25 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 5    

நான் சென்னையில், எனது உடைகள், உடமைகள் திருப்பத்தூர் வீதியில்.
                                         
     மனதில் அதுவரை இருந்த மகிழ்ச்சி மறைந்து, ஒரு விதப் பதட்டம் தொற்றிக் கொண்டது.


     அரை மணிக்கு ஒரு முறை தொலைபேசிச் செய்தி வந்த வண்ணம் இருந்தது.

     வண்டியின் பழுது சரி செய்யப்பட்டு விட்டது.

     திருச்சி வந்து விட்டோம்.

    பெரம்பலூர் தாண்டிவிட்டோம்.

    விழுப்புரம் வந்துவிட்டோம்.

    எப்படியும் விமானம் புறப்படும் முன்னர் வந்து விடுவார்கள் என்பது உறுதியாயிற்று.

      பதட்டம் ஒரு வழியாக மெல்ல மெல்ல தணிந்தது.

       விமான நிலையம் சென்றோம். ஒரு பெரும் கூட்டமே எனக்காகக் காத்திருந்தது.

      எனது கல்விக் கட்டணங்களை இதுநாள் வரை செலுத்தி உதவிய, ஈரோட்டைச் சார்ந்த வேலு அய்யா அவர்களின் ஏற்பாட்டில், ஒரு பெரும் கூட்டமே எனக்காக விமான நிலையத்தில் காத்திருந்தது.

   கைத் தட்டல்கள், வாழ்த்தொலிகள், மகிழ்வான கை குலுக்கல்கள், தாய் தந்தையரின் பாசமான அரவணைப்பு அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, விமானம் ஏறினேன்.

     ஏறக்குரைய 12 மணி நேரம் வானில் பறந்த பிறகு, ஜெர்மனி நேரப்படி காலை 7..30 மணிக்கு, பிராங்ஃபோர்ட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.

     இரண்டு மணி நேரக் காத்திருப்பு. அடுத்த விமானத்தில் தொடர் பயணம்.

     22.8.2003 அன்று இந்திய நேரப்படி, சரியாக இரவு 10.30 மணிக்கு விமானம் அமெரிக்காவில் தரை இறங்கியது.

      பிறந்த பொன்னாட்டை விட்டு, வெகுதொலைவு வந்து தாய்,தந்தை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் பிரிந்து, தன்னந்தனியனாய், ஊன்று கோலுடன், அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தேன்.

      நியூயார்க்கில் தங்களின் பணி மற்றும் படிப்பு இனிதாக அமைய, வாழ்த்துக்கள்.

    வாழ்த்து கூறி விமான நிலைய அதிகாரி வரவேற்றார்.

     என்னுடைய கைரேகை மற்றும் கருவிழி புகைப்படங்கள் எடுக்கப் பட்டன. வருவாய்த் துறைக்கானப் படிவங்களை உரிய இடத்தில் கொடுத்து, என்னுடைய பயணப் பெட்டிகளைப் பெற்றுக் கொண்டு, வாடிக்கையாளர் அறைக்குள் நுழைந்தேன்.

     
நியூ ஸ்கூல் பல்கலைக் கழகமானது, தனது பணியாளர் ஒருவரை, விமான நிலையத்திற்கு அனுப்புவதாக, மின்னஞ்சல் மூலம், ஏற்கனவே, உறுதி அளித்திருந்தது.

     எனவே வாடிக்கையாளர் அறைக்குள் நுழைந்ததும், பல்கலைக் கழகப் பணியாளரைத் தேடினேன்.

      பல்கலைக் கழகத்தில் இருந்து வரவேண்டிய உதவியாளர் வரவே இல்லை.

      ஒரு கையில் ஊன்று கோல், அருகில் பயணப் பெட்டிகள், விமான நிலையத்தில் தன்னந்தனியாய் நிற்கிறேன்.
 

                                                தொடர்ந்து பேசுவேன்