18 டிசம்பர் 2016

வாழும் மகாகவிஇவர் – என்றும்
கனன்று கொண்டிருக்கும்
கவிதை நெருப்பு – இவரின்
காவியப் பொழுதுகளும் வாழ்வும்
கவிதைச் சிறகுகொண்டு எந்நாளும்
வானம்பாடியாய்ப் பறக்கட்டும்
                      -விழிகள் தி.நடராசன்

      ஆண்டு 2011.

      ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், வகுப்பறையில் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த வேலையில், என் அலைபேசி உயிர்பெற்று மௌனமாய் துடித்தது.

     அலைபேசியில் அழைப்பவரின் பெயரினைப் பார்த்த, அந்த நொடியில், இதயம் ஒரு முறை நின்று, பின் வெகு வேகமாய் துடிக்கத் தொடங்கியது.

     மனம் நம்ப மறுத்தது.

     மாமனிதரிடமிருந்து, இந்த எளியேனுக்கு அழைப்பா ?


     மனம் நம்பத்தான் மறுத்தது.

     வகுப்பறையைவிட்டு வெளியே வந்து, அலைபேசியின் திரையினை வருடி,

ஐயா வணக்கம். ஜெயக்குமார் பேசுகிறேன்

     மறு முனையில் இருந்து, அன்பாய், கனிவாய் ஒலித்தது அந்த காந்தக் குரல்.

ஜெயக்குமார், உங்களது கணிதமேதை சீனிவாச இராமானுஜன் நூல் படித்தேன். அருமை. நிகழ்வுகளை செம்மையாய் கோர்த்து, எளிமையாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

     என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை.

     ஒரு வருடம் கடந்த நிலையில், மீண்டும் ஒரு அழைப்பு, அம் மாமனிதரிடமிருந்து.

ஜெயக்குமார், உங்களின் கரந்தைஜெயக்குமார் வலைப் பூக்கள் நூலினைப் படித்தேன். பிரமாதம். அதிலும் தங்கள் மகளுக்காக, நீங்கள் அனுபவித்த மருத்துவத் துறை அனுபவங்களை எழுதியுள்ளீர்கள் அல்லவா, அதையே இன்னும் விரிவாய் எழுதி, தனியொரு நூலாகவே வெளியிடலாம். வாழ்த்துக்கள்.

    சில நொடிகள், என் இதயம் துடிப்பதையே மறந்துதான் போனது.

    எப்பேர்ப்பட்ட மனிதர், மாமனிதர்.

    இமயமலைபோல் உயர்ந்து நிற்கும் இம் மாமனிதர், மடுவினும் கீழாய், அதளபாதாளத்தில் விழுந்து கிடக்கும், இந்த எளியேனைப் பாராட்டுகிறார் என்றால், அதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும், எத்துனை கனிவு வேண்டும், எத்துனை அன்பு வேண்டும், எப்பேர்ப்பட்ட பெருந்தன்மை வேண்டும்.

நண்பர்களே,
இம் மாமனிதர் யார் தெரியுமா?
இவர் கவிஞர்
சாதாரணக் கவிஞரல்ல
இந்நூற்றாண்டின்
ஈடு இணையற்றக் கவிஞர்
மகாகவி.

---


இவர்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
முன்னாள் மாணவர்
கரந்தைப் புலவர் கல்லூரியின்
முன்னாள் மாணவர்
எந்நாளும் கரந்தையை மறவாத நல்மாணவர்.

     கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ் கற்பதற்காக சென்று சேர்ந்தது, நான் எதிர்பாராத ஒன்று. ஆனால் எதிர்பார்த்ததை விடவும் மேலான ஒன்று.

    என் அண்ணன், இளங்கலை வகுப்பில் படிக்கிற போது, அவருக்குத் துணைப் பாட நூலாக இருந்தது, கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் எழுதிய, செந்தமிழ்க் கட்டுரைகள் என்ற நூல், எனக்கு பள்ளி நாட்களிலேயே பாரதியையும், பாரதிதாசனையும் அறிமுகம் செய்தது.

     கவியரசு என்ற அந்த அடைமொழியே ஒரு புதிய தமிழ்ப் பரிமாணத்தை எனக்குள் ஆவலாகச் செதுக்கியெடுத்தது. அதனால் கவியரசு பற்றியும், கரந்தையைப் பற்றியும் அறிந்த எனக்கு, அங்கு சென்று பயில ஆவல் பிறந்தது.

     விண்ணப்பித்தேன்.

     நான்கு ஆண்டுகள், தமிழ்ப் புலமை என்னுள் ஊன்றிய ஆண்டுகள்.

     தமிழ்த் தேனில் என்னை ஊற வைத்த ஆண்டுகள்.

     கரந்தை மண், கந்தக மண்.

     தமிழுணர்வு வெப்பமாகத் தகிக்கின்ற மண்.

     தமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய பூமி அது.

     தமிழ் உணர்வு தொடர்பான, தமிழ்ப் பாதுகாப்பு தொடர்பான முயற்சிகள் அனைத்தையும், முன்னெடுத்துச் சென்ற, தமிழ் உணர்வின் விளை நிலம்.

     மாணவர்களைப் பகுத்தறிவு நெறியிலும், முற்போக்கு திசையிலும் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு விடுதலையென சிந்தனைச் சிறகுகளை எடுத்துக் கொடுத்தக் கல்லூரியில், நான் முதன் முதலாக, முழு ஞாயிறு தேவநேயப் பாவாணரைப் பார்த்தேன்.

     எங்களுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தவர்கள், தமிழில் ஆழங்கால் பட்ட, பகுத்தறிவுப் பேராசிரியர் நா.இராமநாதன், பாவலரேறு பாலசுந்தரனார், புலமைச் சிகரம் அடிகளாசிரியர், கல்வெட்டு கோவிந்தராசனார், மு.சடகோப ராமானுஜம் ஆகியோர்.

     கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களிடம், ஓரே ஒரு ஆண்டு மாணவனாக இருக்கும் வாய்ப்பும், அவரோடு பழகும் சிறப்பும் எனக்குக் கிடைத்தன.

     இதேபோல், கரந்தைக் கல்லூரியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோடு, மூன்று நாட்கள் உடனிருக்கும் வாய்ப்பும் பெற்றேன்.

    ஒரு சமயம் ஒரு குவளைத் தண்ணீரைப் போலவும், ஒரு சமயம் ஒரு குவளை தேநீரைப் போலவும் அவரருகே இருந்திருக்கிறேன். இன்னொரு சமயம், அவர் பிடிக்கும் சுருட்டின் புகையாக நான் வெளியே வந்திருக்கிறேன்.

    இவர், தன் இளமைக் கால நினைவலைகளை, தன் மனதுள், மாபெரும் புதையலாய் புதைத்து வைத்திருக்கும் கல்லூரிக் கால நினைவுகளை, ஒவ்வொரு நாளும், வெளிக் கொணர்ந்து போற்றிச் சிறப்பிப்பவர்.

    கரந்தையில் படித்து, அரை நூற்றாண்டுகளுக்கும் மேல், கடந்த நிலையிலும், கரந்தை பற்றியும், தனது பேராசிரியப் பெருமக்கள் பற்றியும், தன் கவி வழி, இவர் நினைவு கூறும் அழகே அழகு.

இன்றைய
காலைப் பொழுதை எனக்குக்
காலம் தயாரிக்கவில்லை
கரந்தை தயாரித்தது.

ஏழு வயதில் நான்
இழந்த தாயைப்
பதினெட்டு வயதில்
கரந்தையில் பெற்றேன்.

தமிழ் என்பது – வெறும்
மொழியன்று –
உணர்வு என்று
கற்பித்தது கரந்தை.

கருத்தைச் சுமக்கும்
வாகனமா தமிழ்
இல்லை – அது
தமிழனைச் சுமக்கும்
கர்ப்பம் என்று
கற்பித்தது கரந்தை.

இலக்கணம் என்று
தொல்காப்பியக் கதவு
இங்குத் திறக்கப் படவில்லை
தமிழின் இதயம் என்றே
திறக்கப் பட்டது.

பேராசிரியர்
இராமநாதன் பாடம் நடத்துவார்
ஓடாத வடவாற்று
நதி நரம்பிலும் தமிழ் புரிதல்
நடக்கும்.

பாவலர் ஏறு
கிள்ளி எறியும்
வெற்றிலைக் காம்பும்
தமிழ் சொல்லிக் கொடுக்கும்.

அடிகளாசிரியர்
நாக்கு
சொல் சொல்லாய்
ஆரத்தழுவி நடக்கும்.

பிரபுலிங்க லீலையில்
உற்பத்தியான மாயை
உடம்பெல்லாம்
கற்பனைக் கதகதப்பில்
மூச்சுவிடும்.

வைணவச் சடகோபர்
வைய மாட்டாரா
என்று
வகுப்பறையே ஏங்கும்
ஏனெனில்
வையும்போதும் – தமிழ்ப்
பழமொழிகள் பெய்யும்
அவர் உதடுகள்.

சொல் சுமந்து வராமல்
வகுப்புக்குக்
கல் சுமந்து வருபவர்
கோவிந்த ராசனார்.
வெட்டு என்றால்
அரிவாளைத் தூக்காமல்
கல்வெட்டைத் தூக்குபவர்
அவர்.

இன்றும்
நினைத்தால் பணியாளர்
சாமிநாதன் சரியாக
எனக்குள் வந்து மணியடிக்கிறார்.
எங்கள் தமிழ்ப் பாடங்களில்
ஒருபகுதி சாமிநாதன்.

என்
கவிதைகளில்
கரந்தை மண்தான்
மகரந்தம்.

கரந்தைத் தமிழ்ச்சங்கம்
கண்ட கனவுகளில்
நான் இருந்தேனோ
இல்லையோ
என் நனவுகளில்
எப்போதும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

இந்தக்
கரந்தைத் தமிழ்ச்சங்க
மண்ணில்
ஒரு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
உணவில் சேர்த்துக் கொண்டால்
சொரணை செத்தவர்களும்
பிழைத்துக் கொள்ளலாம்.


   கரந்தையை மட்டுமல்ல, தன் பேராசிரியர்களை மட்டுமல்ல, தான் கல்லூரியில் படித்த காலத்தில், கல்லூரி மணியினை அடித்த அலுவலகப் பணியாளர் சாமிநாதனையும் நினைவில் நிறுத்திப் போற்றும் இம் மனிதர், மாமனிதர் தானே. இக் கவி மகாகவிதானே.

     நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

     தமிழின் சிகரக் கவிஞர்களின் குறிப்பிடத் தக்கவர். இவரது படிமக் கவிதைகள் பரவச அனுபவங்களைத் தரக்கூடியவை. மரபிலும் மின்சாரக் கவிதையை படைத்து சாதனை புரிபவர்.

     ஹைகூ, சென்றியு, லிமரைக்கூ என வெளி நாட்டுக் கவிதை வடிவங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்ததோடு, பழமொன்றியு என்ற கவதை வகையையும் உருவாக்கி, தமிழின் உயரத்தை உயர்த்திய மகாகவி.

    மழைவளம் மறந்த, ஆழ்ந்த கிணறுகளுக்குள் மக்களின் தாகமும், மண்ணின் தாகமும் தவித்துக் கிடக்கும் சென்னிமலையில் பிறந்தவர்.


ஈரோடு தமிழன்பன்.

---

உலகனாய் இருக்கும் நான்
நிச்சயமாய் இந்தியன்….
அதைவிடச்
சத்தியமாய்த்
தமிழன்.

தமிழனாக இருப்பதற்குத்
தடைபோட்டால்
இந்தியனாகத் தொடர்வது பற்றிச்
சிந்திக்க வேண்டிவரும்.

     ஈரத் தன்மையும், இரக்கமும் மட்டுமல்ல, எழுச்சியின் குரலாகவும், அநியாயம் அழிக்கும் அக்கினியின் குரலாகவும் ஒலிப்பவர் ஈரோடு தமிழன்பன்.

உயர் சாதியின் வீட்டில்
ஒரு குழந்தை பிறந்தால்
உச்சநீதி மன்றத்தில்
ஒரு நாற்காலி
துடைத்து வைக்கப்படுகின்றது.

ஒடுக்கப்பட்டவன் குடிசையில்
ஒரு குழந்தை பிறந்தால் – அந்தத்
தாயின் கனவில் புதிதாய்
ஒரு கழிப்பறை திறக்கப்படுகிறது.

     சமூக ஏற்றத் தாழ்வு கண்டு பொங்கிய மகாகவி இவர்.

---

    கடந்த 12.11.2016 சனிக் கிழமையன்று, சென்னையில் ஒரு திருவிழா. புத்தக வெளியீட்டு விழா.


ஈரோடு தமிழன்பன் ஆயிரம்
நூல் வெளியீட்டு விழா.

     விழாவிற்குச் சென்றே ஆக வேண்டும் என மனது துடித்தது. ஆயினும் செல்ல இயலா நிலை.

     சென்னை வாழ், எனது நண்பர் பாசமிகு அனந்தராமன் அவர்களை, அலைபேசி வழி அழைத்தேன்.

கவலை வேண்டாம். நான் செல்கிறேன். நூலினை வாங்கி உடன் அனுப்புகிறேன் என்றார்.

     14.11.2016 திங்கட்கிழமையன்றே, நூல் அஞ்சலில் வந்து சேர்ந்தது.


ஈரோடு தமிழன்பன் ஆயிரம்
தொகுப்பாசிரியர்
தி.அமிர்த கணேசன்.

ஆயிரம் பக்கங்கள், பக்கத்துக்குப் பக்கம் அமிர்தம் நிரம்பி வழியும் நூல்.

ஹைக்கூ

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு
முத்தமிட்டுச் சொன்னது பூமி
ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ.
•••
ஓட்டுப் போட்டுவிட்டுத்
திரும்பி வந்த பிணம் திடுக்கிட்டது
தனது கல்லறையில் வேறொரு பிணம்.
•••
வான்கோழி
விரல் இடுக்கில் மயில் இறகு, ஓ
சுயசரிதையா?
•••
கட்சிக் கொடிகள்
மரக்கிளைகளில்
சிறகுகள் புழுதியில்
•••
மாயன்
மந்திரியானால் என்ன?
மாடுகளுக்குப் புல்லே போதும்.

ஒரு வண்டி சென்ரியுகல்லூரியிலிருந்து
மகன் கடிதம்
கடன்களால் படிக்கும் அப்பா.
•••
தொகுதிதான்
முடிவாகவில்லை
தோல்லி முடிவாகிவிட்டது.
•••
பக்தர்களிடம்
கடவுள் கேட்ட வரம்
அரசியலுக்கு இழுக்காதீர்.
•••
அயல்நாட்டுக்குப்
புறப்பட்டார் தலைவர்
உள் நாட்டில் மகிழ்ச்சி
•••
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுதாக்கல்
ஐம்பது வாக்குகள்
•••
இரண்டு வருடங்களால்
நோயால் முடியாதது
மருத்துவத்தால் ஒரே நாளில்.
•••
கட்டிடத் திறப்பு விழா
அமைச்சர் இடிந்து போயிருந்தார்
திடீர்ப் பதவி பறிப்பு
•••
கடவுள்
கடைசி ஆசையைச் சொன்னார்
பூசாரியாய் பிறக்க வேண்டும்
•••
குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறைய காணிக்கை
•••
நரிகள் தேசம்
ஆடுகள் அமைச்சர்களாகித்தான்
என்ன பயன்?

புத்தகம் என்பது

பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாக முடியாது
பத்து
நதிகளோடு பழகி
நீங்கள்
ஒரு நதியாக முடியாது
பத்துப்
புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்
நீங்கள்
பதினோராவது புத்தகமாகப்
படிக்கப் படுவீர்கள்.
•••
பிழையான நூல்களைப்
படிப்பவன்
பிழைகளை எப்படித்
திருத்துவான்?
கடலில் மூழ்கியவன்
கரையில் இருப்பவனோடு
எப்படிப் பேசுவான்?
அப்படித்தான்.
•••
படிப்பது
மறந்து போகிறது என்பதற்காகப்
படிப்பதை
மறந்து விடாதே.
படிப்பதை மறக்காமல் இருந்தால்
படிப்பதும்
மறந்து போகாது.
•••
கண்ணை
மூடிக்கொண்டு பயணம்
போவதும்
எண்ணத்தை மூடிக்கொண்டு
படிப்பதும் ஒன்றுதான்.
•••
பொங்கலுக்குப்
புத்தாண்டுக்குப்
பிறந்த நாளுக்குப்
புத்தாடை வாங்குவது போல்
புத்தகம் வாங்கக் கூடாதா?
•••
புத்தகங்கள்
எழுதுங்கள், இல்லாவிட்டால்
புத்தக மாயிருங்கள்.
ஒன்று ……
படிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
படிக்கப்பட வேண்டும்.
•••
புத்தகங்களைத்
திற
அவை உன்னைத்
திறக்கும்.
•••
பிறக்கும் போதும
இறக்கும் போதும்
வாய்ப்பில்லை
இருக்கும் போதே
கொஞ்சமேனும் படித்துவிடு.

ஒரு கூடைப் பழமொன்ரியு

நாய்வேசம் போட்டால் குரைக்கத்தான்
வேண்டும், வேசம் போட்டுப் போட்டு
நாயே ஆகிவிட்டால்?
•••
காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான்
தீட்டு, ஆனால் வீட்டில் செத்தாலும்
காட்டிலேதான் அடக்கம்.
•••
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க
வேண்டாம், குருக்கள் உள்ள
கோயிலில் வழிபட வேண்டாம்
•••
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே
வந்தது, கும்பிடக் கோயிலுக்குப்
போகாதே என்றது
•••
உரலுக்கு ஒருபக்கம் இடி
மத்தளத்துக்கு இருபக்கம் இடி, மக்களுக்கு
எல்லாப் பக்கத்திலும் இடி
•••
பொய் சொன்ன வாய்க்குப்
போசனமும் கிடைக்கிறது – அத்தோடு
பூலோகமும் கிடைக்கிறது
•••
கொள்ளி வைக்க ஒரு பிள்ளை
வேணுமாம், ஒரு பெண் வைத்தால்
எரிய மாட்டாயா நீ?

    படிக்கப் படிக்கப் பக்கத்துக்குப் பக்கம் எழுத்துக்களும் கருத்துக்களும், கண் வழி பாய்ந்து, நெஞ்சத்துள் நிரந்தரமாய்க் குடியேறுகின்றன.

நோய்களின்
உரத்த அதிகாரம் …
சமரச முயற்சியில்
மருந்துகளின் மெல்லிய
உரையாடல் …

திறந்து கிடக்கும்
கழிப்பறையிலிருந்து
பினாயில் அலைகளை அடித்து வீழ்த்தி
முன்னேறும்
மூத்திர நெடி.

ஒவ்வொரு கட்டில் மீதும்
உட்காரும் ஈக்களின் சிறகுகளில்
மரண மகரந்தங்கள்

இப்படியேத் தொடர்கிறது, இன்றைய மருத்துவ மனைகளின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும், இவரது வார்டு 10 படுக்கை 15.

மர்மமான முறையில்
கடவுள்
செத்துக் கிடப்பதாகத்
தகவல்.

நாத்திகர்கள் நடத்திய
வன்முறையாக இருக்குமோ?
விசாரித்த போது
இல்லாத கடவுளை
எப்படி நாங்கள் கொன்றிருக்க முடியும்?
என்று மறுத்துவிட்டனர்
நாத்திகர்கள்.

அர்ச்சகர்களாகத்
தங்களையும் அமர்த்த வேண்டும்
என்று
போராட்டம் நடத்திய கலகக்காரர்கள்
வேலையாக இருக்கலாம் ….
காவல் துறையின்
இரகசியக் கண்களில் சந்தேகம்.

தங்களிடமிருந்து கடவுள்
கை நழுவிப் போய்விடக் கூடாது
என்பதற்காகப்
புரோகிதர்களே இந்தப் பாதகத்தைப்
புரிந்திருக்க வேண்டும்
கலகக்காரர்கள்
விரல்கள் வேறுதிசை காட்டின.

ஆபரணங்கள்
உண்டியலை – ஏன்
தன்னையே
கொள்ளை யடிக்க வந்தவர்களிடம்
எதிர்ப்பு காட்டியிருக்கலாம்
கைகலப்பில்
கடவுள் காலி செய்யப்பட்டிருக்கலாம்.

மோப்பத் துறை
துப்புக்கு அலைந்தது.

பகையான கடவுள்களின்
சதியா?
பத்திரைக்கை கபாலங்களில்
கசிந்தன யூகங்கள்.

மாற்றுக் கடவுள்களின்
அக்கிரமம் ஒழிக
மாற்றுக் கடவுள்களின்
அராஜகம் ஒழிக
மாற்றுக் கடவுள்களின்
அட்டூழியங்கள் ஒழிக.

மதங்கள்
கத்தி கடப்பாறைகளோடு
தெருக்களில் இறங்கின.

மக்கள்
பிணங்கள் தெருக்களிலும்
கடவுள் பிணம் ஆலயத்திலும்
அழுகி நாறின.

கண்களில் எவருக்கும்
படாதபடி
கடவுள் எழுதிவைத்திருந்த
குறிப்பு –
என்னையே எப்போதும்
நம்பியிருக்கும் மக்களை
என்னால் காப்பாற்ற முடியவில்லையே
என்னும் சுய சோகத்தில்
தற்கொலை செய்து கொண்டேன்.
என் சாவுக்கு எவரும் காரணம் இல்லை.

கடவுள் கொலை செய்யப்பட்டாரா? இவரது கவிதை தமிழக, இந்திய, ஏன் உலக மதச் சண்டைகளை, கடவுளின் பெயரால் அரங்கேறும் சொல்லொண்ணாத் துயரங்களை, படுகொலைகளை கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது.


வள்ளுவர்
எதிர்பார்க்கவில்லை
வினாக் குறிகளாக இரண்டு
விலை மாதர்கள் நின்றனர் அவர் முன்.

அதிர்ச்சியில்
வள்ளுவர் வானில் கீறல்கள்
திகைப்பில்
வள்ளுவர் நொடிகளில்
முடிச்சுகள்
மருட்சியில்
வள்ளுவர் மூச்சில் நெரிசல்கள்.

எங்களுக்கும்
ஓர் அதிகாரம் ஒதுக்கியதற்கு
நன்றி ஐயா.

வள்ளுவர் கண்கள்
வந்தவர்கள் அமர்வதற்கு
அனுமதியை உச்சரித்தன.

தீட்டுப் படாதல்லவா
உங்கள் வீட்டுத் திண்ணை?
இப்படிக் கேட்டபடி அமர்ந்தனர்
இருவரும்.

மனைத்தக்க மாண்பு
இல்லாத இனம் எங்களுடையது.

கற்பெனும் திண்மையை
உடைத்து நொறுக்கிய சமுதாயம்
எங்களைப் பெருந்தக்கவாக
எப்படி ஏற்றுக் கொள்ளும்?

மாய மகளிர்
என்று எங்களை வருணித்த
வள்ளுவரே
எங்கள் அனுபவம் உங்களுக்கும்
உண்டோ?

மாயும் மகளிர் என்று
திருத்தம் செய்தால் உங்கள்
பாட்டு
தளை தட்டாது என்று நினைக்கிறோம்.
இப் பண்பில் மகளிர்
இப்படியொரு பாடபேதம்
செய்து கொள்ளலாமா?

உடம்பைக் காயம் என்றது
உங்களைவிட
எங்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

காமுகர்
செய்யும் காயங்களால் ஆன காயங்கள்
எம்முடையவை.

நாங்கள் செத்த பிறகும்
எங்கள் காயங்கள் வாழும்
நியாயங்கள் கேட்கும்.

அவசரப்பட்டவர்கள்
விந்துகள் தெறித்துத் தெறித்து
எங்கள் பாடல்கள் கறைபடிந்தன.

எங்கள்
தூக்கங்களும் துகிலுரியப் படுகின்றன
கனவுகள் உள்ளேயும் புகுந்து
அங்குலம் அங்குலமாகக்
காமப் பற்களால்
கடித்துக் குதறுகின்றனர்.

விலைமாதர்கள் வள்ளுவரிடம் கேட்ட வினாக்கள் என்னும் இக் கவிதை நீண்டு கொண்டே செல்கிறது, வினாக்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கின்றன, படிக்கப் படிக்க ஒவ்வொரு நொடியும் மனதின் கணம் கூடிக் கொண்டே போகிறது.

இறந்தவர்கள்
வரவேற்றார்கள் – புதிதாய்
இறந்தவனை.

வாழ்க்கை அழுத்தி எழுதிய கவலை
அவன் முகத்தில் இல்லை

சாவு ஓவியம் செய்திருந்தது
ஒரு புன்னகையை

என்ன ஆச்சரியம்
இத்தனை நாளாய் இறக்காமல்

எப்படியிருந்தாய்?

மூச்சுக்குத்
தூய காற்றில்லை….

தாகத்துக்கு
நல்ல தண்ணீரில்லை…
பிழைத்திருந்தது எப்படி?

இப்படிக் கேட்டவர்க்கு
விடை தொடங்க முடியாமல்.

உழைப்புக்குக் கூலியில்லை
உண்பதற்கு வழியில்லை
பஞ்சமும் பட்டினியும்
மென்று தின்ன பிறகும் இத்தனை நாள்
மிஞ்சியிருந்தது எப்படி?
                                                          
மத,இனக் கலவரங்களில்
பிணக் கணக்கில்
ஒன்று குறைவதாய் உன்னை யாரும்
தேடலையா?

விபத்து, கொலைகளில்
சிக்கலையா?

கட்சி உத்தரவுப்படி தலைவருக்காகத்
தீக்குளிக்கலையா?

கடனில் மூழ்கி
மரணக் கரையில் ஒதுஙகலையா?

நன்னை நம்பினால்
நாதசுர நாழிகை வராதென்று
ஓடிப்போன மகள்

உனக்காக
வீட்டில் ஒரு முழக்கயிறு
விட்டு விட்டுப்
போகலையா?


வேலை கிடைக்காமல்
வெறுப்படைந்த பட்டதாரி மகன் கண்ணில்
ஈம நெருப்பு உனக்கு
எரியலையா?


போதை மாத்திரைக்குள்
நொறுங்கி விழுந்த
மகன்
ஏன் பெற்றாய் என்று கேட்டு
உன் வயசை ரத்து செய்யத்
துடிக்கலையா?...

தொடர்ந்து வினாக்கள்

தோட்டா தோட்டாக்களாய் …

செத்த நூறு வயதான
மூத்தவர் ஒருவர் குறுக்கிட்டார்,

வாழ்க்கை தேடி வந்தவனைச்
சும்மா கேள்வி கேட்டு
மறுபடியும்
சாகடிக்காதீர், விட்டுவிடும்.

இறந்தவனை வரவேற்ற இறந்தவர்கள் என்னும் கவியில் நாட்டு நடப்பை, வாழ்வியல் யதார்த்தத்தை எளிமையாய் வரிக்கு வரி, எடுத்து வைத்து நம்மை பெருமூச்சு விட வைக்கிறார்.

ஈரோடு தமிழன்பன் ஆயிரம்

     மரபு வகைமைகளில் மனதை பறிகொடுத்திட, படிமத் தோரணங்களைப் படித்துப் பரவசம் எய்திட, சொல்லோவிய சுக பிம்பங்களை உள்வாங்கி உவகை பெற்றிட, நகையுணர்வு மின்னும் கவிதை வகைமைகளைப் புற, அக இலக்கண அமைதியுடன் தமிழில வாசித்திட, சீரழியும் இந்தச் சமுதாயத்தின் சீரமைப்புக்கான வழி முறைகளில் பாதம் பதித்திட, இயற்கையின் அழகை ரசித்திட, பல்வகைப் பாடு பொருள்களின் கவிதை வடிவத்தை அனுபவித்திட என ஒரு படைப்பாளியின் படைப்புகள் வேண்டுமெனில்


ஈரோடு தமிழன்பன்
படைப்புகள் இருக்கவே இருக்கின்றன.

இப்படியாக
ஒரு தொடர் வண்டியைப் போல்,
வற்றாத நதியைப் போல்
ஓடிக்கொண்டே செயல்பட்டுவரும்
ஈரோடு தமிழன்பன்
மகாகவிக்குரிய நிலையை
இச் சமூகத்தால் பெறவேண்டியவர்.

     உரைநடை நூல்கள் 24, கவிதை நூல்கள் 51 என 75 நூல்களைத் தம் 82 அகவைக்குள் படைத்துச் சாதனை படைத்தவர்.

     இவரிடம் ஏறக்குறைய 6000 பக்கங்களில் 3000 கவிதைகள் உள்ளன. இன்னும் எண்ணற்ற கவிதைகள் மங்கிய மையால் மறைந்து போய்விட்டன, மக்கிப் போன தாள்களுக்குள் புதையுண்டு போய்விட்டன.

     மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை அவ்வளவாக வளர்ந்துவிடவில்லை என்றுதான் நான் கருதிக் கொண்டிருந்தேன், தமிழன்பனைப் படித்தபிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டேன் என்பார் எழுத்தாளர் த.ஜெயகாந்தன்.

     பாரதி, பாரதிதாசனுக்கப் பிந்தையதான கவிதைக் களத்தின் இன்றியமையாப் பெரும் புள்ளிகளை எல்லாம் வரிசைப்படுத்தி வரிசையறிய முயலுங்கால், சமநிலைக் கவிஞர்களுள் முதல்நிலைக் கவி தமிழன்பன் எனலாம் என்று உரைப்பார் இலங்கை கா.சிவத்தம்பி.

மகாகவி
நிலையை நெருங்கிவிட்டார்
என வியந்து கூறுவார் கோவை ஞானி.

புதுக் கவிதை
ஒரு மகாகவியைத் தோற்றுவிக்க முடியுமானால்
அது
தமிழன்பனாகத்தான்
இருக்க முடியும்
என முதன் முதலில் பிரகடனம் செய்தவர் சிகரம் செந்தில்நாதன்.

கவிஞர், கல்லூரிப் பேராசிரியர்
மொழிபெயர்ப்பாளர், உரை வீச்சாளர்
கட்டுரையாளர், திரைப்படப் பாடலாசிரியர்
செய்தி வாசிப்பாளர், ஓவியர்
வர்ணனையாளர், இதழாளர்
ஆய்வறிஞர்
பாரதிதாசனுடன் பத்து ஆண்டுகள் பழகியவர்
பாப்லோ நெருதாவின் தீவிரக் காதலர்
திராவிடம், பெரியாரியம்
மார்க்சியம், தேசியம்
தமிழ் உணர்வு
உலக மானுடப் பற்றாளர்
என்றெல்லாம் பன்முகங் கொண்ட
ஈரோடு தமிழன்பர்
ஒரு நல்ல மனிதர்
மனிதம் நிரம்பப் பெற்ற
மகாகவி.

ஒரு மகாகவி
என்போது சாத்தியம் ?

கொல்லர்களில் ஒரு மகாகொல்லன்
கிடைக்கும்போது …
தச்சர்களில் ஒரு மகா தச்சன்
படைக்கப்படும் போது …
உழவர்களில் ஒரு மகா உழவன்
முளைக்கும் போது …
நெசவாளியில் ஒரு மகா நெசவாளி
தறியால் நெய்யப்படும் போது …
ஒரு மகாகவி உருவாவதும் – அப்போது
சாத்தியம்.

அவர்கள் வரிசையில்
ஓரிடம் கிடைக்குமெனில்
எனக்கென்ன பெருமை ?
எனை வளர்த்த
மூத்த கவிஞர்களான என்
முன்னோடிகளுக்கும்
முத்தமிழுக்கும் மட்டும்
பெருமை.
அவன் எழுத்துக்கும், அதைப் படிப்பவர்க்கும்
அது பிறந்த
அன்னைத் தமிழுக்கும் பெருமை.

      பாரதியை இன்னமும் நாம் முழுதாக கொண்டாடவில்லை. போட்டிகளின் தலைப்பாகவே பாரதியின் படைப்புகள் அமைக்கப் பட்டுவிட்டன.

     பட்டுக்கோட்டையாரைப் பல்லக்கில் ஏற்றிக் கொண்டாடியிருக்க வேண்டும் – நாம் செய்யவில்லை.

     எவரும் தம்முள் ஒருவரை ஏற்கத் தயாராகத் தமிழ் நாட்டில் இல்லை.

     ஓர் ஊரின் திருவிழா போல், ஒரு நாட்டின் தேசிய நிகழ்வு போல், படைப்பாளிகள், ஆகச் சிறந்த படைப்பாளிகள் கொண்டாடப்பட வேண்டும்.

     நடக்கிறதா நம் நாட்டில்.

     பாப்லோ நெருதாவின் கவிதை நூல் தலைப்புகள், சிலியின் வீதிகளின் பெயர்களாக உள்ளன.

     இந்தப் படுக்கையில் திகில் படைப்பாளி எட்ஜர் அலன்போ படுத்துச் சிகிச்சை பெற்றார் என்னும் அறிவிப்பு, பால்டிமோர் மருத்துவமனைக் கட்டிலில் உள்ளது.

    ஷேக்ஸ்பியரின் நாடகமேடை அன்றிருந்தது போலவே, இன்றும் அப்படியே பராமரிக்கப் படுகிறது.

     வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் ஊர் அப்படியே காக்கப்படுகிறது.

     மேலை நாடுகளில், தேநீர் விடுதிகளில், தங்கும் விடுதிகளில், இப் படைப்பாளி இங்கு தேநீர் அருந்தினார், இங்கு தங்கினார் என்னும் அறிவிப்புப் பலகைகள் தொங்குகின்றன.

      ஆனால் நம் நாட்டில் …. ?

      இந்நிலை மாறவேண்டாமா?

படைப்பாளிகளை
வாசிப்பவர்களும் நேசிப்பவர்களும்
ஒன்று கூடி ஒருங்கிணைந்து
மாற்றத்தான் வேண்டும்,போற்றத்தான் வேண்டும்

மாற்றுவோம் போற்றுவோம்

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களைப்
போற்றுவோம்
இன்னும் நூறாண்டு
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்.
29 கருத்துகள்:

 1. மிக நீளமான பதிவாயினும் ரசிக்க முடிந்தது. கவிஞரின் படைப்புகளை நானும் ரசித்துள்ளேன். அவர் குரலும் காந்தக்குரல்தான்.

  பதிலளிநீக்கு
 2. எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி
  முழுப்பதிவும் ஒரு கவிதைப் பெட்டகம்
  மீண்டும் படித்து மகிழவேண்டும்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பெருங்கவிதைப் பேழையாய்ப் பதிவு..
  மகத்தான கவிஞரின் கவிதைகளைப் பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 4. ஜெயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் அற்புதம்.
  எனது "அகத்தூண்டுதல் பூங்கா "நூலகத்தில் அவசியம் இடம்பெறும்

  பதிலளிநீக்கு
 5. ஆகா. அவர் மகாகவியே தான்.பாப்லோ நெருடாவை தேடிப் படிக்க வைத்தவர் அவர். சென்னைத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்து, எழுத்துத்தேர்வு, நேர்முத்தேர்வுக்கு என்று என்னுள் ஓர் ஆசையை உருவாக்கி அலையவைத்ததில் அவருக்கு பெரும்பங்குண்டு :)

  பகிர்வுக்கு நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லா18 டிசம்பர், 2016

  அற்புதம். பெரியார் பற்றாளர் என்பது தவிர அறியாமல் இருந்தேன். ரமணரிடம் இருந்த கவி.முருகனார் மாபெரும் கவி. அவர் கவி வளம் ரமணரிடம் மட்டுமே சென்று விட்டது. குரு வாசக கோவை என்பதில் அவரிடம் இருந்து தமிழ் அமிழ்து வெளிப்படும்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு! கவிதைகளை ரசித்தோம். கவிதைப் பூங்கா! வாழ்த்துக்கள்!

  கீதா: மிக மிக அருமையான பதிவு. ஈரோடு அன்பன் அவர்களின் கவிதைகளை வாசித்ததுண்டு ரசித்ததுண்டு. இங்கும் ரசித்தேன். கடவுள் கொலை செய்யப்பட்டாரா!? அருமை யான கவிதை! மிக்க நன்றி சகோ பகிர்விற்கு

  பதிலளிநீக்கு
 9. ஓடுகிற தண்ணியிலே உரசிவிட்டேன் என்ற பாடலின் மூலமாகவும் அவர் கவிதையை ரசித்ததுண்டு !

  பதிலளிநீக்கு
 10. ரசனையான கவிதைகள் .போற்றுவோம் கவிஞரை.

  .

  பதிலளிநீக்கு
 11. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  ஒரு அருமையான புத்தக ஆய்வினைப் படித்த மனத் திருப்தி. இப்பதிவினைப் படித்தவுடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களின் புத்தகத்தினை உடனே படிக்க வேண்டும் என்ற பேராவல் ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியாது. கரந்தை மண்ணை அவர் கவிதையில் பெருமையாக படிக்க, படிக்க கரந்தையில் பிறந்த நம்மைப் போன்றோர் சந்தோசப் படுவது நிச்சயம்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துகள் நண்பரே
  தங்களை புதுக்கோட்டையில் எதிர்பார்த்தேன் நண்பரே

  செல்லிலிருந்து....

  பதிலளிநீக்கு
 13. கவிதைகளின் தொகுப்பும் தங்களின் பதிவும் அருமை! மிக இனிமை!

  பதிலளிநீக்கு
 14. அன்று
  புதுக் கவிதை எழுத
  ஈரோடு தமிழன்பன் கவிதைகளை
  படித்துப் பயன்பெறலாம் என
  நண்பர் ஒருவர் வழிகாட்டி இருந்தார்!
  இன்று
  தங்கள் பதிவினூடாக - அதனை
  உறுதிப்படுத்த முடிகிறது.
  அருமையான அறிமுகம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 15. மிக நீளமான பகிர்வாக இருந்தாலும் தங்கள் அன்பின் வரிகளை ரசிக்க முடிந்தது.... அருமை ஐயா...
  வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 16. தங்களுடைய பதிவுகளிலேயே இதுதான் பெரிய பதிவாக இருக்கும் என நினைக்கிறேன். உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.

  பதிலளிநீக்கு
 17. ஈரோடு தமிழன்பனை முன்பெல்லாம் தொலைக்காட்சியில் அவ்வப்போது பார்த்ததுண்டு அவரது எழுத்துகளைப் படித்து உங்களது எழுத்துகளும் மாறி இருக்கிறதோ உ-ம் / மரபு வகைமைகளில் மனதை பறிகொடுத்திட, படிமத் தோரணங்களைப் படித்துப் பரவசம் எய்திட, சொல்லோவிய சுக பிம்பங்களை உள்வாங்கி உவகை பெற்றிட, நகையுணர்வு மின்னும் கவிதை வகைமைகளைப் புற, அக இலக்கண அமைதியுடன் தமிழில வாசித்திட, சீரழியும் இந்தச் சமுதாயத்தின் சீரமைப்புக்கான வழி முறைகளில் பாதம் பதித்திட, இயற்கையின் அழகை ரசித்திட, பல்வகைப் பாடு பொருள்களின் கவிதை வடிவத்தை அனுபவித்திட என ஒரு படைப்பாளியின் படைப்புகள் வேண்டுமெனில்/

  பதிலளிநீக்கு
 18. நீளமான அருமையான பதிவு. இவர் தானே முன்னால் தூர்தர்ஷன் சென்னை ஒளிபரப்பில் தமிழ் கற்றுக் கொடுத்தவர்?

  பதிலளிநீக்கு
 19. அருமை, வெகு அழகாய் கவிஞரை போற்றி வரைந்துள்ளீர்.

  இவரும் நம் குருநாதர் மீனா. இராமதாசு அய்யா அவர்களும் க்ளாஸ் மேட்.

  கரந்தை மண் கந்தக மண்; உப்புக்கு பதில் கரந்தை மண்ணை சேர்த்துகொண்டால்.... ஆஹா என்னவென்று போற்றுவேன் நான் பிறந்த மண்ணை!
  இரா. சரவணன்
  மும்பை

  பதிலளிநீக்கு
 20. கொடுத்து வைத்தவர் தாங்கள்...........

  பதிலளிநீக்கு
 21. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
  அவர் சாகித்ய அகாதமியின் தேர்வுக்குழுவிலும் இருந்தவர்

  பதிலளிநீக்கு
 22. எங்கோ தொடங்கி ஈரோட்டில் முடித்த உங்களது யுத்தியைப் பாராட்டுகிறேன். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கென்று ஓர் தனியிடம் உண்டு. அண்மையில் ஒரு தொலைக் காட்சியில் அவருடனான பேட்டியைக் கேட்டேன். அன்றைய கவிதை வானில் அடிக்கடி வந்து போனவர்.

  பதிலளிநீக்கு
 23. தமிழ் மண் ஓர் ஈனில். இத்தகைய மகா கவிகளை ஈன்று கொண்டே இருக்கும். ஒரு நற்பதிவு; பொற்பதிவு.

  பதிலளிநீக்கு
 24. ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுடைய கவிதைகள் ஒவ்வொன்றும் உள்ளே சென்று ஒருவிதத் தாக்கத்தை உண்டாக்கிவிடுவது உண்மையே.. மிக எளிய சொற்களால் பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அழகிய கவிக்கோவைகளைப் படைத்த அற்புதக்கவியை மகாகவி எனல் மிகப் பொருத்தமே. இப்பதிவின் மூலம் அவரைப் பற்றியும் அவருடைய படைப்புகள் பற்றியும் பரவலாய் அறிய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. உச்சியில் பற்றியெரியும் பச்சைத்தீ என்று மரத்துக்காய் அவர் பாடிய குறும்பா... மரங்களைப் பார்க்கும்போதெல்லாம் நினைவுக்கு வந்து நெகிழ்த்தும். அருமையானதொரு பகிர்வுக்கு நன்றி ஐயா.. அவர் வாயால் வாழ்த்துப்பெறும் பேறு பெற்றமைக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 25. அருமையானதொரு பகிர்வு - நன்றி ஐயா
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு