பொன்னும் துகிரும்
முத்தும் மன்னிய
மாமலை பயந்த
காமரு மணியும்
இடைப்படச் சேய
ஆயினும் தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம்
அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றி
யாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர்
ஆப
சாலார் சாலார்
பாலர் ஆகுபவே
இப்பாடல் கண்ணகனார்
என்னும் பெரும் புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலாகும்.
பொன்னும், பவளமும், முத்தும், நிலைத்த பெரு
மலையில் பிறக்கும் மாணிக்கமும், தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில்
இருப்பினும், மாலையாகக் கோத்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும்போது, தம்முள்
ஒருங்கு சேரும். அதுபோல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர்.
இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, எங்கோ பிறந்து,
எங்கோ வளர்ந்த மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர் பிசிராந்தையாரும், ஒருவரை
ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, பண்பார்ந்த செயல்களால், ஒருவரை ஒருவர் அறிந்து,
உணர்ந்து, நட்புப் பாராட்டி, இறப்பில் ஒன்றிணைந்த
உன்னத நிகழ்வு பற்றி, பள்ளி நாட்களில் படித்துப் பரவசப்பட்டு மெய்
சிலிர்த்திருக்கின்றோம்.
நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நினைத்துப்
பாருங்கள்.
ஆம். நினைத்துப் பார்த்தால் நாமும்
இப்படித்தான். ஒருவரை ஒருவர் பாராமலும், பாராமல் மட்டுமல்ல, சில வேலைகளில்
சகோதரரா, சகோதரியா என்று கூட அறியாமலும், இப்புவிப் பந்தில், மூலைக்கு ஒருவராய்
சிதறிக் கிடந்த போதிலும், எழுத்து என்னும் நட்புச் சங்கிலியால் ஒன்றாக
பிணைக்கப் பட்டிருக்கிறோம். இந்த உன்னத உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது
உறுதி.
மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர்
பிசிராந்தையாரும் வாழும் வரை ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே இல்லை என்பது
வரலாற்று உண்மை.
ஆனால் நாம் அவ்வாறில்லை. வலைப் பூ வழி,
வாசித்த, நேசித்த உறவை, நேரில் காண அவ்வப்பொழுது வாய்ப்புகள் கிடைத்துக்
கொண்டுதான் இருக்கிறது.
எழுத்தின் வழி அறிந்தோரை, அகத்தின் வழி மனக்
கண்ணால் கண்டு பழகியவரை, நேரில் கண்டு உரையாட இயலுமாயின், ஏற்படும்
மகிழ்விற்குத்தான் எல்லை ஏது?
அவ்வாறு ஓர் இனிய வாய்ப்பு எனக்குக்
கிட்டியது நண்பர்களே. பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல், கடந்த
ஜுலை 21 ஆம் தேதி மாலை, கணினி முன் அமர்ந்து, வலைப் பூவைத் திறந்தேன்.
மனோ சாமிநாதன்,
அன்புச் சகோதரர் அவர்களுக்கு,
தஞ்சை வருவதால் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலாயுள்ளேன். தங்கள் தொலைபேசி எண்ணை என் ஈமெயில் விலாசத்திற்குத் தெரியப்படுத்தவும். ஊருக்கு வந்ததும் தங்களை தொடர்பு கொள்கிறேன்.
அடுத்த நொடியே, மின்னஞ்சல் அனுப்பினேன். தங்களைச்
சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,
அடுத்த நாள் காலை, கணினியில், பதில்
மின்னஞ்சல் தயாராய் காத்திருந்தது.
அன்புள்ள
சகோதரர் அவர்களுக்கு,
தங்களின் உடனடி பதில் மிகவும் மகிழ்வைத்
தந்தது. உங்களின் விலாசம், தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டு விட்டேன். இந்த
தடவை லாப்டாப் ஊருக்கு எடுத்து வரவில்லை என்பதால் தங்களை நான் வந்த பின், தொலைபேசி
மூலமாக தொடர்பு கொள்கிறேன்.
இன்று இரவு தஞ்சை கிளம்புகிறேன். நாளை வந்த
பின் உறவினங்கள் எல்லோரும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அதனால இரண்டு
நாட்களில் உங்களுக்கு போன் செய்கிறேன்.
எங்கள் இல்லம், உங்கள் இல்லம் இருக்கும் அதே
சாலையில், நடராஜபுரம் தெற்கில் ஐந்தாவது குறுக்குத் தெருவில் 62ம் எண்ணில் உள்ளது.
தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் என்
அன்பினைத் தெரியப் படுத்துங்கள்.
அன்பு சகோதரி,
மனோ
சாமிநாதன்
சில நாட்கள் கடந்த நிலையில், 25 ஆம் தேதி
வியாழக் கிழமை காலை, பதினோரு மணியளவில் என் அலைபேசி ஒலித்தது. மறு முனையில்
சகோதரியார். அப்பொழுது நான் தஞ்சையில் இல்லை. சென்னை அப்போலோ மருத்துவ மனையில்
இருந்தேன்.
பதினைந்து நாட்களுக்கும் மேலாக எனது
மனைவிக்குத் தலைவலி. விடவேயில்லை. தஞ்சையில் உள்ள கண் மருத்துவரைப் பார்த்தோம்.
குறையொன்றுமில்லை எனக் கூறிவிட்டார். மூளை நரம்பியல் மருத்துவரைப் பார்த்தோம்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தோம்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மைகிரேன்
பிரச்சினைதான்
எனக் கூறி மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். பத்து நாட்கள் கடந்த பிறகும்
முன்னேற்றமில்லை. மீண்டும் மருத்துவரைச் சந்தித்தோம். பத்து நாட்கள்
மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை என்றவுடன், இதற்குமேல்
தஞ்சையில் மருத்துவம் கிடையாது. உடனே அப்போலா மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மூளை
நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏ. பன்னீர் அவர்களைப் பாருங்கள் என்றார்.
அன்று இரவே, சென்னையில் இருக்கும் நண்பர்
அனந்த ராமன் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
1995 ஆம் ஆண்டு தஞ்சையில், ஒரு அச்சகத்தில்
முதன் முறையாக திரு அனந்த ராமன் அவர்களைச் சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு.
வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் தூணாய் இருந்து, என்னைத் தாங்கிப்
பிடித்து துயர் துடைக்கும் உத்தம நண்பர். நான்காண்டுகளுக்கு முன், வேதனை மிக்க
வேலையில், எனது மகளின் மருத்துவத்திற்காகச் சென்னை சென்ற பொழுது, சென்னையில் கால்
பதித்த நொடி முதல், என் மகளுக்கு குறையொன்றுமில்லை என்ற மகிழ்வானச் செய்தியினைக்
கேட்டு, நெகிழ்ச்சியுடன், தஞ்சைத் திரும்ப, தொடர் வண்டியில் ஏறிய நிமிடம் வரை,
ஐந்து நாட்களும், தனது பணிகள் அத்தனையினையும் ஒதுக்கி வைத்து விட்டு, அச்சகத்தின்
பக்கமே செல்லாமல், ஒவ்வொரு நொடியினையும், ஒவ்வொரு நிமிடத்தினையும் எங்களுக்காகவேச்
செலவிட்ட நல் நட்பு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.
சென்னையில் உறவினர்கள் பலர் இருந்த
போதிலும், நண்பரின் வீட்டில் தங்கினால், சொந்த வீட்டில் இருப்பதைப் போலவே ஓர்
உணர்வு. எனவே இப்பொழுதும் அவரையே தொடர்பு கொண்டேன்.
மறுநாள் காலை முதல் வேலையாக அப்போலோ மருத்துவ
மனைக்குச் சென்று, அடுத்த நாள் (25.7.13) வியாழக் கிழமை மருத்துவரைப் பார்க்க முன்
பதிவு செய்து விட்டு, என்னை அழைத்தார். இன்று மதியமே புறப்பட்டு, சென்னைக்கு
வந்து விடுங்கள். நாளை காலை மருத்துவரைச் சந்திக்கலாம் என்றார்.
அன்று மதியமே வாடகைக் கார் மூலம் சென்னை
புறப்பட்டு, இரவு சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் நண்பர் அனந்தராமனின் இல்லம்
அடைந்தேன்.
மறுநாள் காலை அப்போலோ மருத்துவ மனையில்
இருந்த போதுதான், சகோதரியார் அலைபேசியில் அழைத்தார். விவரம் கூறினேன். கவலைப்
படாதீர்கள், இன்றைய மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை,
உங்கள் மனைவி விரையில் குணமடைவார் கவலை வேண்டாம் என்று கூறினார்.
அன்று மாலையே திரும்பவும் அலைபேசியில்
அழைத்தார். மருத்துவரைப் பார்த்துவிட்டீர்களா? மருத்துவர் என்ன கூறினார்,
என அக்கறையுடன் விசாரித்தார்.
மருத்துவரைப் பார்த்துவிட்டோம்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலையில் இரத்தக் குழாயில அடைப்பு எதுவும் கிடையாது. மாத்திரைகளைத்
தொடர்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும் என்று கூறினார் எனத்
தெரிவித்தேன்.
காலையில் பேசியதற்கும், இப்பொழுது
பேசுவதற்கும், உங்களின் குரலிலேயே ஒரு தெளிவு தெரிகிறது கவலைப் படாதீர்கள் என
மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் நான் ஆகஸ்ட் 15 வரை தஞ்சையில்தான்
இருப்பேன். எனவே விரையில் உங்களின் இல்லத்திற்கு வருகிறேன் என்றார்.
3.8.2012 சனிக் கிழமை நண்பகல் 12
மணியளவில், தனது பள்ளிக் காலத் தோழி ஒருவருடன், எனது இல்லத்திற்கு வருகை தந்தார்,
சகோதரியார் முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்கள்.
உலக வாழ்க்கையி
னுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல
நூல்வகை கற்கவும்
இலகு சீருடை
நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத
லார்நங்கள் பாரத
தேச மோங்க வுழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலொர்
பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள்
விரைவி லொழிப்பாராம்
என்று, தான்
காண நினைத்த புதுமைப் பெண் பற்றிப் பாடுவான் பாரதி. முத்துச் சிதறல் மனோ
சாமிநாதன் அவர்களும், ஓர் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத்தான் தோன்றினார்.
தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் பிறந்து,
இல்லத்தரசியாய் முப்பதாண்டுகள் பாலைவன நாட்டில் வாழ்ந்து வருபவர். வெளிநாடு சென்ற
போதிலும் வீட்டிலோர் பொந்தில் முடங்கி விடாமல், வாழ்வியல் அனுபவத்தில் கண்டெடுத்த,
எத்தனையோ முத்துக்களில் நல் முத்துக்களாய் தேடி எடுத்து, முத்துக் குவியலாய்,
முத்துச் சிதறலாய் இணையம் வழி பகிர்ந்து வருபவர்.
ஓவியம், இலக்கியம், விளையாட்டு, இசை,
கவிதை, தையற் கலை, சமையற் கலை என பல துறைகளிலும் கால் பதித்து, பாங்குடன் பணியாற்றி
வருபவர்.
சார்ஜா. அராபிய பாலைவன நாட்டில் வாழும்
தமிழர்களின் உணவுத் தாகத்தை தணிக்கும் சபையர் ஹோட்டல் உணவு விடுதியின் உரிமையாளர்.
இவரது கணவர் சுவைமிகு உணவுகளை உணவு விடுதியில் மட்டுமே வழங்குவார். ஆனால், ஒவ்வொரு
வீட்டின் சமையலறையிலும் நுழைந்து, இலட்சக் கணக்கானத் தமிழர்களின், மனத்தினையும்,
வயிற்றினையும் சுகமாக நிரப்பி வருவது, இவரது
கைமனம்
என்னும் வலைப்
பூவாகும்.
Mano’s
Delicious kitchen
தாயின் கை
பக்குவத்துடன், உணவு வகைகளை வாரி இறைக்கும் இவரது ஆங்கில வலைப் பூ இது.
இதுமட்டுமல்ல, கடந்த எட்டு வருடங்களில்,
பத்து இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, சமையல் குறிப்புகளுக்கானத்
தனித் தளம் ஒன்றும் இவருக்குண்டு,
புரூட் ரைஸ், பொங்கல் குழம்பு, மலபார் ப்ரான்
கறி, பீர்க்கங்காய் துகையல், செட்டியாட்டு சிக்கன் கிரேவி, வறுவல், முட்டை பணியார
குழம்பு, மைசூர் ரசம், விவிகா, செமோலியா அல்வா, மீன் கட்லெட், அக்கார வடைசல்,
தென்கை பால் என நீ.......ண்......டு கொண்டே செல்கிறது இவரது சமையல்
குறிப்புகள். மலைப்புதான் மிஞ்சுகிறது. நாம் உண்ணும் உணவில் இத்தகை வகைகள்
இருக்கிறதா? பல உணவு வகைகளின் பெயரைக் கூட இதுவரை கேள்விப் பட்டதில்லையே? என
வியக்கத் தூண்டும் வலைப் பூ, இவரது வலைப் பூ.
முப்பது நிமிடங்களுக்கும் மேல் எங்களது
சந்திப்பு நீண்டது. இவரது தாத்தா சோம சுந்தரம் பிள்ளை அவரகள் ஒரு பெரும்
தமிழறிஞர் என்பதை அறிந்தேன். கரந்தையோடு தொடர்புடையவர். உமாமகேசுவரனாரின்
சமகாலத்தவர் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். தொல்காப்பியம் குறித்து,
இவரது தாத்தா நூல் ஒன்று எழுதியிருப்பதை அறிந்து வியந்தேன்.
எனது மனைவியிடம் அன்போடு பல நிமிடங்கள்
பேசினார். தன் வாழ்வில், தான் சந்தித்த மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு,
பலவாறு ஆறுதல் கூறினார்.
மகிழ்ச்சி நிரம்பிய சந்திப்பாக இச்சந்திப்பு
அமைந்தது. எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது, தமிழுக்கும்
எழுத்திற்கும்தான் எத்தனை சக்தி.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பார் கனியன்
பூங்குன்றனார். இன்று இவ்வரிகள் உண்மையாகி விட்டதே. பேரூந்தில் ஏறாமல், தொடர்
வண்டியில் பயணிக்காமல், விமானத்தில் பறக்காமல், வலைப் பூவின் வழியாக, ஒரு
நொடியில், உலகம் முழுதும் சுற்ற முடிகிறதே. உறவுகளை அறிய முடிகிறதே. நட்புகளைப்
பெருக்கிக் கொள்ள முடிகிறதே.
வலைப்
பூவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.