31 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 6

     பல்கலைக் கழகத்தில் இருந்து வர வேண்டிய உதவியாளர் வரவில்லை.

     சற்று நேரம் காத்திருந்தேன்.

    பிறகு விமான நிலைய அதிகாரி ஒருவரைச் சந்தித்து, அவரது உதவியுடன், வாடகை ஊர்தியைப் பிடித்தேன்.

       பல்கலைக் கழக விடுதியை நோக்கிப் பயணித்தேன்.

       நான் சேர இருக்கும் நியூ ஸ்கூல் பல்கலைக் கழகத்தில் பல விடுதிகள் உள்ளன. அவற்றுள் குறைவான வாடகை உடைய, மால்டன் விடுதியைத் தேர்ந்தெடுத்தேன்.

        மால்டன் விடுதியைச் சென்றடைந்தபோது, மதியம் மணி 3.00


        இரண்டாம் மாடியில் இருந்த விடுதி அலுவலகத்தில், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுத்தவுடன், எனக்கொரு அறை ஒதுக்கீடு செய்யப் பட்டது.

        தன்னந் தனியாய் ஓர் பயணம். அதுவும் வெளிநாட்டிற்கு, பத்திரமாய் வந்து சேர்ந்துவிட்ட செய்தியை, குடும்பத்தாருக்குத் தெரிவித்தாக வேண்டும்.

       எனது நிலைமையினைப் புரிந்து கொண்ட விடுதி மேலாளர், விடுதியின் தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதித்தார்.

        தந்தையுடனும் தாயுடனும் பேசினேன்.

        பயண அலுப்பு என்னைத் தூங்கச் சொன்னது. ஆனாலும் அடிப்படைப் பயன்பாட்டிற்கானப் பொருட்களை வாங்கியாக வேண்டிய நிலை.

         விடுதியின் உதவியாளர் ஒருவர் உடன் வந்து உதவ, தேவையானப் பொருட்களை வாங்கிக் கொண்டு, அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தேன்.

         எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன் எனத் தெரியவில்லை. மெதுவாக விழிப்பு வந்தபோது, எனது பிரைலி கை கடிகாரத்தைத் தடவிப் பார்த்தேன்.

      நம்பவே முடியவில்லை. மணி அதிகாலை 5.00

       சிறிது நேரத்தில் எனது அறைக்குள் நுழைந்து என்னைத் தழுவியது சூரியனின் வெளிச்சம்.

       காலைக் கடன்களை முடித்து, பல்கலைக் கழகத்திற்குப் புறப்பட்டாக வேண்டும்.

       கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, தண்ணீர் குவளையைத் தேடினேன், கிடைக்கவில்லை. கைகளால் துளாவிப் பார்த்தேன், தண்ணீர் வாளியோ, குவளையோ இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

       பிறகுதான் நினைவிற்கு வந்தது, அமெரிக்கர்கள் கழிவறையில் தண்ணீர் பயன்படுத்த மாட்டார்களே, காகிதத்தைத்தானேப் பயன்படுத்துவார்கள் என்னும் நினைவு வந்தது.

        சுவற்றைத் தடிவிப் பார்த்தேன். ஒரு உருளையில் காகிதம் தொங்கிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. கிழித்துப் பயன்படுத்தினேன்.

        அடுத்துக் குளித்தாக வேண்டும்.

         அறையின் மையப் பகுதியில் ஒரு திரை. திரையினைக் கடந்து சென்றால், சுவற்றின் அருகில் ஒரு குளியல் தொட்டி. தொட்டிக்கு அருகிலேயே, தண்ணீர் திறப்பதற்கான ஒரு திறப்பான். இதைக் கண்டுபிடிக்கவே முப்பது நிமிடங்களாகிவிட்டது.

        தொட்டிக்குள் இறங்கி, குழாயைத் திறந்தேன். தண்ணீர் என் கால் முட்டி உயரமே உள்ள ஒரு குழாயில் இருந்து பீறிட்டுக் கிளம்பியது.

         ஒன்றும் புரியவில்லை.

         நம்மூரில் குழாயைத் திறந்தால், தலைக்கு மேல் இருந்தல்லவா, தண்ணீர் வரும். இங்கே காலடியில் இருந்து வருகிறதே, எப்படி குளிப்பது என்று தெரியவில்லை.

        யாரிடமாவது வெட்கத்தை விட்டு கேட்டுத்தான் ஆகவேணடும், வேறு வழியில்லை.

       குளியலறையை விட்டு வெளியே வந்து, விடுதி உதவியாளரை அழைப்பதற்கான பொத்தானை அழுத்தினேன்.

     உதவியாளர் ஒருவர் வந்து, சிறு குழந்தைக்குக் கதை சொல்வதுபோல் சொல்லிக் கொடுத்தார்.

      கால் முட்டி உயரமுள்ள குழாய்க்குச் சற்று கீழே உள்ள, ஒரு சிறிய பொத்தானை அழுத்தியபோது தண்ணீர் மேலிருந்து கொட்டத் தொடங்கியது.

       ஒரு வழியாக குளித்து முடித்துக் கிளம்பினேன்.

      காலை 8.00 மணி.

     விடுதி மேலாளர் உடன்வர பல்கலைக் கழகம் நோக்கிப் புறப்பட்டேன்.

    என்னால் நம்பவே முடியவில்லை. நடைபெறுகிற நிகழ்வுகள் எல்லாம் உண்மைதானா? அல்லது கனவா? என்று புரியவில்லை. என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

       வலிக்கிறது. எனவே இது கனவல்ல, உண்மைதான்.

       தமிழகத்தின் ஓர் சிற்றூரில், கண் பார்வையினை இழந்து பிறந்தவன், இதோ நியூயார்க் நகர வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறேன். நம்பத்தான் முடியவில்லை.

          பல்கலைக் கழக அலுவலரைச் சந்தித்துப் பேசினேன். பின்னர் அருகில் உள்ள கே மார்ட் என்ற கடைக்குச் சென்று தரை வழித் தொலைபேசிக் கருவி மற்றும் தானியங்கி பதில் அளிக்கும் இயந்திரம் ஆகியவற்றை வாங்கினேன்.

          ஆகஸ்ட் 26 ஆம் தேதி. திங்கட்கிழமை. காலை 9.00 மணி. பல்கலைக் கழக வளாகத்தில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா.

         விழா முடிந்ததும் சமூகவியல் துறை மாணவ ஆலோசகரைச் சந்தித்து, எனது முதலாம் பருவத்திற்குரிய வகுப்புகளைத் தேர்வு செய்தேன்.

        மதியம் ஒரு மணிக்கு, எங்கள் துறைத் தலைவர் மற்றும் சில பேராசிரியர்களுடன் எங்களுக்கு மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நடைபெற்றது.

      இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கில அடிப்படைத் தேர்வு நடைபெற்றது.

      அனைத்து மாணவர்களும் தேர்வினை எழுத, நான் மட்டும் எழுதாமல் அமர்ந்திருந்தேன்.

      காரணம் தேர்வு எழுதுவதற்கு எனக்குரிய கணினி வசதியை பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்யாததுதான்.

     இரண்டு நாட்கள் கடந்த நிலையில், எனது பயன்பாட்டிற்குரிய கணினி கிடைத்தது. அன்றே தேர்வும் எழுதினேன்.

      அன்று மாலை, எனது விடுதி மேலாளர் ஒரு தகவலைக் கொண்டு வந்தார்.

     பல்கலைக் கழகத்தின் உடற்குறைபாடுடைய மாணவர்களுக்கான மேலாளர், என்னைச் சந்திக்க விரும்புவதாகவும், நாளை காலை 9.00 மணிக்கு மேலாளரைச் சந்திக்குமாறும் கூறினார்.

       அடுத்தநாள் காலை 9.00 மணிகு, உடற் குறைபாடுடைய மாணவர்களின் மேலாளரைச் சந்தித்தேன்.

       அவர், பிரைலி முறையில் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒன்றினை என்னிடம் கொடுத்தார்.

         

எனது விரல்கள் கடிதத்தில் ஒவ்வொரு வரிகளையும் தடவத் தடவ, ஒவ்வொரு புள்ளியும் எழுத்தாய் உயிர்பெற்று எழுந்து என்னுடன் பேசியது.

திங்கட்கிழமை முதல் உங்களுடைய பணிகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். பல்கலைக் கழகமானது, பல்கலைக் கழக வளாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே, உங்களுக்கு உதவியாளரை வழங்கி உதவும்..

                                                    தொடர்ந்து பேசுவேன்


23 கருத்துகள்:

 1. தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதாலேயே வளரும் தன்னம்பிக்கை!

  தொடர்கிறேன் நண்பரே..

  தம +1

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அருமை. தொடருங்கள் ஜெயக்குமார் சகோ. வாழ்த்துகள் அவருக்கு

  பதிலளிநீக்கு
 3. பார்வை தெரிந்தவர்களே ,வெளி நாட்டுக்கு சென்றால் திக்கு முக்காட வேண்டியிருக்கும் !தைரியமாக வெற்றிவேல் முருகன் சமாளித்த விதம் ,படிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கையை தரும் !

  பதிலளிநீக்கு
 4. புறப்பார்வை இல்லையெனினும் அகப்பார்வையால் அகிலத்தை வெல்லும் ஆற்றல் இருப்பதை இந்த முதல் தொகுதி முன்னுரையாக்கியுள்ளது.

  பதிலளிநீக்கு
 5. பல்வேறு தமிழ் விக்கி நிரலாக்கப் பணிகளால் மனஅழுத்தத்துடன், மீண்டும் முதலில் இருந்து இந்த அனுபவக்கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.ஆறுபகுதிகளும், அறுசுவை உண்டி. அடுத்த விருந்து எப்போது? கட்டுரையில் முடிவுகளில், பழையக்கட்டுரை பகுதிகளுக்குச் செல்ல, வசதி அமைக்கக் கோருகிறேன். தற்போது தேதி அடிப்படையில் தேடி படிக்க வேண்டி உள்ளது. அவ்வாறு அல்லாமல், ஒவ்வொரு பகுதிக்கும் அடியிலேயே, முன், பின் செல்லும் வசதியை அமையுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  குளியலறையில் நண்பர் அடைந்த அனுபவம் நமக்கு ஏற்பட்டிருந்தால் என்ன பாடு பட்டிருப்போம் என்று கற்பனை செய்து பார்த்தேன். அப்பப்பா நினைக்கும்போதே மனம் படப்படக்கிறது. நண்பரின் மன உறுதிக்கு ஒரு பெரிய வணக்கம். தொடருங்கள்.. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. அவர் எப்பச் சமாளித்தார் என்பது
  எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது
  பார்க்க முடிந்தும் நாங்கள் இந்தச்
  சூழலுக்கு எங்களைத் தயார்படுத்திக் கொள்ள
  கஷ்டப்பட்டது மூன்று பதிவுகள்
  எழுத வேண்டி இருக்கும்
  மிக மிக அற்புதமாக எழுதிப் போகிறீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. கடைசி பத்தியைப் படித்தபோது அவரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும் என நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு.
  தன்னம்பிக்கைத் தொடர்

  பதிலளிநீக்கு
 10. வெற்றிவேல் முருகனின் நம்பிக்கை அசாதாரணம் முயற்சியில் குறை இல்லாதவர் தன் குறைகளைக் கூறி புலம்பாதவர். ஒவ்வொரு செயலிலும் அவரது தன்னம்பிக்கைத் தெரிய வருகிறது பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 11. தன்னம்பிக்கை தரும் தொடர்! தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. விரு விருப்பான தொடர்
  சவால்களைச் சந்திப்பது என்பது வெற்றிவேல் முருகனுக்கு அல்வா சாப்பிடுவது போல.

  பதிலளிநீக்கு
 13. வெற்றிவேல் தன்நம்பிக்கை பலருக்கு படிப்பினை! தொடர்கின்றேன் ஐயா!

  பதிலளிநீக்கு
 14. "தமிழகத்தின் ஓர் சிற்றூரில், கண் பார்வையினை இழந்து பிறந்தவன், இதோ நியூயார்க் நகர வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறேன்." எனத் தொடர்கிறது...
  தொடரட்டும், தொடர்ந்து வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 15. நம்பிக்கை தரும் தொடர். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. தன்னம்பிக்கை தரும் தொடர்....
  அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
 17. வேல்ருகனைப் போன்றே நானும் இங்கேஒரு தங்கும் விடுதியில் கழிவறையில் அவதிப்பட்டேன்.
  அவரது தன்னம்பிக்கை
  உற்சாகமூட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 18. என்ன ஒரு தன்னம்பிக்கை. 'வாயில இருக்கு வழி' என்று சொல்வார்கள். இன்னும் என்ன என்ன தடங்கல்களையெல்லாம் சந்தித்துத் தாண்டிவந்தாரோ என்று அறிய ஆவலாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு