24 ஜூலை 2017

நல்லதொரு குடும்பம்கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்
என்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

      தமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.


      கரந்தை மண் இவரை, ஏடெடுத்து எழுத வைத்திருக்கிறது.

      வெகு இயல்பாய், வெகு எளிமையானச் சொற்களால், தங்கு தடையற்ற, நீரோடையாய் தவழ்கின்றன, இவரது எழுத்துக்கள்.


நல்லதொரு குடும்பம்

     நண்பர் வேலுவின் முதல் நூல்.

     முதல் முயற்சி.

     முதல் முயற்சியிலேயே, பெரு வெற்றி பெற்றிருக்கிறார்.

     நிவேதிதா என்னும் புனைப் பெயரில் இந்நூலை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

     நிவேதிதா, நண்பர் வேலுவின் அன்பு மகள்.

     குடும்ப உறவை, மையக் கருவாய் கொண்டு, இவரது குறு நாவல் உருவெடுத்திருக்கிறது.

       குடும்ப உறவுகளும், கூட்டுக் குடும்பங்களும் வெகு வேகமாய் சிதைந்து வரும், இக்கால கட்டத்தில், வேற்றுமைகளைக் களைந்து, உண்மை உணர்ந்து, ஒரு குடும்பம், ஒன்றாய் இணையும் நிகழ்வுகளை, ஒரு திரைப்படம் போல், நம் கண் முன்னே ஓட விடுகிறார்.

பெரியவர்கள் சில நேரங்களில் தவறு செய்பவர்கள்தான், யார் இல்லை என்று சொன்னது? நீங்கள் சிறுவராக இருக்கும் போது செய்யும் தவறுகளை, நாங்கள் பொறுத்துக் கொள்வது இல்லையா? வயது முதிர்ந்தாலே, மீண்டும் குழந்தைப் பருவத்துக்குத்தான் திரும்புகிறோம். எனவே அந்தத் தவறுகளை பெரிது படுத்தத் தேவை இல்லை. அவர்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்றால், அனுசரனையான பேச்சும், அவர்கள் வரும்போது, இன்முகத்தோடு அழைத்து, அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து அனுப்புவதும்தான், அவர்களுக்கு வேண்டும்.

        நண்பர் வேலுவின் முதல் நாவல் இது என்பதை, மனம் நம்பத்தான் மறுக்கிறது.

       ஒரு முதிர்ந்த படைப்பாளியின் திறமையோடும், ரசனையோடும், நம்மையும், கதைக்குள் இழுத்துப் பயணிக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

       வாழ்த்துக்கள் நண்பரே

       தொடர்ந்து எழுதுங்கள்.


வெளியீடு
காகிதம் பதிப்பகம்,

விலை ரூ.60