர் இவர்தான். முதல் வாசகர் மட்டுமல்ல தூண்டுகோலும் இவர்தான். இந்த பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்தி, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,

     நீங்களில்லையேல், கணினி என்னும் ஆழ்கடலில், மாலுமி இல்லா படகுபோல், இருக்குமிடம் தெரியாது என்றோ நான் கரைந்து போயிருப்பேன்.

நன்றி தமிழ்த்திரு பா.ஜம்புலிங்கம் அவர்களே


     சில மாத இடைவெளியில், கரந்தையினைச் சேர்ந்த, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கவிஞர், எழுத்தாளர் திரு ஹரணி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எனது வலைப் பூ பற்றி அறிந்து மகிழ்ந்தார். பெரிதும் பாராட்டினார். அப்பொழுதுதான்
ஹரணி பக்கங்கள்
என்னும் பெயரில் பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து எழுதி வருவதை அறிந்தேன். கரந்தையிலேயே இருபது வருடங்களுக்கு முன்னரே, கணினியை முதன் முதலில் வாங்கியவர் என்ற பெருமையினைப் பெற்றவர் இவர்.

      அன்றே தனது வலைப் பூவின் வலது பக்கத்தில் உள்ளம் கவர்ந்தவை என்னும் தலைப்பில், எனது வலைப் பூவையும், கரந்தை ஜெயக்குமார் பக்கங்கள் என்னும் பெயரில் இணைத்து, அவரது வலைப் பூவிற்கு வரும் வாசக நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
    
   
  திருமிகு ஹரணி அவர்களுக்கு என் நன்றியறிதலைத்தெரிவித்துக் கொள்கின்றேன். பார்த்ததை எல்லாம் எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள், படித்ததை எல்லாம் எழுதுங்கள், மகிழ்ச்சியை எழுதுங்கள், துயரத்தை எழுதுங்கள், நாள்தோறும் எழுதுங்கள், எழுதுங்கள், எழுதுங்கள் என உற்சாகப் படுத்தியவர், ஊக்கப் படுத்தியவர் நீங்கள். கணினி என்னும் ஆழ் கடலில் திசையறியாது திக்குமுக்காடிய எனக்கு, திசை காட்டியாய், வழிகாட்டியாய் இருந்து என்னை நெறிப்படுத்தியவர் நீங்கள்தான்.

நன்றி தமிழ்த் திரு ஹரணி அவர்களே.


நண்பர் கோவிந்தராஜ்
வலைப் பூ தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை, தேவைப்படும் பொழுதெல்லாம் முக மலர்ச்சியோடு, வலைப்பூவிற்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தருகின்ற அருமை நணபர், ஓவிய ஆசிரியர் எஸ்.கோவிந்தராஜ் அவர்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்து மகிழ்க்கின்றேன்,

 நன்றி திரு எஸ்.கோவிந்தராஜ் அவர்களே,



நண்பர் சரவணன்
     வலைப் பூ தொடங்கி ஓராண்டு காலத்திற்கு, மாதத்திற்கு ஒரு பதிவையே எழுதி வந்தேன். ஒரு நாள் நண்பர் சரவணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, இராமானுஜன் வாழ்க்கை வரலாற்றினையே தொடர் பதிவாய் எழுதுங்களேன், மாதமொரு முறை என்பதற்கு பதிலாக, வாரமொரு  முறை எழுதுங்களேன் என்றார்.

13 ஆகஸ்ட் 2012

அன்று கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடரினைத் தொடங்கினேன். வலைப் பூ நண்பர்களிடத்து ஆதரவினைப் பெற்றுத் தந்த தொடர் இது. என்னை அடையாளம் காட்டிட உதவிய தொடர் இது.
நன்றி நண்பர் சரவணன் அவர்களே.

இத்தொடரின்போதுதான்,
வலைச்சரம்
என்னும் கவின்மிகு வலைப் பூவில்


திருமதி உஷா அன்பரசு
உஷா அன்பரசு, வேலூர்
அவர்களும்



திருமிகு தி, தமிழ் இளங்கோ
எனது எண்ணங்கள்
அவர்களும்
என்னை அறிமுகப்படுத்தி என்னை உற்சாகப் படுத்தினர்.

நன்றி
திருமதி உஷா அன்பரசு அன்பர்களே,
நன்றி
திருமிகு தி, தமிழ் இளங்கோ அவர்களே.


வாரந்தோறும் இத் தொடரினை, தன் முகப் புத்கதகத்தில் பகிர்ந்து
கணிதமேதையின் புகழினைப் பரப்பியவர்
திரு ரத்னவேல் நடராஜன்
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ரத்னவேல்நடராஜன்


நன்றி திருமிகு ரத்னவேல் நடராசன் அவர்களே,


வாரந்தோறும் தவறாது வருகை தந்து வாசித்து வாழ்த்தியதோடு, தனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி, சிரமம் பாராது, மன மகிழ்ந்து, எனது வலைப் பூவினை,
தமிழ் மணம்
திரட்டியில், இணைத்து உதவியவர்
திருமிகு டி.என்.முரளிதரன்,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை
மூங்கில் காற்று

நன்றி திருமிகு கல்வியாளர் டி.என்.முரளிதரன் அவர்களே,


     கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடரினைப் படித்துதான், தனது நமது நம்பிக்கை திங்களிதழில், இத் தொடரினை வெளியிட முன் வந்தார்
மரபின் மைந்தர் முத்தையா அவர்கள்,
தற்பொழுது கணிதமேதை சீனிவாச இராமானுஜன் வரலாறு

நமது நம்பிக்கையில்

தொடராக வந்து கொண்டிருக்கின்றது.

நன்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்களே

    இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து வலைப் பூவில் எழுதி வருகிறேன். நினைத்துப் பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கின்றது. எழுதுவது நான்தானா, என்ற சந்தேகம் எனக்கே வருகிறது. இதற்கெல்லாம் காரணம் வலையுலகச் சொந்தங்களாகிய நீங்கள் தான். தங்களின் தொடர் வருகையும், வாழ்த்துமே, எனது வலைப் பூவிற்கு கிடைக்கும் சுவாசக் காற்று.

நன்றி நன்றி நன்றி

நண்பர்களே

நான் உங்களிடத்து வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

என்றும் வேண்டும் இந்த அன்பு