21 ஜூன் 2016

முதல் மனித வெடிகுண்டு

   
     ஆண்டு 1780.

     விஜயதசமி. இரவு நேரம்.

     சிவகங்கை..

    தீ பந்தங்களின் ஒளியில் இராஜராஜேசுவரி அம்மன் கோயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

     பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.

     அப்பொழுதுதான் கோயிலுக்கு அருகில் வந்த, அந்தப் பெண், இரு கைகளாலும் கூட்டத்தைப் பிளந்து கொணடு முன்னேறுகிறார்.

     சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள். மகிழ்வைச் சுமந்த உதடுகள்.

    உடலைச் சுற்றி இறுகப் பற்றியிருக்கும் புடவைக்குள், ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

    சாதாரணப் பார்வைக்குப் புலப்படாத வகையில், அப்பெண்ணின் புடவைக்குள் ஓய்வெடுக்கிறது, ஓர் வாள்.


    என்னது வாளா?

    ஆம் கூர்மையான கொடிய வாளினை மறைத்துக் கொண்டு கோயிலுக்குள் மெல்ல மெல்ல முன்னேறுகிறார்.

      கோயில் முழுவதும் பெண்கள்.

      கோயிலின் விளக்கு ஒளியில், கூடியிருக்கும் பெண்களை உற்றுப் பார்ப்போமேயானால், மெல்ல மெல்ல ஓர் உண்மை விளங்குகிறது.

    நூற்றுக்கு தொண்ணூறு பேர் பெண்களே அல்ல.

   ஆண்கள்

    என்ன ஆண்களா?

     ஆம் ஆண்கள்தான். ஆனால் புடவையில், முகத்தின் மீசையினைச் சுத்தமாய் வழித்து எடுத்துவிட்டுப், பெண்களாய் மாறு வேடமிட்ட ஆண்கள்.

     ஒவ்வொருவரின் உடைக்குள்ளும் பயங்கரமான ஆயுதங்கள்.

      அந்தப் பெண் நிதானமாக முன்னேறிச் செல்கிறார்.

      கோயிலின் கருவறைக்கு முன், இறைவியை கண்மூடி, இருகரம் கூப்பி, வணங்கிக் கொண்டிருக்கும், ஒரு பெண்ணின் தோளைத் தொடுகிறார்.

      மெதுவாய் தலை திருப்பி நோக்குகிறார் அவர்.

      முகத்தை ஊடுருவி, அகத்தினுள் புகுந்து, எதிராளியின் எண்ண ஓட்டங்களைத் துல்லியமாய படிக்கும், சக்தி வாய்ந்த கண்கள். மிடுக்கானத் தோற்றம்.

        இவர் சாதாரணப் பெண்ணல்ல என்பதை முதற் பார்வையிலேயே உணரலாம்.

        ஆம் இவர் சாதாரணப் பெண் அல்ல.

இவர்தான்

வீரமங்கை வேலு நாச்சியார்.

        வேலு நாச்சியாரின் காதருகே குனிந்த அந்தப் பெண், திருப்பத்தூர் கோட்டையை சின்ன மருது படையும், உம்தத் உம்ரா படையை பெரிய மருதுவும் முறியடித்துவிட்டதாகச் செய்தி வந்துள்ளது தாயே.

       வேலு நாச்சியார் ஒரு கணம் கண்மூடி, இராஜராஜேசுவரி அம்மனை வணங்குகிறார்.

      அடுத்த நொடி, உடையினுள், மறைத்து வைத்திருந்த வாளை, வேகமாய், வெகு வேகமாய் உருவி எடுத்து, தலைக்கு மேலே உயர்த்துகிறார்.

      வீரர்களே தாக்குங்கள்

      கோயிலின் அத்துனைச் சத்தங்களையும் மீறி, ஓங்கி ஒலித்தது வீர மங்கையின் வீராவேச உத்தரவு.

       அடுத்த நொடி ஒரு பிரளயமே வெடிக்கிறது.

       பெண்களும், பெண்களின் உடையில் இருந்த ஆண்களும் வாளை உருவி, வீதிக்கு வந்து, எதிர்பட்ட வீரர்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள்.

        தெருவெங்கும், தலைகளும், தலைகளற்ற முண்டங்களும் இரத்த வெள்ளத்தில் உருண்டோடுகின்றன.

        கண்ணிமைக்கும் நேரத்தில், எதிர்பாராத தாக்குதல்.

        ஆங்கிலேயப் படை வீரர்கள் நிலை குலைந்து போனார்கள்.

         வேலு நாச்சியாரிடம் செய்தி கூறிய அந்தப் பெண்ணும், வாளை உருவி, தலைகளைத் தரையில் உருள விடுகிறார்.

          என்னதான் ஆக்ரோசமாக சண்டையிட்டாலும், அப்பெண்ணின் கவனமெல்லாம், வேலு நாச்சியாரின் மேல்தான் இருக்கிறது.

       வேலு நாச்சியாரின் வீராவேசத் தாக்குதல் கண்டு மனம் மகிழ்ந்திருந்த, இவரின் செவிகளில், அந்த ஆண் குரல் விழுகிறது.

வீரர்களே, ஆயுதக் கிடங்கில் இருக்கும் வெடி மருந்துகளை எடுத்து வீசுங்கள்.

       குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்க்கிறார்

       கோயிலுக்கு அருகில் இருக்கும் அரண்மனையில் இருந்து, ஆங்கிலேயத் தளபதி பான்ஜோர் கூச்சலிடுவது தெரிகிறது.

         ஒரு கணம் திடுக்கிட்டுத்தான் போனார்.

        என்னது வெடி குண்டுகளா?

      நாமோ வேளும் ஈட்டியும் ஏந்தி, இழந்த மண்ணை மீட்கப்  போராடிக் கொண்டிருக்கிறோம். வெடி குண்டுகள் நம்மீது வீசப் பட்டால் பெரும் பாதிப்பல்லவா ஏற்படும். கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி, ஒரு நொடியில் பழாகிவிடுமே

      ஏதாகிலும் செய்ய வேண்டும், செய்தே தீர வேண்டும். இந்த வெள்ளையரை இம் மண்ணை விட்டு விரட்டியே ஆகவேண்டும். இழந்த இம் மண்ணை தாய் மண்ணை மீட்டே ஆக வேண்டும்.

     வேலு நாச்சியாருக்கு வெற்றியைத் தேடித் தந்தே ஆக வேண்டும்.

     என்ன செய்வது.

     எப்படி வெடிகுண்டுத் தாக்குதலை எதிர்கொள்வது.

     ஒரு நொடி, ஒரே நொடி, ஒரே நொடியில் மின்னலாய் வெட்டியது ஓர் எண்ணம்.

         ஆம், இதுதான் சரியான வழி

          வாளைத் தூக்கி எறிந்தார்.

          கோயிலுக்குள் ஓடினார்.


கோயிலின் மடப் பள்ளியில், இறைவியின் நெய்வேத்தியத்திற்காக, குடம் குடமாக வைக்கப் பட்டிருந்த, நெய்யினை எடுத்துத் தன் உடல் முழுவதும் ஊற்றி நனைத்தார், நெய்யிலேயே குளித்தார்.

         கோயிலின் சுவற்றில் சொருகப்பட்டிருந்த, தீ பந்தம் ஒன்றினைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினார்.

வேலு நாச்சியார் வாழ்க
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

     நெய்யினால் முழுவதுமாய் நனைந்திருந்த, தன் உடலுக்குத், தீ பந்தத்தால், தானே தீ வைத்துக் கொண்டார்.

      அடுத்த நொடி உடல் முழுவதும் தீ, கொழுந்து விட்டு எரிய, ஆயுதக் கிடங்கினுள் நுழைந்தார்.

     ஆயுதக் குவியலுக்குள் வேங்கையெனப் பாய்ந்தார்.

வேலு நாச்சியார் வாழ்க
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

    அடுத்த நொடி, சிவகங்கையே கிடு கிடுத்தது.

    வானத்தில் இருந்து இறங்கும் பெரு இடியென, பூமி அதிர, குண்டுகள் குவியல் குவியலாய், வெடித்துச் சிதறத் தொடங்கின.

         ஆயுதக் குவியலுக்குள், தானே ஓர் ஆயுதமாய் மாறிப் புகுந்த, அப்பெண், அவ்வீரப் பெண், நார் நாராகப் பிய்த்து எறியப்பட்டார்.

          நண்பர்களே, உலகின் முதல் மனித வெடி குண்டு இவர்தான்.

          தாய் நாட்டை மீட்க, தமிழ் மண்ணைக் காக்க, தன் அரசிக்கு வெற்றியைக் காணிக்கையாக்க, தானே வெடி குண்டாய் மாறிய, இவ்வுலகின் முதல் பெண், வீரத் தமிழச்சி இவர்தான்.

இவர்தான்
வீரத்தாய் குயிலி.
….
    


கடந்த ஏப்ரல் 14 ஆம் நாள், நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், நண்பர்கள் திரு க.பால்ராஜ், திரு பி.சேகர் திரு பா.கண்ணன் ஆகியோருடன் இணைந்து, வீரத்தாய் குயிலியின் நினைவுத் தூண் அருகே நிற்கிறோம்.

      குயிலியின் நினைவுகள், குயிலியின் தன்னலமற்ற தியாகம், அப்பழுக்கற்ற வீரம் மனதில் சுழன்றடிக்க அமைதியாய் நின்றோம்.

தாயே, நின் வீரத்திற்கு
ஈடு, இணை ஏது.

தாங்கள் வாழ்ந்த மண்ணில், தமிழ் மண்ணில்
நாங்களும் வாழ்கிறோம்
என்பதே
எங்களுக்குப் பெருமை.

வீரத்தாய் குயிலியைப் போற்றுவோம்.


52 கருத்துகள்:

 1. வீரத்தாய் குயிலியின் தியாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது !

  பதிலளிநீக்கு
 2. வீர வரலாறு. ஆனால் ஏற்கெனவே உங்கள் தளத்தில் இது படித்தது போலவே இருக்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலு நாச்சியார் என்னும் தொடரில் படித்திருப்பிர்கள் நண்பரே
   இப்பொழுதுதான் அவ்விடங்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது
   நன்றி நண்பரே

   நீக்கு
 3. பகிர்வுக்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 4. அன்பு நண்பர் ஜெயக்குமார்,
  வீரம் செறிந்த இந்தப் பதிவை ஓரங்க நாடகமாக பள்ளியில் நடத்திக் காட்டுங்கள்.கல்வி என்பது ஐம்புலன்களாலும் கற்கப் படவேணும்.மெய் -உணர,வாய்-பேச,கண்-பார்க்க,காது-கேட்க,மூக்கு - நுகர என்று கற்ப்பிக்கப் படும்பொழுது அது பசுமரத்து ஆணிபோல் பதியும்.
  சொல்லாலும்,செயலாலும்,வாக்காலும்,நோக்காலும்,உணர்வாலும் கல்வி கற்ப்பிக்கப் படும் பொழுது அங்கு மகத்தான மனிதர்கள்உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.

  பதிலளிநீக்கு
 5. இவரைப் பற்றி முன்பொரு பதிவில் நீங்கள் பகிர்ந்ததாக நினைவு. மறுபடியும் நண்பர்களுடன் அவ்விடத்திற்குச் சென்று செறிவான வீரத்தை அருமையாக நினைவூட்டிய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்பொழுதுதான் அவ்விடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது
   நன்றி ஐயா

   நீக்கு
 6. மீண்டும் தங்களது நடையில் வீரத்தாய் குயிலியின் வரலாறு அறிந்ததில் மகிழ்ச்சி நண்பரே
  த.ம. 4

  பதிலளிநீக்கு
 7. வேலு நாச்சியார் பாராட்டத்தக்கவர். பெண் முன்னேற்றம் அவ்வளவு பாராட்டத்தக்க செயலாக இல்லாத காலத்திலேயே வீரத்துடன் செயல்பட்டது பாராட்டற்குரியது.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் ஐயா,
  மரியாதைக்குரியவரே,வணக்கம்.
  தங்களது பதிவின் வாயிலாக உலகின் முதல் மனித வெடிகுண்டு நம் தமிழச்சி! என்பதை அறிந்தேன்.மெய் சிலிர்த்துவிட்டது ஐயா! தொடரட்டும் தங்களது எழுத்துப்பணி எம் போன்றவர்களின் அறிவுக்கு நல்ல தீனியாக கிடைப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி......
  என வாழ்த்தும்
  அன்பன்,
  C.பரமேஸ்வரன், konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்
  -ஈரோடு மாவட்டம்.

  பதிலளிநீக்கு
 9. குயிலி அம்மையாரின் தியாகம் அளப்பரியது... தலைவணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 10. உணர்ச்சி பொங்கும் வரிகளால்
  உண்மை வீரத்தை வெளிப்படுத்தி
  வீரத்தாய் குயிலியின் வரலாற்றை
  விருப்புடன் படிக்க வைத்த
  தங்களுக்குப் பாராட்டுகள்!
  வீரத்தாய் குயிலி போன்றவர் வரலாறு
  மீள மீள
  நினைவூட்டப்பட வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீரத்தாய் குயிலி போன்றோரின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவே தெரியாது ஐயா
   நாம்தான் நினைவூட்ட வேண்டும்
   நன்றி ஐயா

   நீக்கு
 11. கண்களும் இதயமும் பனிந்து போகும் எழுத்து,
  “தாயே, நின் வீரத்திற்கு
  ஈடு, இணை ஏது.

  தாங்கள் வாழ்ந்த மண்ணில், தமிழ் மண்ணில்
  நாங்களும் வாழ்கிறோம்
  என்பதேஎங்களுக்குப் பெருமை”
  என்பதையே முன் வைக்கிறேன் பதிவைப்போற்றி/

  பதிலளிநீக்கு
 12. வீரத்தாய் குயிலியின் நினைவுச்சின்னம் எங்கே உள்ளது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவகங்கையில்
   வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ளது ஐயா
   நன்றி

   நீக்கு
 13. உணர்ச்சிக் குவியல் .

  பதிலளிநீக்கு
 14. முன்னரே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கச் சுவைதான்! ஒவ்வொருவரும் தம் ரத்தத்தைச் சிந்தித் தான் சுதந்திரம் வாங்கித் தந்திருக்கின்றனர். கத்தியின்றி, ரத்தமின்றி என்பதே ஏற்க முடியாத ஒன்று.

  பதிலளிநீக்கு
 15. தியாகிகளை போற்றும் ஒரு சமூகமே தொடர்ந்து முன்னேறும். ஒரு வரலாற்று போராளியை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 16. மிக அருமை.வீரத்தாயை போற்றுவோம்.நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மிக அருமை.வீரத்தாயை போற்றுவோம்.நன்றி.

  பதிலளிநீக்கு
 18. சில நிகழ்வுகளை எத்தனை முறை சொன்னாலும் தெவிட்டுவதில்லை. முன்னோரின் தியாக வரலாறுகளும் இப்படித்தான் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. எத்தனை முறை படித்தாலும் கேட்டாலும் நினைத்தாலும் - தோள்களில் வீரம் பெருக்கெடுக்கும் வீரவரலாறு!..

  நிலம் காத்த தாய் குயிலி அன்னையின் மலரடிகளில் தலை வைத்து வணங்குகின்றேன்..

  பதிலளிநீக்கு
 20. வீரமங்கை குயிலி பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் உங்கள் நடையில் படிக்கையில் ஓர் உத்வேகம் எழுகிறது! அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
 21. We have to inject patriotism in the minds of younger generation. you are doing that job fittingly.

  பதிலளிநீக்கு
 22. வரலாறு அறிந்ததில் மகிழ்ச்சி
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 23. நல்ல அறிமுகம். மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 24. எத்தனை பெரிய தியாகம்..... படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது....

  பதிலளிநீக்கு
 25. வீரத்தாய் குயிலி குறித்து அறிந்திருந்தாலும் தங்களின் எழுத்து நடையில் மீண்டும் மீண்டும் வாசிப்பது சுகம் ஐயா...
  சிவகங்கைச் சீமை கொடுத்த வீரத் தமிழச்சி அவர்....

  பதிலளிநீக்கு
 26. Is it Repeated post? I think already I read this article from your writings many months back. anyhow its good post.

  பதிலளிநீக்கு
 27. வீரத்தாய்! வேலுநாச்சியார் தொடரில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா? இப்போது நேரில் கண்டு அதையும் இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! அருமை!

  பதிலளிநீக்கு

 28. கரந்தையார் அவர்களுக்கு,

  முகத்தை ஊடுருவி, அகத்தினுள் புகுந்து, எதிராளியின் எண்ண ஓட்டங்களைத் துல்லியமாய படிக்கும், சக்தி வாய்ந்த கண்கள். மிடுக்கானத் தோற்றம்.- வர்ணனை அபாரம்.
  வீரத்தாய் குயிலியின் வீரமும் தேசப்பற்றும் ராஜா விசுவாசமும் விவரிக்க இயலா வியப்பு.

  கோ

  பதிலளிநீக்கு
 29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  வீரத் தாய் குயிலியின் தியாகத்திற்கும் மன வலிமைக்கும் ஈடு இணை ஏதுமில்லை. வாழ்க அவர் புகழ்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு