01 ஜனவரி 2016

பிச்சாவரம்
  கடந்த 5.6.2015 வெள்ளிக் கிழமை, பிற்பகல் 2.30மணி. சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு எதிரே உள்ள கடை வீதியில், பூட்டப் பட்டிருந்த ஒரு கடையின் வாசலில் நானும், என் மனைவியும் அமர்ந்திருக்கிறோம்.

   அன்று காலை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பன்னாட்டுக் கருத்தரங்கம். 350 நூல்களின் வெளியீடு. ஒரே நேரத்தில், ஒரே மேடையில். கின்னஸ் சாதனை விழா. 350 நூல்களுள் எனது நூலும் ஒன்று.

     காலை நிகழ்ச்சி நிறைவுற்றதும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து புறப்பட்டோம். என் மனைவி சிதம்பரம் நடராசரைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். உத்தரவினை மீற இயலாதல்லவா. இதோ கோயிலின் வாசலில்.


    மாலை 4.00 மணிக்குத்தான் கோயிலின் கதவுகள் திறக்கும். அதுவரை பூட்டியிருந்த கடையில் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

     அலைபேசியில், நண்பரும், எம் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களை அழைத்தேன். புத்தக வெளியீட்டு விழா நிகழ்வுகளைப் பகிரிந்து கொண்டேன்.

இப்பொழுது எங்கிருக்கிறீர்கள் எனக் கேட்டார்.

கடையின் வாசலே சரணம் என்று அமர்ந்திருக்கிறோம் என்றேன்.

எதற்காக பூட்டிய கடைக்கு காவல் இருக்கிறீர்கள். அருகில்தான் பிச்சாவரம் இருக்கிறது, சென்று வாருங்களேன் என்றார்.

பிச்சாவரம்

    பிச்சாவரம் சிதம்பரத்திற்கு அருகில் என்று தெரியும். மிக அருகில் என்று தெரியாது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் விசாரித்தேன்.

பதினைந்தே நிமிடம் என்றார்.

    எனது முன்னாள் மாணவர் திரு தினேஷ் என்பவர் வாடகைக் கார் நிறுவனம் நடத்தி வருபவர். அவருடன் அவரது காரில்தான் சிதம்பரம் வந்திருந்தோம்.

    அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் பிச்சாவரத்தில் இருந்தோம்.

பிச்சாவரம்.

       சிதம்பரத்திற்கு அருகில், மிக அருகில், வங்கக் கடலை ஒட்டிய பகுதி பிச்சாவரம்.

        முன்னாளில் பித்தர் புரம் என அழைக்கப் பட்ட, இப்பகுதி, பின்னாளில் மருவி பிச்சாவரமாகி இருக்கிறது.

    பிச்சாவரம் காட்டுப் பகுதியின் பரப்பளவு என்ன தெரியுமா?

    ஒரு ஏக்கர், இரு ஏக்கர் அல்ல, முழுதாய் 2800 ஏக்கர்கள்.

    வங்கக் கடலுக்கு முன், தனியொரு கடலாய் இப்பகுதி பரந்து விரிந்துள்ளது.

    அவ்வளவும் மண்ணும், நீரும், சேறும், சகதியும் நிறைந்த பகுதி. இப்பகுதியில் தண்ணீரின் ஆழம் ஒரு சில அடிகளே. ஆனாலும் இறங்கி நடக்க இயலாது. காரணம் சேற்றுத் தரை.

     இதுபோன்ற உவர் நீரும், சேறும் சகதியும் கலந்த பகுதியில், சில வகைத் தாவரங்களால் மட்டுமே பிழைப்பை ஓட்ட முடியும்.

      நமக்குத் தெரிந்து, சிறு செடியாகட்டும், உயர்ந்தோங்கி நிற்கும் பெரு மரம் ஆகட்டும்., இவற்றின் வேர்கள், மண்ணில், கீழே கீழே ஆழமாய் இறங்கி படர்ந்து பரவி மரத்தைக் காக்கும்.

       ஆனால் இப்பகுதியில் வளரும் தாவரங்களின் வேர்கள், பூமிக்குள்ளே சென்று, கொண்டை ஊசி வலைவில் திரும்புவதுபோல் ( U Turn ) திரும்பி, மீண்டும் மண்ணைப் பிளந்து கொண்டு, மேலே வந்து, தண்ணீர் மட்டத்திற்கும் மேலே, தலை நிமிர்ந்து நிற்கும் வல்லமை வாய்ந்தவை.

      இவ்வகைத் தாவரங்களால் நிறைந்த பகுதியே அலையாத்திக் காடுகள் ஆகும்.

     கடலில் இருந்து கரைநோக்கி வரும், கடும் அலையினையும், ஏன் சுனாமியைக் கூட, இது எங்க ஏரியா, உள்ளே வராதே என, நேருக்கு நேர் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பும் உடல் வலு பெற்றவை இந்த அலையாத்திக் காடுகள்.

     அலைகளைத் திருப்பி அனுப்புவதாலேயே, அலையாத்திக் காடுகள் என்னும் பெயர் பெற்றவை.

       உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய அலையாத்திக் காடு பிச்சாவரம்.

       முதலிடம் எங்கு இருக்கிறது தெரியுமா? அதுவும் இந்தியாவில்தான். கங்கை ஆற்றுப் படுக்கையில் உள்ள, சுந்தரவனக் காடே, உலகின் மிக மிகப் பெரிய அலையாத்திக் காடுஆகும்.

       இதோ பிச்சாவரம்.
      

ஆங்காங்கே சிறு சிறு கட்டிடங்கள். பயணிகள் தங்கும் விடுதி. உணவு விடுதி. பிச்சாவர படகுத் துறை அலுவலகம். கரையில் வரிசை வரிசையாய் துடுப்புப் படகுகள். ஒன்றிரண்டு மின் மோட்டார் படகுகள்.

       மின் மோட்டார் படகில் பயணிக்க கட்டணம் ரூ.1500. இப்படகில் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் அமரலாம்.

       ஆனால் இப்படகானது, ஆழம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே பயணிக்கும். அலையாத்திக் காடுகளில் சந்து பொந்துகளில் நுழைந்துப் பயணிக்க இப் படகால் இயலாது.

        அலையாத்திக் காடுகளின் செல்லப் பிள்ளையே துடுப்புப் படகுகளதான். சுமார் ஒரு அடி ஆழத்திற்குத் தண்ணீர் இருந்தாலும், துடுப்புப் படகானது, அருமையாய் அசைந்தாடிச் செல்லும்.

       துடுப்புப் படகில் ஒரு நபருக்குக் கட்டணம் ரூ.80. மூன்று சீட்டு பெற்றோம். பயணச் சீட்டிலேயே, படகோட்டியின் எண்ணையும் குறித்துக் கொடுத்து விடுகிறார்கள்.

       பயணச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு, படகுத் துறைக்குள் நுழைந்தோம். படகுத் துறையில் பாதுகாப்பு அங்கியினை, வரிசை வரிசையாய் மாட்டி வைத்திருந்தார்கள்.

      கடலில் ஆழமே கிடையாது. இருப்பினும் பாதுகாப்பிற்காக ஓர் முன்னேற்பாடு. அணிந்துதான் பார்ப்போமே என்ற ஆசையில் அணிந்து கொண்டோம்.

       எங்களுக்கு உரிய படகு வந்தது. ஏறி அமர்ந்தோம். படிகோட்டித் துடுப்புப் போட, படகு, யானை போல் மெதுவாய் அசைந்தாடிப் புறப்பட்டது.

      

கரையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அலையாத்திக் காடுகள். மெதுவாக படகுச் செல்லச் செல்ல, அலையாத்திக் காடுகள், தங்களின் அனைத்துக் கரங்களையும் நீட்டி, மார்போடு அணைத்து, எங்களை உள் வாங்கிக் கொண்டன.

     திடீரென்று வானமானது மேகக் கூட்டங்களால் நிரம்பி, சூரியனை மறைத்து இருளைப் பரிசாக வழங்கிய ஓர் சூழலை, ஒரு சில நிமிடங்களில் கண்ணாரக் கண்டோம். அலையாத்திக் காடுகள் சூரிய வெளிச்சத்தினை முழுமையாய் மறைத்து, இருளை வழங்கின. இருளில் எங்களின் படகு மெதுவாய் ஊர்ந்து சென்றது.

       

அடர்ந்த காட்டுப் பகுதியில் நுழைந்த ஓர் உணர்வு. எந்த திசையில் இருந்து வந்தோம், எந்த திசையில் பயணிக்கிறோம் என்பது கூட புரியவில்லை. கரை எங்கே, கடல் எங்கே என எதுவுமே புரியாத நிலையில் எங்களின் பயணம்.

      அமைதி என்றால் அப்படி ஓர் அமைதி. இதுவரை உணர்ந்திராத, அனுபவித்திராத ஓர் அமைதி.

        இந்த அமைதியை அனுபவிப்பதற்காக மட்டுமாவது, அனைவரும் ஒரு முறை பிச்சாவரம் சென்று வரவேண்டும் என்பதே என் விருப்பமாகும்.

        எங்களின் மூச்சு சத்தம் எங்களுக்கே கேட்டது. துடுப்பானது நீரில் மோதும் ஓலி கூட, தெளிவாக, துல்லியமாக செவிகளில் நுழைந்து அதிர வைத்த்து.

       உலகே அமைதியாய் சுற்ற, துடுப்புச் சத்தம் மட்டுமே, உலகின் ஒரே ஒலியாய், ஒற்றை ஒலியாய், ஓங்கி ஒலித்தால் எப்படியிருக்கும். அதை நேரே அனுபவித்தோம்.

       அலையாத்திக் காடுகளுக்குள், உள்ளே, உள்ளே செல்லச் செல்ல, புதியதோர் உலகில் பயணிக்கும் ஓர் உணர்வு.

       


நேரம் செல்லச் செல்ல, நாங்கள் சென்ற பாதையில் இருந்து, பல கிளைச் சாலைகள், பிரிந்து பிரிந்து சென்றன. சில வழித் தடங்களின் அகலம் வெறும் இரண்டு அல்லது மூன்று அடி மட்டுமே இருக்கும்.

      பல குறுகிய பாதைகளில் பயணித்தோம். படகின் இருபுறமும் துடுப்புப் போடுவதற்குக் கூட இடமில்லை. படகினை முன் பின் ஆகத் திருப்பி, ஒரு துடுப்பினைப் படகில் வைத்து விட்டு, மீதமுள்ள ஒரே ஒரு துடுப்பினை மட்டும் பயன்படுத்தி, தரையில் துடுப்பினை அழுத்தி, அழுத்தி படகினை முன்புறம் தள்ளினார்.

     படகில் அமர்ந்தவாரே, கைகள் இரண்டையும் நீட்டினால், இருபுறமும் வளர்ந்துள்ள தாவரங்களைத் தொட்டுக் கொண்டே செல்லலாம். அவ்வளவு குறுகிற பாதையில் எங்களின் பயணம்.

    


ஒவ்வொரு தாவரத்தையும் உற்றுப் பார்த்தோம். தாவரங்களின் வேர் பகுதி, நீர் மட்டத்திற்கும் மேலே, தலையை நீட்டி எங்களை வேடிக்கைப் பார்த்தது.

         குறுகிய நீர் பாதையில் பயணித்த நாங்கள், பல நிமிடங்கள் கடந்த நிலையில், ஓர் அகலமான பாதையில் சங்கமித்தோம்.

      நண்பர்களே, நீங்கள் நடிகர் கமல்ஹாசனின் தசாவதாரம் படம் பார்த்திருப்பீர்கள். அப்படத்தின் தொடக்கக் காட்சிகளில், இறைவன் நாராயணனைப் படகில் ஏற்றி. இருபுறமும் மரங்கள் சூழ்ந்த நதி வழியே கொண்டு செல்வார்களே, அக்காட்சி நினைவிருக்கிறதா?

      


அக்காட்சி படம் பிடிக்கப் பட்ட இடம் இதுதான். இதோ அகண்டு விரிந்து, பெரு நதிபோன்ற பகுதியினைப் பாருஙகள்.

      அலையாத்திக் காடுகளில் இரண்டு மணி நேரப் படகுப் பயணம். நேரம் சென்றதே தெரியவில்லை.

      நாமெல்லாம் பேருந்தில், தொடர் வண்டியில், கப்பலில், வானூர்தியில் என நிலத்திலும், நீரிலும், ஆகாயத்திலும் பயணித்திருக்கலாம். ஆனால் அப்பயணங்களில் கிடைக்காத ஓர் புதுமையான அனுபவத்தினை அலையாத்திக் காடுகளில் பெறலாம்.

      இரு புறமும் வழி நெடுக மரங்கள், மேற்புறமும் குவிந்து வானத்தை மறைக்கும் மரக் கூட்டங்கள். கீழே துடுப்புப் படகில் ஒரு முறை பயணித்துப் பாருங்களேன்.


       வாழ்வில் என்றென்னும் மறக்க இயலாதப் பயணமாய், நெஞ்சில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பயணமாய் இது அமையும்.