15 ஆகஸ்ட் 2013

கரந்தை - மலர் 18





----- கடந்த அத்தியாயத்தில் -------
தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.
---------------------------------------
 தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ணுற்ற புலவர் அ.வரத நஞ்சைய பிள்ளை அவர்கள், இவ்விதழினை வாழ்த்தி இயற்றியப் பாடலைப் பாருங்கள்

              வாழ்க நம் தமிழ்த்தாய்  வாழ்க நம்  தனிமொழி
              ஓங்குக  மேன்மேல்  ஓங்குக  நாடொறும்
              ஊழியோர்  கணமா  வுலப்பில்பல்  லாண்டெலாம்
              வாழியர்  தமிழகம் மக்களொடு  மகிழ்ந்தே
              புகழ்பொருள்  வேட்காத  கடமை  பேணி
              முன்னைநாள்  நிலைமை  நன்னாராய்ந்  திந்நாள்
              அன்னையாந்  தமிழண்ங்  கரந்தை  கூரப்
              பிறமொழி  கவர்ந்த  புறமொழி  நாணித்
              தஞ்செயல்  மீட்ப  தாமெனத்  துணிவுறீஇக்
              கரந்தை  யூன்றிய  கழகந்  தொடங்கின
              நான்முத  லிதுகாறு  நற்றமிழ்க்  குழைத்த
              தொண்டின்  பயனாத்  தோன்றித்  தழைத்தது
              தமிழ்ப்  பொழில் அம்ம தமிழர்காள்  வம்மின்
              தாயடி  நிழலிற்  றங்கிவெப்  பொழிமின்
              ஆண்டு  தோறும்  நீண்டுவளர்  துணராற்
              றிங்கட்  கோர்  செழுமலர்  பூத்து
              நறுமணம்  வீசி  நலிவுதீர்க்  கும்மே
              தலைமிசைப்  புனைமின்  விழியி லொற்றுமின்
              மார்புற  அணைமின் தோண்மிசை  தாங்குமின்
              காட்சிக்  கினியது  கைக்குமெல்  லியது
              நாவிற்கினிய  நறுந்தேன்  சுரப்பது
              கேட்குஞ்  செவிபிற  கேளாது  தகைவது
              உற்றுநோக்  குளத்துக்  குவகைமிக்  கீவது,
              இம்மை  மறுமை  யிரண்டுமிங்  களிப்பது

தமிழ்ப் பொழில் தொடங்கிய காலத்தில், இவ்விதழின் ஆண்டு சந்தா, சங்க உறுப்பினர்களுக்கும், மாணவர்களுக்கும் ரூ.2 மட்டுமே ஆகும். ஏனையோருக்கு ரூ.3 ஆகும்.

     தமிழ்ப் பொழிலில் வெளிவரும் கட்டுரைகள், தூய தமிழில் வெளி வந்தன. எனினும் நடை கடினம் என்று அவ்வப்போது சிலர் குறை கூறியதுண்டு. அதற்கு உமாமகேசுவரனார் அவர்கள் அளித்த விளக்கம்,  இன்றும் நாம் அனைவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

     இறைவன் திருவருளாலும், தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர்கள் ஆதரவாலும், பொழில் பதினாறு ஆண்டு, இப்பங்குனித் திங்களோடு நிறையப் பெற்றுள்ளது. பொழில் தோன்றிய காலத்தும், பின்னும், எந்தெந்த வழிகளிலெல்லாம் பொழில் தமிழகத்திற்குப் பயன்பட வேண்டுமென்று எண்ணினோமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் பயணித்துள்ளது என்று கூறுவதற்கில்லை. ஒருவாறு காலந்தள்ளி வந்தது என்றே நாம் கூறலாம்.

     ஆறாயிரம் மைலுக்கு அப்பாலுள்ளள ஆங்கில மொழியையும், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பெழுந்த வடமொழி நூல்களையும், இடர்பாடு சிறிதுமின்றிக் கற்கவும், கற்று மகிழவும், பிறர்க்குக் கூறிப் பரப்பவும் ஆற்றலுடைய நம் தமிழகத்துத் தமிழ் மொழியின் தூய சொற்கள், பொருள் விளங்கிப் பயன்தர ஆற்றாவாயின், அது யாவர் குறை? பயிற்சிக் குறைவன்றோ? சொல்லாலும் பொருளாலும் பேசவும் எண்ணவும் இனிமை தரும் எம் தாய்மொழி, இன்று இவ்வாறாயிற்றே என்று யாம் வருந்துதல் பயனென்ன? தமிழோடு தொடர்புடைய வேற்று நாட்டவரும், இம்மொழியின் நன்மை உணர்ந்து போற்றுமிடத்து, நம்மவர் யாம் பொருளுணர மாட்டோம், யாம் பொருளுணர ஆற்றேம் எனக் கூறுவது, இதுகாறும் ஏழு வியப்போடு நின்ற இவ்வுலகத்து எழுந்த எட்டாவது வியப்பென்றே எண்ணுகிறோம்...பொழிலின் நறுமணம் நாற்றிசையும் பரந்து உலகை மகிழ்விக்கத் தமிழ்த் தெய்வம் துணை செய்வதாக.

     பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழைப் பற்றி தமிழ் மக்கள் அறியாதிருப்பது குறித்து உமாமகேசுரனார் கொண்ட துயரம் இதில் புலனாகிறது.
 
1925, 1950, 1986 மற்றும் 2014 இல் தமிழ்ப் பொழில் 
     தமிழ்ப் பொழில் இதழின் தொடக்க இதழ்கள் தஞ்சை, லாலி அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் பொழில் இதழானது அச்சாகி வெளி வருவதில் தாமதமேற்பட்டது. தமிழ் மாதத்தின் முதல் நாளில் பொழில் இதழ் வெளிவர வேண்டும் என்று உமாமகேசுவரனார் விரும்பினார். ஆனால் அச்சகத்தில ஏற்படும் தடங்கல்கள் காரணமாக, இதழினை குறிப்பிட்ட தேதிகளில் வெளிக் கொணர்வதில் தொடர்ந்து தடைகள் தோன்றத் தொடங்கின. இத் தடைகளிலிருந்து மீண்டு வருவதற்கு உமாமகேசுவரனார் வழி ஒன்றும் கண்டார். அதுவே இன்றைய கூட்டுறவு அச்சகமாகும்.

     நீதிக் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய உமாமகேசுவரனார்,  கூட்டுறவு இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.  கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாளர், வணிகர், நடுத்தர மக்கள் முதலானோர்க்குக் கடன் கொடுத்து, மிகுந்த வட்டி வாங்கும் லேவா தேவிக்காரர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து, அவர்களுடைய கடன் சுமையைக் குறைப்பதோடு, அவரவரும் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கைகளுள் ஒன்றாகும்.  சில தொழில்களைக் கூட்டுறவுச் சங்கங்களே ஏற்று நடத்த வேண்டும் என்பது அக்கட்சியினரது திட்டமாகும். எனவே நீதிக் கட்சியின் ஆட்சி காலத்தில், பல கூட்டுறவு சங்கங்கள் தோன்றின. மக்களுக்கு உதவி புரிந்தன. உமாமகேசுவரனார் அவர்களும் கூட்டுறவு இயக்கத்தில் பங்குகொண்டு, கூட்டுறவுச் சங்கங்கள் பலவற்றைத் தோற்றுவித்தார்.

திராவிட கூட்டுறவு வங்கி

      உமாமகேசுவரனாரின் அரிய முயற்சியால் 1919 ஆம் ஆண்டு, கரந்தையில், திராவிடக் கூட்டுறவு வங்கி ஒன்று தொடங்கப் பெற்றது.

கூட்டுறவு நிலவள வங்கி

     கூட்டுறவு வங்கியினைத் தொடர்ந்து, 10.9.1926இல் உமாமகேசுவரனார் அவர்களால், தஞ்சையில் கூட்டுறவு நிலவள வங்கி ஒன்றும் தொடங்கப் பெற்றது. இவ்வங்கி தற்போது தஞ்சை, இராசப்பா நகரில் செயல்பட்டு வருகின்றது.

தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகம்

     1939 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியால், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. மானோஜியப்பா வீதியில் தொடங்கப் பெற்ற இக் கழகம், தற்போழுது நாஞ்சிக் கோட்டை சாலையில் இயங்கி வருகின்றது.

தஞ்சாவூர் கூட்டுறவு அச்சகம்

     தமிழ்ப் பொழில் இதழினை திங்கள்தோறும் தவறாது வெளிக் கொணர விரும்பிய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழன்பர்கள் பலரின் உதவியோடு, கூட்டுறவு முறையில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார். இக் கூட்டுறவு அச்சகம், 16.2.1927 முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு அருகிலேயே, இராமர் கோவிலுக்கு அருகில் செயல்படத் தொடங்கியது. தற்சமயம் இவ்வச்சகம் தஞ்சைக் கூட்டுறவு அச்சகம் என்னும் பெயரில் மருத்துவக் கல்லூரி சாலையில் இயங்கி வருகின்றது. இன்றும் இந்த அச்சகத்திற்குச் செல்வோர், உமாமகேசுவரனாரின் திருஉருவப் படம், இவ்வச்சகத்தின் வரவேற்பறையை அலங்கரிப்பதைக் காணலாம்.

     கூட்டுறவு அச்சகத்தின் தோற்றத்திற்குப் பின், சங்கத்தின் அனைத்து அச்சுப் பணிகளும், இந்த அச்சகத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. தமிழ்ப் பொழில இதழும் காலந் தாழ்த்தாது வெளிவரத் தொடங்கியது.

     1925 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழ்ப் பொழில் இதழானது, வணிக நோக்கமின்றி, விளம்பரங்கள் ஏதுமின்றி இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.
.....வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா