13 டிசம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 17


    

என் தங்கை திருமணம் செயது கொண்டார். யாருக்கும் தெரியாமல்.

     எம் மனம் உடைந்து சுக்கு நூறானது.

  என் அன்புத் தங்கையே, ஏன் இப்படிச் செய்தாய்? நிம்மதியிழந்து தவித்தேன்.

  அக்டோபர் 2011இல் இந்தியாவில், எனது தாய் மாமா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டார். ஏறக்குறைய மரணப் படுக்கைக்கே சென்று உயிர் பிழைத்தார்.

    அது மட்டுமல்ல, என் தாயாரின் உடல் நலமும் மிகவும் பாதிப்படைந்தது. எனது தங்கையின் பிரிவு, என் தாயாரை படுக்கையில் தள்ளியது. பாவம், என் தந்தையார், தனியொருவராய் பட்ட சிரமத்திற்கு அளவே இல்லை.

    இந்நிலையில் நான் என் தந்தையின் அருகில் இல்லாதது, மிகப் பெரிய தாக்கத்தையும், மிகப் பெரிய மாற்றத்தையும் என்னுள் ஏற்படுத்தியது.

     இந்நிலையில் ஒரு நாள் தமிழ் இணையதள வானொலியில் அப்பாடலைக் கேட்டேன்.

உன்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா.

சொந்த வீடு உன்னை
வா என்று அழைக்குதடா தமிழா

அயல் நாடு உன்தன் வீடு அல்ல
விடுதியடா தமிழா

தேசம் என்னும் படத்தின் பாடல் இது. என் தேகத்தில், என் உள்ளத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மாற்றத்தை மேலும் வலுப்படுத்தியது.

     அன்று வரை வட அமெரிக்க உயர் கல்வித் துறையில் எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள, முடிவு செய்திருந்த நான், என் முடிவை மாற்றிக் கொண்டேன்.

        முனைவர் படிப்பிற்கான, ஆய்வுக் கட்டுரைக்கான நேர்முகத் தேர்விற்கு மட்டும் தற்காலிகமாக, அமெரிக்கா வருவது என்றும், இனி மீதம் உள்ள என் வாழ்வு இந்திய மண்ணில்தான் என்பதை உறுதி செய்து கிளம்பினேன்.

       லகுவார்டியா மற்றும் மேன்ஹாட்டன் கல்லூரிகளில் இருந்து என்னை விடுவிக்க மறுத்தனர். இன்னும் ஒரு ஆறு மாதங்கள் பணியாற்றினால் போதும், உங்களது பணியை நிரந்தரம் செய்து விடுகிறோம்.

      பணி நிரந்தரமாகிவிட்டால், உங்களின் ஊதியம் வெகுவாய் உயரும் என வற்புறுத்தினர். ஆனாலும நான் நன்றி கூறி விடைபெற்றேன்.

      இந்தியா திரும்பினேன். என் குடும்பத்துடன் அடைக்கலமானேன்.

      இந்தியா திரும்பிய சில மாதங்களிலேயே என் திருமணம்.

     

நித்யா என் வாழ்வில் இணைந்தார்.பாடகன் பாடியதற்கு மேலான இன்பம் இருக்கிறது
இருவரும தெய்வீக அருளால் ஒன்றிணைந்து
இதயம் மாறாதிருந்தால் நென்றி சுருங்காதிருத்தல்
எல்லா இன்னல்களிலும் அன்பாய் சாகும்வரை இருத்தல்
ஒரு மணி நேரம் புனிதமான அன்போடு இருப்பது
பல யுகங்கள் இதயமற்றுத் திரியும் இன்பத்திற்கு ஈடானது
மண்ணுலகில் சொர்க்கம் இருக்குமானால்
அது இதுதுன் அது இதுதான்
-    தாமஸ் மூர்


           நண்பர்களே, என் அன்பு மனைவி நித்யா பற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்.

    என் மனைவியும் பார்வை அற்றவர்.

    ஆனாலும் ஒளிமயமான வாழ்வு எங்களுடையது.

      நித்யா என் வாழ்வில் இணைந்த நேரம், வசந்தமும், வளமும் என் வீடு தேடி வந்தது.


பெங்களூரில் இயங்கும்
பன்னாட்டு நிறுவனமான
சிஸ்கோ நிறுவனத்தில்
திட்ட ஒருங்கிணைப்பாளராய் பணியாற்றி வருகின்றேன்.

      எங்கள் வாழ்வில் வசந்தமும், வளமும் மட்டுமல்ல, ஒளியும் வீசத் தொடங்கியுள்ளது.

எங்களின் அன்பு மகன்
முத்துக் குமரன்
ஒளி வீசும் கண்களோடு
பிறந்து
எங்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட்டுள்ளான்.


வெற்றிவேல் முருகனின் தாய், தந்தை

வெற்றிவேல் முருகனின்மாமனார் கண் பார்வை அற்றவர்,அவரது முனைவர் பட்ட ஆய்வு மாணவரான அவரது மைத்துனரும் கண் பார்வை அற்றவர்

நன்றி நண்பர்களே,
தங்களின் பல்வேறு பணிகளுக்கு இடையிலும்,
நேரம் ஒதுக்கி,
எனது வார்த்தைகளை செவி கொடுத்துக் கேட்டதற்கு
நன்றி நண்பர்களே
மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்
அவசியம் சந்திப்போம்.