25 ஜனவரி 2016

உயிர் பெற்ற ஓவியம்


  

நாமக்கல். சிம்சன், ஆங்கிலேயப் பொறியாளர் பல நாட்களாக நாமக்கல்லில் முகாமிட்டுள்ளார்.

   ஒரு நாள் மாலை நேரத்தில், நாமக்கல்லின் நகர மண்டபத்திற்குள் நுழைந்தார். மெதுவாக, மிகவும் பொறுமையாக, நகர மண்டபத்தைச் சுற்றிப் பார்த்தார்.

    சுவற்றில் பல ஓவியங்கள் வரிசையாய், மண்டபத்திற்கே மெருகூட்டிக் கொண்டிருந்தன. ஓவியங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்தவாறு நகர்ந்தவர், ஓர் ஓவியத்த்தின் அருகில் வந்தவுடன், அசையாமல் நின்றுவிட்டார்.

      ஓவியத்தின் கருனை மிகுந்த கண்களும், அறிவுச் சுடர் வீசும் முகமும் அவரை அசையாமல் நிறுத்திவிட்டது.


     நீண்ட நேரம் ஓவியத்தையே உற்றுப் பார்த்த வண்ணம் நிற்கிறார். அருகில் நின்று கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

      பணியாளர்கள் குழப்பத்தோடு ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்தவாறு நிற்கிறார்கள். ஆங்கிலேய அதிகாரியோ, ஏதோ ஆழ்ந்த சிந்தனையுடன் படத்தைப் பார்த்தவாறே நிற்கிறார்.

     நீண்ட நேரம் கடந்த பின், மெதுவாக திரும்பிய ஆங்கிலேய அதிகாரி, மெல்ல கேட்டார்.

படத்தில் இருப்பது யார்?

ஐயா, படத்தில் இருப்பது ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர். பெயர் லட்சுமண அய்யர்.

அப்படியா, படத்தை வரைந்தது யார்?

லட்சுமண அய்யர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற போது, அவரது முன்னாள் மாணவர் ஒருவர், தானே வரைந்து, பரிசளித்த ஓவியம் அய்யா.

யார் அவர்?

ஐயா, அவர் ஒரு கவிஞர்

கவிஞரா, நான் இந்த ஓவியத்தை வரைந்தது யார் எனக் கேட்டேன்?

இப்படத்தை வரைந்தவர் ஓவியர் மட்டுமல்ல, ஐயா, சிறந்த கவிஞரும் ஆவார்.

அப்படியா

     மீண்டும் சிறிது நேரம் படத்தையே உற்றுப் பார்த்த ஆங்கிலேய அதிகாரி, ஒரு முடிவிற்கு வந்தவராய்,

அவரை நான் பார்க்க வேண்டுமே என்றார்

     அடுத்த நாள் காலை, பொறியாளர் சிம்சனின் அலுவலகத்திற்கு, அந்த கவிஞரை, கவிஞரான அந்த ஓவியரை அழைத்து வந்தனர்.

      இருக்கையில் அமர்ந்தபடியே, சிரித்த முகத்துடன், ஓவியரை வரவேற்ற ஆங்கிலேய அதிகாரி, தனது மேசையில் இருந்து, ஒரு சிறிய புகைப் படத்தினை எடுத்து ஓவியரிடம் கொடுத்தார்.

    நான்கே வயதான ஒரு சிறுமியின் படம் அது.

     சிரிக்க மறந்து, கண்களை மூடி, ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் எடுக்கப் பட்டப் படம் அது.

     ஆம், அப் படம், அச்சிறு குழந்தை இறந்த பின்னர் எடுக்கப்பட்ட படம்.

     ஆங்கிலேய அதிகாரியின் கண்களில் மெல்ல, மெல்ல நீர்த் திவலைகள் ததும்பத் தொடங்கியிருந்தன. மெதுவாய் நா தழு தழுக்கப் பேசினார்.

     இது என் ஒரே குழந்தையின் படம். ஒன்பது மாதத்திற்கு முன்னர்தான், தாயும் மகளுமாய் இந்தியாவிற்கு வந்தனர். ஐந்தே ஐந்து மாதங்கள்தான், சிரித்து சிரித்து, என்னை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க விட்டவள், என்ன நோயோ தெரியவில்லை, திடீரென்று கண்மூடி, எங்களை கண்ணீர் கடலில் தவிக்க விட்டு விட்டுப் பறந்து போய் விட்டாள்.

     என் மகள் இறந்த பின் எடுக்கப் பட்ட படம் இது. உயிருடன் இருந்த பொழுது எடுக்கப் பெற்றப் படங்கள் எல்லாம் எப்படியோ தொலைந்து போய்விட்டன. மீதமிருக்கும் இந்த ஒரே ஒரு படத்தைக் கொண்டு, என் அன்பு மகளை மீண்டும் காண விரும்புகின்றேன்.

    தாங்கள்தான் உதவ வேண்டும். என் மகளை கண் திறந்த நிலையில், இதழ் மலர்ந்த நிலையில், தாங்கள்தான் வரைந்து தர வேண்டும்.

    தங்களின் பணிக்குச் சன்மானமாய் ரூபாய் ஐம்பது தருகிறேன் என்றார்.

    குழந்தையின் படத்தினைப் பெற்றுக் கொண்ட ஓவியர் வீடு திரும்பினார்.

    ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் பத்து நாட்கள் செலவிட்டார். குழந்தையின் படத்தைப் பார்த்துப் பார்த்து, சிரித்த முகத்தை மனக் கண்ணில் பார்த்துப் பார்த்து, மெதுவாய் உரு கொடுத்தார். படம் மெல்ல மெல்ல உயிர் பெற்றது.

    பதினோராம் நாள் ஆங்கிலேய அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்றார். படத்தை பத்திரமாய் ஒப்படைத்தார்.

    படத்தை மூடியிருந்த காகிதங்களைப் பிரித்து, படத்தை மேசையில், குவிந்திருந்த கோப்புகளின் மேல், சாய்த்தவாறு நிற்க வைத்தார்.

     ஆங்கிலேய அதிகாரி தன் குழந்தையைப் பார்த்தார். கண்களை அகலத் திறந்தபடி, வியப்புடன் விழிகளை விரியவிட்ட நிலையில், தன் பிஞ்சு இதழ்கள், தாமரை போல் மலர்ந்து, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சிரிப்புடன் தன் மகளைக் கண்டார்.

       நேரே நின்று பார்த்தார். சிறிது வலப் புறம் நகர்ந்து சென்று மீண்டும் பார்த்தார். பின் இடது புறம் நகர்ந்து சென்று பார்த்தார்.

        எத்தனை எத்தனை கோணங்களில் பார்க்க முடியுமோ, அத்துனை அத்துனை கோணங்களிலும் தன் மகளைப் பார்த்தார்.

        நேரம் நொடி நொடியாய் கரைந்து கொண்டே இருந்தது. நொடிகள் நிமிடங்களாயின. ஆங்கிலேய அதிகாரியோ, படத்தை விட்டுக் கண்களை விலக்காமல், இமையினைக் கூட இமைக்காமல், அங்கும் இங்குமாய் மாறி மாறி நகர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

      பின் மெல்ல தலை நிமிர்ந்தார். கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

      பீறிக் கொண்டு வெளிக் கிளம்பத் துடிக்கும், அழுகையினை அடக்கிய படி, இரு கரம் நீட்டி, முன்னே வந்து, ஓவியரை அணைத்துக் கொண்டார்.

       என் மகளைக் கண்டேன், என் மகளைக் கண்டேன். மீண்டும் சிரித்த முகத்துடன், அச்சு அசலாய் என் மகளை மீண்டும் கண்டேன். இதழ்களில் சற்றே கோணலாய், என் மகள் சிரிக்கும் சிரிப்பை மீண்டும் கண்டேன். இது வெறும் ஓவியமல்ல, என் மகள், மீளா உறக்கத்தில் இருந்து மீண்டு எழுந்த என் மகள். இதோ என் மகள்.

       தன் சட்டைப் பைக்குள் கை விட்டவர், பைக்குள் இருந்த மொத்தப் பணத்தையும் எடுத்து ஓவியரின் கைகளில் திணித்தார்.

       அடுத்த நொடி, கண்கள் மீண்டும் படத்தின் பக்கம் திரும்பின.

       ஓவியர் ரூபாய் நோட்டுக்களை ஒவ்வொன்றாய் எண்ணினார். மொத்தம் அறு நூற்று எழுபத்து ஐந்து ரூபாய் இருந்தது.

        ஓவியர் மொத்தப் பணத்தையும், அருகில் இருந்த நாற்காலியின் மீது வைத்து விட்டு, அமைதியாய் நின்றார்.

        நீண்ட நேரம் கழித்து, தன் மகளின் படத்தில் இருந்து கண்களை அகற்றிய ஆங்கிலேயே அதிகாரி, ஓவியரையும், நாற்காலியில் பணத்தையும் கண்டார்.

என்ன ஓவியரே, பணம் போதவில்லையா? இன்னும் எவ்வளவு வேண்டும் கேளுங்கள், உடனே தருகிறேன்.

அளவுக்கு அதிகமாய் கொடுத்து விட்டீர்கள். எனக்கு ஐம்பது ரூபாய் போதும்

இல்லை ஓவியரே, என் மகளை, என் செல்ல மகளை எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறீர்கள், உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் என் மனம் மகிழும் என்று கூறி, பணத்தைத் திரும்பப் பெற மறுத்து விட்டார்.

      நண்பர்களே, இந்த ஓவியர் யார் தெரியுமா?

நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் என மகாகவி பாரதியாரால் பாராட்டப் பெற்றவர்.

     ஓவியர் மட்டுமல்ல, சீரியக் கவிஞர். பின்னாளில் தன் பாடல்களால், தமிழகத்து இளைஞர்களின் நாடி நரம்புகளில் எல்லாம், சுதந்திர உணர்வைச செலுத்தி முறுக்கேற்றியவர்.

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

எனப் பாடியவர்

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு

என முழுங்கியவர்

கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது

என முரசறைந்து அறிவித்தவர்.

இவர்தான்,


நாமக்கல் கவிஞர்

வெ. இராமலிங்கம் பிள்ளை.

67 கருத்துகள்:

 1. நாங்கள் அறிந்திராத பல செய்திகளை எங்களோடு பகிரும் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. இப்பணி தொடர வாழ்த்துக்கள். தற்போது இராமலிங்கம்பிள்ளையவர்களின் மற்றொரு பரிமாணத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. புதிய தகவல்.
  சாதித்தவர்களின் பின்னால் சாதி இருந்தால் அது தவறாக படுவதில்லை.

  அன்பு இருக்கும் இடத்தில் ஆதிக்கத்திற்கும் அவநம்பிக்கைக்கும் வெறுப்புக்கும், சுரண்டலுக்கும் இடமில்லை. இட ஒதுக்கீடுகளும் தேவையில்லை.

  ஆனால் அன்பை விடுத்து சுயநலமும் வெறுப்பும் உள்ளத்தில்
  பற்றி எரியும் போது இந்த உலகம் அமைதியை என்றும் காண இயலாது

  ஆனால் சாதியை பற்றிக்கொண்டு மனிதர்கள் மத்தியில் வெறுப்பு என்னும் தீயை பற்றவைத்து அதை அணையாமல் காத்துக்கொண்டிருக்கும் சமூக விரோதிகள் இருக்கு வரை இந்த மனித சமூகத்தில் அமைதி என்றும் நிலவ வழியில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நண்பரே
   சாதி இருக்கும் வரை சாந்தி நிலவ வழியேது
   நன்றி நண்பரே

   நீக்கு
 3. நாமக்கல் கவிஞரைப் பற்றி அறியாத தகவல், நன்றி அண்ணா. உங்கள் பதிவும் எப்பொழுதும் போல் உணர்வுப்பூர்வமாய்!

  பதிலளிநீக்கு
 4. நாமக்கல் என்று தாங்கள் தொடங்கிய போதே யூகித்து விட்டேன்..

  தமிழன் என்றோர் இனமுண்டு
  தனியே அவர்க்கோர் குணமுண்டு!..

  என முழங்கிய -
  நாமக்கல் கவிஞரைப் பற்றிய அரிய தகவல் கண்டு மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 5. உயிரோவியம் என்று சொல்லலாமா? நெகிழ்ச்சியான பதிவு. மிக சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. >>> என முழங்கிய <<<
  - என்று, எழுத்துப் பிழைதனை தயை கூர்ந்து சரி செய்யவும்..

  பதிலளிநீக்கு
 7. நாமக்கல் கவிஞர் பற்றிய நெகிழ்ச்சியான பகிர்வு. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 8. நாமக்கல் கவிஞர் பற்றிய பகிர்வு அருமை

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஐயா. உணச்சிகரமான காட்சியை கண் முன் நிறுத்தினீர்கள். நீங்கள் வெளியிட்டிருக்கும் நாமக்கல் மலைக்கோட்டையை கூட, நாமக்கல் கவிஞர் பிரமாண்ட ஓவியமாக தீட்டியுள்ளார். அந்த ஓவியம், நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இடம் பெற்றுள்ளது ஐயா.

  பதிலளிநீக்கு
 10. எல்லோரும் சொன்னதைப் போல, எனக்கும் இது புதிய தகவல்தான். தேடிப் பிடித்துத் தந்த தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. விறுவிறுப்புயுட்டி 'டப்' என்று நாமக்கல் கவிஞரை சொன்ன விதம் அருமை!

  பதிலளிநீக்கு
 12. அறியாத செய்தி.

  அந்த ஆங்கிலேயப் பொறியாளரின் பெயரையும் தந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே...

  பதிலளிநீக்கு
 13. அறியாத புதிய தகவல் நண்பரே! அறிய தந்தமைக்கு நன்றிகள்!
  த ம 6

  பதிலளிநீக்கு
 14. கண்கள் பனித்தன, நண்பரே.

  பதிலளிநீக்கு
 15. நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை அவர்களின் அரிய விடயம் அறிந்தேன் நண்பரே நன்றி
  தமிழ் மணம் 7

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்
  ஐயா
  அறியாத விடயத்தை அறியத்தந்தமைக்கு நன்றி படித்து மகிழ்ந்தேன் த.ம 9
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 17. கவிஞரின் இன்னொரு பரிணாமம் கண்டு மகிழ்ந்தேன் :)

  பதிலளிநீக்கு
 18. சிறந்த வரலாற்றுப் பதிவு

  இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!


  மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
  http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

  பதிலளிநீக்கு
 19. அறியாத தகவல், நன்றி
  .
  அருமையான பதிவு
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 20. எங்கோ படித்த நினைவு! எனினும் தங்களின் நடையில் படிக்க மீண்டும் புதிதாய் கற்ற உணர்வு! அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. வெகு சிறப்பான பதிவு,
  கவிஞரை,அதிகாரியை,அவரது மகளை
  ஓவியத்தை என எல்லாவற்றையும்
  மிகச்சிறப்பான உயிரோவியமாய்
  உருவகபடுத்தியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. அறியாத தகவல்... //கத்தியின்றி இரத்தமின்றி
  யுத்தமொன்று வருகுது//காலம் கடந்து நிற்பவை..

  பதிலளிநீக்கு
 23. நாமக்கல் கவிஞர் பற்றிய அறியாத செய்தி அவர் அற்புத ஓவியர் என்பது.
  நீங்கள் அறிமுகப் படுத்தும் விதம் அலாதியானது.அருமை

  பதிலளிநீக்கு
 24. நாமக்கல் கவிஞர் பற்றி அறியாத செய்தி. சொல்லிச் சென்ற விதம் ரசிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 25. அரிய தகவல்! நெகிழச் செய்த பதிவு! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 26. good and super post. Now my marubadiyumpookkum.wordpress.com is suspended no longer available. So: I am requesting you to kindly visit as usual to my www.dawnpages.wordpress.com.and www.thanigaihaiku.blogspot.com.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   அவசியம் தங்களின் மற்ற வலைப் பூக்களுக்கு வருவேன்

   நீக்கு
 27. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  தாமத வருகைக்கு மன்னிக்கவும். அற்புதமான பதிவு. அறியாத செய்தி அறிந்து நெகிழ்ந்தது மனது.

  பதிலளிநீக்கு
 28. என்னது நாமக்கல் கவிஞர் ஓவியரா...
  இது தெரியவே தெரியாது எனக்கு..
  அதுவும் இவ்வளவு நேர்த்தியான ஓவியர்..
  அருமையான தகவல் அய்யா தொடருங்கள்
  தம +

  பதிலளிநீக்கு
 29. தாமத வருகைக்கு மன்னிக்கவும் சகோ,
  நல்ல பகிர்வு,தகவல் தங்கள் நடையில் அருமை சகோ,

  பதிலளிநீக்கு
 30. அவருக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை உங்கள் மூலம் தான் அறிந்துகொள்கிறேன்!! நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
 31. அறியாத செய்தி ஐயா...
  அருமையாச் சொல்லியிருக்கீங்க...

  பதிலளிநீக்கு
 32. மிக அரிய தகவல் தோழர்

  பதிலளிநீக்கு
 33. சிம்சன் அவர்கள் கொடுக்க நினைத்தது 175 ரூபாய்கள். அவருடைய பணப்பையில் இரண்டு அடுக்குகள் இருந்தன. அவர் கைவிட்டு எடுத்தது இன்னொரு அடுக்கில். 'நாமக்கல் கவிஞர் இவ்வளவு ரூபாய் தவறாகத் தந்துவிட்டார் என்பதை அறிந்து அவரிடம் முகக் குறிப்பால் உணர்த்தி, ஸ்டூலில் அனைத்து ரூபாய்களையும் வைத்துவிட்டார். சிம்சன் துரை, அதை எண்ணிப்பார்த்து, நான் இன்னொரு பகுதியில் (இன்னொருவருக்காக) வைத்தது, உங்களுக்கு வந்துவிட்டது. இதை அந்தக் கடவுளே உங்களிடம் சேர்ப்பிக்கச் சொன்னதாகத்தான் நான் நினைக்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். சிம்சன் துரையால் தன் குழந்தையின் படத்தைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். பின்பு வீடு திரும்பியபின், கவிஞர், அவர் தந்தையிடம் 175 ரூபாய்களை மட்டும் கொடுத்து, மிகுதியைத் தான் விரும்பிய, வரைகலைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு உபயோகப்படுத்திக்கொண்டார்.

  கவிஞர் எழுதிய தன் வரலாறு (பழனியப்பா பதிப்பகம்) இன்னும் நிறைய, நெகிழவைக்கும் செய்திகளைச் சொல்கிறது. "வறுமையும் புலமையும்" எப்படி உண்மையானது என்பதை அவர் சிறிது நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார்.

  எத்தனை மேதைகளை, வாழ்க்கையை நம் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்த தூயவர்களைக் கொண்ட நாடு இது. "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்... கண்ணீரால் காத்தோம்" என்ற பாடல் எவ்வளவு உண்மை.

  பதிலளிநீக்கு
 34. ஐயா, கரந்தையாரே முழு நிகழ்வுகளின்போதும் பக்கத்தில் பார்த்த வண்ணம் அழகாக நேர்முக வர்ணனை செய்வது போல வெகு சுவாரஸ்யமாக எழுதி எங்கள் விழிகளில் நீரையும் நிறைவாக ஆனந்தச்சிரிப்பையும் வரவழைத்துள்ளீர்கள்.நன்றி பலப்பல

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு