05 பிப்ரவரி 2014

பூப்பதெல்லாம் ...


மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
முடிதனிலே சுமந்து வருந்து தருதல் வேண்டும்
                                  பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, புதுமைப் பித்தன் அவர்களை வாசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வழிவழியான நமது நம்பிக்கைகளை, கற்பனைகளை, கனவுகளை, பொய்மைகளை நம் கண் முன்னே போட்டு உடைத்தவர்தான் புதுமைப் பித்தன்.

     உன் சித்தாந்த புனைவுகளுக்குள், புராதண மதிப்பீடுகளுக்குள் இருப்பதல்ல வாழ்க்கை. இதோ என் கதைகளுக்குள் இருப்பதுதான் பச்சையான வாழ்க்கை. இதுதான் உன் யதார்த்தம் என்று நம் முகத்தில் அறைந்தாற்போல், யதார்த்தத்தைப் புனைவதில் புதுமைப் பித்தன், புதுமைப் பித்தன்தான்.

     முடிவில் தர்மத்திற்கு வெற்றி கொடுக்க வேண்டியது கலைத் தொழிலில் ஈடுபடுகிறவனுடைய கடமை என்பதைப் புதுமைப் பித்தன் ஒத்துக் கொண்டவரல்ல. வாழ்வை பலவித கோணங்களில் இருந்து புரிந்து கொள்வதற்கான சாதனமே இலக்கியம் என்பதை உணர்த்தியவர் புதுமைப் பித்தன்.


    நண்பர்களே, உங்களின் எண்ண ஓட்டம் புரிகிறது. என்ன இவன் திடீரென்று புதுமைப் பித்தனைப் பற்றிப் பேசுகிறானே என்று நீங்கள் எண்ணுவதை என்னால் உணர முடிகிறது.

     பூப்பதெல்லாம்... என்னும் ஓர் சிறுகதைத் தொகுப்பினைப் படிக்கப் படிக்க, புதுமைப் பித்தனின் புது நூல் ஒன்றினைக் கண்டெடுத்த மகிழ்ச்சி மனமெங்கும் பரவுகிறது.

     விருது நகரில் ஓர் புதுமைப் பித்தன். கதை மாந்தர்களை நம் கண்முன் விளையாட விடுகிற சாமர்த்தியம் இவருக்கு இருக்கிறது. கதை என்றாலே, ஒரு தொடக்கம், ஒரு பிரச்சனை, ஒரு தீர்வு என்ற பழைய வரையறைகளைத் தகர்த்தெறிந்த சிறு கதைகள் இவருடையது. இவரது எழுத்தில், சொற் கோர்வையில், நடையில் புதுமைப் பித்தனைக் கண்டேன்.

     ஒரு நிகழ்வினை அதன் இயல்பான போக்கில், யதார்த்த நடையில் கூறி, நம்மை நினைவுகளின் பிடியில் சிக்க வைத்துவிட்டு, சாமர்த்தியமாய் அடுத்த கதைக்குச் சென்று விடுகிறார்.

     இவற்றை கதைகள் என்று கூறுவது கூட தவறுதான். தான் வாழ்வில் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, எழுத்தாக்கி, நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் விளையாட விடுகிறார்.

     நண்பர்களே, யாரைச் சொல்கிறேன் என்பது புரிகிறதா? நமது விமலன் அவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.


சிட்டுக் குருவி
http://vimalann.blogspot.com/

     விமலனின் இயற்பெயர் எஸ்.கே.வி.மூர்த்தி. பிறகு எப்படி இவர் விமலன் ஆனார் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இவரது மனைவியின் பெயர் விமலா. எனவே இவர் விமலன் ஆனார்.

     வேற்று ஜாதிக்குள்ளும் உறவு வைத்து அழைத்துக் கொள்ளும் பழக்கத்தை, இன்றுவரை பாதுகாக்கும் பாசமிகு கிராமத்தில் பிறந்தவர், தவழ்ந்தவர், வளர்ந்தவர்.

     இதனால்தான், மத்தியான வெயிலில் ஓடை ஓரமாக, வன்னி வேலா மரத்தின் நிழலில் அரைவட்டமாக அமர்ந்து, பசி போக்க, கைக் கஞ்சி வாங்கிக் குடித்த நாட்களின், நினைவும், அன்று குடித்த கம்பங் கஞ்சியின் வாசமும், இன்றும் காயாமலும், மாறாமலும் இவரது எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

     நிப்புக் கம்பெனித் தொழிலாளர்கள், பட்டையன் செட்டித் தெரு சந்து, தனலட்சுமி ஹோட்டல், சங்கர பாண்டியபுரம் மண், அறிவொளி இயக்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், பிற இயக்கங்கள் என எல்லாவற்றையும், பிசைந்து உருவம் உண்டாக்கி, உயிர் கொடுக்கின்றன இவரது எழுத்துக்கள்.

     காக்காச் சோறு, தட்டாமாலை, வேர்களற்று என்பன இவரின் எழுத்துக்கள் வலம் வரும் சிறுகதைத் தொகுப்புக்களாகும்.




இவற்றுள்,
காக்காச் சோறு
சிவகாசி காந்தகப் பூக்கள் அமைப்பின்
சிறப்பு விருதையும்,

தட்டாமாலை
சேலம் தாரைப் புள்ளிக்கார அறக்கட்டளை
எழுத்துக் களம் இலக்கிய அமைப்பின்
இலக்கிய விருதையும்
பெற்றுள்ளது.


பூப்பதெல்லாம் ...
விமலனின் நான்காவது நூல்.

     நூலின் முகப்பு அட்டையே பூப்போலத்தான் இருக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுத்த உணர்வே வரவில்லை. பூ ஒன்றினை அலுங்காமல், குலுங்காமல், அழுத்தாமல் எடுப்போமல்லவா? அதைப் போலத்தான், இந்நூலும். பக்கங்களை மென்மையாய், மெதுவாய், இதமாய் புரட்டத்தான் தூண்டுகிறது.

     பக்கத்துக்குப் பக்கம் மண் வாசனை. கிராமத்துத் தெருக்களில், மண் தரையில், லேசான தூறல் விழும் பொழுது, மழைத்துளி விழும் வேகம் தாங்காமல், மணல் துகள்கள், எம்பி விழுந்து, ஒருவித மண் வாசனையினை, நம் நாசிக்குள் அனுப்புமல்லவா, அதைப் போன்ற, மண் வாசனையினை, பக்கத்துக்குப் பக்கம், நீங்கள் உச்சி முகந்து அனுபவிக்கலாம்.

     விமலன் நமக்கு அருகில் அமர்ந்தவாறு, கதைச் சொல்லிச் செல்கிறார். நமது கை பிடித்து, தோள் தடவி, ஈரம் படிந்த கண்களைத் துடைத்து, வலி போக்கி, கவலை உண்டாக்கி என வேறு வேறு உணர்ச்சிகளுக்கு நம்மை ஆட்படுத்துகிறார்.

     ஒரு காலத்துல காடு, கரைன்று வௌஞ்சு கெடந்தப்ப, பக்கத்து மனுஷன் ஒறவு வேணும்ன்னு நினைச்சோம். பெத்தவுங்க, பெறந்தவுங்க, அண்ணன், தம்பி, ஜாதி, சனம் எல்லாம் தேவையில்லைன்னு இப்ப ஆகிப் போச்சு. அனுசரிச்சு மொகம் பார்த்து பேசுனது, பழகுனது எல்லாம் மாறிப் போச்சு தம்பி.

     நாணல் புல்... என்னும் முதல் கதையே நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிறது.

     போகிற போக்கில் கண்ணில் தட்டுப் படுகிறவைகளைக் கூட, கண்டு கொள்ளாமல் போகிற காலமிது. வேகமும், பெரும் சோகமுமாய் நடமாடிக் கொண்டிருக்கிற சாமானிய மனிதர்களின் கூட்டம் மிகுந்த காலமிது.

     விலாசம் நிரந்தரமற்றது என்பதை கனக்கிற மனதோடு பதிவு செய்கிறார்.

     பையனுக்குப் படிப்பு வரல சார். அங்கிட்டு இங்கிட்டுன்னு, ஆடி ஓய்ஞ்சு போயி, இப்பத்தான் நெலைக்கு வந்துருக்கான். ஒரு வருசமா, குடி கூத்துன்னு ரொம்ப கெட்டு தூந்து போனான் சார். இப்பத்தான் கையக்கால புடிச்சி, ஒங்கள மாதிரி ரெண்டு பேர விட்டு பேசவுட்டு சம்மதிக்க வச்சிருக்கு சார்.  கேரளாவுக்கு வேலைக்கு போறேன்று ஒத்துக்கிட்டான். சாப்பாடு, தங்குறயெடமெல்லாம் அவுங்களே குடுத்துறம்ன்றாங்க. சரின்னு அனுப்பி வச்சிருக்கு. பார்ப்போம், அவன் மூலமாவது குடும்பத்துக்கு ஒரு விடிவு வருமான்னு.

     ஒரு தந்தையின் தவிப்பை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை கத்தரிப்பான்... என்னும் கதையில் உணர்வு பொங்கச் சொல்லுகிறார்.

     இப்ப வந்து போனான் பாருங்க. காலேஜில படிக்கிறான். தலைக்கு எண்ணெய் வைக்காம, தலை சீவாம, சமயத்துல குளிக்காம கூட காலேஜ் போயிருவான். இன்னும் நாலு பேரு கூட பேசத் தெரியல, பழகத் தெரியல. இங்கேயிருந்து சைக்கிள எடுத்துட்டு ஓடுறான் சார், ரெண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற ப்ரெண்டு வீட்டுக்கு. ஆனா பக்கத்து வீட்டுப் பையன்கூட ஒரு வார்த்தைப் பேசிப் பழக மாட்டேங்குறான்.

     வேறொரு தந்தையின் கவலையை, இன்னும் இன்னுமாய் எதை இழந்து கொண்டிருக்கிறோம், எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் எனத் தெரியாமலேயே ஒரு சமூகம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை, கிளியாஞ்சட்டி...யில் வேதனையுடன் பதிவு செய்கிறார்.

     இவரது கதை நெடுகிலும், ஊதா கலர் வந்து ஊஞ்சலாடுகிறது.

     நண்பர்களே, இவரது எழுத்துக்களை வாசிக்க, வாசிக்க, ஓர் எண்ணம், நம் மனதில் ஆணி அடித்தாற்போல அமர்ந்து விடுகிறது. பாசமும், நேசமும் வழிந்தோடும் நல் மனதுக்குச் சொந்தக்காரர் விமலன் என்பது புரிகிறது. இருப்பினும் ஒரு சந்தேகம், இவர் உடலில் ஓடுவது உதிரமா அல்லது மாதவன் டீ கடையின் தேநீரா, என்னும் சந்தேகம் வருகிறது.

       சற்றேறக்குறைய அனைத்து சிறு கதைகளிலுமே டீக் கடை வருகிறது. டீகடையினை இவர், விவரிக்கும் விதமே அலாதியானது.

     கலங்கலான ஒரு டீ. ஒரு மாதிரி திவ்யமாய் குடிக்க கிக்காய் இருந்ததாய் ஞாபகம். டீயை வலது கையில் வாங்கியவாரே, தட்டில் மிதந்த வடைகளையும், பஜ்ஜிகளையும், இனிப்பு உருண்டைகளையும் பார்த்தவாறே எச்சில் முழுங்கிவிட்டுக் குடிக்கிறேன் என்கிறார் ஒரு கதையில்.

     எத்தனைபேர் கடைக்கு டீக் குடிக்க வந்த போதிலும், ஒவ்வொரு டீயாக ஆற்றிக் கொடுப்பார் சார்லஸ் விக்டர். அவரது நிதானம் அவருக்கே இருக்கட்டும். கூட்டம் வரும்போதாவது, சற்று மொத்தமாக டீப் போட்டுக் கொடுக்கக் கூடாதா என்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிற தருணங்களில், கடகடவென சிரித்து வைப்பார். மொத்தமாக டீப் போட்டு, இதுநாள் வரை எனக்குப் பழக்கமில்லை. தவிர ஒவ்வொரு க்ளாஸாக டிப் போட்டால்தான் எனக்கும் திருப்தி. ருசியும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை என்பார் என வேறொரு கதையில் டீக்கடையினை விவரிக்கிறார்.

     இப்படி டீக்கடையினைக் கூட அங்குலம், அங்குலமாக ரசித்து எழுத விமலனால் மட்டுமே முடியும்.

     இத்துப்போன மனுசங்க. இத்துப்போன பொழப்பு அவுங்களது. அவுங்கள என்ன செஞ்சாலும் கேக்க ஆளு கெடையாதுன்னு, நாங்க இங்க பொழப்பு தேடி வந்த புதுசுல, ஒரு சளதாரி நாயி, ஏங் மச்சான் வீட்டுக்குள்ள புகுந்துட்டான். அன்னைக்கு அரிவாள் தூக்கிட்டு, நாந்தான் அவன வெரட்டுனேன். மறு நா விடிஞ்சி, எந்திரிச்சு, வீட்டைவிட்டு வெளியே வரயில, ஏங் மச்சான் வீட்டு வாசல்ல, நாலு பேரோட நிக்கிறாரு. என்னான்னு கேட்டதுதான் தாமதம். படக்குன்னு கண்ணுல தண்ணி வடிச்சிட்டு, ஏங் கைய புடிச்சிக்கிட்டாரு. அப்புறம் பெரியாள்க பேசி முடிச்சாங்க. ஏந் தங்கச்சிய அவரும், அவரு தங்கச்சிய நானுமா கட்டிக்கிட்டோம். குண்டாம்மாத்து சம்பந்தம். நல்லாத்தான் இருக்கோம் ரெண்டு குடும்பமும்.

     பூப்பதெல்லாம் கதையில் நம்மையும் நெகிழ வைக்கிறார்.

     சரி அப்ப கிளம்புறேன் என்ற ஒற்றை பேச்சிற்கும், சொல்லிற்கும், சரி என்ற புன்னகைக் கீற்றை உதிர்த்த மனைவிக்கு, இன்றுதான் பதினெட்டு பிறக்கிறதா? அப்படித்தான் இருக்கிறாள், பார்த்தால் இந்த 42 வயதிலுமாய்.

     சுழியிடம் என்னும் கதையில் இப்படித்தான் எழுதுகிறார். விமலன் என்ற புனைப் பெயரின் ரகசியம் புரிகிறதா நண்பர்களே.

     விமலன் நல்ல சிறுகதையாளர் மட்டுமல்ல. கதை சொல்லியும் கூட. நாம் அன்றாடம் பார்க்கின்ற, சந்திக்கின்ற மனிதர்களைச் சொல்லியுள்ளார்.

     பூப்பதெல்லாம் .....
     நூல் முழுக்க பூக்கள் விரவிக் கிடக்கின்றன. மலர்ந்த பூக்கள், காய்ப்புக்காகக் காத்திருப்பதைப் போல், சில பூக்கள் உதிர்ந்தும், சில பூக்கள் காய்த்தும் என்றில்லாமல், பெரும் தோப்பாய்.

     பூப்பதெல்லாம் ...
     நறுமனம் வீசும் நந்தவனம்.
     வாருங்கள் நண்பர்களே,
     இந்த நந்தவனத்தில்
     காலார நடந்து பாருங்கள்
     பூக்களின் வாசத்தை
     மனமார முகர்ந்து மகிழுங்கள்.



66 கருத்துகள்:

  1. நூலாசிரியரால் படைக்கப்படும் படைப்பு விமர்சகனால் வெளிக்கொணரும் நிலையில் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அது இன்னும் மெருகேறுகிறது. ஆழமான, அழகான மதிப்புரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  2. மிக அருமையான ஆழமான பதிவு திரு விமலன் அவர்களைப் பற்றியும் அவரது எழுத்துக்கலைப் பற்றியும்....நல்லதொரு ஆய்வுஉரை!!!!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி! அவரது வ்லைத்தளத்தையும் தொடர்கிறோம்!

    பகிர்வுக்கு நன்றி! தொடர வாழ்த்துக்கள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  4. பெயரில்லா06 பிப்ரவரி, 2014

    வணக்கம்
    ஐயா.

    தங்களின் பார்வையில் திரு.விமலன் பற்றியும் அவரது எழுத்துலக வாழ்க்கைபற்றியும் நூல் பற்றியும் தங்களின் இரசனையில் கூறிய விதம் சிறப்பு.... வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  5. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. சரியா சொன்னீங்க அண்ணா. விமலன் சார் எதார்த்தமான எழுத்துக்கு சொந்தக்காரர். பெயரை காரணம் நானும் கஸ்தூரியும் எக்ஸ்சேஞ் பணிக்கொண்டது போல்! விமலன் சார் புத்தகம் வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. விமலன் அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் மிக அருமை.
    விமலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அன்றும் இன்றும் ...விமர்சனம் அற்புதம் .தங்களின் இதுபோன்ற விமர்சனம் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, உங்களுடைய பதிவுகள் ஒவ்வொரு வாரமும் பட்டை தீட்டப்பட்டு ஜொலிக்கும் வைரம் போன்று பொலிவும் அதன் வீரியமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. மிக அருமையான ஒரு நூல் ஆய்வு. ஒரு முனைவர் பட்டத்திற்கு செய்யப்பட்ட ஆய்வுகளை விட மனமார்ந்த உண்மையான ஆய்வாக உள்ளது. திரு.விமலன் அவர்கள் அவரின் எழுத்துக்களை வியாபாரத்திற்காக அல்லாமல் இந்த சமுதாயத்திற்கு உண்மையான நம்மை சுற்றி நிகழும் சம்பவங்களை வெளிப்படுத்தி உள்ளார்.அவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
      நான் முதன் முதலில் எழுதிய கட்டுரையினைப் படித்து, உற்சாகப் படுத்தியதன் விளைவே , நான் தொடர்ந்து எழுதுகின்றேன்.
      மீண்டும் நன்றி நண்பரே

      நீக்கு
  10. ஒரு அலாதியான நடை அது...
    எழுத்து நடை.
    வாகனங்கள் விரையும் நெடுஞ்சாலையில் துள்ளுகின்ற மான் போல ..
    விமலன் ஐயா அவரது தளத்தில் பயன்படுத்தும் படங்கள் எல்லாமே அனிமேட்டட்,

    அதே போல் அட்டைப்படங்களும் அருமையாகத் தானே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே ஒரு அலாதியான நடை விமலன் அவர்களுடையது.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  11. இது போன்ற அறிமுகங்கள்
    நெஞ்சை விம்மச் செய்கின்றன.
    சில சமயங்களில்
    விடுதலைப் படுத்துகின்றன
    நடப்பு சூழல் களில் இருந்து.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வார்த்தைகள் மிகுந்த மகிழ்வினைத் தருகின்றன ஐயா. நன்றி

      நீக்கு
  12. உங்கள் விமர்சனத்தில் ,ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல எடுத்துக் காட்டி இருக்கும் எதார்த்த நடை மனதைக் கவர்கிறது !
    த .ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே
      யதார்த்த நடைக்குச் சொந்தக்காரர் விமலன்
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  13. மிகவும் அருமையான விமர்சனம் ஐயா... காட்சிகள் கண்கள் முன்னே கொண்டு வருவதில் அவருக்கு நிகர் அவரே...

    இனிய நண்பர் விமலன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    (2 தலைப்பு தான் வாசித்துள்ளேன்... இப்போது நூல் உறவினர்களின் கையில்...!)

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா06 பிப்ரவரி, 2014

    இடையிடை எனக்கும் கருத்திட்ட விமலன் பற்றிய விமரிசனம் நன்று.
    மிக ஆழப்புகுந்து எழுதப்பட்டுள்ளது. அருமை.
    இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு சிறுகதை தொகுதி பற்றிய விமரிசனம் நல்கினீர்கள், நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  16. நல்ல விமர்சனம் ஐயா.. புத்தகம் வாங்க தூண்டுகிறது...


    இது என்னுடைய வலைப்பக்க முகவரி... நேரமிருந்தால் வந்து பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் ஐயா!
    http://pudhukaiseelan.blogspot.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி நண்பரே.
      தங்களின் தளத்திற்கு வருகை புரிந்தேன். அருமை.
      தொடராளராக இணைந்தும் உள்ளேன்.
      இனி தொடர்வேன்

      நீக்கு
  17. மிகச்சிறப்பான ஒரு எழுத்தாளர் இவரது வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! அருமையாக அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம்.

    ஒரு படைப்பை விமர்சனம் செய்வது என்பது மிகக் கடுமையான பணி என்று உங்களுக்குத் தெரியாததல்ல.

    திரு விமலன் அவர்களின் கதைகளில் ஒன்றிரண்டை வாசித்த அனுபவம் இருக்கிறது. அவரின் எழுத்தைக் குறைத்து மதிப்பிடுவதல்ல இக்கடிதம் உணர்த்த வருவது.

    தாங்கள் தங்களின் விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிற ஒரு சொல் என்னை நிரம்பவும் யோசிக்க வைக்கிறது.

    தங்களின் விமர்சனம் தங்களின் முழு உரிமை பெற்றது என்றாலும். புதுமைப்பித்தனுக்கு நிகராக என்கிற பொருளில் விருதுநகரில் ஒரு புதுமைப்பித்தன் என்று குறிப்பிடுவதில் நான் சற்று விலகி நிற்கிறேன். புதுமைப்பித்தனின் எழுத்தும் நடையும் யாரும் அணுக முடியாத தளத்தில் இயங்குவது. இன்னும் நுட்பமாக நீங்கள் புதுமைப்பித்தனை வாசிக்கவேண்டும்.

    நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பதால் நான் சற்று உரிமை எடுத்துக்கொள்கிறேன்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, பார்ப்பதை எல்லாம் எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள், உணர்ந்ததை எல்லாம் எழுதுங்கள், எழுத்துக்கான களம், அன்றாடம் நாம் காணுகின்ற ஒவ்வொரு காட்சியிலும் இருக்கின்றது , எழுதுங்கள் என தாங்கள் வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றியே இதுநாள் வரை எழுதி வருகின்றேன். தங்களின் கரம் பற்றி, தத்தித் தந்தி நடக்க, நடை பயில்பவன் நான்.
      தாங்கள் கூறுவது உண்மைதான். புதுமைப் பித்தன் ஒரு மகா சமுத்திரம். அச்சமுத்ததிரத்தில் பயணம் செய்தவனல்ல நான். சமுத்திரத்தின் கடையில் நின்று, கடலை சிறிது ரசித்தவன்தான் நான்.இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.
      புதுமைப் பித்தனைக் குறைத்து மதிப்பிடுவதற்காக நான் அவ்வாறு எழுதவில்லை, என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். ஆனால் ஒவ்வொரு முறை விமலன் அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் போதும், ஏனோ எனக்கு புதுமைப் பித்தனே நினைவில் தோன்றுகிறார்.

      சிறுகதை என்றால் ஒரு தொடக்கம், ஒரு சிக்கல், ஒரு தீர்பு, சுபமான முடிவு என்ற வரையறையை வெடி வைத்துத் தகர்த்து எறிந்தவர் அல்லவா அவர். விமலன் அவர்களும் அவ்வாறே, தான் கண்ட காட்சியை, எழுத்துக்களின் விளையாட விடுகிறார்.
      விமலன் அவர்களைப் போற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் உள்ளத்தில் இருக்கிறது. புதுமைப் பித்தனைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல என் எண்ணம்.
      விமலன் அவர்கள், பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றி வருகிறார். தங்களது பணிநேரம் போக, மீதமுள்ள நேரத்தில், வேறு பல தொழில்கள் செய்து, காசு சம்பாதிக்க நினைப்பவர்கள், நிறைந்துள்ள இவ்வுலகில், தனது நேரத்தை எழுத்திற்காகச் செலவிடுகிறார். அவர் பாராட்டப்பட வேண்டியவர், போற்றப்படவேண்டியவர் என்பதாலேயே, அவரைப் போற்றினேன்.
      தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி ஐயா
      எனக்கு வழி காட்டுங்கள், நடை பயிலத் தயாராக இருக்கின்றேன்.
      மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  19. நல்ல எழுத்து எங்கிருந்தாலும் உற்சாகமூட்டி மேலும் நல்ல எழுத்துக்கள் வரத் தூண்டுவதன்றோ உங்கள் பழக்கம்! விமலனின் நூல்களை விரைவில் படிப்பேன். அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வொரு படைப்பாளியும் எழுதும் ஆக்கங்களை ஒருவர் படித்துப் புரிந்து கொள்வது என்பது வாசிப்பவரை பொறுத்து மாறுபடும். ஒருவருக்கு ஓஹோ என்று தெரிவது இன்னொருவருக்கு இவ்வளவுதானா என்று தோன்றலாம். விமரிசனம் என்பது வாசிப்பவரின் மன நிலையைப் பொறுத்தது. ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவதோ ஏற்றிப் புகழ்வதோ இறக்கி வெறுப்பதோ கூடாது. இது உங்கள் விமரிசனத்தை விமரிசிக்க எழ்தியது அல்ல. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, இன்று எங்கு நோக்கினாலும், இமயம் வருகிறது, இமயம் பொங்கி எழுந்தது, என்று யார் யாருக்கோ, சுவராட்டிகள் ஒட்டி வாழ்த்துவதைப் பார்க்கின்றேன் ஐயா.
      தகுதி என்பது சிறிதும் அற்ற மனிதர்களுக்குக் கூட, பணம்இருக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக விழா எடுக்கும் கூட்டங்கள் நிறைய இருக்கின்றன ஐயா.
      ஒருவர் உண்மையான , உந்துதலுடன், பற்றுடன், நல்ல செய்திகளை எழுதும் பொழுது, அதுவும் யதார்த்த நடையில், எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எழுதும் பொழுது அவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணமே என்னுள் மேலோங்கி நிற்கிறது. அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் எனது விமர்சனம்.
      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  21. புதுமைப் பித்தன் கதைகளைத் திரும்பத் திரும்ப ரசித்துப் படித்தவன் நான். அவர் எழுத்துக்களில் உள்ள அந்த நையாண்டி, நகைச்சுவை போல இனி யாரும் எழுதப் போவதில்லை.

    விமலன் எழுதிய நூல்களைப் பற்றிய தங்களது விமர்சனம் , அவரது நூல்களைப் படிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது வாங்கி படிக்கிறேன். பகிர்விற்கு நன்றி! விமலனுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுமைப் பித்தனின் சிறுகதைகளை எனது அலைபேசியிலேயே, தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன் ஐயா. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்து ரசிப்பேன்.
      தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  22. மிக அருமையான பதிவு.விமலன் என்ற நூலகத்தின் நூல்களைப்பற்றி தாங்கள் வழங்கியிருக்கும் விமர்சனம் போற்றத்தக்கது .விமலன் அவர்களின் நூல்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே. என்னிடம் நூல் உள்ளது. தருகின்றேன் நண்பரே. நன்றி

      நீக்கு
  23. மிக அருமையான பதிவு.விமலன் என்ற நூலகத்தின் நூல்களைப்பற்றி தாங்கள் வழங்கியிருக்கும் விமர்சனம் போற்றத்தக்கது .விமலன் அவர்களின் நூல்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே. என்னிடம் நூல் உள்ளது. தருகின்றேன் நண்பரே. நன்றி

      நீக்கு
  24. புதுமைப்பித்தன் என்றதும் உடனே படபடத்துப் படிக்கத் தொடங்கினேன். விமலன் புதுமைப்பித்தனை விடச் சிறந்த புனைவராக இருக்கலாம்.. அந்த எண்ணத்தை மனதில் விதைக்க முடியாமல் போனதன் காரணம் புதுமைப்பித்தனைக் காட்டி புதுமைப்பித்தன் போலவே என்றதாலா? ஏனோ என் மன விகாரம் சற்று ஒருதலையாகவே சிந்திக்க வைக்கிறது.

    விமலன் அவர்களின் எழுத்தைப் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது உங்கள் விமர்சனம். அறிமுகத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  25. படைப்பவனுக்குத் தெரியாத , தன் படைப்பின் நூட்பம் விமர்சகரால்
    வெளிப்படுவது இயல்பு! அதை தாங்கள் நன்கு செய்கிறீர்கள்! வாழ்த்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  26. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். உங்கள் விமர்சனத்தில் நான் தலையிட உரிமையில்லை. என்றாலும் புதுமைப்பித்தனை ஓரளவுக்கு ஆழமாக வாசித்தவன் என்பதால் சொன்னேன். ஒன்றைப்போல ஒன்று என்பது மாற்று ஆகிவிடமுடியாது, உங்களின் பண்பை அறிந்தவன் நான். எங்கு நல்ல விஷயம் கண்ணில்பட்டாலும் பாரபட்சமின்றிப் பாராட்டும் தன்மையுள்ளவர். எனவே தவறாக எண்ணிவிடவேண்டாம். மனத்தில் பட்டதை சொன்னேன். தவிரவும் உங்களுக்கு என்று இருக்கும் திறன் இயல்பாகவே வந்தது. அது வெளிப்படுவதற்கான காலத்தில் வெளிப்பட்டே நிற்கும், அப்போது அதன் துர்ண்டலுக்குக் காரணமாக உள்ள ஆயிரமாயிரம் சுடர்களில் நானும் ஒருவன் அவ்வளவே. நன்றி ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, வணக்கம்.
      என் விமர்சனத்தில் மட்டுமல்ல, எனது சொந்த விசயத்தில் கூட தலையிட தங்களுக்கு முழு உரிமை உண்டு. தாங்கள், எனது மூத்த சகோதரர் . தாங்கள் அளிக்கும் உற்சாகத்திலும், வழிகாட்டுதலாலுமே, நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
      என்னால் வலைப் பூவில் தொடர்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கே இல்லாத நிலையில், எனக்கு நம்பிக்கை ஊட்டி, எழுதுங்கள் எழுதுங்கள் என, எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தவர் தாங்கள்தான். அதனால் தாங்கள் சொல்லும் எந்த சொல்விற்காகவும், நான் எக்காலத்தும் வருந்தவே மாட்டேன். எனக்கு வழிகாட்ட, தாங்கள் கூறும் அறிவுரையாகவே மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வேன்.
      எனவே தவறாக எண்ணிவிட வேண்டாம் என்ற வார்த்தையினை எனக்குக் கூற வேண்டிய அவசியமே இல்லை.
      வழி காட்டுங்கள், அவ்வழியில் நடக்கிறேன்.
      மிக்க நன்றி

      நீக்கு
  27. விமலன் அவர்களின் வலையில் படைத்ஹா படைப்புகளை நான் விரும்பிப் படிப்பது உண்டு. அன்றாட கிராம வாழ்க்கைய அழகாகப் படம் பிடித்துக் காட்டுவார். நான் வலைசர பதிவ்களை தொகுத்தபோது விமலன் அவர்களை குறிப்பிட்டிருந்தேன். நல்ல பதிவு ஐயா! தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  28. அற்புதமாக ஆழமாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    தற்சமயம் தான் அவரிடம் நேரடியாக ஒரு
    பதிப்பினைப் பெற்று படித்துக் கொண்டு வருகிறேன்
    அதனால் தங்கள் விமர்சன நேர்த்தியை
    முழுமையாக உணர முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  29. பரபரப்பான (வெளிநாடு ) வாழ்கைச் சூழலில் இருந்து கொண்டு
    அருமையான படைப்புக்களைத் தேடிச் சுவைக்கும் பக்குவ நிலையை
    இழந்து தவிக்கும் அகதியின் கண்களில் பட்ட இந்த முத்தான விமர்சனத்தைப்
    பார்த்த போது தான் புரிகிறது தங்களின் மதிப்பும் பெறுமதியும் !! மன்னிக்கவும் சகோதரா .என்னே ஒரு விமர்சனம் கதாசிரியரின் கதைகளுக்கு இதை விட சிறப்பான மகுடம் எங்கு கிடைக்கும்? ! தங்களின் விமர்சனத்தைப் பார்த்த நொடிப் பொழுதில் விமலன் அவர்களால் எழுதப்பட்ட கதைகளையும் வாசித்து விட வேண்டும் என்ற ஆர்வம் மேலெழுகின்றது .மண் மணம் மாறாத மனங்களின் படைப்பு வெண் மதியையும் வென்று துலங்கிட என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி நாட்டில் வாழ்ந்தாலும்,
      தங்களின் மனம் தமிழ்மனமல்லவா,
      நேசிப்பதும் சுவாசிப்பதும்
      கன்னித் தமிழையல்லவா.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  30. பெயரில்லா09 பிப்ரவரி, 2014

    தமிழ் எழுத்தாளர்களுக்கு இது போன்ற அறிமுகப்படுத்துதல் அவசியம் ஐயா.
    என் போன்ற புத்தக வாசிப்பு அனுபவம் குறைந்தவர்களுக்கு பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  32. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - மூன்றாம் நாள்

    பதிலளிநீக்கு
  33. விமலன் அவர்களைப் பற்றிய தங்கள் கருத்துடன் அவரது நூலை ஆழ்ந்து படித்து அதன் சிறப்புக்களையும் வெகு அழகாக வழங்கி உள்ளீர்கள். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு