11 மே 2016

இராஜராஜேசுவரி அம்மன் ஆலயம்


   
ஆண்டு 1780,

    ஐப்பசி மாதம்.

    விஜயதசமி, இரவு நேரம்.

    அந்தக் கோயில் முழுக்க முழுக்கப் பெண்களால் ததும்பி வழிகிறது.

   அர்ச்சகர்கள் மற்றும் ஒரு சில கோயில் பணியாளர்களைத் தவிர ஆண்கள் யாருமே இல்லை.


    அன்று இரவு ஆண்களுக்கு அனுமதியும் இல்லை.

    எனவே எங்கு நோக்கினும் பெண்கள், பெண்கள்.

    ஆலயத்தின் கருவறைக் கதவுகள் திறக்கப் படுகின்றன.

    தீப ஆராதனை காட்டப் படுகிறது.

    தீப ஒளியில் அம்மன் ஜொலிக்கிறார்.

    தாயே, தாயே என்று பெண்கள், இறைவியை நோக்கிக் குரல் கொடுத்து வணங்குகின்றனர்.

   கூட்டத்தோடு கூட்டமாய் அவரும், கண்களை மூடி, இறைவியை வணங்கிக் கொண்டிருக்கிறார்.

     முகத்தில் வீரமும், இராஜ களையும் நிரம்பி வழிகிறது.

     உதடுகள் மென்மையாய் முனுமுனுக்க, அமைதியாய் இறைவியை வணங்கிக் கொண்டிருக்கிறார்.

   அப்பொழுது கூட்டத்தைப் பிளந்து கொண்டு, ஒரு பெண், மெல்ல மெல்ல முன்னேறி, இவரின் அருகே வருகிறார்.

     காதருகே குனிந்து, மெதுவாய் அந்தச் செய்தியைக் கூறுகிறார்.

திருப்பத்தூர் கோட்டையை சின்ன மருதுவும், உம்தத் உம்ரா படையை பெரிய மருதுவும் முறியடித்து விட்டதாக செய்தி வந்துள்ளது தாயே.

    மௌனமாய் துடித்துக் கொண்டிருந்த உதடுகள், துடிப்பை நிறுத்துகின்றன. மெதுவாய் உதடுகள் விரிந்து ஓர் புன்னகை, ஒரு நொடி, ஒரு நொடிதான். அடுத்த நொடி உதடுகளில் ஓர் இறுக்கம்.

    கண்கள் மெல்லத் திறக்கின்றன.

    திறந்த கண்கள் மெல்ல மெல்லச் சிவக்கின்றன.

    வலது கை மெல்ல, மெலெழும்பி, உடையினுள் மறைத்து வைத்திருந்த, உடை வாளை வெளியே உருவி எடுத்துத் தலைக்கு மேலே உயர்த்துகிறது.

    உதடுகள் விரிகின்றன.

    கோயிலின் அத்துனை ஒலிகளையும் மீறி, அத்துனை ஓசைகளையும் கடந்து, இவரது குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    வீரர்களே, தாக்குங்கள்…….

    அடுத்த நொடி, ஒவ்வொரு பெண்ணின் உடைக்குள் இருந்தும் ஆயுதங்கள் வெகுவேகமாய் வெளியே வருகின்றன,

     தாக்குங்கள், தாக்குங்கள் ……

     உருவிய ஆயுதங்களுடன், வெறி கொண்ட கூட்டம், கோயிலுக்கு வெளியே வந்து, எதிர்பட்ட வீரர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கிறது.

    கோயிலைக் காவல் காத்த வீரர்களுக்கு அப்பொழுதுதான், ஓர் உண்மை மெல்ல மெல்ல உறைக்கிறது.

     கோயிலில் பெண்கள் உடையில், போர் வீரர்கள், நிரம்பி இருப்பது மெல்ல மெல்லத்தான் புரிகிறது.

     தெருவெங்கும் தலைகள் உருண்டோடகின்றன.

    இதோ வெளியே வருகிறார் அந்தப் பெண்.

    சிவந்த விழிகளுடன், சீறும் சிங்கமாய், இரு கரங்களிலும் வாளேந்தி வெளியே வருகிறார்.

     வாள் சுழன்ற திசையெங்கும், தலைகள் தெறித்துச் சிதறுகின்றன.

     ஒரே நிமிடம்தான், கோயிலின் மணி ஓசை, வாயை மூடிக் கொள்ள, மரண ஓலம் விண்ணைப் பிளக்கிறது.

---
 
    நண்பர்களே, வீறு கொண்ட வேங்கைப் போல், சினம் கொண்டு, சீறி எழுந்து, சுற்றிச் சுழன்றுத் தாக்கும், இப்பெண், இவ்வீர மங்கை யார் தெரியுமா?

    ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு, இழந்த நாட்டை மீட்டெடுத்த இந்த வீர மங்கை யார் தெரியுமா?

       ஜான்சி ராணிக்கு 77 ஆண்டுகளுக்கு முன்னமே, ஆங்கிலேயர்களை, தமிழ் மண்ணில் அடக்கி ஒடுக்கிய, இந்த வீர மங்கை யார் தெரியுமா?


இவர்தான்
சிவகங்கைச் சீமையின்
ஒப்பற்ற அரசி
வீர மங்கை வேலு நாச்சியார்.

---
    
     விஜயதசமி நான்னாளில், பெரும் போரினைக் கண்ட, இந்தக் கோயில் எது தெரியுமா?

சிவகங்கை அரண்மனையின்
இராஜராஜேசுவரி அம்மன் ஆலயம்.

---

     இப்போர் நடைபெற்று 236 ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த மாதம், ஏப்ரல் 14 ஆம் நாள், நண்பகல் 12.00 மணியளவில், இதோ, இராஜராஜேசுவரி அம்மன் ஆலயத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

   
உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும் நண்பருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பி.சேகர் திரு பா.கண்ணன் ஆகியோரோடு நானும்  சேர்ந்து, ஐவராய் இராஜராஜேசுவரி அம்மன் ஆலயத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

      இதோ இங்கு நின்றுதானே, வீர மங்கை வேலுநாச்சியார், இறைவியை வழிபட்டிருப்பார்,

    


இதோ, இந்த இடத்தில்தானே வாளினை உருவி எடுத்து, வீரர்களே தாக்குங்கள், என போரினை துவக்கி வைத்திருப்பார்.

     பேச்சற்று கண் மூடி நிற்கிறோம்.

     போர்க்களக் காட்சி மனத் திரையில் ஓடுகிறது. மரண ஓலம் காதுகளைத் தாக்குகிறது.

       மெய் சிலிர்த்துப் போய் நிற்கின்றோம்.

    எத்துனை பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில் இது.

    சிறிய கோயில்தான் எனினும் மிகப் பெரிய போரை, மிகப் பெரிய வெற்றியை வழங்கிய இடம் அல்லவா.

    ஆங்கிலேயர்களை முதன் முதலில் புற முதுகு காட்டி ஓடச் செய்த இடமல்லவா.

   மனம் எங்கும் மகிழ்ச்சி அலை பரவ, வீர உணர்வில் மனம் விம்முகிறது.

தாயே,
வீர மங்கை வேலுநாச்சியாரே
நின்னைக் காணத்தான் கொடுத்து வைக்கவில்லை,
ஆயினும்
நீ வாளை உருவி, சூறாவளியாய் சுழன்று போரிட்டு,
தாய் மண்ணை, தமிழ் மண்ணை
மீட்ட இடத்தில்
இதோ நாங்களும் நிற்கிறோம்.

இது, இது போதும் எங்களுக்கு.

வாழ்க வேலு நாச்சியார்.